என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வருங்கால தேவைக்கு ஏற்ப தற்போது பிரபலமாக அறியப்படும் எதிர்கால படிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
    விவசாயப் படிப்புகள் என்று எடுத்துக் கொண்டால் கால காலமாக புகழ்பெற்று விளங்குவது பி.எஸ்சி (அக்ரி) என்கிற நான்கு வருடப் பட்டப்படிப்பாகும். தவிர, பி.எஸ்சி தோட்டக் கலைப் படிப்பு, பி.எஸ்சி மனையியல் படிப்பு மற்றும் வனத்துறை சார்ந்த படிப்பும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ளன.

    பொறியியல்

    தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சி.இ.ஜி. எனப்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக், எம்.ஐ.டி, எஸ்.ஏ.பி எனப்படும் ஆர்க்கிடெக்சர் கல்லூரி ஆகிய நான்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரிகள். அடுத்த நிலையில் மாநிலத்தின் 13 இடங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும், 10 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இவைதவிர ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் பலதரப்பட்ட பொறியியல் படிப்புகள் இருக்கின்றன.

    மருத்துவம்

    மருத்துவத்தைப் பொறுத்தவரை எம்.பி.பி.எஸ். அளவுக்கு சமீப ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறுகிற ஒன்று மாற்று மருத்துவப் படிப்புகள். அதாவது, ஆயுர்வேத படிப்பான பி.ஏ.எம்.எஸ்., சித்த மருத்துவத்தின் பி.எஸ்.எம்.எஸ்., ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன. இவை தவிர, துணை மருத்துவ படிப்புகளான பி.பார்ம் எனப்படும் மருந்தியியல் பட்டப்படிப்பு, பி.பி.டி. எனப்படும் பிசியோ தெரபி, பி.ஓ.டி. எனப்படும் அக்குபேஷன் தெரபி, ஆப்டோ மெட்ரி எனப்படும் கண் மருத்துவப் பட்டயப்படிப்பு ஆகியவையும் புகழ்பெற்றவை.

    சட்டம்

    தேசிய அளவில் புகழ்பெற்ற தேசிய சட்ட கல்லூரி எனப்படும் அகில இந்திய சட்டக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங் களிலும் உள்ளன. இவற்றுள் டி.என்.என்.எல்.எஸ். எனப்படும் தமிழ்நாடு தேசிய சட்ட கல்லூரி திருச்சியில் செயல்படுகிறது. இவை அனைத்திலும் பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப் படிப்பு சேர சி.எல்.ஏ.டி. எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். ஆனால் தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது.

    வணிகவியல்

    கம்ப்யூட்டர் பயிற்சியோடு இணைந்த பி.காம் (கணினி அறிவியல்) மற்றும் பி.காம் (தகவல் தொழில்நுட்பம் ), வங்கித்துறை சார்ந்த (வங்கி மேலாண்மை ) மற்றும் பி.காம் (சந்தைபடுத்துதல்), பி.காம் (விளம்பரவியல்) என ஏராளமான சிறப்பு படிப்புகள் உருவாகியிருப்பது ஆரோக்கியமான விஷயம். இவற்றில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப துறையினை தேர்வு செய்து படிக்கலாம்.

    சமையல் கலை

    சென்னை தரமணியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நடைபெறும் கேட்டரிங் கல்லூரியில் பி.எஸ்சி என்கிற பட்டப் படிப்பு பிரபலமாக உள்ளது. இதில் சேர அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இக்கல்லூரி தவிர, மாநில அரசு நடத்தும் கேட்டரிங் கல்லூரி திருச்சியில் உள்ளது. இவை இரண் டிலுமே உணவு தயாரிப்பு, அலுவல் பணி, மேலாண்மை, நிர்வாகம் ஆகியவற்றில் ஒன்றரை வருட டிப்ளமா படிப்புகள் உள்ளன.

