
கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவிலின் தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் மூடப்பட்டன. தற்போது வரை இந்த வாசல்கள் திறக்கப்படவே இல்லை. மேலும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ அரசு திரும்ப பெற்றுவிட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் திறக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் நடமாட்டம் இன்றி இருந்தால் கோவில் பின்புறம் உள்ள பூங்கா பகுதி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்கா பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. நடைபாதை மோசம் அடைந்து உள்ளது. எனவே அதை சீரமைப்பது குறித்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் சீரமைப்பு பணிகள் நடைபெறும் வரையில் தற்காலிகமாக தெற்கு வாசல் திறக்கப்பட வாய்ப்பில்லை. நடைபாதை சீரமைக்கப்பட்ட பின்னர் தெற்கு வாசல் திறக்கப்படும்,’ என்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘ தெற்கு வாசல் அடைக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு கோவிலுக்கு செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். அதே நேரத்தில் கோவிலின் கிழக்கு வாசல் பகுதி நன்றாக உள்ளது. அந்த வாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர்.