என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடந்தன. கடந்த 22ஆம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி உடன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கடந்த 28-ந் தேதி தைப்பூச தீர்த்தவாரியும், நேற்று முன்தினம் நடராஜர் திருநடன காட்சி வைபவமும் நடந்தது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடந்தது. இதையொட்டி தெப்பம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பின்னர் சுவாமி, அம்பாள் புறப்பட்டு தெப்பத்திருவிழா மண்டபத்திற்கு வந்தனர். அவருடன் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் வந்தனர்.

    தெப்பத்திருவிழா மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    பின்னர் சுவாமி-அம்பாள், பஞ்சமூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்தனர். நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சுவாமி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
    உவரி அந்தோணியார் திருத்தல திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
    தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பழமையானது உவரி அந்தோணியார் திருத்தலம். இத்திருத்தல திருவிழா கடந்த 19-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து நடந்து வந்தது. திருவிழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலையில் மறைரை, நற்கருணை ஆசீர் முதலியவை நடந்தது.

    நேற்று முன்தினம் மாலையில் திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமல்ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே. செல்வராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டொமினிக் அருள் வளன் மற்றும் நிதிக்குழுவினர் செய்திருந்தனர்.
    10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் மூடப்பட்டன.

    ஊரடங்கு தளர்வு காரணமாக ராமேசுவரம் கோவிலில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5 மாதமாக வழக்கம்போல் தரிசனம் நடந்து வரும் நிலையில், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளோ கடந்த 10 மாதங்களுக்கு மேலாகவே திறக்கப்படாமல் மூடப்பட்டு கிடந்தன.

    இதனால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் யாத்திரை பணியாளர்கள், தீர்த்த கிணறுகளை திறக்க தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தீர்த்தமாடலாம் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த அறிவிப்புக்கு யாத்திரை பணியாளர்கள், கோவில் பகுதியில் தொழில் நடத்தும் வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி கோவில் அதிகாரிகள் கூறுகையில், “கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் தீர்த்தமாட அனுமதிக்கப்படுவார்கள். தீர்த்த கிணறுகளுக்கு செல்லும் பாதைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்று கூறினர்.
    பிளாஞ்சேரி கோவிலில் நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.
    பைரவர் என்றாலே நம் நினைவுக்கு வருவது காசி மாநகரம்தான். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. காசிக்கு செல்லும் பக்தர்கள், அஷ்ட பைரவர்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும் என்பார்கள், பெரியோர்கள். தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் உண்டு.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்த திருத்தலம். இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டிருக்கிறார், அருள்மிகு கயிலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக்கொண்டிருக்கிறாள்.

    பவுர்ணமிதோறும் இங்கு மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது, பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதிகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம், அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.

    அதேபோல், இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

    அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’ என்றார்.

    அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோவில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

    தென்னம்பாக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) அழகுமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்து கொள்ள உள்ளார்.
    கடலூர் தூக்கணாம்பாக்கம் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகுமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழகர் சித்தர், ஜலசமாதி அடைந்தார். இந்த நிலையில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று தற்போது புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது. மேலும் அமைச்சர் எம்.சி. சம்பத் ஏற்பாட்டின் பேரில் பெரிய அளவிலான அழகர் சித்தர் ஜலசமாதி தியான மண்டபம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

    இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜை நடந்தது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், மகேஷ், ஜோதி, எம்.சி.சம்பந்தம், முத்து, குமரப்பன், சேகர், ஜெயபால், ராஜூ, சுந்தர ராகவன், ரமேஷ், ராமகிருஷ்ணன், மருதமலை, அருள்குமார் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று ளை(திங்கட்கிழமை) 4-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் காலை 6 மணியளவில் கிராமத தேவதைகள் ஆலய கும்பாபிஷேகம், 9.45 மணியளவில் அழகு முத்து அய்யனார் மற்றும் ஜலசித்தர் சன்னதியில் கும்பாபிஷேகமும், காலை 10.15 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் அழகர், பூரணி, பொற்கலை மற்றும் அர்ச்சுனன், திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவமும், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் மண்டல பூஜையும் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மகாதேவி, தென்னம்பாக்கம், மூர்த்திக்குப்பம் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 19-வது தலமாக வைத்து எண்ணப்பெறுவது திருப்பாலைத்துறை திருத்தலமாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் அருளிச்சென்றுள்ள அறிவுரைகள், கோவில்களின் முக்கியத்துவத்தையும், கோவில்களுக்கு நாள்தோறும் சென்று நாம் வணங்க வேண்டியதன் சிறப்பையும் எடுத்து விளக்குவதாக உள்ளன.

    வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி பாய்ந்து பொன்வளங்கொழிக்கும் திருநாடு சோழவள நாடாகும். இந்த சோழவள நாட்டின் சிறப்பு தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே எனும் தனிப்பாடல் ஒன்றில் சிறப்பாக பேசப்பெற்றுள்ளது.

    சோழ மண்டலத்தில், தேவார பாடல் பெற்ற 276 தலங்களுள் 190 தலங்கள் அமைந்துள்ளன. இவையனைத்தும் காவிரி நதியை மையமாக கொண்டு தில்லை எனப்பெறும் கோவில் பதியை முதன்மையாக கொண்டு காவிரி வடகரை தலங்கள் எனவும், காவிரி தென்கரை தலங்கள் எனவும் எடுத்து உரைக்கப்பெற்றுள்ளன.

    காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 19-வது தலமாக வைத்து எண்ணப்பெறுவது திருப்பாலைத்துறை திருத்தலமாகும். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள இக்கோவில் சப்தஸ்தான திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து இறைவனின் பெயர் பாலைவனநாதர், இறைவியின் பெயர் தவளவெண்ணகையாள்.

    தல வரலாறு

    இத்தல வரலாறு பல்வேறு விதமாக கூறப்படுகிறது. அவற்றை இங்கே பார்ப்போம்.

    முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவரை அழிப்பதற்காக து‌‌ஷ்டவேள்வி நடத்தி யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினர். இறைவன், அந்த புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    சிவபெருமானது பற்றற்ற நிலையை கலைத்து பார்வதியை மணம்புரிந்து கொள்ளும்படி செய்ய மன்மதன், பூ அம்புகளை எய்தபோது தழல் விழியால் நோக்கி அவனை சாம்பலாக்கினார். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி அவனை உருவில்லாதவனாக்கி பார்வதியை மணம் புரிந்து கொண்டார். காமன் எரிந்த சாம்பல் முட்டாயிருந்ததை அங்கு சென்ற பிள்ளையார் கண்டு அதில் இருந்து ஒரு உரு அமைத்து உயிர் உண்டாக்கினார். அவனே பண்டாசுரனாகி தேவர்களை எதிர்த்து துன்புறுத்தினான்.

    அவர்கள் மேருமலைக்கு சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் பார்வதியிடம் தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி அவர்கள் தேவியிடம் தெரிவித்தனர். அம்மையார் கூறியபடி தேவர்கள் இந்த இடத்திற்கு வந்து ஒரு பெருவேள்வி செய்தனர். அப்போது அம்மையார் திரிபுரை என்ற உருவத்துடன் நான்கு கைகளிலும் கரும்பு வில், பூவாளி, அங்குசம், மலர்மாலை தாங்கி காட்சி கொடுத்து கரும்புவில்லை வளைத்து, மலர் அம்பினால் எய்து பண்டாசுரனை கொன்றாள். அந்த வேள்வி குண்டத்தின் வெப்பம் எவராலும் தாங்க முடியாதிருந்ததால் அம்மையாரின் ஆணைப்படி சிவபெருமானை வேண்ட அவர் வீரபத்திர உருவத்துடன் தமது தலையில் இருந்த கங்கையை அக்குண்டத்தில் விட, அது குளிர்ந்து ஒரு திருக்குளமாயிற்று. இங்கு பல முனிவர்கள் வசித்ததால் இதற்கு பிரம்ம வனம் என்னும் பெயர் உண்டாயிற்று.

