என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் பூமி நீலாதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு நாகநதியில் தீர்த்தவாரி நடந்தது.
    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் பூமி நீலாதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. அதையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு நாகநதியில் தீர்த்தவாரி நடந்தது.

    பூமிநீலாதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஊஞ்சல் சேவை நடந்தது. விழாவில் அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் மறைசாட்சி தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி காலையில் திருப்பலியும், 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. குரும்பனை இணை பங்குத்தந்தை ஜேக்கப், மேல மணக்குடி இணை பங்குதந்தை ராய், இளங்குருமடம் புனித அலோசியஸ் வினட் மேக்சன் அருளுரை ஆற்றினார்கள்.

    மதியம் 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம் முழங்கியது. அதனைத் தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமாலையும் புகழ் மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

    இதில் கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை உரையும், முட்டம் மறைவட்ட முதல்வர் ஜான் ரூபஸ் அருளுரையும் ஆற்றினர். கொடியேற்ற நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், துணைச் செயலாளர் சகாயரூபிலெட், பொருளாளர் சகாயபென்சிகர், அருட் சகோதரிகள், தேவசகாயம் மவுண்ட் வட்டார துணைத்தலைவர் ஜேக்கப் மனோகரன், மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது.

    விழாவையொட்டி தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. 8-ம் திருவிழா அன்று நற்கருணை பவனியும், 9-ம் திருவிழாஅன்று இரவு வாண வேடிக்கையும், அதனை தொடர்ந்து தேர்ப்பவனியும், 10-ம் திருவிழா அன்று மாலையில் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாட்டை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.
    சோழவந்தான் அருகே குருவித்துறை வேட்டார்குளம் அருகில் உள்ள ஆதிமாசாணி அம்மன் கோவிலில் பூசாரி பூக்குழியில் இறங்கியவுடன் பக்தர்கள் வரிசையாக இறங்கினர்.
    சோழவந்தான் அருகே குருவித்துறை வேட்டார்குளம் அருகில் உள்ள ஆதிமாசாணி அம்மன் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந்தேதி இரவு 12 மணியளவில் மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் மாசாணியம்மன் சக்தி கரகம் எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை பூக்குழி திருவிழா நடைபெற்றது.

    முதலில் பூசாரி பூக்குழியில் இறங்கியவுடன் பக்தர்கள் வரிசையாக இறங்கி வந்தனர். பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். பின்னர் மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்படடது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து கிராமத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் சக்தி கரகம் மற்றும் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை காலை சக்தி அலங்காரம் நடைபெற்று, இரவு 6 மணியளவில் மகாமுனீஸ்வரர் கருப்புசாமி பூஜை நடைபெறுகிறது. கோவில் நிர்வாகிகள் சின்னமாயன், கலாராணி, சிவராஜா, மாசாணிராஜா, கங்கேஸ்வரி, சவுந்தரபாண்டியன் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    பூண்டி மாதா பேராலயத்தில் ஆன்மீக தந்தை அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தவக்காலத்தின் முதல் வெள்ளியான நேற்று மாலை பூண்டி மாதா பேராலயத்தில் ஆன்மீக தந்தை அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவிபங்குத்தந்தை அருண்சவரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் பூதலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பீஷ்மாஷ்டமி அன்று, விரதம் இருந்து நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
    20-2-2021 பீஷ்மாஷ்டமி

    மகாபாரதக் கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். இவர் செய்த தியாகத்தின் பயனாக, தன்னுடைய தந்தையிடம் இருந்து ‘விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம்’ என்ற அற்புதமான வரத்தைப் பெற்றிருந்தார்.

    18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில் 10-ம் நாளில், அம்புகள் துளைக்க போர்க்களத்தில், அம்பு படுக்கையில் கிடந்தார், பீஷ்மர். உத்திராயன புண்ணியாலம் தொடங்கும்போது மரணிக்க வேண்டும் என்று காத்திருந்தார். தை மாதம் தொடங்கியும் கூட அவருக்கு மரணம் நேரவில்லை. உடலில் வலியும், வேதனையும் அதிகரித்தது.

    அப்போது அங்கு வந்த வியாசரிடம், “நான் செய்த பாவம் என்ன?. நான் விரும்பியும் கூட இன்னும் என்னை மரணம் தழுவாமல் இருக்க என்ன காரணம்?” என்று கேட்டார்.

