என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடப்பது சிறப்பம்சம் ஆகும். பங்குனி மாதம் நடைபெறும் திருவிழா இந்த கோவிலின் முக்கியமான திருவிழாவாகும்.
    இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் புன்னைவாகனம், வெள்ளி ஹம்ச வாகனம், தங்க கோவர்த்தனகிரி வாகனம், பஞ்சமுக அனுமார் வாகனம், கண்டபேரண்டபட்சி வாகனம் என பல்வேறு வாகனங்களில் ராஜகோபாலசாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய் தாழி உற்சவம் 16-ம் நாள் திருவிழாவாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை ராஜகோபாலசாமி கையில் வெண்ணெய் குடத்துடன் தவழும் குழந்தைபோல் நவநீத சேவை அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து வீதி உலாவுக்கு புறப்பட்டார்.

    ராஜகோபாலசாமி பல்லக்கு 4 வீதிகளையும் வலம் வந்தது. முடிவில் பெரியகடைத்தெரு வழியாக சென்று காந்திரோட்டில் உள்ள வெண்ணெய் தாழி மண்டபத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளினார்.

    வீதி உலாவின்போது வழியெங்கும் பக்தர்கள் அலை அலையாக திரண்டு நின்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபட்டனர். பின்னர் மாலை செட்டி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் செட்டித்தெருவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. பங்குனி உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சிபுரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தென்னாங்கூர். எழில் கொஞ்சும் வயல்வெளிகள் நிறைந்து சுற்றிலும் பச்சைபசுமை நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே வின்னை முட்டும் பிரண்மாண்டமான கோபுரத்துடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
     
    குருஜி ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் உருவாக்கப்பட்டு ஆசிரமம் இங்குள்ளது. இத்திருக்கோயில் அருகே உள்ள ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரிசுவாமிகளின் பரமானந்த சீடர்தான் இந்த ஹரிதாஸ்கிரி சுவாமிகள் ஆவார். அகிலமேங்கும் சுற்றி தன்னுடைய குருஜீ ஞானானந்த சுவாமிகளை பற்றி உபன்யாசம் செய்து உலக மக்களை தனது காந்த குரலால் கவர்ந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்-வந்தவாசி மார்க்கம் அமைந்துள்ள இந்த தென்னாங்கூரில் ஒரு அழகிய ஆசிரமத்தை ஹரிதாஸ் கிரி சுவாமிகள் உருவாக்கினார். இந்த தென்னாங்கூர்தான் குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ ரகுமாயிசமேத பாண்டுரங்க சுவாமிகள் 12 அடியில் பிரம்மாண்டமாக இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
     
    இத்திருக்கோயில் கடந்த 1996 ம் வருடம் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2008 ல் 2வதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2020 ல் 3வது முறையாக சிறப்பாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் இத்திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளும், ரகுமாயி தாயாரும் மிகவும் சிறப்பாக அமையப்பட்டு அருள் பாலிக்கிறார்கள்.
     
    இந்த திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மிகவும் சிறப்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் அன்று பாண்டுரங்க சுவாமிகள் 10,008 பழங்களால் குருவாயூரப்பன் அலங்காரம் (விசு கனி) அலங்காரம் செய்யப்பட்டு மிக பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
     
    கண்ணன் அவதார தினமாக கோகுலாஷ்டமி அன்று வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மற்றும் ஒவ்வொரு நாளும் பிண்ணைமரக்கண்ணன் அலங்காரம், காளிங்க நர்த்தன அலங்காரம், கோவர்தன கிரி தாரி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம் இவ்வாறு 7 நாட்களும் பாகவத சப்த ஆகம் செய்யப்பட்டு 7 விதமான அலங்காரங்களில் திவ்ய தரிசம் கொடுக்கிறார்.
     
    புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையான் போன்று பத்மாவதி கோலமும் திவ்ய தம்பதிகளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதே போன்று ஒவ்வொரு புரட்டாசி சனி அன்று மாலை 6 மணியளவில் பிரம்மாண்டான கருட சேவையும் நடைபெறுகிறது. ஆஷாட (ஆடி) ஏகாதசி காலத்தில் மகா நைவ்வேத்யம் செய்வித்து பக்தர்களுக்கு அன்னதானம் இட்டு பிரம்மாண்டமான நாம சங்கீர்தனத்துடன் விஷேஷ பாலாபிஷேகம் செய்யப்படும்.
     
