என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பைரவருக்கு யாகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பைரவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல கோவில் உட்பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில் வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
பொருள் : தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய்.
அப்படிப்பட்ட திருமாலே உன்னைப் பாடி அர்ச்சிக்க வந்தோம். உன்னுடன் உறைந்திருக்கும் திருமகளின் அருளினால், எங்களுக்கு செல்வத்தையும், வீரத்தையும் தருவாயாக. வருத்தம் நீங்கி, உனது குண நலன்களைப் பாடி மகிழ்வோம்.
ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார் முருகப்பெருமான்.
ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. மேலும் கடற்கரையோரம் அமைந்த ஒரே திருக்கோவிலும் இதுதான். பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோவில் அனைத்தும் ஏதாவது ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கும். ஆனால் திருச்செந்தூர் திருத்தலம் சமதளத்தில் அமைந்திருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் இதுவும் முன்காலத்தில் குன்றாக இருந்த இடம்தான் என்றும், பின்னாளில் கடல் மட்ட உயரம் காரணமாக சமதளமாக மாறிப்போனதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கு குன்று இருந்ததற்கு சான்றாக, தற்போது இருக்கும் வள்ளிக்குகை பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.
சூரபதுமனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் இதுவாகும். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார் முருகப்பெருமான். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், அதன் ஒருபகுதியாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வும், உலக பிரசித்திப்பெற்றதாகும். தற்போது கொரோனா தடைக்காலம் என்பதால், அந்த நிகழ்வுகள் சில கட்டுப்பாட்டுடன் நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பால் ஊமையான குமரகுருபர சுவாமிகள், தனது ஐந்தாவது வயதில் இத்தலம் வந்து பேசும் திறனைப் பெற்றார் என்பது வராலாற்று பதிவு. இங்குள்ள முருகப்பெருமான், தன் கைகளில் ருத்ராட்ச மாலையும், தாமரை மலரும் கொண்டு பூஜிக்கும் அருட்கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் பூஜித்த பஞ்ச லிங்கங்கள் உள்ளன. இதனை பெரும்பாலான மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கருவறையின் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய வாசல் வழியாக நுழைந்து சென்றால், இந்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்க முடியும். இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் மிகவும் பெரியது. மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ரயில் வசதிகளும், பேருந்து வசதிகளும் உண்டு. தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர் திருத்தலம்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடை தயாரிக்கும் பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. பின்னர் வடை போடும் வகையில் ஒத்திகை நடைபெற்றது.
நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில் இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு வருகிற 12-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது.
அதையொட்டி சுவாமிக்கு அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்து படி அலங்காரம் நடைபெறும்.அன்று காலை 11 மணியளவில் பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், திரவியம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.
ஒரு லட்சத்து 8 வடைமாலை தயாரிப்பதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆர்.கே.ரமேஷ் தலைமையில் 32 அர்ச்சகர் குழுவினர் நேற்று நாமக்கல் வந்தனர்.அவர்கள் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் 4 நாட்கள் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கிறார்கள்.
வடைகள் தயாரிப்பதற்காக 2050 கிலோ உளுந்தமாவு, 33 கிலோ சீரகம், 125 கிலோ தூள் உப்பு, 650 லிட்டர் நல்லெண்ணை, 10 சமையல் எரிவாயு இணைப்பு கொண்ட அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வடை தயாரிக்கும் பணி நேற்று மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. பின்னர் வடை போடும் வகையில் ஒத்திகை நடைபெற்றது.
இன்று காலை 5 மணி முதல் வடை போடும் பணி மீண்டும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக வடை தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. வடை தயாரிக்கும் பணி வருகிற 11-ந் தேதி நிறைவடையும். அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் இந்த வடை மாலை மதியத்திற்கு மேல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
அதன்பின் ஆயிரம் வடைகள் வீதம் சுவாமிக்கு சாத்தும் வகையில் 52 கோர்வைகள் உருவாக்கப்படும் என வடை தயாரிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வருகிற திங்கட்கிழமை முதல் கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதுடன் அனைத்து முன் ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநீலகண்டப்பதிகம், திரு அங்கமாலை, நமசிவாயப் பதிகம், போற்றித் திருத்தாண்டகம், பஞ்ச புராணம்.
பஞ்ச புராணங்களில் குறிப்பாக இவை:-
1. மூவர் தேவாரம் - தேவாரப் பாடல் ஒன்று.
2-. திருவாசகம் - பாடல் ஒன்று.
3. ஒன்பதாம் திருமறை - திருவிசைப் பாடல்களில் ஒன்று.
4. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பாடல்களில் ஒன்று.
5. பெரிய புராணம் - பாடல் ஒன்று.
ஆக மேற்கண்ட 5 பாடல்களைப் பாராயணம் செய்தாலே போதும். ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி, பாராயணத்தைத் தொடங்க வேண்டும். கடைசியாக ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி முடிக்க வேண்டும்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மனிதன் முதலில் இயற்கை சக்திகளையே வழிபட்டான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படி மனிதர்கள் வழிபட்ட முக்கியமான வழிபாடுதான் ‘சூரிய வழிபாடு.’ இது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சூரியனுக்கு, தமிழகத்திலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் தனிக்கோவில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது.
