என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நாம் பெற்ற கல்வியும், ஞானமும் உள்ளத்து உணர்வையும், மெய் பொருளையும் தருபவை. ஆனால் அந்த ஞானத்தின் சிற்றின்பத்தை போக்கி வீடுபேறு என்கிற பேரின்பத்தை தருபவன் முருகப்பெருமான் மட்டுமே.
    செந்தமிழை தனது அடையாளமாகவும், ஞானத்தை உருவாகவும் கொண்டவன் தமிழ்க்கடவுன் முருகன். அறுசுவைகளை எழுத்துகளில் சொல்லி விடலாம். ஆனால் அதை உணர்வது, உணர்த்துவது புலன்கள் மட்டுமே. அதைப்போல அருளை பெற வேண்டுமானால் சமயம் (சமையல்) உணர்த்தும் (பக்குவம்) பக்தி நிலைகளை கடைபிடித்து உய்த்துணர்தல் வேண்டும். அவ்வையார் என்ற தமிழ் பெருமாட்டிக்கு செருக்கு வந்தபோது நாவல் பழத்தின் மூலம் ஞானத்தை ஊட்டியவன் முருகப்பெருமான். நாம் பெற்ற கல்வியும், ஞானமும் உள்ளத்து உணர்வையும், மெய் பொருளையும் தருபவை. ஆனால் அந்த ஞானத்தின் சிற்றின்பத்தை போக்கி வீடுபேறு என்கிற பேரின்பத்தை தருபவன் முருகப்பெருமான் மட்டுமே.

    மமதை என்பது வரும்போது சிறு பிழைகன் கூட துன்பத்தில் ஆழ்த்திவிடும். அந்த மாய வலையில் சிக்காது இருக்க வேண்டும். அறிவழிந்து தற்போதைய சுகத்தை மட்டும் விரும்புபவர்கள் மற்றவர்கள் மீதும் அவர்களின் இன்பத்தின் மீதும் பழி தூற்றுபவர்களை முருகன் எப்போதும் தண்டாயுதம் கொண்டு தட்டியே வைப்பான். எந்தாயுதமென கருட் தந்தையுநீ சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் என்று நினைக்கும் போது மட்டுமே நம்மை நயமுற காப்பான் முருகன்.

    முருகனின் திருப்பாதங்களை நினைக்க வேண்டும். அல்லாமல் அடுத்தவரை பழி தூற்றுவதோ துன்புறுத்துவது குறித்தோ நினையாதிருத்தல் வேண்டும். கடம்ப மலரின் காட்சியாய் கண்ணில் குளிர்ச்சியாய் வீற்றிருப்பவன். தன்னலம் கருதாது பிறர் துயரினை நீக்குபவன். அதர்மங்களை அழிப்பவன். தன்னை நம்புபவர்களை காப்பதோடு நல்லறிவை போதிப்பவனாகவும், பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு அறிவுறுத்தியவனாகவும் உள்ளான். எனவே அவன் பாதம் பணிந்து நல்லருளை பெறுவோம்.
    பிப்ரவரி மாதம் 2-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    2-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * பஞ்சமி திதி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

    3-ம் தேதி புதன் கிழமை :
     
    * சுபமுகூர்த்தம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
     
    4-ம் தேதி வியாழக்கிழமை :
     
    * சுபமுகூர்த்தம்
    * சப்தமி
    * சந்திராஷ்டமம்- உத்திரட்டாதி, ரேவதி

    5-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * தேய்பிறை அஷ்டமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி

    6-ம் தேதி சனிக்கிழமை :

    * நவமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி

    7-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * ஸ்மார்த்த ஏகாதசி
    * இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று,
    * சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

    8-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்தம்
    * வைஷ்ணவ ஏகாதசி
    * சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
    ஆன்லைன் முன்பதிவு முறை முடிந்து போனதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் குளத்தில் நீராட ஆனுமதிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்.
    ஆன்லைன் முன்பதிவு முறை முடிந்து போனதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் குளத்தில் நீராட ஆனுமதிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டயில் கூறியதாவது:-

    காரைக்கால் திருநள்ளாறில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை வரும் சனிபெயர்ச்சி விழா கடந்த டிசம்பர் 27-ந் தேதி நடந்து முடிந்தது. கொரோனா பாதுகாப்பை கருதி, மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து, சனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கியது.