    பிரதி ஞாயிற்றுகிழமைகளில் துவாரகை கண்ணன் போன்று கம்மீரமாக ராஜ அலங்காரத்துடன் தரிசனம் கொடுக்கிறார். மார்கழி பௌர்ணமி காலத்தில் குருநாதர் ஞானானந்த சுவாமிகள் சித்தயான தினத்தன்று 140 கிலோ வெண்ணெய்னினால் மிகவும் அழகான வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
     
    வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5 மணிக்கு உற்சவர் சொர்க்க வாசல் தரிசனம் பக்தர்களுக்கு அருளிகிறார். 12 அடியில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்க சுவாமிகள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் திருப்பாற்கடலில் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருளிகிறார்.
     
    பிரதிமாதம் உத்திரத்டாதி நட்சத்திர தினத்தன்று குருநாதனர் ஹரிதாஹ் கிரி சுவாமிகளால் ஆராதனம் செய்த உற்சவ மூர்த்திகள் பாண்டு ரங்கன் சுவாமிகள் ருக்குமாயி தாயார் ஆகியோர் தங்கதேரில் எழுந்தருளி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.
     
    இந்த ஆலயத்தில் வைகாநாச ஆகம முறைப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு நடப்பது போன்று தினமும் 6 கால பூஜைகளும் உற்சவங்களும் நடைபெறுகிறது. பாண்டு ரங்க சுவாமிகளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துளசி, சந்தனம் ஆகியவை பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
     
    கோயில் சிறப்பு

    இத்திருக்கோயிலில் அஷ்டபந்தனம் எனும் மூலிகையால் இங்கு மூலவர் சுவாமிளை பிரதிஷ்டை செய்திருப்பதால் ஆண்கண் சட்டையை கழட்டி விட்டு சுவாமியை தரிசிப்பது சிறப்பாகும். ஆலயத்தின் உட்புறம் உலகத்திலேயே முதன்முறையாக கண்ணாடி இழை ஓவியம் (பைபர் கிளாஸ் பெயிண்டிங்) கிருஷ்ணருடைய ராஜ லீலைகள் அனைத்தும் தஞ்சாவூர் சித்திர பாணியில் அமையப்பட்டிப்பது இக்கோயிவில் தனிச்சிறப்பாகும்.
     
    இந்த ஆலயத்தில் துவாரபாலகர்கள் திருப்பதி ஆலயத்தில் அமைந்துள்ளது போன்று பஞ்ச லோகத்தில் அமைய பெற்றிருக்கிறார்கள். பாண்டு ரங்க சுவாமிகளுக்கு செய்யப்படும் அலங்காரம் மிகவும் சிறப்பானது. சிவபெருமான் அபிஷேக பிரியர். அதேபோன்று கிருஷ்ணன் அலங்கார பிரியர் அதன் காரணமாக இக்கோயிலின் அலங்காரம் மிக நேர்த்தியாக சிரத்தையுடன் செய்யப்பட்டு பல்வேறு மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
     
    ஸ்தல விருட்டம்

    இந்த ஆலயத்தின் ஸதல விருட்சமாக தமால விருட்சம் அமையப்பட்டுள்ளது. இந்த மரம் இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் தான் அமைந்துள்ளது. ஒன்று வடநாட்டிலும் மற்றொன்று தென்னாங்கூரிலும் உள்ளது. இந்த மரத்தை சுற்றி வந்து பாண்டுரங்கனை தரிசித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம், திருமண தடை, உத்யோக உயர்வு, வியாபார விருத்தி, குழந்தைகளின் கல்வி மேம்படும் என்பது ஐதீகம்.
     
    ஸ்ரீமடம்

    இங்கு பாண்டுரங்க சுவாமிகள் கோயிலுக்கு எதிரில் உள்ள ஸ்ரீமடத்தில் குருநாதர் ஞானாந்த கிரி சுவாமிகளுக்கு தனியாக ஆலயமும் உள்ளது. இந்த ஆலத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த சோடஷாக்சரி அம்மாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் நவாவரண பூஜையம் சிறப்பாக நடைபெறுகிறது. குரு ஹரிதாஸ் கிரி சுவாமிகளுக்கு ஸ்ரீமடத்திலேயே அழகிய பிருந்தாவனமும் அமையப்பெற்றுள்ளது. மிகவும் சிறப்பாகும்.
     
    மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்

    இத்தனை சிறப்பு மிக்க தென்னாங்கூரிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் உள்ளது. மதுரை மாநாகரில் எழில்மிகு தோற்றத்துடன் மிக பிரம்மாண்டமாக அமைந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய அருளை அளித்துவரும் மதுரை மீனாட்சியம்மன் இந்த தென்னாங்கூரில் தான் பிறந்தார் என்ற ஐதீகமும் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் இங்கு பிறந்ததாலேயே இந்த ஊருக்கு தட்ஷிண ஹாலாட்சியம் என்றொரு பெயரும் உண்டு. இந்த ஆலத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சுந்தரேஸ்வரர் தன்னித்தனி சந்நதிகளில் அருள் பாலிக்கிறார்கள். மிகவும் அரிதாக காணப்படும் நவக்கிரக மூர்த்திகள் தங்களது பிராட்டிகளுடன் (மனைவிகளுடன்) கூடிய சன்னதி அமையப்பட்டிருப்பது தனித் சிறப்பாகும்.
     
    இந்த ஊரின் ஆதிகால சன்னதியான லட்சுமி நாராயணன் சன்னதியும் இவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் பல அறக்கட்டளைக்கு உட்பட்டதாகும். இந்த ஆஸ்ரமத்தில் நிறைய தர்ம காரியங்கள் நடைபெற்று வருகிறது. தினமும் அன்னதானம், கோசாலை, முதியோர் இல்லம், இலவச மருத்தும் போன்ற தர்ம காரியங்கள் நடைபெற்ற வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக இங்கு விடுதிகளும் அமைந்துள்ளது.

    தரிசன நேரம்

    இத்திருக்கோயிலில் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் 8 மணிவரை பாண்டுரங்கசுவாமிகள் ரகுமாயி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவை தான் சக்கரங்கள். இந்த சக்கரங்கள் பற்றி விரிவாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்…

    மனிதனின் சக்திநிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல. சூட்சும சரீரத்தில் உள்ளவை. ஆன்மிகப் பாதையில் இந்த சக்கரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்…

    எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ, காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவை தான் சக்கரங்கள்.

    மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்கள் உள்ளன. அவைதான் மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக் கண்கள். ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது. சக்திநிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக் கூடும். இந்த ஏழும், சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இருக்காது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாஹதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.

    மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாஹதத்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மிக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

    மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம் இது. ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருக்கிறது. இந்த சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

    சுவாதிஷ்டானம்: பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது. உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருக்கிற ஈடுபாட்டிற்குக் காரணமானது.

    மணிப்பூரகம்: தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப் பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

    அநாஹதம்: விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது. இந்த சக்கரத்துக்கென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது.

    விசுக்தி: தொண்டை குழியில் அமைந்துள்ளது. இது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானுக்கு `விசுகண்டன்’ `நீலகண்டன்’ என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல. தீய உணர்வுகள், தீய எண்ணங்கள், தீய சக்திகள் போன்றவையும் ஆகும்.

    ஆக்ஞை: புருவ மத்தியில் உள்ளது. இது ஞானம், தெளிவு போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழ முடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞை முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்வார்கள்.

    சஹஸ்ரஹாரம்: உச்சந்தலையில், (பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடம்) இருக்கிறது. இந்த சக்கரம், பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது.
    தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. அவரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
    தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.

    1. விநாயகர் சகஸ்ரநாமம்:

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    2. விநாயகர் ஸ்லோகம்:

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    3. விநாயகர் ஸ்லோகம்:

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    4. விநாயகர் ஸ்லோகம்:

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

    5. விநாயகர் ஸ்லோகம்:

    மூஷிக வாகன மோதக ஹஸ்த
    சாமர கர்ண விளம்பித சூத்ர
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர
    விக்ன விநாயக பாத நமஸ்தே.

    6. விநாயகர் காயத்ரி மந்திரம்:

    வக்ரதுண்டாய ஹீம்
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

    7. விநாயகர் ஸ்லோகம்:

    அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
    குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்.

    ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.
    கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது.
    புதுவை நகரின் இதயமாக விளங்கக்கூடிய மைய பகுதியில், கிழக்கில் மாதா கோவில் தெரு என்று அழைக்கப்படும் முற்கால நெசவாளர் தெருவுக்கும், மேற்கில் அம்பலத்தாடும் ஐயன் திருமடத்துக்கும், வடக்கே கோவில் பெயர் விளங்கும் காளத்தீஸ்வரன் கோவில் தெருவுக்கும், தெற்கே கொசக்கடை தெரு என்று கூறப்படும் அம்பலத்தடையார் மடம் தெருவுக்கும் இடையில் மிஷன் வீதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப் பளவில் காளத்தீசுவரர் கோவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.