    ஊடகத்துறை

    ஊடகத் துறையைப் பொறுத்தவரை புகழ்பெற்ற ஒரு படிப்பு பி.எஸ்சி (விசுவல் கம்யூனிகேஷன்) விஸ்காம். இதற்கு அடுத்த ஒன்று பி.எஸ்சி (எலக்ட்ரானிக் மீடியா), பி.எஸ்சி (அனிமேஷன்), (பிலிம் மற்றும் டி.வி. புரடக் ஷன்), பி.ஏ. (ஜர்ன லிசம்) ஆகியவையும் ஊடகத்துறையில் சாதிக்க உதவும் படிப்புகளாகும்.

    நுண்கலை

    பேச்சுலர் ஆப் ஃபைன் ஆர்ட்ஸ் என்னும் 4 வருட ஏ.எப்.ஏ. பட்டப்படிப்பு சென்னை எழும்பூரிலுள்ள 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஓவியக் கல்லூரியிலும், கும்பகோணத்தில் உள்ள அரசு ஓவியக் கல்லூரியிலும் உள்ளது. துணி அலங்காரம், செராமிக் வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு, ஓவியம் என பல சிறப்புப் பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பை சொல்லித்தரும் இந்த கல்லூரிகளில் கல்விக் கட்டணமும் மிகக் குறைவு.

    ஆங்கில இலக்கியம்

    காலம் காலமாக நம் கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து வருகிற ஒரு படிப்புதான் பி.ஏ.ஆங்கில இலக்கியம். இருப்பினும், சமீப காலமாக இதற்கான மவுசு கூடியிருக்கிறது. இவர்களை அதிகம் ஈர்க்கிற ஒரு துறை ஊடகம். இப்பொழுது நிறைய பன்னாட்டு நிறுவனங்களும் கலை, அறிவியல் கல்லூரி களுக்கு சென்று கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இவர்களை பணியில் அமர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

    உளவியல்

    பெண்களுக்கு அதிகம் பொருத்தமான துறைகளில் ஒன்று தான் உளவியல். இத்துறை சார்ந்த பி.எஸ்சி (உளவியல்) பட்டப்படிப்பு இன்று ஆண், பெண் இருபாலரும் விரும்புகிற படிப்பாக மாறியிருக்கிறது. மேலும், வேலை வாய்ப்பு களிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
    மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்? கர்ப்பம் தரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? செய்ய வேண்டியவை எவை? என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது இனிதான ஒரு அனுபவம். இன்றைய காலக்கட்டத்தில் இதனை ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அத்தகைய மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்? கர்ப்பம் தரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? செய்ய வேண்டியவை எவை?

    * திருமணம் முடிந்த உடனே கணவனும் மனைவியும் முழு உடல் பரிசோதனை (Master health check up) செய்துவிட்டு, குடும்ப மருத்துவரை அல்லது ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து உங்களது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் அல்லது இல்லை என்பது பிரச்சனை அல்ல. எல்லோரும் ஒருமுறை இதனைச் செய்தல் மிகவும் நல்லது. இதனால் பலன் இருக்குமே தவிர இழப்பு எதுவும் இருக்கப் போவதில்லை.

    * கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ பரம்பரை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதை ஒருவர் மற்றவரிடம் சொல்லாமல் மறைக்கவே முயற்சி செய்கின்றார்கள். அதன் விளைவாக பிறக்கும் குழந்தை அதே பாதிப்பிற்கு உள்ளாகின்றது. கணவன் மனைவி என்ற ஆன பின்னர், ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவில்லாமல் தங்களது உடல் பிரச்சனைகளைத் தெரிவித்து, தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது அந்த பிரச்சனையில் இருந்து உங்கள் குழந்தை விடுபட என்ன தீர்வு என்பதை அவர் தெரிவிப்பார். உங்கள் குழந்தையின் எதிர்கால நலன் கருதி இதனை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

    * கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு இருந்தே ஃபோலிக் ஆசிட் மருந்துகளை பெண்கள் எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    * கணவன், மனைவி இருவரும் இரத்தப் பரிசோதனை செய்து தங்களது ப்ளட் க்ரூப் என்ன என்பதை அறிவது மிகவும் அவசியம். ஒருவர் பாஸிடிவ் இரத்த வகையிலும், மற்றொருவர் நெகட்டிவ் இரத்த வகையிலும் இருந்தால், கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறப்பின்போதும் வழக்கத்தை விட அதிக அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டும்.