    இதனால், சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரவேண்டிய கோவிலில், வெறும் 1 லட்சம் பக்தர்கள் மட்டுமே வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த கெடுபிடியால், கோவில் வருமானம் மற்றும் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் நகர் பகுதியில் உள்ள ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி பக்தர்களுக்கு நளன் குளத்தில் புனிதநீராட ஏற்பாடுகள் செய்யாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கோவில் ஆகம விதிகள்படியும், கடந்த பல நூற்றாண்டுகளாகவும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் நளன்குளத்தில் புனித நீராடி, தங்கள் உடைகளை, குளத்தில் வீசிவிட்டு செல்வதுதான் வழக்கம்.

    குறைந்தபட்சம், புனித நீராட முடியாதவர்கள், நளன் குளத்தில் இறங்கி, தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு, குளத்தையும் அங்குள்ள விநாயகரையும் வணங்கிவிட்டு, தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று விட்டு, கடைசியாகதான் சனீஸ்வரனை தரிசனம் செய்வார்கள். அப்போதுதான் அவர்களுக்கு முழு திருப்தி கிடைக்கும். மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து, சனிப்பெயர்ச்சி மற்றும் அதற்கு அடுத்த 48 நாட்கள் சனீஸ்வரனை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு, கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு, நளன் குளத்தில் புனிதநீராட அனுமதி மறுக்கப்பட்டது.

    இது ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும் 48 நாட்கள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு முைற முடிந்து போனதால், உடனே நளன்குளத்தை திறந்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்க வேண்டும். குறைந்த பட்சம், நளன் குளத்து தண்ணீரை, அனைத்து பக்தர்கள் தலையில் கோவில் நிர்வாகம் தெளிக்கவோ, அல்லது பக்தர்களே எடுத்து தலையில் தெளித்து கொள்ளவோ, அவசியம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதை கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, நவீனமுறையில், பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் ஏதாவது ஒரு பொது இடத்திலோ அல்லது நளன் குளம் அருகிலோ, தாராளமாக செய்யலாம் என்கிறபோது கோவில் நிர்வாகம் அதற்கான ஏற்பாட்டை அவசியம் செய்யவேண்டும். இல்லையேல், சனீஸ்வரன் கோவில் முன்பு பக்தர்களை ஒன்றுதிரட்டி பா.ம.க. மாபெரும் போராட்டத்தை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராக்காயி அம்மன் கோவில் நூபுரகங்கை தீர்த்தம் இன்று சிறப்பு பூஜைக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 10 மாதங்களுக்கு பிறகு புனித நீராட அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    திருமாலிருஞ்சோலை தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.

    இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அழகர் மலைமேல் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. அழகர்கோவில் வரும் பக்தர்கள் அனைவரும் மலைமேல் உள்ள நூபுர கங்கையில் புனித நீராடி பின் கள்ளழகரை வணங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டது.

    அரசு வழிகாட்டுதல் படி கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்ட போதிலும் நூபுர கங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் இந்த நூபுரகங்கை தீர்த்தம்? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இதைதொடர்ந்து தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் ராக்காயி அம்மன் கோவில் நூபுரகங்கை தீர்த்தம் இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

    இதையொட்டி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை வணங்கி சென்றனர்.

    10 மாதங்களுக்கு பிறகு புனித நீராட அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    திருவையாறில் தான் தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்தார். ஒரு தவமுனிவரின் வாழ்க்கை முறைப்படி தினசரி உஞ்சவிருத்தி மூலம் ராமன் எனும் பரம்பொருளின் திருப்புகழைப்பாடிப்பணிந்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமசீலர் தியாகராஜர்.
    திருவாரூரில் 1767-ம் ஆண்டு மே-4-ந் தேதி பிறந்தவர் தியாகராஜர். இவரது தந்தை ராமபிரம்மம், தாய் சீதம்மா, சகோதரர்கள்-பஞ்சாப கேசன், ராமநாதன். இளம் வயதிலேயே தந்தையிடம் ராமதாரக மந்திரமும் “ராமகிருஷ்ணானந்த யதீந்தரிடம் ராமாஷடாக்ஷரி மந்திரமும்” உபதேசம் பெற்றார்.