    இப்பூவுலகம் “நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று” ஆகிய பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இயங்குகிறது என்பது யாவரும் அறிந்ததே.
    பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த் தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும். அவற்றுள் தென்கயிலாயம் என்றும், வாயுதலம் (காற்றுத்தலம்) என்றும் “ராகு-கேது தலம்” என்றும் அழைக்கப்படுவது செட்டிக்கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில். இது பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார், கண்ணப்ப நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றதும், ‘கயிலை பாதி காளத்தி பாதி” என்று நக்கீரரால் போற்றி துதிக்கப்பட்ட திருத்தலமும் ஆகும். மூவர் பாடல் பெற்ற திருத்தலம். பக்தர்களால் “அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி” என்று போற்றி வணங்கிய திருத்தலம்.

    இவ்வாறு பலவகையினாலும் சிறப்புற்று, தன்னை நாடிவந்தோருக்கு எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானின் திருவருளால் ஈர்க்கப்பட்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து “திருமூலர்” கூறியவாறு (இதயக்கோயில்) பூஜித்து வந்தனர். இவ்வாறு பூஜிக்கப் பெற்று வந்த தெய்வங்களுக்கு திருக்கோயில் கட்டிட எண்ணம் கொண்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் மனம் உருகி இறைவன் திருவருளை வேண்டிட இறைவனும் அவர்களின் மேலான அன்புக்கு கட்டுப்பட்டவனாக திருவருள் வழங்கினார்.

    இறையருள் கிடைக்கப் பெற்ற அவர்கள் நகரின் நடுவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பெருங்கோவில் எழுப்பி அதில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானுடன் பரிவார மூர்த்திகளையும் அமைத்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமானின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் விக்கிரகத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தனர்.

    பன்னெடுங்காலத்திற்கு முன்னரே சைவமும் வைணவமும் ஒன்று என்பதற்கு இலக்கணமாக புதுவை வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் சான்றாக இருந்துள்ளார்கள். இன்றளவும் இருந்து வருகிறார்கள். இவ்வாறு போற்றப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர சுவாமி ஸ்ரீதேவி -பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காலப்போக்கில் எல்லோராலும் அன்புடனும் பெருமிதத்துடனும் “செட்டிக்கோவில்” என்றே அழைக்கப்படுகின்றது.

    ராஜகோபுரத்தின் சிறப்பு

    கோவிலின் கிழக்கு புறத்தில் ராஜகோபுரம் 5 சிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் ராஜகோபுரத்தின் முன்புறம் சிவன் அவதாரங்களும், பின்புறம் பெருமாள் அவதாரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிவன்-பெருமாள் கோவில் இங்கு ஒன்றாக அமைந்து இருப்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

    கோவில் தெற்கு வாசலில் 30 அடி உயரத்திற்கு 3 சிலைகளுடன் ஞானாம்பிகை அம்மன் கோபுரமும், வடக்கு புறம் 3 நிலை கொண்ட 30 அடி உயர பெருமாள் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சிவன், அம்பாள், பெருமாள் சன்னதிகளில் 6 கோபுரங்கள் அமையப் பெற்றுள்ளது.

    கொடி மரம்

    கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது. அன்பர் மனத் தில் அண்டவெளி பராசக்தியை ஈர்த்துக் கொடுக்க வல்லது கொடிமரம் ஆகும். இது ‘சூட்சும லிங்கம்’ எனவும் வழங்கப்படும்.

    கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலகலத்து கொண்டு இருக்கின்றன.

    கொடி மரத்தின் கிழக்கு பகுதியில் நர்த்தன விநாயகரும், தெற்கு வடக்கு முறையே பார்வதி பரமேசுவரனும், வள்ளி தெய்வானையுடன் முருகரும், மேற்கே சிவனை பார்த்தவாறு லிங்கோத்பவரும் செப்பு தகட்டில் பதிக்கப்பட்டு அமைந்துள்ளனர்.