    * பற்களில் பூச்சி பல், ஓட்டை போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்ப காலத்தில் பல் ஈறுகளின் வீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது எதிர்மறை விளைவுகளை உண்டு செய்யலாம். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு ஒரு நல்ல பல் மருத்துவரைச் சந்தித்து பற்கள் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை எல்லாம் சரி செய்துவிடுங்கள்.

    * கர்ப்பம் தரித்தலுக்கு முன்பே நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்களது எடை ஆரோக்கியமான எடையாக இருப்பின் குழந்தை பிறப்பில் பிரச்சனைகள் வருவதில்லை. உங்கள் எடை உங்கள் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடையா என்பதை அறுசுவையில் கொடுக்கப்பட்டுள்ள உடல் பருமன் சுட்டு (Body Mass Index)  மூலம் உத்தேசமாக கணக்கிடலாம். அதீத பருமனும், மிகவும் மெல்லிய உடம்பும் குழந்தை பிறப்பின் போது தேவையில்லாத சிக்கல்களை தரவல்லது. எனவே, முறையான உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்.

    * உடல் ஆரோக்கியத்தைவிட முக்கியமான ஒன்று மன ஆரோக்கியம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மிகவும் ஓய்வான மனநிலையில், மனக் குழப்பங்கள், பயம் எதுவும் இல்லாமல் இருத்தல் மிகவும் அவசியமானது. மனதிற்கு ஸ்ட்ரெஸ் எதுவும் கொடுக்காமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருப்பது, தாய்மையையும், பிள்ளைப் பேற்றையும் இனிமையான அனுபவமாக்கும். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு மனதளவில் தயாராகுதல் மிகவும் முக்கியமானது. இதற்காக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    * அடுத்த விசயம், பட்ஜெட். பொருளாதார ரீதியில் கணவன், மனைவி தயாராய் இருப்பதும் அவசியமானது. இயற்கையான பிரசவம் நடைபெற வேண்டும் என்பதுதான் எல்லாரது விருப்பமாக இருந்தாலும், எதிர்பாராத காரணங்களால் பிரசவம் சிக்கலாக செல்வதற்கு வாய்ப்புகளும் உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தாலோ, அல்லது பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஏதேனும் மருத்துவ சிகிச்சைகள் கொடுக்க வேண்டிய சூழல் வந்தாலோ, பணம் என்பது மிக முக்கிய தேவையாய் இருக்கும். எனவே, போதுமான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைத்து, பிரசவத்திற்கென்றே தனியே ஒதுக்கி வைத்தல் நல்லது.

    * இறுதியாக, கருத்தரிக்க தயாராகும் பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சியை சரியாய் கணக்கிட்டு, குழந்தைப்பேறு உண்டாக வாய்ப்பு உள்ள நாட்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் முக்கியமான ஒன்று. கருத்தரிக்க உகந்த நாட்களை அறுசுவையின் இந்த பக்கத்தின் மூலமாக கணக்கிடலாம். இது ஒரு உத்தேச கணக்கிடுதல். எல்லோருக்கும் சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாது.

    குழந்தைபேற்றிற்கு இத்தனை விசயங்களை செய்ய வேண்டுமா? எல்லோரும் இப்படித்தான் செய்கின்றார்களா? என்ற கேள்விகள் எழலாம். இவை செய்வதற்கு சிரமமானவை அல்ல. இதனால் பாதிப்புகள் எதுவும் நிகழப் போவதில்லை. மாறாக நன்மைகளே பிறக்கும். சுகமான தாய்மைக்கு தயாராக இந்த வழிமுறைகள் பெரிதும் உதவிடும்.
    வேர்க்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும். வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது
    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை - 1 கப்
    பூண்டு - 4 பல்
    புளி - சிறிதளவு
    தேங்காய் - சிறிதளவு
    வர மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும்.

    ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.

    பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும்.

    கெட்டியான வேர்கடலை சட்னி தயார்.

    இவை இட்லி, தோசை, சாதம், பழைய கஞ்சி இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்றைய காலகட்டத்தில் கூந்தல் உதிர்வு பிச்சனை ஆண், பெண் இருவரையும் பாடாய் படுத்துகிறது. அந்த வகையில் இன்று எந்த வகையான கூந்தலுக்கு என்ன பராமரிப்பு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    சாதாரண கூந்தல்

    வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள்.
    வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
    பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள்.
    நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

    எண்ணெய்ப் பசையான கூந்தல்

    வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள்.
    மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள்.
    கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூவுடன் சேர்ந்த கண்டிஷனரை தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள்.
    கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்.

    வறண்ட கூந்தல்

    லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.
    சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.
    துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
    எவ்வகை காரணங்களால் ஒருவரது மனை அல்லது இடம் மற்றவர்களால் சிக்கலுக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடும் செய்திகளை இங்கே காணலாம்.
    நிலம் சார்ந்த முதலீடு என்பது பலவகை முதலீடுகளை உள்ளடக்கிய விஷயம் ஆகும். சொந்தப் பயன்பாட்டுக்காகவோ அல்லது பிற்காலத்தில் விலையேறும்போது விற்பதற்காகவோ வீட்டுமனைகள் வாங்கப்படுகின்றன. வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதற்காக, அலுவலகங்கள் அல்லது கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவதற்காக அல்லது விற்பதற்காக மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களை அமைக்க நிலம் வாங்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், உணவகங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றைக் கட்டுவதற்கும், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கவும், தற்காலத்தில் முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் கட்டுவதற்கும் நிலம் வாங்கப்படுகிறது. இவ்வாறாக, மனை வணிகம் என்பது பல்வேறு தேவைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளை கொண்டிருக்கிறது.

    நிலத்தில் முதலீடு செய்வோர் மூன்று பிரிவுகளில் உள்ளனர். அவற்றில்,

    முதல் பிரிவான ஊக வணிகம் முறையில் நிலத்தில் முதலீடு செய்வதன் நோக்கம் விரைவில் அதனை விற்று லாபம் ஈட்ட வேண்டும் என்பதாகும்.

    இரண்டாவது பிரிவு என்பது தனது சொந்த உபயோகத்துக்கான வீடுகள், கடைகள் அல்லது அலுவலகங்கள் கட்டுவதற்காக நிலத்தை வாங்குவது ஆகும்.

    மூன்றாவது பிரிவினர், நிலத்தை வாங்கி வைத்திருந்து, பல ஆண்டுகள் கழித்து, நல்ல விலையேற்றம் பெறும்போது அதனை விற்று லாபம் பெறும் நோக்கில் வாங்குபவர்கள் ஆவார்கள்.

    புற நகர் பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் முதலீட்டு நோக்கில் வீட்டுமனை அல்லது நிலம் ஆகியவற்றை வாங்குபவர்கள், அவற்றிற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். இடம் சிறியதோ, பெரியதோ அதற்கான நான்கு பக்க எல்லை, கம்பி வேலி அல்லது கார்னர் பகுதிகளில் ‘ட’ போன்ற செங்கல் கட்டுமானம் ஆகியவற்றை அமைப்பது அவசியம்.

    பல ஆண்டுகளாக நிலத்தை வாங்கிய நிலையிலேயே விட்டு வைத்திருந்தால் பின்னர் பல சிக்கல்களுக்கு அது வழி வகுத்து விடக்கூடும். பக்கத்து மனை உரிமையாளரின் கட்டுமானம் மனைக்குள் அமைந்து விடலாம் அல்லது மற்றவர்களின் பயன்பாட்டுக்கு இடம் பயன்படுத்தப்படலாம். எவ்வகை காரணங்களால் ஒருவரது மனை அல்லது இடம் மற்றவர்களால் சிக்கலுக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடும் செய்திகளை இங்கே காணலாம்.

    * வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் வசிப்பவர்கள் மனை அல்லது நிலத்தை வாங்கிவிட்டு, தக்க பாதுகாப்பு செய்யாமல் விடுவது.

    * மனை அல்லது நிலத்தின் ஆவணங்களை முறையாக பாதுகாக்காமல் உறவினர்களை நம்பி கொடுத்திருப்பது மற்றும் மனையை நீண்ட காலமாக சென்று பார்க்காமல் இருப்பது.

    * நிலத்திற்கான பத்திரம் காணாமல் போயிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தாமல் விடுவது.

    * குறிப்பிட்ட மனைக்கு டபுள் டாகுமெண்டு பிரச்சினை இருப்பது.

    * வீட்டு மனையை பராமரிப்பு செய்ய தவறான நபர்களுக்கு அனுமதி அளித்திருப்பது.

    * மனை அல்லது இடம் பொருத்தமற்ற நபர்களுக்கு வாடகைக்கு விடப்படுவது.

    * மனையின் நான்கு பக்க எல்லைகளை சரியாக அளந்து எல்லை கற்களை நடாமல் விடப்படுவது.

    * கூட்டு பட்டா நிலம் அல்லது மனையாக இருக்கும் நிலையில் அவற்றின் நீள, அகலங்கள் கச்சிதமாக குறிப்பிடப்படாமல் உள்ள கிரய பத்திரங்கள்.

    * புதிய ஊர் அல்லது அறிமுகம் இல்லாத பகுதிகளில் மனை அல்லது நிலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க இயலாத நிலையில் அவ்வாறு செய்ய வேண்டி வந்தால், வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைத்து அதில் மனைக்குரிய பட்டா எண், பத்திர பதிவு எண், சம்பந்தப்பட்ட உரிமையாளர் பெயர் ஆகியவை தகவலாக வைக்கப்பட வேண்டும்.
    சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
    உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சத்து சேர்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவு பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாக சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்பு சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையை குறைக்க முயல்வது தவறானதாகும்.

    அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு ஓர் காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்த பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும்.

    இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
    உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க இதய மருத்துவர்கள் சங்கமும் சமையல் எண்ணெயானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யவேண்டும் என்று கூறுகின்றன.
    நம் உடலுக்கு ஓரளவு எண்ணெய் அவசியம். உணவில் குறிப்பிட்ட அளவு கொழுப்புச் சத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். இதுதான் உடலின் சீரான இயக்கத்துக்கு துணை செய்கிறது.

    எண்ணெய் மூலம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து சேர்கிறது. ரத்தத்தில் கொழுப்புச் சத்து அளவு அதிகமானால் உடல்நலப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

    எண்ணெய் என்பது திரவக் கொழுப்பு. தேங்காய் எண்ணெய், நெய் போன்றவை குளிர்காலத்தில் திடக் கொழுப்பாக மாறுகின்றன. நாம் சாப்பிடும் எண்ணெய் பலகாரங்கள் மூலம் கொழுப்புச் சத்து உடலை அடைகிறது. உணவிலிருந்து புரதச் சத்தை பிரிக்கும் வேலையை கல்லீரல் செய்கிறது. அப்போது கொழுப்புச் சத்து வகைக்கு ஏற்ப, கொலஸ்ட்ராலை அது அதிகம் உற்பத்தி செய்கிறது. இதனால் ரத்த குழாய்களில் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பு ஏற்படுகிறது. இதனால் தான் சமையல் எண்ணெய்க்கு இதய மருத்துவம் மிக முக்கியத்துவம் அளிக்கிறது.

    உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க இதய மருத்துவர்கள் சங்கமும் சமையல் எண்ணெயானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யவேண்டும் என்று கூறுகின்றன. சமையல் எண்ணெயில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.

    இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுப்பது, புற்று நோய் வராமல் தடுப்பது, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் துணை புரிவது, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவது, தோலில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து பளபளப்பாக வைப்பது போன்ற வேலைகளை செய்கின்றன. அதனால் இயற்கையான சமையல் எண்ணெயை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே நல்லது.
    கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், வீட்டில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.
    கையில் கிரெடிட் கார்டு இருந்தால் சிலர், கடைகளில் இருக்கும் பொருட்களில் பலவற்றையும் வாங்கி வீட்டில் கொண்டு வந்து அடைத்துவிடுகிறார்கள். அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்துவிட்டு, கடனுக்கு ஆட்பட்டு, கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

    அப்படி திண்டாடாமல் இருக்க என்ன செய்யலாம்?

    நீங்கள் வாங்கும் புத்தகங்களை உங்கள் நண்பர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். அதுபோல் அவர்கள் வாங்கியிருப்பவற்றை நீங்கள் படியுங்கள். இதனால் நிறைய புத்தகங்களை வாங்கி, பலரும் படிக்கலாம்.

    உங்கள் குழந்தைகள் உபயோகப்படுத்திய நோட்டுப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குவோரிடம் தூக்கிப்போட்டு விடாதீர்கள். அதில் எழுதாத சில பக்கங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். அந்த தாள்களை சேகரித்து தினசரி குறிப்புகள் எழுதுவதற்கான குறிப்பேடு தயாரியுங்கள். பால், லாண்டரி போன்ற அன்றாட செலவின கணக்குகளை எழுதி வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

    கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

    மின்சாரத்தை சேமிப்பது குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.தேவையில்லாமல் லைட் எரிவது கூடுதல் யூனிட்டுகளை உங்கள் கணக்கில் சேர்த்து விடும். மின் சிக்கனம் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரை வீட்டின் சுவிட்ச் போர்டில் ஒட்டி வையுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். உங்கள் வீடும் அதிக சூடு இல்லாமல் இருக்கும்.

    உங்கள் வீட்டின் ஜன்னல் மேற்குப்புறமாக இருந்தால் ஏராளமான செடிகொடிகளை வளருங்கள். இது கோடைகால வெப்பத்தை குறைக்கும். வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். பகல் நேரத்தில் ஊற்றினால் விரைவில் சூரிய ஒளியில் தண்ணீர் ஆவியாகி விடும். வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, சமையல் செய்யும்போது கிடைக்கும் மிச்சம் மீதி தண்ணீரை ஊற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

    மாதம் ஒருமுறையாவது ஏர்கண்டிஷன் கருவியில் வைக்கப்பட்டிருக்கும் பில்டர், எலெக்ட்ரானிக் குக்கர், மிக்சி, பிரிஜ் போன்றவற்றை சுத்தமாக துடைத்து வையுங்கள்.
    தட்டு இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று இந்த தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி செய்ய

    உளுந்தம் பருப்பு - அரை கப்
    இட்லி அரிசி - 2 கப்
    உப்பு - அரை தேக்கரண்டி

    இட்லி பொடி செய்ய

    உளுந்தம் பருப்பு - 1/4 கப்
    கடலை பருப்பு - 1/4 கப்
    வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 15
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
    புளி - சிறிதளவு
    உப்பு - 1 தேக்கரண்டி

    செய்முறை

    இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைத்த பின்னர் உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

    அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

    இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.

    இட்லி பொடி அரைக்க ஒரு கடையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.

    வெள்ளை எள்ளு போட்டு பொரியும் வரை வறுக்கவும்.

    இறுதியாக காய்ந்த மிளகாய் மிளகாயை வறுத்து ஆறவிடவும்.

    அனைத்தும் ஆறிய பின், மிஸ்ர் ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.

    தட்டு இட்லி மீது நெய் ஊற்றி செய்த இட்லி பொடியைத் தூவி சூடாக பரிமாறவும் .

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் குங்குமப்பூ எண்ணெயை தடவி கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க மாற்றத்தை, நீங்களே அசந்து போடுவீங்க...
    முன்னோர்கள் காலத்தில் முகத்துக்கும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் என்று எந்த விதமான பராமரிப்பு மேற்கொள்ளாமலே அழகை பேணி பாதுகாத்தார்கள். இப்போது இளவயதிலேயே சருமத்தில் சுருக்கங்களும், பொலிவு குறைந்த தோற்றமும் பெரும்பாலும் வந்துவிடுகிறது.

    இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது. இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ப்ளாக் ஹெட்ஸ்களை நீக்கி சருமத்துளைகளை நீக்குகிறது. குறிப்பிட்ட இயற்கை பொருள்கள் அழகை சற்றும் குலைக்காமல் மெருகேற்றி வைக்க உதவும். அப்படியான பொருள்களில் ஒன்றுதான் குங்குமப்பூ. இதை கொண்டு குங்குமப்பூ எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதையும் அதை பயன்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.

    குங்குமப்பூ எண்ணெய் தயாரிக்க

    பாதாம் எண்ணெய் - அரை கப்
    குங்குமப்பூ இதழ்கள் - இரண்டு தேக்கரண்டி.

    பாதாம் எண்ணெயில் குங்குமப்பூவை நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். ஒரு தவாவில் நீரூற்றி கொதிக்க விடுங்கள். நன்றாக நீர் கொதிக்கும் போது எடுத்து வைத்துள்ள பாதாம் குங்குமப்பூ எண்ணெயை அந்த நீரின் மேல் வையுங்கள். 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் நீர் கொதித்தபடியே இருக்கட்டும்.

    பின்னர் ஆறிய உடன் எடுத்து குங்குமப்பூக்களை வடிகட்டி விட்டு நீங்கள் அதனை ஒரு பாட்டிலில் சேமியுங்கள். தேவையெனில் குங்குமப்பூவை வடிகட்டி சேகரிக்கலாம். அல்லது குங்குமப்பூவோடு வைத்தும் பயன்படுத்தலாம்.

    இதுதான் குங்குமப்பூ எண்ணெய். உங்கள் முக அழகை மேம்படுத்தும் அற்புத பொருள். தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். காலையில் முகத்தை பாசிப்பயிறு கொண்டு கழுவி வாருங்கள். ஒரே மாதத்தில் சிவந்து போய் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

    குங்குமப்பூவில் நிறம் தரும் குணங்களோடு இயற்கையாக ப்ளீச்சிங் தன்மையும் படர்ந்திருக்கிறது. அதனால் இவை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவும் பயன்படுகிறது.
    குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. குழந்தை வளர்ப்பில் தந்தையானவர் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.

    குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.

    இரண்டாம் கடமை

    குழந்தையை குளிப்பாட்டுவது
    தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
    பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
    நாப்கின் மாற்றுவது.
    குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
    குழந்தையுடன் நேரம் செலவழிப்பது

    இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்

    குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும். தந்தையர்கள் சிலர் விளையாட்டுக்காக குழந்தையை மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதனாலும் குழந்தை தந்தையிடம் செல்லாது. தாயுடன் மட்டுமே நெருக்கம் காண்பிக்கும்.

    தந்தை செய்ய வேண்டியவைகள்

    குழந்தையுடன் விளையாடுதல்
    நல்லது சொல்லிக் கொடுத்தல்
    குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
    குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
    மரியாதை சொல்லி தருவது
    குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
    மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
    குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
    குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
    குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
    நல்ல தரமான கதைகளை சொல்வது

    தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.

    குழந்தைகளை இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும். தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது. கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது. குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.
    உயிர் காக்கும் ரத்ததானம் செய்வதற்கு முன்னும் பின்னும் சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    உயிர் காக்கும் உயரிய சேவையாக விளங்கும் ரத்ததானம் செய்வதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் ரத்ததானம் செய்பவர்களும் இருக்கிறார்கள். ரத்ததானம் செய்வதற்கு முன்னும் பின்னும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    * ரத்த தானம் செய்ய முன்வருபவர்களுக்கு முதலில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சரிபார்க்கும் பரிசோதனை மேற்கொள்வார்கள். உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு ரத்தத்தில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், ரத்ததானம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    * ரத்த தானம் செய்வதற்கு முன்னும், பின்னும் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது முக்கியம். அது ரத்தத்தில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இருப்பதை உறுதி செய்ய உதவும். ரத்ததானம் செய்த பிறகு அதிக சோர்வு ஏற்படுவதையும் தடுக்கும்.