பூரிக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த சூரியன் கோவில், கடந்த காலங்களில் பராமரிப்பின்றியும், கடல் அலைகளின் சீற்றத்தாலும் பெருமளவு சிதிலமடைந்துவிட்டது. என்றாலும், மீதம் இருக்கும் ஆலயத்தின் வடிவமைப்பையும், சிற்ப வேலைபாடுகளையும், கலைநயத்தையும் காண கண் இரண்டு போதாது. இந்தக் கோவில், முதலாம் நரசிம்ம தேவன் என்பவரால், 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயம் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டது. அது நமக்கு வியப்பையே மேலிட வைக்கின்றன. ஏனெனில் இந்தக் கோவிலுக்குள், எங்கும் தூண்கள் காணப்படவில்லை. ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இணைத்து கட்டியுள்ளனர்.
ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளியிருப்பது போன்று இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 7 குதிரைகள் என்பது 7 நாட்களையும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக்கோவிலின் கோபுரம் சரியத் தொடங்கியதால் சூரியனாரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பூரியில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு வரும் குழந்தை, இளைஞர், பெரியவர் என்ற மூன்று பருவத்தைச் சேர்ந்தவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில், தனித்தனியாக சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிக குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் கோவிலின் அமைப்பு மூன்று பிரிவுகளாக இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி, மூலவர் சூரியநாதர் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாழிகை, நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் வகையில் நம் முன்னோர்களின் அறிவைக் கொண்டு இது சாத்தியமாகி இருக்கிறது. இந்தக் கோவிலின் தனித்தன்மையை உணர்ந்து, இதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது, யுனெஸ்கோ அமைப்பு.
அமைவிடம்
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கோனார்க்கை இணைக்கின்றன. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கோனார்க் செல்லலாம்.
பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வர் ரெயில் நிலையத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்திலும் கோனார்க் உள்ளது.
புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் கோனார்க் உள்ளது. சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கட்டா, நாக்பூர் விமான நிலையங்களில் இருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு `தொலைவு' என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு `தொலைவு' என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5.பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11.ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப, அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.
நற்பலன் தரும் திதிகள்:
ஞாயிறு-அஷ்டமி, திங்கள்- நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்- திருதியை; வியாழன்- ஏகாதசி, வெள்ளி- திரயோதசி, சனி-சதுர்த்தசி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதில் வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:
ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்- அஷ்டமி, வெள்ளி- நவமி, சனி-சப்தமி. மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலம் சேரும்.
திருவண்ணாமலையில் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சாமி வீதி உலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் கடந்த 5-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீப விழாவுக்கு சாமி ஊர்வலம் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்றுவரும் உத்ராயணபுண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாடவீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு 8 மணி அளவில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை முழங்க மாட வீதிகளில் சந்திரசேகரர் சமேத சிவகாமி அம்மன், விநாயகர் உற்சவ மூர்த்திகள் உலா வந்தனர். இதை யொட்டி நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் தங்களது வீடுகள் முன்பு நின்று வீதி உலா வந்த உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.
கோவிலை வலம் வந்த உற்சவ மூர்த்திகளைஆங்காங்கே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பல மாதங்கள் சாமி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் சாமிகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சாமி வீதி உலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். இதற்கு வணங்க வேண்டி தெய்வம் என்னவென்று பார்க்கலாம்.
சுக்கிரன் களத்திரகாரகன் அதாவது கணவன்-மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். கணவன்-மனைவியிடம் மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால் புது வாகன யோகமோ அல்லது வாகன யோக தடையோ ஏற்படும்.
உடலில் முதுகு தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக் கல், பிரசவ காலப்பிரச்சினை மனைவி வழி உறவுகளிடம் அடிக்கடி பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் குலசேகரப்பட்டினம் கடலில் நீராடிவிட்டு வரும் வழியில் இருக்கும் சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாளை தரிசித்து விட்டு வெள்ளை கலர் மாலை, வெள்ளை அரளி, மல்லிகை, பிச்சி போன்ற மாலைகளை சாத்தி குலசை அம்மனை வழிபட்டு வந்தால் நவகிரக நாயகி உங்களுக்கு உள்ள எல்லாவித தோஷத்தையும் நீக்கி தருவாள்.
சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் முடிந்து தற்போது மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. கொரோனா பிரச்சினையால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் உடலில் சாயம் பூசி ஊர்வலமாக செல்வார்கள்.
இந்த வருடம் பேட்டை துள்ளல் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
மயிலாடுதுறை கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை ஜெ.ஜெ.பிரிட்டோ அடிகளார் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார் புனித அந்தோணியார் உருவக்கொடியை புனிதம் செய்து ஏற்றினார்.
வாணவேடிக்கை முழங்க, இன்னிசை இசைக்க, ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விழாவின் தொடக்க நாள் வழிபாட்டு நிகழ்வுகளை புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி மற்றும் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் பங்கு மக்களோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். கொடியேற்று விழா மற்றும் திருப்பலி நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கிய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.
தினசரி மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. வருகிற 16- ந் தேதி (சனிக்கிழமை) இரவு, திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து தேர் பவனியும் நடைபெற உள்ளது. 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.
"ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்."






