search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவரங்கம் அரங்கநாதர் கோவில்
    X
    திருவரங்கம் அரங்கநாதர் கோவில்

    தமிழகத்தின் உயரமான கோவில் கோபுரங்கள்

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். தமிழகத்தில் இருக்கும் ஆலயங்களில் உயரத்தால் சிறப்பு பெற்ற சில கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். இதிலிருந்தே கோவில்களில் காணப்படும் கோபுரங்களுக்கு எவ்வளவு முக்கியத்தும் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். எந்த ஆலயத்திற்குச் சென்றாலும், முதலில் நம்மை வரவேற்பது கோபுரம்தான் என்றால் அது மிகையல்ல. பல பழமையான கோவில்களில் உள்ள கோபுரங்கள், இன்றும் பல வரலாற்று சிறப்புகளைத் தாங்கியே நிற்கின்றன. தமிழகத்தில் இருக்கும் ஆலயங்களில் உயரத்தால் சிறப்பு பெற்ற சில கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    திருவரங்கம் அரங்கநாதர்

    திருச்சி அடுத்துள்ள திருவரங்கம் அரங்கநாதர் கோவில், பழமையும் பெருமையும் வாய்ந்தது. இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இந்தக் கோவிலின் கோபுரமே, தமிழகத்தின் மிக உயர்ந்த கோவில் கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோவிலின் ராஜகோபுரம், 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே 2-வது உயரமான கோபுரமாகவும் அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜாகோபுரம் மட்டும் 1987-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம், அதன்பிறகே 236 அடி உயரத்தில் அகோபில மடத்தால் முழுமை பெற்றது.

    தென்காசி காசி விஸ்வநாதர்

    தென்காசியில் காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு காசிவிஸ்வநாதரும், உலகம்மையும் அருள்பாலித்து வருகின்றனர். இந்தக் கோவில் ‘உலகம்மன் கோவில்’ என்றும், ‘தென்காசி பெரிய கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் கோபுரம் கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீக்கிரையாகி, மொட்டையாய் பொலிவிழந்து நின்றது. பின்னர் 1963-ல் ராஜகோபுரத் திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990-ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

    பெருமாளை புகழ்ந்து பாடியவர்களில் ஆழ்வார்கள் முக்கியமானவர்கள். ஆழ்வார்கள் 12 பேரில், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரை இருப்பிடமாகக் கொண்டவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு தனியாக மிகப்பெரிய ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம், அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோபுரமாக கருதப்பட்டது. இந்தக் கோவில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாகும்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார்

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாளுக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது. நினைத்தாலே முக்தி தரும் இந்த ஆலயத்தில், சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம். அண்ணாமலையார் கோவிலில் வெளி கோபுரம், உள் கோபுரம் என்று மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் வெளிப்பகுதியில் உள்ள 4 கோபுரங்களும் மிகவும் உயரமானவை. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் மிகவும் கம்பீரமாக 217 அடி உயரத்தில் தமிழகத்தின் 2-வது உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோபுரத்தின் அடித்தளம் கிரானைட் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிடப் பணி, விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் கிருஷ்ணதேவராயரால் தொடங்கப்பட்டு, நாயக்கர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரால் முடிவடைந்தது.

    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்

    மகாவிஷ்ணு நிறைய அவதாரங்கள் எடுத்துள்ளார். அவற்றுள் 10 அவதாரங்கள் முக்கியமானவை. இதில் அவரது ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரம் நடைபெற்ற நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது தான் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில். மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்றடி மண் கேட்ட வாமனர், தன்னுடைய குள்ளமான உருவத்தை மிகப் பிரமாண்டமாக்கி, மூன்றடிகளில் உலகத்தை அளந்ததுதான் இந்த அவதாரம். இக்கோவிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் தமிழகத்தின் உயரமான கோபுரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோவில் விக்கிரகம் முன்புறத்தில் 16 கைகளுடன் சக்கரத்தாழ்வாராகவும், பின்பக்கத்தில் நரசிம்மர் வடிவத்திலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்

    பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் திருக்கோவில் திகழ்கிறது. பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து நீரால் லிங்கம் செய்து வழிபட்டத் தலம் இதுவாகும். இந்தக் கோவிலின் ராஜகோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி. 1509-ம் ஆண்டு என்று கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. 192 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கோபுரமும், தமிழ்நாட்டில் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக இருக்கிறது.
    Next Story
    ×