என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலனுக்காக ஆனந்த விநாயகர் சன்னதி, வீரதுர்க்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பழனி மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதி மற்றும் நான்கு கிரிவீதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனந்த விநாயகர் சன்னதி, வீரதுர்க்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று பழனி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகுநாச்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அங்கு கலசபூஜை, புண்ணியாக வாஜனம், பாராயணம், கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி, உதவி ஆணையர் செந்தில்குமார், நிகழ்ச்சி உபயதாரர் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.
எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவருடைய பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, அவர்களது துரதிஷ்டங்கள் அனைத்தும் நீங்கி அளவில்லா சௌபாக்கியம் கிட்டும் என ஞான நூல்கள் கூறுகின்றன. இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
ஹே யுதிஷ்டிரா !! இவ்விரதத்தினை கடைபிடிப்பதனால் மனிதர்களின் சர்வ பாபங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கதில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.
இந்த வருதினி ஏகாதசியின் புண்ணிய பிரபாவத்தினால் ராஜா மாந்தாதா சுவர்க்க ப்ராப்தி அடைந்தார். சிவபெருமானின் சாபத்தினால் குஷ்டரோகியான இக்ஷ்வாகு குல அரசன் துந்துமாரா இவ்விரத மேன்மையால் அதிலிருந்து விடுபட்டு சுவர்க்க ப்ராப்தி பெற்றார்.
ஒரு மனிதன் 10,000 ஆண்டுகள் தவம் செய்வதால் கிடைக்கும் புண்ணியமும், கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் ஸ்வர்ண தானம் செய்வதினால் கிடைக்கும் புண்ணியத்திற்கு இணையானது. ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து இக,பர சுகங்களையும், முக்தியையும் தர வல்லது இந்த வருதினி ஏகாதசி விரதம்.
ஹே குந்தி மைந்தா !! சாஸ்திரங்களில் குதிரை தானத்தை விட யானை தானம் மேலானது எனவும், அதை விட பூமி தானம் மேலானது எனவும், அதை விட எள் தானம் மேலானது எனவும், அதை விட ஸ்வர்ண தானம் மேலானது எனவும், தான,தர்மங்கள் பற்றி கூறுகையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட விசேஷமானதும், மிகவும் ஸ்ரேஷ்டமானது அன்னதானம் ஆகும் என்று கூறியுள்ளனர். ஏனெனில், அன்னதானம் தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருக்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்க வல்லது என்றும் கன்யா தானம் அன்னதானத்திற்கு இணையானது.
மேலும், கன்யா தானம், கோ தானம், வித்யா தானம் ஆகியவற்றால் கிட்டும் புண்ணியங்கள் அனைத்தும் வருதினி ஏகாதசி விரதத்தால் மட்டுமே கிடைக்கப் பெறலாம் என்றார்.
மேலும் அவர், தன் உணர்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் அடையாளம். எல்லா நடவடிக்கைகளிலும், கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல் சுகம் மற்றும் சௌபாக்கியத்திற்கு வளர்ச்சி அளிக்கும். இல்லையெனில் ஒருவர் செய்யும் பூஜை, பக்தி இவையனைத்தும் சக்தி இழந்து விடும் என்றார்.
ஹே யுதிஷ்டிரா !! எனவே இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவருடைய பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, இறுதியில் சுவர்க்க பிராப்தியும் அடையப் பெறுவர்.
மேலும், இந்த ஏகாதசி விரத புண்ணியமானது, புண்ணிய நதியான கங்கையில் நீராடினால் கிடைக்கும் பலனை விட பன்மடங்கு மேலானது என்றார்.
அத்துடன், எவரொருவர் இந்த புண்ணிய நன்னாளில் இந்த ஏகாதசி விரத மகாத்மியத்தை சிரவணம் செய்கிறாரோ அவர் 1000 கோ தானம் செய்த பலனை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறியதாக பவிஷ்ய புராணம் விவரிக்கின்றது.
பழனியில் தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் :
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு் தைப்பூச திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவை வருமாறு:-
கொரோனா காலத்தில், திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக அரசு அறிவித்தபடி நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டும்.
மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் பஜனைக்குழு, பக்தி இசைக்குழுவை சேர்ந்தவர்களை பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது. மாறாக சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலிக்க விடலாம்.