    ராமபிரான் பூஜித்த தலம்

    மலயத்துவச பாண்டியன் தாமிரபரணியில் நீராடி அதன் அருகில் இருந்த காலவ முனிவரின் குடிலின் அருகில் சென்றான். அங்கிருந்து காலவ முனிவர் அவனை வரவேற்று பல நல் உபதேசங்களை கூறினார். அவரது உபதேசத்தை அவன் தனது ஊழ்வினையால் செவிமடுக்காது அரசர்கள்தான் பெரியவர் என கூறினான். அதனால் வெகுண்ட முனிவர், அவனை கரடியாகுமாறு சபிக்க அவனும் அவ்வுருவை பெற்று வனமெங்கும் திரியலானான். அவன் மனைவி பத்மாவதி மன்னிப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்கி அவர் மனமிரங்கி அகத்திய முனிவரை வழிபட சொன்னார்.

    அதன்படி அகத்திய முனிவர் இரக்கமுற்று திருப்பாலைத்துறையை சுற்றியுள்ள வனத்திற்கு செல்லும்படி அருளினார். அதன்படி அவனும் இத்தலத்திற்கு வந்து பாலைவனநாதரை வழிபட்டபோது கரடி உருவம் மறைந்து சுயஉருவம் கிடைத்தது. சுவாமியின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலில் திருமண மண்டபம் கட்டினார். அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தான். அதனால்தான் அம்பாள், இக்கோவிலில் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் அனைத்து திருமணங்களும் சிறப்பு பெறுகின்றன.

    மகாவி‌‌ஷ்ணு, பிரம்மன், வசி‌‌ஷ்டர், தவுமியர், அர்ச்சுணர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. கலியுகத்தில் ராமபிரான், இக்கோவிலுக்கு வந்து இத்தலத்து இறைவனை பூஜித்து சென்றதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

    அன்னப்பாத்திரம்

    ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் உள்ளனர். கோவிலின் வலதுபுறம் அம்மன் சன்னதி அமைந்து உள்ளது. திருமண கோல தலங்களாக கருதி போற்றப்படும் சோழநாட்டு தலங்களில் இந்த தலமும் ஒன்றாக கருதப்பெறுகிறது.

    மேலும் இத்திருக்கோவிலில் அம்பாளின் இடத்திருக்கரத்தில் அன்னப்பாத்திரம் உள்ளதால் அம்பாளை வழிபடுவோர்க்கு எக்காலமும் அன்னத்திற்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

    கோவிலை சுற்றிலும் அ‌‌ஷ்டதிக்கு பாலகர்கள் நீராடி வழிபட்ட 8 தீர்த்தங்களும், 8 லிங்கங்களும் இருந்தனவாய்க் கூறப்பெறினும், தற்போது வசிட்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் உள்பட 3 தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.

    வருகிற 1-ந் தேதி குடமுழுக்கு விழா

    இக்கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. குடமுழுக்கு விழாவையொட்டி யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் வருகிற 30-ந் தேதி(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை முதல் கால யாக பூஜையும், மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 1-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 4-ம் கால யாக பூஜையும், அன்று காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கோவில் செயல் அலுவலர் ஹாசினி, தக்கார் குணசுந்தரி, கோவில் எழுத்தர் சங்கர மூர்த்தி, ஆன்மிக பேரவை அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கடையம். இங்கு நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்திருக்கிறது.
    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கடையம். இங்கு நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இறைவனின் திருநாமம் ‘வில்வவனநாதர்.’ “காணி நிலம் வேண்டும் பராசக்தி..’ என்று பாரதியார் வேண்டிய சக்தியாக, இந்த ஆலயத்தில் அருளும் நித்யகல்யாணி அம்மன் திகழ்கிறார். சிவபெருமான், பிரம்மதேவனுக்கு வில்வ பழத்தை வழங்கினார்.