    பலிபீடத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கிய உடனே கொடி மர உச்சியை அண்ணாந்து நோக்கும் அமைப்பை எண்ணிப் பார்த்தால் “பணிவு உண்டாயின் உயர் பதவி உண்டாகும். புகழ் வானளாவ விரிந்து நிற்கும்” என்ற கருத்து நமக்கு மிக எளிதில் விளங்கி விடுகின்றது. மண்ணையும், விண்ணையும் இணைக்கின்ற ஒரு சிறப்பு கொடிமரத்துக்கு உண்டு.

    2 கோவில்களிலும் கொடி மரம், பலி பீடம், கோபுரம் என தனித்தனியாக இருப்பினும், ஒரு கோவிலின் சுற்றுப்பகுதியிலேயே அமைந்துள்ளது சிறப்பு கொண்டதாகும்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    ஞாயிறு முதல் புதன்கிழமை வரை காலை 6.30 மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

    வியாழக்கிழமை

    காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை. மாலை 4 மணி முதல் 9 மணி வரை.

    வெள்ளி-சனிக்கிழமை

    காலை 6.30 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
    விசேஷ நாட்களில் கோவில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

    கன்னி மூலையில் கற்பக விநாயகர்

    ராஜகோபுரத்தின் உள் நுழைந்து, அகன்ற சுற்று பகுதியில் (பிரகாரம்) கோவிலை முதல்சுற்று வலம் வந்தால், கன்னி மூலையில் கற்பக விநாயகர் சன்னதியை காணலாம்.

    விநாயகர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் அஷ்டப்பிரதான் என்று சொல்லுமாறு 8 தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் திருஉருவத்துக்கு எதிரில் மூஞ்சுறு என்று சொல்லக்கூடிய விநாயகப் பெருமானின் வாகனம் மிகவும் சிறியதாக உள்ளது. இதை நோக்கும்போது, “பருத்த விநாயகனுக்கு சிறுத்த மூஞ்சுறு” என்ற தொடர் உண்மையாகவே இங்கு தோற்றம் அளிக்கின்றது. “எளிய பக்தி வலிமையை தாங்கும்” என்பது சொல்லாமல் புலப்படுகின்றது. எந்த காரியத்தை தொடங்கும் போதும், கோவிலை வலம்வரும் போதும், முதலில் விநாயகப் பெருமானை வணங்கியே தொடங்க வேண்டும் என்பது முன்னோர் வகுத்த மரபு ஆகும்.

    கோவில் முகவரி

    ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் (செட்டிக் கோவில்),
    எண்.106, மிஷன் வீதி,
    புதுச்சேரி-605 001.
    கோவில் அலுவலக தொலைபேசி எண். 0413-2335495.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் (செட்டிக் கோவில்) புதுவை பஸ் நிலையத்தில் இருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திலும், ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
    புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறி செஞ்சி சாலை கார்னர் அம்பலத்தடையார் மடம் வீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம்.
    சித்திரை திருவிழாவிற்காக மதுரை வரும் கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள். இதனால் பல இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி வைகை ஆற்றில் நடைபெறாமல் அழகர் கோவிலில் உள்ள கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.

    இதனால் மழை வளம் இல்லை. மதுரை செழிப்பாக இல்லை என பக்தர்கள் வேதனைபட்டு வந்தனர். அவர்களது மனக்குறையை போக்கும் வகையில் இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டுக்கான விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானாக திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    14-ந்தேதி (வியாழக்கிழமை) மாலையில் தங்கப் பல்லக்கில கள்ளர் திருக்கோலம் பூண்டு சுந்தரராஜபெருமாள் மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்

    15-ந்தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். தொடர்ந்து புதூர், ரிசர்வ் லைன் மற்றும் அவுட்போஸ்ட் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலையில் அம்பலக்காரர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கும் கள்ளழகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றிக் கொள்கிறார்.

    தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் பங்கேற்கும் கள்ளழகர் 16-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து ஆயிரம்பொன் சப்பரத்தில் புறப்பட்டு கருப்பண்ணசாமி கோவில் வருகிறார். அங்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு காலை 5.50 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு தற்போது அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அழகர் ஆற்றில் இறங்கும் வைகை ஆற்றுப்பகுதியில் சீரமைப்பு பணி

    வைகை ஆற்றில் இருந்து புறப்படும் கள்ளழகர் ராம ராயர் மண்டபம், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில், தேனூர் மண்டபம், அனுமார் கோவில் போன்றவற்றில் எழுந்தருளுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது. 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சிகள் நடக்கின்றன.