மலைக்கோவிலில் மூலவருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும் போது பக்தர்களை (உபயதாரர்கள் உள்பட) சன்னதியில் அமர்ந்து பார்வையிட அனுமதிக்க கூடாது. பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் வழியிலும், மலைக்கோவிலுக்கு செல்லும் வழியிலும் சித்த மருத்துவ சிகிச்சை முகாம்களை அமைத்து பக்தர்களுக்கு பரிசோதனை நடத்த வேண்டும். பார்சல் முறையில் பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே வருகிற 28-ந்தேதி நடைபெறும். அப்போது தேரோட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதியில்லை.
தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் 5 ஆயிரம் பேர் மலைக்கோவிலில் ஒரு இரவு தங்குவது வழக்கம். தற்போது 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம்.
தேரோட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
தைப்பூச திருவிழா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். எனவே வருகிற 14-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். தமிழகத்தில் இருக்கும் ஆலயங்களில் உயரத்தால் சிறப்பு பெற்ற சில கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். இதிலிருந்தே கோவில்களில் காணப்படும் கோபுரங்களுக்கு எவ்வளவு முக்கியத்தும் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். எந்த ஆலயத்திற்குச் சென்றாலும், முதலில் நம்மை வரவேற்பது கோபுரம்தான் என்றால் அது மிகையல்ல. பல பழமையான கோவில்களில் உள்ள கோபுரங்கள், இன்றும் பல வரலாற்று சிறப்புகளைத் தாங்கியே நிற்கின்றன. தமிழகத்தில் இருக்கும் ஆலயங்களில் உயரத்தால் சிறப்பு பெற்ற சில கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
திருவரங்கம் அரங்கநாதர்
திருச்சி அடுத்துள்ள திருவரங்கம் அரங்கநாதர் கோவில், பழமையும் பெருமையும் வாய்ந்தது. இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இந்தக் கோவிலின் கோபுரமே, தமிழகத்தின் மிக உயர்ந்த கோவில் கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோவிலின் ராஜகோபுரம், 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே 2-வது உயரமான கோபுரமாகவும் அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜாகோபுரம் மட்டும் 1987-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம், அதன்பிறகே 236 அடி உயரத்தில் அகோபில மடத்தால் முழுமை பெற்றது.
தென்காசி காசி விஸ்வநாதர்
தென்காசியில் காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு காசிவிஸ்வநாதரும், உலகம்மையும் அருள்பாலித்து வருகின்றனர். இந்தக் கோவில் ‘உலகம்மன் கோவில்’ என்றும், ‘தென்காசி பெரிய கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் கோபுரம் கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீக்கிரையாகி, மொட்டையாய் பொலிவிழந்து நின்றது. பின்னர் 1963-ல் ராஜகோபுரத் திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990-ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
பெருமாளை புகழ்ந்து பாடியவர்களில் ஆழ்வார்கள் முக்கியமானவர்கள். ஆழ்வார்கள் 12 பேரில், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரை இருப்பிடமாகக் கொண்டவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு தனியாக மிகப்பெரிய ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம், அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோபுரமாக கருதப்பட்டது. இந்தக் கோவில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார்
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாளுக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது. நினைத்தாலே முக்தி தரும் இந்த ஆலயத்தில், சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம். அண்ணாமலையார் கோவிலில் வெளி கோபுரம், உள் கோபுரம் என்று மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் வெளிப்பகுதியில் உள்ள 4 கோபுரங்களும் மிகவும் உயரமானவை. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் மிகவும் கம்பீரமாக 217 அடி உயரத்தில் தமிழகத்தின் 2-வது உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோபுரத்தின் அடித்தளம் கிரானைட் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிடப் பணி, விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் கிருஷ்ணதேவராயரால் தொடங்கப்பட்டு, நாயக்கர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரால் முடிவடைந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்
மகாவிஷ்ணு நிறைய அவதாரங்கள் எடுத்துள்ளார். அவற்றுள் 10 அவதாரங்கள் முக்கியமானவை. இதில் அவரது ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரம் நடைபெற்ற நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது தான் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில். மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்றடி மண் கேட்ட வாமனர், தன்னுடைய குள்ளமான உருவத்தை மிகப் பிரமாண்டமாக்கி, மூன்றடிகளில் உலகத்தை அளந்ததுதான் இந்த அவதாரம். இக்கோவிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் தமிழகத்தின் உயரமான கோபுரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோவில் விக்கிரகம் முன்புறத்தில் 16 கைகளுடன் சக்கரத்தாழ்வாராகவும், பின்பக்கத்தில் நரசிம்மர் வடிவத்திலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்
பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் திருக்கோவில் திகழ்கிறது. பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து நீரால் லிங்கம் செய்து வழிபட்டத் தலம் இதுவாகும். இந்தக் கோவிலின் ராஜகோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி. 1509-ம் ஆண்டு என்று கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. 192 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கோபுரமும், தமிழ்நாட்டில் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக இருக்கிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 12-ந் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 12-ந் தேதி விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. கோவிலில் பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.
பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கு 750 நபர்கள் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப முன்பதிவு செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கபடுவர். இதேபோல் டோக்கன் முறையில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கு 1, 500 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்று காரணமாக கூடுமான வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து சாமியை தரிசனம் செய்திட வேண்டும்.
ஆன்லைன் மூலம் (http;\\namakkalnarasimhasw amianjaneyartemple.org\) என்ற வலைதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பின்னர் தான் கோவிலில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள், விபூதி, பூ உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட மாட்டாது. விழாவை பக்தர்கள் ஆன்லைனில் காணும் வகையில் வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் தொழில் புரிந்து சிறப்புற்று வாழ்ந்து வந்தவர், இயற்பகையார். இவருக்கு சிறுவயது முதலே சிவபெருமானின் மீது அதீத பக்தி இருந்தது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் தொழில் புரிந்து சிறப்புற்று வாழ்ந்து வந்தவர், இயற்பகையார். இவருக்கு சிறுவயது முதலே சிவபெருமானின் மீது அதீத பக்தி இருந்தது. அதன்காரணமாக சிவபெருமானின் அடியார்கள் மீதும் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். சிவனடியார்கள், எது வேண்டுமென்று கேட்டாலும் அதை இல்லை என்று சொல்லாமல் வழங்கும் சிறப்பு மிக்கவராக இயற்பகையார் திகழ்ந்தார்.
அவரது பக்தியின் ஆழத்தையும், இறைநெறியையும் உலகுக்கு உணர்த்த எண்ணினார், சிவபெருமான். அதன்படி தன்னை ஒரு சிவனடியாராக மாற்றிக்கொண்ட ஈசன், இயற்பகையாரின் இல்லம் முன்பாக வந்து நின்றார். சிவனடியாரைப் பார்த்ததும் உள்ளம் மகிழ்ந்துபோன இயற்பகையார், வாசலுக்கு வந்து அவரது பாதங்களை நீரால் கழுவி, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கே ஒரு உயா்ந்ததொரு ஆசனத்தை அளித்து அதில் சிவனடியாரை அமரச் செய்தார்.
தொடர்ந்து சிவனடியாரிடம், “சுவாமி.. இந்த அடியேன் உங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நீங்கள் விரும்பியதைக் கேட்கலாம். அதை இல்லை என்று சொல்லாது நான் தருகிறேன்” என்றார்.
அதைக் கேட்டு சற்றே நகைப்பை உதிர்த்த அடியார் வேடத்தில் இருந்த சிவபெருமான், “நீ.. ஈசன் அடியவர் எது கேட்பினும், இல்லை என்று கூறாமல் வழங்குவாய் என்று கேள்விப்பட்டேன். ஆகையால்தான் உன் இருப்பிடம் தேடி வந்தேன். இருப்பினும் கேட்க சற்று தயக்கமாகவே உள்ளது” என்றார்.
“ஐயனே! எதுவாக இருப்பினும் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் இருக்கும் பொருள் எதுவுமே எனக்கு சொந்தமானது இல்லை. எல்லாம் ஈசன் தந்தது. ஆகையால் அதை இறைவனின் அடியவர் களுக்கே கொடுத்து ஆனந்தம் கொள்கிறேன். உங்களின் தேவையை தெரிவியுங்கள்” என்று கூறினார், இயற்பகையார்.
மறுநொடியே சிவனடியார் கேட்ட பொருளால், இயற்பகையாரின் மனைவிதான் பேரதிர்ச்சி அடைந்தார். ஆனால் இயற்பகையாரின் முகத்தின் புன்னகை மட்டுமே தவழ்ந்தது. அப்படி அந்த சிவனடியார் என்ன கேட்டார் என்கிறீர்களா?.. “உன்னுடைய அழகிய மனைவி எனக்கு வேண்டும். அவளை என்னுடன் அனுப்பி வை” இதுதான் சிவனடியார் கேட்ட யாசகம்.
