
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் கடந்த 27-ந் தேதியும், தைப்பூச தேரோட்டம் நேற்று முன்தினமும் நடைபெற்றது. இந்த விழாக்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கலந்துகொண்டனர். அதோடு வெளிமாநில பக்தர்களும் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தைப்பூச திருவிழாவின் 9-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் ரதவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.