search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர்
    X
    திருச்செந்தூர்

    ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்

    ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார் முருகப்பெருமான்.
    ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. மேலும் கடற்கரையோரம் அமைந்த ஒரே திருக்கோவிலும் இதுதான். பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோவில் அனைத்தும் ஏதாவது ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கும். ஆனால் திருச்செந்தூர் திருத்தலம் சமதளத்தில் அமைந்திருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் இதுவும் முன்காலத்தில் குன்றாக இருந்த இடம்தான் என்றும், பின்னாளில் கடல் மட்ட உயரம் காரணமாக சமதளமாக மாறிப்போனதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கு குன்று இருந்ததற்கு சான்றாக, தற்போது இருக்கும் வள்ளிக்குகை பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.

    சூரபதுமனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் இதுவாகும். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார் முருகப்பெருமான். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், அதன் ஒருபகுதியாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வும், உலக பிரசித்திப்பெற்றதாகும். தற்போது கொரோனா தடைக்காலம் என்பதால், அந்த நிகழ்வுகள் சில கட்டுப்பாட்டுடன் நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிறப்பால் ஊமையான குமரகுருபர சுவாமிகள், தனது ஐந்தாவது வயதில் இத்தலம் வந்து பேசும் திறனைப் பெற்றார் என்பது வராலாற்று பதிவு. இங்குள்ள முருகப்பெருமான், தன் கைகளில் ருத்ராட்ச மாலையும், தாமரை மலரும் கொண்டு பூஜிக்கும் அருட்கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் பூஜித்த பஞ்ச லிங்கங்கள் உள்ளன. இதனை பெரும்பாலான மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கருவறையின் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய வாசல் வழியாக நுழைந்து சென்றால், இந்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்க முடியும். இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் மிகவும் பெரியது. மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ரயில் வசதிகளும், பேருந்து வசதிகளும் உண்டு. தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர் திருத்தலம்.
    Next Story
    ×