இயற்பகையார் சொன்னார். “சுவாமி.. தாங்கள் என்னிடம் இல்லாத பொருளைக் கேட்டு, என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவீர்களோ என்று கவலை கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாதது, எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் விருப்பப்படியே, என் மனைவியை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன்” என்றார்.
அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த தன் மனைவியிடம் சென்றவர், அவளிடம் அனைத்தையும் கூறினார். தன் கணவரின் இயல்பை நன்றாக அறிந்திருந்த காரணத்தால், அதிர்ச்சியில் இருந்து விரைவாக மீண்ட இயற்பகையாரின் மனைவி, சிவனடியாருடன் செல்ல சம்மதித்தார்.
இதையடுத்து சிவனடியார், இயற்பகையாரின் மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல முயன்றார். அப்போது திடீரென்று சற்றே தயங்கி நின்றார், சிவனடியார். இதைப் பார்த்ததும், “சுவாமி.. ஏன் நின்று விட்டீர்கள்? உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார், இயற்பகையார்.
அதற்கு அடியார் வேடத்தில் இருந்த ஈசன், “ஒன்றுமில்லை.. இந்த ஊரில் உன் உறவினர் அதிகம். நான் உன் மனைவியை அழைத்துச் செல்வதை அவர்கள் அறிந்தால், எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனவே இந்த ஊரின் எல்லை வரை எனக்கு காவலாக நீ வர வேண்டும்” என்றார்.
உடனே தன் வீட்டிற்குள் இருந்து வாள் ஒன்றையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு சிவனடியாரின் முன்பாக பாதுகாவலாகச் சென்றார், இயற்பகையார். அவருக்குப் பின்னால் சிவனடியாரும், அதற்குப்பின்னால் இயற்பகையாரின் மனைவியும் சென்றனர்.
இதற்கிடையில் நடந்ததை கேள்விப்பட்டு, அவர்கள் செல்லும் வழியில் இயற்பகையாரின் உறவினர்களும், ஊர் மக்களும் கூடி வழிமறித்தனர். பின்னர் இயற்பகையாரைப் பார்த்து “முட்டாளே.. உன் அறிவு இப்படி மழுங்கிப்போனதே.. எவரும் செய்ய அஞ்சும் காரியத்தைச் செய்து, ஊருக்கும், உறவினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தப் பார்க்கிறாயா?. மரியாதையாக உன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போ” என்று எச்சரித்தனர்.
“என் பக்திக்குரிய அடியவரை தடுக்க முயன்றால், உங்களை கொல்லவும் தயங்க மாட்டேன்” என்று கூறியதோடு, தடுக்க வந்த அனைவரையும் வாளால் வெட்டி வீழ்த்தினார், இயற்பகையார். பலரும் உயிர் தப்பினால் போதும் என்று ஓடினார்கள். எதிர்த்தவர்கள் இயற்பகையாரின் வாளுக்கு இரையானார்கள். எதிர்த்தவர்களை கொன்று விட்டு திரும்பிப் பார்த்தால், சிவனடியாரைக் காணவில்லை.
அப்போது விண்ணில் இருந்து பேரொளி உண்டானது. அதில் இருந்து சிவபெருமானின் குரல் அசரீரியாக ஒலித்தது. “இயற்பகையாரே! யாமே.. உம்மை சோதிப்பதற்காக வந்தோம். ஊரார் என்னை காமாந்தகாரன் என்று வசைபாடினர். நீரோ உலக மாந்தரின் இயல்பான சுபாவங்களையெல்லாம் உதறி யெறிந்து, உமது கொள்கையில் உறுதியாக நின்றீர். சிவனடியாரை உபசரிக்கும் உமது பண்பு இந்த உலகம் கண்டு வியக்கக்கூடியது. அதை அனைவருக்கும் உணர்த்தவே நாம் வந்தோம்” என்றது அந்தக் குரல்.
இயற்பகையார் மெய்சிலிர்த்து நின்றார். அவர் மீதும், அவர் மனைவி மீதும் விண்ணவர் பூமாரி பொழிந்தனர். சிவனடி சேர்ந்து அவ்விருவரும் அரிதிலும் அரிதான பாக்கியம் பெற்றனர். அவர்களுடன், இயற்பகையாரின் வாளுக்கு பலியானவர்களும் சிவலோகம் சென்றனர்.
நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள்.
குரு நல்ல பாடங்களை கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன், குழந்தையின்மை, குழந்தைகளின் ஆரோக்கியம் சீர்கெடுதல், குழந்தைகளிடம் அடிக்கடி பிரச்சினைகள், ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பை கோளாறுகள், வயிறு உபாதை, தலை சுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மன அழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பு ஆகலாம். அதை பாதுகாப்பது எப்படி என்பதை கீழே காண்போம்.
வியாழக்கிழமை காலையில் குலசேகரபட்டினம் கடலில் நீராடி வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாளை தரிசித்து விட்டு மூவுலக நாயகி, முப்பெருந்தேவி, முத்தாரம்மனை மஞ்சள் நிற மாலை சூட்டி வணங்கி வாருங்கள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள். நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள்.
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் பூசாரி உள்பட 60 பேர் மட்டுமே குண்டம் இறங்கினர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டையொட்டி பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி இல்லை.
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி கடந்த 4-ந் தேதி காலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கொரோனா கட்டுப் பாட்டுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனு மதிக்கப்பட்டனர். நேற்று (புதன்கிழமை)மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று அதிகாலை5.45 மணிக்கு நடை பெற்றது. முன்னதாக, நேற்று இரவு பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய எரிகரும்பு என்றழைக்கப்படும் விறகுகளுக்கு கற்பூரம் ஏற்றி குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் விடிய, விடிய எரிய விடப்பட்டது. வீரமக்கள் என்றழைக்கப்படும் பணி யாளர்கள் குண்டத்தை தட்டி சமன் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
தொட்டிபாளையம் பிரிவில் இருந்து குதிரையை ஊர்வலமாக அழைத்து வந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் 50 அடி குண்டம் முன்பு எழுந் தருளும் நிகழ்ச்சியும், திருக் கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி யும் நடந்தது.
அதைத் தொடர்ந்து தலைமை பூசாரி ஆனந்த் குண்டத்தின் முன்பு நின்று சிறப்பு பூஜைகள் செய்து வாழைப்பழம், எலுமிச்சை பழம் ஆகியவற்றோடு தீ தனல்களை 3 முறை மேல் நோக்கி வீசினார். பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வீர மக்கள் உள்பட 60 பேர் மட்டும் குண்டம் இறங்கினர்.
ஆண்டு தோறும் குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் விரதம் இருந்து 2 நாட்கள் முன்பு கோவிலுக்கு வந்து இடம் பிடித்து குண்டம் இறங்குவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டையொட்டி பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி இல்லை.
இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை மாலை 4 மணிக்கு தேர்திருவிழா நடக்கிறது. இதில் குறைந்த அளவு பக்தர்களே தேரை இழுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா கடைகள், ராட்டினம், பொதுபோக்கு நிகழ்ச்சி கள் ரத்து செய்யப்பட்டன.
வரும் 9-ந் தேதி (சனிக் கிழமை) இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் கோபிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 16-ந் தேதி மறுபூஜை நடக்கிறது.
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்கள் ஒன்பது என்ற வகையில் அமைந்திருப்பதை பலரும் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அந்த வகையில் ஒன்பதாக அமைந்த, சிறப்புபெற்ற சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
வடமொழியில் ‘நவம்’ என்பதற்கு தமிழில் ‘ஒன்பது’ என்று பொருள். ஆன்மிகத்தில் ஒன்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்கள் ஒன்பது என்ற வகையில் அமைந்திருப்பதை பலரும் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அந்த வகையில் ஒன்பதாக அமைந்த, சிறப்புபெற்ற சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
நவ பிரம்மாக்கள்
* குமார பிரம்மன்
* அர்க்க பிரம்மன்
* வீர பிரம்மன்
* பால பிரம்மன்
* சுவர்க்க பிரம்மன்
* கருட பிரம்மன்
* விஸ்வ பிரம்மன்
* பத்ம பிரம்மன்
* தராக பிரம்மன்
நவ வீரர்கள்
* வீரவாகுதேவர்
* வீரகேசரி
