என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காலையில் சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளியபின் தோமாலசேவை, கொலுவு நடக்கிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும்.

    அப்போது கோவில் வளாகம், சுவர், கூரை, பாத்திரங்கள் போன்றவற்றை நீரால் சுத்தப்படுத்தி, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம் போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. பின்னர் காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    2-ந் தேதி உகாதி தினத்தையொட்டி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதம் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பஞ்சாங்க ஷ்ரவணம் மற்றும் உகாதி ஆஸ்தானம் நடைபெறும்.
    தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மை மற்றவருக்கு தெரிந்து விடுமோ என்று அதை மறைக்கும் விதத்தில் குறைகூறுகிறார்கள்.
    பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்(லூக் 6:31)

    பெஞ்சமின் பிராங்கிளினிடம் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது அவர் சொன்னது நான் பிறரை பற்றி பேசும் போது நல்ல பண்புகளை மட்டுமே எடுத்துக் கூறுவேன். குறை கூற மாட்டேன் என்றார்.

    சிலர் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பிறரிடம் உள்ள குறைகளை பற்றி கூறுபவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஒருபோதும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.

    எனவே நாமும் நமது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான பண்பு மற்றவர்களை பற்றி குறை கூறக்கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மை மற்றவருக்கு தெரிந்து விடுமோ என்று அதை மறைக்கும் விதத்தில் குறைகூறுகிறார்கள்.

    அவர்களை விட நான் உயர்ந்தவன் என்று மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயத்தில் இழப்புக்கு ஆளாக இருந்தால் மற்றவரிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். படிப்பறிவோ, உலக அனுபவமோ கடின உழைப்போ இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற ஆசைப்படுபவர்கள் இந்த குறை சொல்லுகின்ற பண்புக்கு அளவுக்கு அதிகமாக உள்ளாகி இருக்கிறார்கள்.

    எனவே முடிந்த அளவுக்கு குறை கண்டு பிடிக்காதீர்கள். குற்றம் செய்யாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். யாரிடமாவது குறை இருந்தால் அதை நேரடியாக அவரிடம் பேசி உங்களை நீங்கள் தாழ்த்தி கொள்ளாதீர்கள்..

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை கோட்டார் மறைமாவட்டம்.
    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.
    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி வருகிற 2-ந் தேதி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

    இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.

    மாலையில் பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடைபெறும். விழாவை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் இடத்தை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், பொறியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து, சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் நடந்து வரும் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமான பணிகள், மின்சார வாரிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது:-

    இந்த திருக்கல்யாணத்தில் அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளது.

    இதனால், பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடத்தப்படும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சாமி, தாயார் உற்சவ மூர்த்திகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச்சார்யா கலை குழுவினர் மற்றும் இதர துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் திருக்கல்யாணம் நடத்தப்படும். 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான பரிகாரம் ஒன்று உள்ளது.
    வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்

    உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சனை, அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை இவை அனைத்தையும் தீர்த்து வைக்க முடியும்.

    ஆனால் எப்போதுமே வீட்டில் பிரச்சனை வந்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? மன நிம்மதி இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. இப்படியான நிலையில், குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான வழிமுறை ஒன்று உள்ளது.

    தினமும் மாலை நேரத்தில் வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதாவது, நம் வீட்டு வாசலில் சதுர வடிவில் மஞ்சளால் கோலமிட்டு... அதன் மீது வேப்பிலையை பரப்பி, அதன் மீது 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வந்தால், திருஷ்டி படாது. எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 25 மாதங்களுக்குப் பிறகு வெளியில் உள்ள ஊஞ்சலில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மாசிப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இந்தநிலையில் மாதந்தோறும் அமாவாசை விழா அன்று இரவு வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) அமாவாசை அன்று வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் நடைபெற உள்ளது. 25 மாதங்களுக்குப் பிறகு வெளியில் உள்ள ஊஞ்சலில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகிற 1-ந்தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி :

    கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தனம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது.

    இதேபோன்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசன சலுகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர் ஆகியோர் சிறப்பு தரிசனம் மூலம் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    கொரோனா பரவல் காரணமாக சலுகைகள் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வரும் ஏப்ரல் 1-ந்தேதியிலிருந்து திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரையும், சனிக்கிழமையும் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினந்தோறும் 1000 பக்தர்கள் இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர் .

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்....தஞ்சை பெரியகோவிலில் இன்று காலை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன.

