என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு நிம்மதியுடன் வாழவும், உலக மக்கள் நலமோடு வாழவும் வேண்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க வரும்போது, குத்துவிளக்கு, மணி, கற்பூரத் தட்டு கொண்டுவர வேண்டும்.

    பூஜைக்குத் தேவையான பொருள்கள் மற்றும் 36 பக்க திருவிளக்கு பூஜைப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விஷூ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விஷூ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள், கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், துணைத்தலைவர் திலகா மற்றும் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சிவனடியார்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவு ஏகசிம்மாசனம், கைலாச பருவதம், அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், கேடயம், வெட்டுங்குதிரை, காமதேனு, தந்தப் பூம்பல்லக்கு ஆகிய வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெறும். 8-ம் திருநாளான 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் நடராஜர் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்தில் புறப்பாடு நடைபெறும்.

    13-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 10-வது திருநாளான 14-ந் தேதி மதியம் 1 மணிக்கு சித்திரை விஷூ, தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு பாபநாசர்- உலகாம்பிகை தெப்ப உற்சவமும், 15-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்தலும் நடைபெறும்.
    தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் புதன் கிழமையில் விரதம் அனுஷ்டித்தால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும்.
    நவகிரகங்களில் பச்சை நிறம் கொண்ட புதன் கிரகமும் மனிதர்களுக்கு அறிவு, செல்வ வளமையை தரும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். அவரின் அருளை நாம் பெற மேற்கொள்ள கூடிய “புதன் கிழமை விரதம்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

    பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து, அப்படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது பச்சை நிற துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி புதன் பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.

    புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.

    நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் திருமால் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.
    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. கோவிலில் பங்குனி மாத திருவிழா இன்று காலை திருப்பள்ளியுணர்த்தலுடன் நடைபெறுகிறது.

    மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரு திருக்கொடியேற்றுகிறார். மாலை 7 மணிக்கு ராமாயண பாராய ணம், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

    2-ம் திருவிழா நாள் (7.ந்தேதி) காலை 8 மணிக்கு நாராயணீய பாராயணம், காலை 11 மணிக்கு சுவாமி பவனி வருதல், மாலை 6 மணிக்கு விப்ர நாராயண இராமானுஜதாசன் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி ஆகியன நடக்கிறது.

    3-ம் நாள் (8-ந் தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி ஆகியவும், 4-ம் நாள் (9-ந் தேதி) மாலை 6 மணிக்கு பரதநாட்டியம், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல்,
     
    இரவு 10 மணிக்கு சீதா சுயம்வரம் கதகளி, 5-ம் நாள் (10-ந் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவபலி தரிசனம், , இரவு 7 மணிக்கு பக்தி கானா மிர்தம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்று, இரவு 9 மணிக்கு சுவாமி கருட வாக னத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு கர்ணசபதம் கத களி ஆகியன நடைபெறுகிறது.

    6-ம் திருவிழா நாள் (11-ந் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவபலி தரிசனம், இரவு 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியனவும், 7-ம் திருவிழா நாள் (12-ந் தேதி) காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை,

    11 மணிக்கு திருவனந்தபுரம் கவடியார் அரண்மனை சார்பில் சிறப்பு உற்சவபலி தரிசனம், இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு கீசக வதம் கதகளி ஆகியனவும்,

    8-ம் திருவிழா நாள் (13-ந் தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், சுவாமி பவனி வருதல், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

    9-ந் திருவிழா நாள் (14-ந் தேதி) காலை 11 மணிக்கு சுவாமி பவனி வருதல், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 8 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 9.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், இரவு 12 மணிக்கு கிராதம் கதகளி, 10-ந் திருவிழா நாளில் (15-ந் தேதி) காலை 11 மணிக்கு சுவாமி பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் அரச குடும்ப பிரதிநிதி, கதகளி கலைஞர் முன் செல்ல துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேள தாளத்துடன், ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ண சுவாமியும் பக்தர்கள் புடை சூழ ஆறாட்டுக்கு எழுந் தருளல் நடக்கிறது. பவனி கழுவன் திட்டை, தோட்ட வாரம், வழியாக மூவாற்று முகம் ஆற்றை சென்றடைந்து அங்கு ஆறாட்டு நடக்கிறது. பின்னர் கோயிலுக்கு சுவாமி வருகை தந்த பின்னர் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

    ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
    வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை கற்று கொள்ளுங்கள்
    நான் கள்ளங்கபடின்றி கற்றேன். கற்றதை முறையீடின்றி பிறறோடு பகிர்ந்து கொண்டேன். அதன் செல்வத்தை நான் மறைப்தில்லை. (சா.ஞா.7:13)

    ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில் சரியான செயலை கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். ஊக்கமுடமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மை உடமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது. உங்களை நீங்கள் மதிக்கும் மன உணர்வை பயன்படுத்துங்கள். அது போன்று நண்பர்களையும், அதிகாரிகளையும் மதியுங்கள். மென்மையான செயல்களின் மூலம் நல்லதை பற்றி சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை கற்று கொள்ளுங்கள். காலம் தாழ்த்தாமல் வகுப்புக்கு சென்று வருவது நல்ல பழக்கம்.

    காலம் குறித்த அர்ப்பண உணர்வு, அமைதி, நுண்மதி, சாந்தம், தன்னம்பிக்கை போன்றவை நம்மை வளர உதவி செய்யும். எனவே முடிந்த அளவுக்கு ஆற்றலோடு நல்லுறவை பேணி பள்ளிக்கூடத்தில் இருந்து எந்த அளவுக்கு பல நல்லதைக் கற்றுகொள்ள முடியுமோ எவ்வளவு நெறிமுறைகளை உள் வாங்கி கொள்ள முடியுமோ அவை அனைத்தையும் கற்று கொள்ள முயற்சி எடுங்கள்.

    வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரை அமைதியாக உங்கள் இடத்தில் எழுந்து நின்று காத்திருங்கள். முதலில் வெளியே செல்வதற்கு நெருங்கி பிடித்து போக வேண்டாம். பள்ளி அரங்கில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுங்கள். கூட்டம் நடைபெறும் போது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதத்தில் மகிழ்ச்சியுடன் எல்லா நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள். தேர்வு நேரங்களில் முழுமையாக படித்து தேவையானவற்றை மட்டுமே எழுவதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    பராமரிப்பு பணி காரணமாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் தெற்கு வாசல் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கோவிலின் கிழக்கு வாசலை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 4 வாசல்கள் உள்ளன. இதில் வடக்கு வாசல் கோவிலின் முக்கிய பிரதான வாசலாக உள்ளது. பவானி கூடுதுறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் அங்கிருந்து தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் வழியாக கோவிலுக்கு வந்து சாமியை தரிசிப்பது வழக்கம். மேற்கு வாசல் கோவில் யானை வந்து செல்லும் வாசலாக உள்ளது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவிலின் தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் மூடப்பட்டன. தற்போது வரை இந்த வாசல்கள் திறக்கப்படவே இல்லை. மேலும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ அரசு திரும்ப பெற்றுவிட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் திறக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் நடமாட்டம் இன்றி இருந்தால் கோவில் பின்புறம் உள்ள பூங்கா பகுதி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்கா பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. நடைபாதை மோசம் அடைந்து உள்ளது. எனவே அதை சீரமைப்பது குறித்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் சீரமைப்பு பணிகள் நடைபெறும் வரையில் தற்காலிகமாக தெற்கு வாசல் திறக்கப்பட வாய்ப்பில்லை. நடைபாதை சீரமைக்கப்பட்ட பின்னர் தெற்கு வாசல் திறக்கப்படும்,’ என்றனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘ தெற்கு வாசல் அடைக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு கோவிலுக்கு செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். அதே நேரத்தில் கோவிலின் கிழக்கு வாசல் பகுதி நன்றாக உள்ளது. அந்த வாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர்.
    இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 24.4.22 அன்று ஏகதின லட்ச்சார்ச்சனை நடைபெறும்.
    தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு வருடம் தோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு குருபகவான் வரும் 14-ந்தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன் பெற வேண்டி லட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது.

    கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு ஸ்தலங்களின் வரிசையில் 22-வது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

    இக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சன்னதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதி வினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகிறது. 'இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

    நவக்கிரங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர். ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குரு பகவானுக்கு உண்டு. எனவே குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டானது. குருப்பெயர்ச்சி நடைபெறும் நாளிலிருந்து 15 நாட்களுக்குள் குருபகவானை வழிபடுவது அவசியம்.

    எல்லா சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிபடப்படுகிறார். ஆனால் திட்டை, வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நவக்கிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை. ஒருவருடைய ஜென்ம ராசியில் இருந்து 3,5,7,9,12 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது குருபகவான் நற்பலன்களை அளிப்பார் என்பது பொது விதி.

    அதன்படி இந்த குருப்பெயர்ச்சியின் போது ரிஷப ராசி, கடகராசி, கன்னி ராசி, விருச்சிக ராசி, கும்ப ராசிக்கும் நற்பலன்களை வழங்குவார். ஜென்மராசியான 1-ம் இடம் மற்றும் 2,4,6,8,10,11 ஆகிய இடங்களில் குருபகவானின் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்காது என்பது பொது விதியாகும்.

    அதன்படி மீன ராசி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 24.4.22 அன்று ஏகதின லட்ச்சார்ச்சனை நடைபெறும். இதற்கு கட்டணம் ரூ.300.

    இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 29.4.22 - 30.4.22 ஆகிய 2 நாட்கள் மட்டும் பரிகார ஹோமம் வேத விற்பனர்கள் தலைமையில் நடைபெற உள்ளன. இந்த ஹோமங்களில் நேரில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் ரூ.500.

    லட்ச்சார்ச்சனை மற்றும் குருபரிகார ஹோமங்கள் நடைபெறும் நாட்களில் நேரில் வருபவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அவற்றில் பங்கு கொள்ளலாம். நேரில் வர முடியாதவர்கள் லட்ச்சார்ச்சனைக்கு ரூ.300 மற்றும் ஹோமத்திற்கு ரூ.500- மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட்-ஐ தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை தங்களின் சரியான முகவரியுடன் 28.4.22-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பினால் அவர்களுக்கு அர்ச்சனை, சங்கல்பம் செய்து தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    மேலும் பிரசாதத்துடன் பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். மணியார்டர் மற்றும் டிமாண்ட் டிராப்ட் அனுப்புபவர்கள்,

    நிர்வாக அதிகாரி, வசிஷ்டேஸ்வரர் கோயில், திட்டை - 613 003. தஞ்சாவூர் மாவட்டம். தொடர்புக்கு : 8870703349, 7373622817என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு செயல் அலுவலர் மா.தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
    சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர்.

    அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

    அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
    கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்ன தர்மங்கள் நடைபெற்று வருகின்றன.
    கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத 11 நாள் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்ன தர்மங்கள் நடைபெற்று வருகின்றன. 11-ம் நாள் திருவிழாவான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத் தை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன்,

    அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வரச் செய்தனர். அய்யாவழி பக்தர்கள் தேரை இழுக்கும் போது சட்டை அணியாமல் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு நெற்றியில் நாமம் இட்டு “அய்யா அரகர சிவசிவ” என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேர் இழுத்தனர்.

    மாலையில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அதிகாலை திருக்கொடி இறக்குதலும் அதைத் தொடர்ந்து தான தர்மங்கள் நடைபெற்றது.
    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தர்மகர்த்தாக்கள் கே. மனோகரச் செல்வன், கே.எம். கைலாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
    குன்றத்தூர் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 21-ந் தேதி நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சோம கும்ப பூஜை நடக்கிறது.
    குன்றத்தூர் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக விழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை ஆகியவை நடக்கிறது. 21-ந் தேதி நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சோம கும்ப பூஜை நடக்கிறது.