    அதை மூன்றாக உடைத்த பிரம்மன், ஒரு பாகத்தை கயிலாய மலையிலும், மற்றொரு பாகத்தை மேரு மலையிலும், இன்னொரு பாகத்தை துவாத சாந்த வனத்திலும் நட்டார். மூன்றாவது பகுதியை பிரம்மன் நட்ட, துவாத சாந்த வனத்தில்தான், வில்வவனநாதர் கோவில் இருக்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும்.

    அதை உடைத்துப் பார்த்தால், அதன் உள்ளே சிவலிங்க பாணம் போன்று விதை இருப்பதை காணலாம் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கோவில் கதவில், ராமரின் தந்தையான தசரதனால், சிரவணனன் கொல்லப்பட்ட காட்சிகள் சிற்பகமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ராமாயணத்தோடு தொடர்புடைய நிறைய சிற்பங்களும் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலும் கடையம் உள்ளது.
    கடலூர் அருகே சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1-ந்தேதி முதல் யாகசலை பூஜைகள் தொடங்குகிறது.
    கடலூர் அருகே சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1ந்தேதி முதல் யாகசலை பூஜைகள் தொடங்குகிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்துவது குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு தாசில்தார் பலராமன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவின் போது பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், துறை சார்ந்த அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப் பல்லக்கு, புதுச்சேரி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். மேலும் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க மயில், தங்கக்குதிரை, தோளுக்கு இனியான் உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் மண்டகப்படி பூஜை நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் கடந்த 27-ந் தேதியும், தைப்பூச தேரோட்டம் நேற்று முன்தினமும் நடைபெற்றது. இந்த விழாக்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கலந்துகொண்டனர். அதோடு வெளிமாநில பக்தர்களும் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் தைப்பூச திருவிழாவின் 9-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் ரதவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோயில். தென்றல் வீசும் கிராமங்கள்,  பசுமை போர்த்திய வயல்வெளிகள், விண்ணை தொடும் மலைகள் நிறைந்த பகுதியில் கண்ணுக்கு விருந்தாய், கம்பீரமாய் காட்சியளிக்கிறது கந்தசாமி ேகாயில். தைப்பூசம், பங்குனி உத்திரம் என்று முருகனுக்கு உகந்த நாட்கள் மட்டுமல்ல, அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டம் களை கட்டும். இங்கு நடக்கும் வேண்டுதல்களும், நேர்த்திக்கடன்களும் வியப்புக்குரியவை என்றால் மிகையல்ல. கொடிய பாம்புகள் தீண்டி, விஷம் ஏறியவர்களை கோயில் மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர் மக்கள். பூசாரி அவர்களுக்கு தீர்த்தம் வழங்கி திருநீறு பூசுகிறார்.

    சிறிது ேநரத்திலேயே விஷம் இறங்கி விடுகிறது. பாம்பு தீண்டியவர் எந்த பதற்றமும் இல்லாமல் எதார்த்தமாக எழுந்து செல்கிறார். இது தான் ‘‘தோகைமயில் ஏறி வரும் சேவற்கொடியோன், சுந்தர திருநீறு பூசிவரும் ஆறுமுகன், காவடிகள் ஏந்தும் பக்தர்களின் மனக்குமுறை தீர்க்கும் சிவபாலன், செல்வமும், புகழும் அள்ளித்தரும் பரம்பொருள், எங்கள் காவல் தெய்வம் காளிப்பட்டி கந்தசாமியின் மகிமை’’ என்று கூறி சிலிர்க்கின்றனர் பக்தர்கள். முன்னொரு காலத்தில் முருகன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட பக்தர் ஒருவர் இங்கு வசித்தார். அவர் ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் கடும் விரதம் இருந்து காடு, மேடுகளை தாண்டி, விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாமல் கால்நடையாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