    * சிலருக்கு ரத்ததானம் செய்த உடனே தலைச்சுற்றல், சோர்வு, நினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் நேரக்கூடும். இருப்பினும் ரத்ததானம் செய்வதற்கு முன்னும், பின்னும் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரத்ததானம் செய்யும்போது ஏற்படும் வைட்டமின்கள், இரும்பு சத்து இழப்பை ஈடுகட்டவும் முடியும்.

    * ரத்த தானம் செய்வதற்கு முன்பு குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதுதான் நல்லது. அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு, ரத்தத்தை பரிசோதிக்கும் செயல்முறைக்கு இடையூறு ஏற்படுத்திவிடும். காலையில் ரத்த தானம் செய்வதாக இருந்தால் காலை உணவுடன் ஏதாவதொரு பழம் சாப்பிடலாம். குறைந்த கொழுப்புள்ள பால் பருகலாம்.

    * ரத்ததானம் செய்ய திட்டமிட்டிருந்தால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கு உதவும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களின் சாறுகளையும் பருகலாம்.

    * உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு இரும்புச்சத்தும் இன்றியமையாதது. உடலில் இரும்பு சத்து குறைந்தால் ஆரோக்கியமான ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதில் சிக்கல் நேரும். உடல் இயக்க செயல்பாடுகளை தக்கவைப்பதற்கு புதிய ரத்த அணுக்களை உடல் உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இரும்புச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வது போதுமான இரும்பு சத்தை தக்கவைத்துக்கொள்ளவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை சீராக பராமரிக்கவும் உதவும். கீரை, மீன், சிவப்பு இறைச்சி, கோழி, திராட்சை, பீன்ஸ், வேர்க்கடலை, வெண்ணெய், நட்ஸ் வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    * புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கு போலிக் அமிலம் அவசியமானது. இது ரத்ததானம் செய்யும்போது இழக்கும் ரத்த அணுக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு உதவும். கீரை, காலே உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள், ஆரஞ்சு சாறு, தானியங்கள், அரிசி போன்றவற்றிலும் போலிக் அமிலம் உள்ளடங்கி இருக்கிறது.

    * பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்களில் ரைபோபிளேவின் செறிவூட்டப்பட்டுள்ளது. இது வைட்டமின் பி2 என்றும் அழைக்கப்படுகிறது. இது ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டை ஆற்றலாக மாற்றுவதற்கு ரைபோபிளேவின் உதவும். ஒரு சிலர் ரத்த தானம் செய்தபிறகு பலவீனமாக உணரலாம். அந்த சமயத்தில் ரைபோபிளேவின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவும். முட்டை, பச்சையிலை காய்கறிகள், தானியங்கள், ப்ரோக்கோலி போன்றவைகளில் ரைபோபிளேவின் அதிகம் உள்ளது.

    * ரத்த தானம் செய்யும் போது, உடலுக்கு ஆரோக்கியமான ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின்கள் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்தபின் வைட்டமின் பி 6 கொண்ட உணவுகள் பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும். உருளைக்கிழங்கு, விதைகள், நட்ஸ் வகைகள், முட்டை, சிவப்பு இறைச்சி, கீரை மற்றும் வாழைப்பழங்களில் வைட்டமின் பி 6 நிறைந்திருக்கிறது.

    * ரத்த தானம் செய்தபிறகு இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் இழந்த ரத்த அணுக்களை மீண்டும் உருவாக்க முடியும். சாப்பிடும் உணவுகளுடன் திரவங்களும் இருக்க வேண்டும். திரவ உணவுகளை சாப்பிடுவது 24 முதல் 48 மணி நேரத்தில் உடல் இயல்பு நிலைக்கு திரும்ப வித்திடும். அந்த சமயத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
    ×