    18-ந்தேதி மோகினி அவதாரத்தில் உலாவரும் கள்ளழகர் அதன் பின்னர் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். 19-ந்தேதி மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலை நோக்கி புறப்பட்டு செல்கிறது. வழி நெடுக அவருக்கு பக்தர்கள் வரவேற்பு கொடுக்கின்றனர். 20-ந்தேதி காலை அழகர் மலை செல்லும் கள்ளழகருக்கு மறுநாள் 21-ந்தேதி உற்சவ சாந்தி நடைபெறுகிறது. இத்துடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    சித்திரை திருவிழாவிற்காக மதுரை வரும் கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள். இதனால் பல இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அவர்கள் அழகர் எங்கு வருகிறார். இங்கு எப்போது வருவார்? என கேள்வி கணைகளை தாங்கி நிற்பார்கள். இவர்களது வசதிக்காக ‘டிராக் அழகர்’ செயலி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கோவிலில் இருந்து புறப்பட்டு வரும் அழகர் மீண்டும் தன் இருப்பிடம் செல்லும் வரை எங்கு இருக்கிறார்? என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும். 

    இதையும் படிக்கலாம்...சமூக அந்தஸ்து தரும் சச யோகம்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்
    பக்தர்களின் தலை மீது சடாரி வைக்கப்படுவதன் பின்னால் உள்ள ஐதீகம் பற்றி ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே காணலாம்.
    ஒரு முறை வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணர், அவரது சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை ஆதிசேஷன் மேல் வைத்து விட்டு, தன்னை தரிசிக்க வந்த முனிவர்களை பார்க்க புறப்பட்டார். அவசரமாக சென்ற நிலையில் அவரது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளே விட்டு விட்டார். சங்கு, சக்கரம், கிரீடம் ஆகியவற்றின் அருகிலேயே பாதுகைகள் விடப்பட்டது குறித்து, அவை மூன்றும் அதிருப்தி அடைந்து, பாதுகைகள் பற்றி அவமானமாக பேசின. அதனால் வருத்தம் அடைந்த பாதுகைகள் கண்ணீருடன் பகவானிடம் முறையிட்டன.

    ‘என்னுடைய முன்னிலையில் அனைத்தும் சமம் என்பதை உணராமல், கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு, பாதுகைகளை அவமானம் செய்த பலனை அனுபவிக்க, எனது ராமாவதார காலத்தில் சக்கரமும், சங்கும், பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் பிறப்பார்கள். அப்போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் பூஜை செய்து கர்ம பலனை தீர்க்க வேண்டும்..’ என்று விஷ்ணு தெரிவித்தார்.

    இந்த கதையின் அடிப்படையில் பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடிக்கு சமமான அளவில் அவரது பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் உயர்ந்தவை என்ற தத்துவ நோக்கில் சடாரி பக்தர்களின் தலை மீது வைக்கப்படுகிறது. அதன் மூலம் ஒருவரது `நான்' என்ற ஆணவம், அகங்காரம் நீங்கும் என்பதுதான் சடாரியின் அடிப்படை தத்துவமாகும். இறைவனுக்கு முன்னர் அனைவரும் சமம். இறைவன் முன்னிலையில் பணக்காரன், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் சடாரி சாற்றப்படுகிறது.

    சடாரி சாற்றப்படுவதற்கு வைஷ்ணவ சம்பிரதாய ரீதியாக ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும், கர்ம வினைகளால் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது. அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது என்பது ஐதீகம். மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    சடம் என்ற வாயுவால் பாதிக்கப்படாதவர் நம்மாழ்வார் ஆவார். பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வார், நான்கு வேதங்களையும் தமிழில் பாடிய காரணத்தால், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப்படுகிறார். ஆழ்வார் திருநகரியில் வசித்து வந்த காரியார் மற்றும் உடைய நங்கை ஆகியோருக்கு குழந்தையாக அவர் பிறந்தார். பிறக்கும் குழந்தைகள் அழுவது உலக நியதி. ஆனால், குழந்தை அழாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தது. அதன் காரணமாக, அவருக்கு `மாறன்' என்று பெயர் வந்தது. விஷ்வக்சேனரின் அம்சமாக பிறந்த நம்மாழ்வார் தாயின் கருப்பையில் இருக்கும்போதே, சடம் என்னும் வாயுவை கோபமாக பார்த்ததால் `சடகோபன்' என்றும் அழைக்கப்படுகிறார். அவரை திருமாலின் திருவடி அம்சம் என்று கூறப்படுவது சம்பிரதாயம் ஆகும்.

