
நேற்று காலையில் பால்குடம் மற்றும் காவடிகளுக்கு பூஜை நடந்தது. அதன் பிறகு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக முருகன் சன்னதிக்கு வந்தனர்.
அங்கு முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு எண்ணெய், மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், களபம், பஞ்சாமிர்தம் மற்றும் புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு மதியம் அலங்கார தீபாராதனையும், வாகன பவனியும் நடந்தது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.