    திருவையாறில் தான் தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்தார். ஒரு தவமுனிவரின் வாழ்க்கை முறைப்படி தினசரி உஞ்சவிருத்தி மூலம் ராமன் எனும் பரம்பொருளின் திருப்புகழைப்பாடிப்பணிந்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமசீலர் தியாகராஜர். சொண்டி வேங்கட ரமணய்யர் எனும் குருவிடம் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றார் உண்ணும்சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் கண்ணனே! என்ற நம்மாழ்வாரின் சிந்தனையை அடியொற்றி எல்லாம் ராமனே! என்று பாடியவர் தியாகராஜர். இவர் பாடிய முதல் கீர்த்தனை “நமோ நமோ ராகவாய...” என்பதாகும்.

    தன்னுடைய வாழ்நாளில் இரண்டு கோடி முறை ராம நாமத்தை உச்சரித்து, ராமனின் தரிசனம் காணும் பேறு பெற்ற தியாகராஜர் 1847-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி தை மாதம் பகுள பஞ்சமி திதியில் ராமன் திருவடிகளை அடைந்து, முக்தி பெற்றார்.

    காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தியாகராஜரின் சமாதியில், பல ஆண்டுகள் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்திரபாகவதர் இருவரும் (தியாகராஜரின் சீடர்கள்) அவர் முக்தியடைந்த நாளில் ஆராதனை செய்தனர். பின்பு 1908-ம் ஆண்டு முதல் தில்லைஸ்தானம் ராம ஐயங்கார், தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் ஆண்டு தோறும் ஆராதனை நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டார். இதில் பெண்கள் பாட அனுமதிக்கப்படவில்லை.

    திருவையாறு பள்ளி வளாகத்தில் இந்த ஆராதனை நடத்தப்பட்டது. தியாகராஜரின் சமாதியில் நினைவு மண்டபம் எழுப்பி, பிருந்தாவனம் அமைத்து அங்கேயே தியாகபிரம்ம ஆராதனை விழாவை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை அவரது பரம சிஷ்யை பெங்களூரு வித்யாரத்னம் நாகரத்தினம்மாவையே சாரும், நாதசுரவித்வான்கள் தனியே தியாகபிரம்ம ஆராதனை விழாவை நடத்தினர். மூன்று பிரிவினர் தனித்தனியே மூன்று இடங்களில் நடத்திய ஆராதனை விழாவை ஒருங்கிணைத்து தியாகராஜர் சமாதி முன்பாக ஒரே விழாவாக நடத்த நாகரத்தினம்மாள் பெருமுயற்சி செய்து, 1940 முதல் ஆராதனை விழாவை தியாகராஜர் சமாதி முன்பு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார்.

    இதில் பெண்களும் கலந்து கொண்டு பாடுவதற்கு நாகரத்தினம்மாள் அனுமதித்தார். தனது சொத்துக்களை எல்லாம் தியாக பிரம்ம ஆராதனை விழாவிற்கே அர்ப்பணித்து தியாகராஜர் சமாதி எதிரிலேயே நாகரத்தினம்மாளும் சமாதியடைந்தார்.

    பெங்களூரு நாகரத்தினம்மாள் ஏற்படுத்திய அறக் கட்டளை நிதியுதவியுடன் முசிறி சுப்ரமணிய ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஆலத்தூர் சிவசுப்ரமணிய ஐயர், வெங்கடேச ஐயர், சித்தூர் சுப்ரமணியப் பிள்ளை, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, திருவாலங்காடு சுந்தரேசய்யர் திருவீழிமிழலை சகோதரர்கள் போன்ற மகா வித்வான்கள் சேர்ந்து, தியாகபிரம்ம மகோத்சவ சபை என்ற அமைப்பை தோற்றுவித்தனர்.