    அதன் அடிப்படையில், கோவிலில் குடிகொண்டுள்ள பெருமாளின் பாதங்களில் சடகோபம் என்ற சடாரி வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின் தலையில் வைக்கப்படுகிறது. அதாவது, நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது. அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும்போது, குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி குனிந்து ஏற்றுகொள்வது முறையாகும்.
    சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும்.
    சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான் துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

    அந்த நிலையில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சனி சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.

    சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள். மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னைப் பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள். மத்திய அளவில் உயரம், கருப்பான நிறம் கொண்ட இவர்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆயுள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    கடும் உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை குடும்பத்திற்காக சேர்த்து வைப்பார்கள். இந்த யோகம் கொண்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தாலும், தன்னை நம்பியவர்களுக்காக உண்மையுடன் செயல்படும் துணிச்சல் கொண்டவர்கள் ஆவர்.

    இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சனி கேந்திரத்தில் தனித்து சுபர் அல்லது அசுபர் பார்வை சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.

    சச யோகம் பெறுவது அரிதான யோகம். சனிபகவான் 12 ராசிகளை கடக்க 30 ஆண்டுகாலம் ஆகிறது. இதில் துலாம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே கிடைக்கும். சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும். கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் 2022 முதல் 2025 வரை பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்சமாக புருஷ யோகமான சசமகாயோகம் அமையப்போகிறது.

    சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு 7,10 ல் இருந்தால், ரிஷபத்திற்கு 10ல் இருந்தால்,கடகத்திற்கு 4,7 ல் இருந்தால், சிம்மத்திற்கு 7ல் இருந்தால் துலாத்திற்கு லக்கினம் மற்றும் 4ல் இருந்தால் விருச்சிகத்திற்கு 4ல் இருந்தால் கும்பத்திற்கு லக்கினத்தில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு ராசிநாதன் 10ஆம் வீடான துலாம் ராசியில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு 10ல் தனித்து எவர் சேர்க்கை பார்வை பெறாமல் உச்சம் பெறும் சனி முழுமையான சச யோகம் தர போகிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
    பழமைவாய்ந்த பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை.
    சேலம் மாவட்டம் இடைப்பாடியில் சரபங்கா நதிக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள சரபங்கா நதிக்கரை ஓரத்தில் 11 கோவில்கள் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இங்கு இறைவன், பாணலிங்கமாய் அருள்பாலிக்கிறார்.

    பாற்கடலை கடைந்தபோது, வெளிப்பட்ட கொடிய நஞ்சை தானே உண்டு தேவர்களை காத்தார் சிவபெருமான். அவரை நஞ்சுண்டஈஸ்வரன் என்று வணங்கினர் தேவர்கள். அப்படிப்பட்ட நஞ்சுண்டேஸ்வரரை வணங்கிணால் காலசர்ப்ப தோஷம் நீங்கும். ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணத்தடை விலகும்.

    வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து பாலாபிஷேகம் செய்தால் அனைத்து வித தோஷங்களும் நீங்கும். தேவகிரி அம்பாளை வழிபட்டால் மாங்கல்யம் நிலைத்து, மங்களம் பெருகும் என்பது ஐதீகம். இதேபோல் சனிபெருமானுக்கு, இங்கு தனிக்கோவில் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை.
    நவகிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். சுக்கிர பகவானுக்கு கிரக பதவி கிடைத்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நவகிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.

    அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குல குருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.

    இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வர பலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கி விட்டார்.

    பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் சுக்கிரன் என்றும், தூய வெண்மையாக வந்ததனால் வெள்ளி என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.
    தெய்வீக மாதமாக இருக்கும் பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
    பங்குனி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சந்நிதிகோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று மேற்கூறிய முறையில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பல வகையான கஷ்டங்களை சந்தித்து வருபவர்களுக்கு, அக்கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கி, அறிவுகூர்மை உண்டாகி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். கடன்கள் இல்லாத வாழ்க்கை வாழும் சூழல் ஏற்படும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 16-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருடம்தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று இரவு கிரி வீதி வழியாக திருக்கோவில் வந்து சேர்க்கை நடைபெறும்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×