    22-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பரிவார பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 23-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை ஹோமம் ஆகியவை நடக்கிறது. 24-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை, விசே‌ஷ தீபாராதனை, 5-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

    25-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகம், உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
    கல்வி, ஞானம், தனம் உள்ளிட்டவற்றை பெருகச் செய்யும் கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் கிழமைகளில் பின்வரும் மந்திரங்களை சொல்லி வந்தால் புதன் பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.
    ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் கல்வியாளர்களாகவும் இறை பக்தி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்கிறது. குடும்பத்தில் அமைதியை அருள்கிறது. வியாபாரத்தில் நஷ்டத்தை போக்கி, லாபம் கிடைக்க துணை செய்கிறது. கல்வி, ஞானம், தனம் உள்ளிட்டவற்றை பெருகச் செய்யும் கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் கிழமைகளில் பின்வரும் மந்திரங்களை சொல்லி வந்தால் புதன் பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.

    புதன் மந்திரம்:

    ப்ரிங்கு கலிகா ச்யாம்
    ருபேணா ப்ரதிமம் புதம்
    ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
    தம் புதம் ப்ரணமாம் யஹம்

    புதன் காயத்ரி மந்திரம் :

    ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத : பிரசோதயாத்

    புதன் கிழமைகளில் பெருமாளை வணங்கிவிட்டு, நவகிரகங்களை வழிபட்டுவிட்டு பிறகு புதன் பகவானை நோக்கி வழிபட வேண்டும். காலையில் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி, பெருமாளை வணங்கிவிட்டு அதைத் தொடர்ந்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு புதன் கிரகத்துக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். பச்சைப் பயறை வேகவைத்து பசுக்களுக்கு அளிப்பது நல்லது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் புதனின் அனுக்கிரகங்களைப் பெறலாம்.

    இந்த பாடலை பாடி புதன் அருளைப் பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன். புதன் கிழமை அன்று நாராயணணை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படிச் செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம். இந்த மந்திரங்கள் கெட்ட சக்தியை விரட்டும் ஆற்றல் கொண்டது.

    பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்துப் பசு மாட்டுக்குக் கொடுக்கலாம். அல்லது புதன் ஓரைகளில் வீட்டில் விளக்கேற்றி புதன் பகவானை மனதார வேண்டி வந்தால் பலன் கிடைக்கும்.
    கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 15-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.
    கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணி மேல் 6.30 மணிக்குள் கொடி மரத்தில் கொடியேற்றம் நடை பெற்றது.

    பின்னர் சுவாமி அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இந்த விழா வரும் 15-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங் களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் விழாக்கள் நடைபெறும்.

    1-ம் திருநாளான நேற்று பிராமணாள் சமூகம் சார்பில் இரவு 7மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது. 2-ம் திருநாளான 6-ந்தேதி பூலோகப்பாண்டியத்தேவர் மற்றும் ரத்தினவேல்சாமித் தேவர் சார்பில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 3-ம் திருநாளான 7-ந்தேதி இல்லத்துப்பிள்ளைமார் சமூகம் சார்பில் பூதவாகனம் - காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    4-ம் திருநாளான 8-ந்தேதி மேடைத்தளவாய் கட்டளை தாரர் சார்பில் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதிஉலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. 5ம் திருநாளான 9-ந்தேதி விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத் தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    6-ம் திருநாளான 10-ந்தேதி அழகர் ஜூவல் லர்ஸ் அழகிரிசாமி செட்டியார் சார்பில் இரவு 7 மணிக்கு யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.

    7-ம் திருநாளான 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில், நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 8-ம் திருநாள் 12-ம் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார் கள் சங்கம் சார்பில் குதிரை வாகனம், கிளி வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    9-ம் திருநாளான 13-ந் தேதி காலை 9 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. 9-ம் திருநாளான வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு யானை முன் செல்ல வாண வேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா நடை பெறுகிறது.

    10-ம் திருநாளான 14-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    11-ம் திருநாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வாணவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங் கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.
    ×