    திருவிழாவையொட்டி தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். மேலும், பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம், தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

    இந்தநிலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலையில் குண்டம் விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவில் குண்டத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் பலர் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளில் வரிசையாக காத்திருந்தனர்.

    நேற்று அதிகாலையில் பக்தர்கள் இறங்குவதற்காக குண்டம் தயாரானது. இதையடுத்து கோவிலின் தலைமை பூசாரி சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவிலின் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கினார்கள். இதில் இளம் பெண்கள், பெண்கள், ஆண்கள், சிறுவர்-சிறுமிகள் உள்ளிட்டோர் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சில பக்தர்கள் தங்களது குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். குண்டம் இறங்கும்போது மூதாட்டி ஒருவர் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டனர். விழாவையொட்டி காரை வாய்க்கால் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மனின் வீதிஉலா நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் காரை வாய்க்கால் மாரியம்மன் வீதி உலாவும், இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளன.

    விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டு இருந்த கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. 16-ந்தேதி மாலையில் கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா முடிவடைகிறது.
    தஞ்சாவூர் :

    உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது.

    தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சை பெரியகோவில் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும்.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 18 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

    இதற்காக நான்கு ராஜ வீதிகளிலும் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் பெரியகோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவிலிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அவற்றிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து சித்திரைத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.

    இன்று மாலை சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவில் தினமும் காலையில் பல்லக்கும், மாலையில் வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. 16-ந்தேதி மாலையில் கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா முடிவடைகிறது.

    இன்று நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கிருஷ்ணன், நிர்வாக அதிகாரி மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிக்கலாம்...அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோவில்- கோயம்புத்தூர்
    மாத சிவராத்திரி நாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
    சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இந்த நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அதேபோல், விரதம் இருக்கிறார்களோ இல்லையோ... அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று தென்னாடுடைய சிவனை வழிபடுவார்கள் பக்தர்கள்.

    மாத சிவராத்திரியான இன்று சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    மாத சிவராத்திரி நாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

    சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோசஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது.
    கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் வருகிற 4-ந்தேதி 1098 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இதற்கான பெயர் பதிவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்கான பெயர் பதிவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, நேர்ச்சை நிறைவேற்ற இந்த ஆண்டு 1098 பச்சிளம் குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

    அவர்களுக்கான குலுக்கல் கோவில் வளாகத்தில் நடந்தது. குலுக்கல் முடிவில் 1098 பிள்ளை தூக்கமும், 4 அம்மன் தூக்கமும், 25 உதிரி தூக்கமும் சேர்த்து இந்த ஆண்டு 1127 தூக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தூக்கத் தேரானது 282 முறை கோவிலை சுற்றி வலம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று கோவில் வளாகத்தில் நடந்த குலுக்கலில் தேர்வான தூக்கக்காரர்கள் மாலையில் சிகப்பு பச்சை வண்ண பட்டு உடுத்தி ஊர்வலமாக நடந்து சென்று நீராடினர். பின்னர் மூலக்கோவிலில் உள்ள கணபதிக்கு தேங்காய் உடைத்து மீண்டும் ஊர்வலமாக திருவிழா கோவில் வந்து கோவிலை சுற்றி 3 முறை விழுந்து நமஸ்காரம் செய்தனர். இவர்கள் தூக்க நேர்ச்சை நடைபெறும் 4-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் இருக்க உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் செய்துள்ளனர்.
    இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் நாளை கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியும், விழா நிறைவு நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடும் நடைபெறுகிறது.
    குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி கிராமத்தில் நீலகேசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மயிறக்க திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை குழந்தைகளுக்கு ஆரோக்கியம், அறிவு, நீண்ட ஆயுள் உள்ளிட்டவைகளுக்காக நிறைவேற்றப்படுகிறது. அதன்படி நேற்று ஆண், பெண் என 119 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.

    2 வில்கள் கொண்ட தூக்க வண்டியில் 4 தூக்கக்காரர்கள் 4 குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளியிருக்கும் பச்சைப்பந்தலை சுற்றி வலம் வந்தனர். இதை பார்த்த பக்தர்கள் அம்மா சரணம்... தேவி சரணம்... என்ற நாம கோஷங்கள் எழுப்பினர். நண்பகலில் தொடங்கிய நிகழ்ச்சி மாலையில் நிறைவடைந்தது. தூக்க நேர்ச்சை நிகழ்ச்சியை காண குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியும், விழா நிறைவு நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடும் நடைபெறுகிறது.
    ×