என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
ஆன்மிக சக்தியை அளிக்கும் ஏழு சக்கரங்கள்
ஆன்மிக சக்தியை அளிக்கும் ஏழு சக்கரங்கள்
By
மாலை மலர்5 April 2022 9:05 AM GMT (Updated: 5 April 2022 9:05 AM GMT)

மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவை தான் சக்கரங்கள். இந்த சக்கரங்கள் பற்றி விரிவாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்…
மனிதனின் சக்திநிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல. சூட்சும சரீரத்தில் உள்ளவை. ஆன்மிகப் பாதையில் இந்த சக்கரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்…
எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ, காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவை தான் சக்கரங்கள்.
மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்கள் உள்ளன. அவைதான் மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக் கண்கள். ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது. சக்திநிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக் கூடும். இந்த ஏழும், சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இருக்காது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாஹதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாஹதத்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மிக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.
மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம் இது. ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருக்கிறது. இந்த சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.
சுவாதிஷ்டானம்: பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது. உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருக்கிற ஈடுபாட்டிற்குக் காரணமானது.
மணிப்பூரகம்: தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப் பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.
அநாஹதம்: விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது. இந்த சக்கரத்துக்கென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது.
விசுக்தி: தொண்டை குழியில் அமைந்துள்ளது. இது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானுக்கு `விசுகண்டன்’ `நீலகண்டன்’ என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல. தீய உணர்வுகள், தீய எண்ணங்கள், தீய சக்திகள் போன்றவையும் ஆகும்.
ஆக்ஞை: புருவ மத்தியில் உள்ளது. இது ஞானம், தெளிவு போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழ முடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞை முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்வார்கள்.
சஹஸ்ரஹாரம்: உச்சந்தலையில், (பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடம்) இருக்கிறது. இந்த சக்கரம், பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