    இந்த சபைதான் ஆண்டுதோறும் தியாகபிரம்ம ஆராதனை விழாவை சிறப்பாக நடத்துகின்றது. மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் தியாகபிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக 35 ஆண்டுகள் அரும் பணியாற்றி, ஆராதனை விழாவைத் தேசிய அளவில் அகில இந்திய விழாவாக விளங்கச்செய்தார். அவருக்குப் பின் அவரது சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார் தலைவராகப் பொறுப்பேற்று ஆராதனை விழாவை சிறப்பாக நடத்தி வந்தார். மூப்பனார் மறைவுக்குபிறகு ஜி.கே.வாசன் புதிய தலைவராக பொறுப்பேற்று 174-வது ஆரா தனை விழாவை நடத்து கிறார். அமரர்மூத்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா வும், அமரர் சீர்காழி கோவிந்தராஜனும் பல ஆண்டுகள் சபையின் செயலாளர்களாக அரும்பணியாற்றினர். வயலின் மாமன்னர் அமரர் குன்னக்குடி வைத்யநாதன் 27 ஆண்டுகள் சபையின் செயலாளராக இருந்தார். தற்போது தவில் மேதை அரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேல், மிருதங்க மேதை ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் ஆகியோர் செயலாளர்களாகவும், குடந்தை கணேஷ் சபையின் பொருளாளராகவும் பணியாற்றுகின்றனர். அகில இந்திய அளவில், எல்லா இசைக் கலைஞர்களும் ஒன்று சேர்த்து பங்குபெறும் முதன்மையான இசை விழா தியாகராஜர் ஆராதனை விழாவாகும்.

    174-வது ஆராதனை விழா இன்று (திங்கட்்கிழைம) தொடங்குகிறது.
    புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க 11 முறை சுவாமி வலம் வந்தார்.
    புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று முன்தினம் இரவு புன்னையாபுரம் யாதவர் சமுதாயம் சார்பில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க 11 முறை சுவாமி வலம் வந்தார்.

    புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பங்குனி உத்திர தேர்த் திருப்பணி குழு தலைவர் சங்கரநாராயணன், செயல் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகனிடம் கோபித்த தெய்வானை அம்மன், சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தைப்பூச நிறைவு நாளான நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் ரதவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகனிடம் கோபித்த தெய்வானை அம்மன், சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் நாரதமுனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகுதேவர் தெய்வானை அம்மனிடம் தூது செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாகுதேவராக ஓதுவார் நாகராஜ், 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார்.

    அப்போது வள்ளியும், தெய்வானை அம்மனும் ஒருவரே, என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவில் நடைதிறந்து தெய்வானை அம்மன் முத்துக்குமாரசாமியுடன் சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் உட்பிரகாரத்தில் வலம் வந்த முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
    பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    கொடைக்கானல் அருகே பூம்பாறையில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தேரோட்ட திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது.

    கொடியேற்றத்தையொட்டி பாரம்பரிய முறைப்படி இசை வாத்தியங்கள் முழங்க கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மாலையில் சேவல் வாகனத்தில் குழந்தை வேலப்பர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் 2-ம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்ன வாகனத்தில் குழந்தை வேலப்பர் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இன்று 1-ந்தேதி மயில் வாகனத்திலும், 2-ந்தேதி காளை வாகனத்திலும், 3-ந்தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 4-ந்தேதி பூத வாகனத்திலும், 5-ந்தேதி சிங்க வாகனத்திலும், 6-ந்தேதி யானை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நிறைவடைந்தவுடன் பூந்தேரில் சாமி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறுநாள் 8-ந்தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று, திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பூம்பாறை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    சிவனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும்போது சிவனை எப்படி முறையாக வழிபட வேண்டும். சிவனை முறையாக வழிபட்டு சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
    நமது மதத்தில் எத்தனையோ கடவுள் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் முறையாக வழிபடுவது எப்படி என்பதை நமது சாஸ்த்திரங்கள் கூறுகின்றது. அந்த வகையில் சிவன் கோயிலிற்கு செல்லும்போது சிவனை எப்படி முறையாக வழிபட வேண்டும். சிவனை முறையாக வழிபட்டு சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

    பொதுவாக சிவன் ஆலயத்திற்கு சென்றவுடன் முதலில் சிவாய நாம என்று கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலின் உள்ளே சென்ற பின் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். பின் நந்தி தேவரிடம் சென்று அவர் சிரத்தின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும்.

    அதன் பிறகு நந்தி தேவரிடம் “நந்தி தேவரே சிவபெருமானை தரிசிக்க வந்துள்ளேன், எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன் என்று கூறி அவரின் அனுமதியை பெற வேண்டும்.

    நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது. அதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் “ஓம் நம சிவாய” என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது.

    ஐயனை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகைக்குரிய விஷேஷ ஆலயங்களாக இருக்கும். அங்கெல்லாம் அம்பாளை வணங்கிய பின்னர் சிவனை வணங்குவதில் தவர் இல்லை. அம்பாளை வணங்கிய பின்பு தென் முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடும் சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது.

    அதன் பிறகு கோவிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் “ஓம் நமசிவாய” என்று மந்திரத்தை ஜபித்தவாறே வலம் வரலாம்.
    பழனி தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்போது முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 27, 28-ந்தேதிகளில் நடைபெற்றது. வெகுவிமரிசையாக நடைபெற்ற பழனி தைப்பூச திருவிழா, 10-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையை தெப்பக்குளத்தில் அலங்கரிப்பட்ட மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு 6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஓதுவார்கள் பண்பாடி மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அரோகரா... அரோகரா...' என்று சரண கோஷம் எழுப்பினர். பின்னர் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தது. அப்போது வாண வேடிக்கையும் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிறகு இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது. தெப்ப உற்சவத்தில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் பழனி தெப்ப உற்சவ விழா கமிட்டி ஆகியோர் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருஆவினன்குடி, பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் காலை 6 மணி முதலே தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இதேபோல் பாதவிநாயகர் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டத்தால் கடும் நெரிசல் காணப்பட்டது. நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தி கிரிவீதியை சுற்றி வந்தனர்.
    வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.

    தைப்பூசத்தையொட்டி சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.

    ஜோதி தரிசனம் முடிந்த பின்னர் வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறுவது வழக்கம். இங்குள்ள ஒரு அறையின் உள்ளே சென்ற வள்ளலார் அங்கு உள்பக்கமாக தாழிட்டு கொண்டு சித்திபெற்றார். அந்த அறைக்கு தீபம் காண்பிக்கப்படுவதே திருஅறை தரிசனம் என்பதாகும்.

    அதன்படி மேட்டுக்குப்பத்தில் நேற்று திருஅறை தரிசனம் நடைபெற்றது. முன்னதாக வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி(பேழை) மற்றும் உருவப்படம் மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகைக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

    கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவில், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபட்ட லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அவர் நீராடிய தீஞ்சுவை நீரோடை வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது கருங்குழி செம்புலிங்க குடும்பத்தினர் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை முன் பெட்டியை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையில் மதியம் 12 மணிக்கு ஞானசபை பூசகர் தீபம் காண்பிக்க திருஅறை தரிசனம் தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற மகா மந்திரத்தை உச்சரித்து வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் பக்தர்கள் புனிதநீராட அனுமதிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
    திருமலை :

    திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் 66 கோடி புண்ணியத் தீர்த்தம் உள்ளது. அதில் முக்கியமானவை 1008, அவற்றுள் சிறந்தவை 216, இவைகளில் சலக புண்ணியங்களையும் தரக்கூடியது 108. முக்தி தருபவை 26. எல்லா விதத்திலும் மேன்மைகளையும், சிறப்பையும், மகிமையையும் கொண்ட அதி விசேஷமான தீர்த்தங்கள் ஏழு. அந்த ஏழு தீர்த்தத்தில் மிக முக்கியமானது ஸ்ரீவாரி புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளம்.

    ஸ்ரீவாரி புஷ்கரணியில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா பரவலால் பக்தர்கள் புனித நீராடவும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

    ஜூன் மாதம் 8-ந்தேதியில் இருந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஸ்ரீவாரி புஷ்கரணியில் பக்தர்கள் புனிதநீராட அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீவாரி புஷ்கரணிக்குச் செல்லும் நுழைவு வாயிலின் கதவு மூடப்பட்டது.

    இந்தநிலையில் மத்திய, மாநில உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தீர்த்தம் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள், யாத்ரீகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் பிப்ரவரி மாதம், முதல் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டியை சந்தித்து, ஆலோசனை நடத்தி, விரைவில் ஸ்ரீவாரி புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட உரிய தேதியை அறிவிப்பார், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×