* வீரமகேந்திரன்
* வீரமகேசன்
* வீரபுரந்திரன்
* வீரராட்சசன்
* வீரமார்த்தாண்டன்
* வீரராந்தகன்
* வீரதீரன்
(இவர்கள் அனைவரும் முருகப்பெருமானின் படையில் இருந்தவர்கள்)
நவ தீர்த்தங்கள்
* கங்கை
* யமுனை
* சரஸ்வதி
* கோதாவரி
* சரயு
* நர்மதை
* காவிரி
* பாலாறு
* குமரி
நவ பாஷாணம்
* வீரம்
* பூரம்
* ரசம்
* ஜாதிலிங்கம்
* கண்டகம்
* கவுரி பாஷாணம்
* வெள்ளை பாஷாணம்
* ம்ருதர்சிங்
* சிலாஷத்நவ பக்தி
* சிரவணம்
* கீர்த்தனம்
* ஸ்மரணம்
* பாத சேவனம்
* அர்ச்சனம்
* வந்தனம்
* தாஸ்யம்
* சக்கியம்
* ஆத்ம நிவேதனம்
நவ அபிஷேகங்கள்
* மஞ்சள்
* பஞ்சாமிர்தம்
* பால்
* நெய்
* தேன்
* தயிர்
* சர்க்கரை
* சந்தனம்
* விபூதி
நவக்கிரக தலங்கள்
* சூரியனார் கோவில்
* திங்களூர்
* வைத்தீஸ்வரன் கோவில்
* திருவெண்காடு
* ஆலங்குடி
* கஞ்சனூர்
* திருநள்ளாறு
* திருநாகேஸ்வரம்
* கீழ்ப்பெரும்பள்ளம்
நவக்கிரகங்கள்
* சூரியன்
* சந்திரன்
* செவ்வாய்
* புதன்
* குரு
* சுக்ரன்
* சனி
* ராகு
* கேது
நவ நிதிகள்
* சங்கம்
* பதுமம்
* மகாபதுமம்
* மகரம்
* கச்சபம்
* முகுந்தம்
* குந்தம்
* நீலம்
* வரம்
(இவை அனைத்தும் குபேரனிடம் உள்ள நிதிகள் ஆகும்)
மார்கழி மாத அஷ்டமியையொட்டி ராமேசுவரத்தில் கோவில் அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ஒரு முறை சுற்றி வந்து அஷ்டமி சப்பரம் நிகழ்ச்சி நிறைவடைந்தது
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் அஷ்டமி அன்று கோவிலில் இருந்து சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ராமேசுவரம் நகர்ப்பகுதி முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
இவ்வாறு மார்கழி மாத அஷ்டமி அன்று சாமி அம்பாள் நேரடியாக பக்தர்களை தேடி வந்து படி அளப்பதாக நம்பப்படுகின்றது.
இவ்வாறு நகர் முழுவதும் வரும் சாமிக்கு முன்பு பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து மாலை அணிவித்து தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு நேற்று சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ஒரு முறை சுற்றி வந்து அஷ்டமி சப்பரம் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
சாமி அம்பாள் 3-ம் பிரகாரத்தைசுற்றி வந்து கோவிலின் 2-ம் பிரகாரத்தில் வைக்கப்பட்டு வாகனத்தில் இருந்து சாமியை குருக்கள் சேர்ந்து இறக்க முயன்றபோது அங்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில், இளைஞர் அணி செயலாளர் சரவணன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சாமியின் வாகனம் முன்பு நின்று ஆண்டுதோறும் மார்கழி அஷ்டமி அன்று சாமி அம்பாள் கோவிலை விட்டு வெளியே சுற்றி வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது போல் இன்றும் நடைபெற வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா சாமி முன்பு நின்று போராட்டம் நடத்த வேண்டாம். அனுமதி இல்லாமல் கோவிலுக்குள் போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தார். அதற்கு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தவில்லை. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பூஜை உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கேட்கிறோம் என தெரிவித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனுமதியில்லாமல் தடையை மீறி கோவிலுக்குள் போராட்டம் நடத்தியதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா, பங்கு குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் ேததி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. அருட்பணியாளர் யேசுரெத்தினம் தலைைம தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய பிரபு மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
வருகிற 16-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு தொடர்ந்து மாலை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான 17-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத்திருப்பலி, 9.30 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறும்.
நாளை மற்றும் 16, 17-ந் ேததிகளில் நடைபெறும் திருப்பலி நாஞ்சில் நாதம் வலைத்தள தொலைக்காட்சியிலும், நாஞ்சில் நாதம் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிப்பரப்பாகும்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் எம்.போர்ஜியா, பங்கு மேய்ப்புப்பணி பேரவை மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.