    இதுபோல் ஒரு வருடம் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது அவரது கனவில் ேதான்றிய முருகன், ‘இனி என்னைத்தேடி நீ பழனிக்கு வர வேண்டாம். நீயிருக்கும் இடத்திலேயே நானும் குடியிருக்க விரும்புகிறேன். எனவே எனக்கு நீ வசிக்கும் பகுதியில் ஒரு கோயில் கட்டு’’ என்று கூறிவிட்டு மறைந்துள்ளார். அதன்படி கட்டப்பட்டதே காளிப்பட்டி கந்தசாமி கோயில் என்பது தலவரலாறு. பழனி முருகனே இங்கு, கந்தசாமியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகநாளில் பாலாபிஷேகம் செய்து, மனமுருக கந்தசாமியை வழிபட்டால் கல்யாண யோகம் கூடும். பிள்ளைப்பேறு கிடைக்கும்.

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம், உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், எதிரிகளால் வரும் தீமை, கிரகங்களால் வரும் தோஷம் என்று அனைத்தையும் தகர்த்து அருள்பாலிக்கும் ஆபத் பாந்தவன் இந்த கந்தசாமி. வைகாசி விசாகத்தின்போது உற்சவர் வீதி உலா வருவது வழக்கம். அப்போது கந்தசாமியை வழிபட்டால் கவலைகளின் சுவடும் காணாமல் போகும். வீண்பயம், மனக்குழப்பம் நிறைந்த நேரத்தில் கந்தசாமியை பூஜித்து, இங்குள்ள இடும்பன் கோயில் கருப்பு மையை நெற்றியில் இட்டால், அனைத்தும் காற்றில் கலந்து விடும் என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் ஐதீகம்.

    ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் அலையென பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கும். அன்றைய தினம் பொங்கல் வழிபாடு, உருளுதண்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி, கும்மிப்பாட்டு என்று திரும்பிய திசையெல்லாம் தமிழ் மண்ணின் பாரம்பரியங்கள் கலந்த பக்தி வாசம் வீசும். மாட்டுச்சந்தை, சிறப்பு நீதிமன்றம் போன்றவை கோயில் வளாகத்திற்கு எதிரில் நடப்பதும் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று.
    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். காவடி எடுத்தும் சாமியை வழிபட்டனர்.
    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.

    நேற்று காலையில் பால்குடம் மற்றும் காவடிகளுக்கு பூஜை நடந்தது. அதன் பிறகு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக முருகன் சன்னதிக்கு வந்தனர்.

    அங்கு முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு எண்ணெய், மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், களபம், பஞ்சாமிர்தம் மற்றும் புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு மதியம் அலங்கார தீபாராதனையும், வாகன பவனியும் நடந்தது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
    சீர்காழி பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து கரகம், பால்குடங்கள், அலகு காவடி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க நான்கு வீதிகள் வழியாக பக்தர்கள் வலம் வந்தனர்.

    தொடர்ந்து கோவிலை வந்து அடைந்த பின்னர் பத்ரகாளி அம்மனுக்கு இளநீர், பன்னீர், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு பச்சைக்காளி, பவளக்காளி நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    இதைபோல் திருக்கடையூர் ஆணைக்குளம் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு தைதிருவிழாவையொட்டி பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பத்ரகாளியம்மன், மதுரை வீரன், முருகன், பெரியாச்சி, புற்றுஅம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடந்த 9 நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சுமார் 200-க்கு மேற்பட்ட பக்தர்கள் திருக்கடையூர் மஞ்சலாற்றங்கரையில் இருந்து கரகம், பால்குடம் எடுத்த கோவிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக பொருட்களான பால், தேன், தயிர், மஞ்சள், விபூதி, குங்குமம், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×