    அதற்கு வியாசர், “தன்னுடைய உடலாலும், மனதாலும் செய்வது மட்டுமே பாவம் அல்ல.. தன் எதிரில் நடைபெறும் குற்றத்தை, தனக்கு அதிகாரம் இருந் தும், ஆற்றல் இருந்தும் தடுக்காமல் இருப்பதும் பாவம்தான். அதற்கான தண்டனையைத்தான் உன்னுடைய உள்ளம் அடையும் வேதனையால் பெற்றுக்கொண்டிருக் கிறாய்” என்றார்.

    இப்போது பீஷ்மருக்கு புரிந்தது. துரியோதன சபையில், திரவுபதி அவமதிக்கப்பட்டபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் இதற்கு காரணம் என்று உணர்ந்து வருந்தினார். பின்னர் இதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரிடமே கேட்டார்.

    “ஒருவர் தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து வருந்தினாலே அவர்களது பாவம் அகன்றுவிடுவதாக வேதம் சொல்கிறது. நீயும் வருந்தியவுடன் உன்னுடைய பாவமும் நீங்கிவிட்டது. இருப்பினும் திரவுபதி, துரியோதன சபையில் தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் தட்டிக்கேட்காத உன்னுடைய வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்” என்று கூறிய வியாசர், அதில் இருந்து விடுபடுவதற்காக வழியைக் கூறினார்.

    “பீஷ்மா.. உன்னுடைய பாவங்களை பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கே உண்டு. சூரியனுக்கு உகந்தது எருக்கம் இலை. அதற்கு ‘அர்க்கபத்ரம்’ என்று பெயர். ‘அர்க்கம்’ என்பதற்கு ‘சூரியன்’ என்றும் பொருள் உண்டு. அந்த இலைகளைக் கொண்டு உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப்போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று கூறிய வியாசர், அதன்படியே செய்தார்.

    இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.

    பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார் என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அதுபற்றி வியாசரிடம் கேட்கவும் செய்தான். அதற்கு வியாசர், “தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும், அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார்.

    அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு, பீஷ்மரின் வாழ்த்தும் கிடைத்து, சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
    திருப்பதியில் இன்று ரதசப்தமியையொட்டி 7 வாகனங்களில் மாடவீதிகளில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். வாகன சேவையை தரிசிக்க மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தனர்.
    திருப்பதி

    திருப்பதியில் இன்று ரதசப்தமி விழா நடந்தது. இதையொட்டி 7 வாகனங்களில் மாடவீதிகளில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன சேவையை தரிசிக்க மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர கோ‌ஷமிட்டு தரிசனம் செய்தனர்.

    காலை 9 மணிக்கு சின்ன சே‌ஷ வாகனமும், 11 மணிக்கு கருட சேவையும், 1 மணியளவில் அனுமந்த வாகனம், 2 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    மாலை 4 மணிக்கு கல்ப விருட்ச வாகனம், 6 மணிக்கு சர்வ பூபால வாகனம் மற்றும் இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் மாடவீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.

    ரதசப்தமி விழாவையொட்டி தரிசனத்திற்கு வழக்கமாக வரும் பக்தர்களை விட கூடுதலாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்திருந்தனர்.

    டிக்கெட் இல்லாமல் வந்த பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படவில்லை.

    திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    கும்பகோணத்தில் 3 வைணவ கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள 5 பிரசித்திப்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக சக்கரபாணி சாமி கோவில் திகழ்கிறது. சிறப்புமிக்க இந்த கோவிலில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தையொட்டி கொடிமரம் அருகே சக்கரபாணி பெருமாள், சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழாவில் வருகிற 25-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 26-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாசிமக தேரோட்டம் நடக்கிறது.

    அன்று மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடக்கிறது. இதேபோல் கும்பகோணம் ராஜகோபாலசாமி கோவில், ஆதிவராக பெருமாள் ஆகிய வைணவ தலங்களிலும் நேற்று மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராஜகோபாலசாமி கோவிலில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசாமி கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார். ஆதிவராக பெருமாள் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பெருமாள், அம்புஜவல்லி தாயாரோடு எழுந்தருளினார். விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை.
    தமிழகத்தில் மிகப் பிரசித்தி பெற்றதும், பக்தி காவியமான ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டதுமான அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

    மூன்று கண்களும் பத்து கைகளும் உள்ள ஆஞ்சநேயர் அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.

    ராமபிரான் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து அனுமன், ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருக்கும்போது, அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். அப்போது இயற்கை அழகுடன் இருந்த இப்பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள அனுமனை வழிபட்டால் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மூன்று கடவுள்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைப்பதுடன், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை. தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில் முனைவோர், திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர் என ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அனுமனை வழிபடுகின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால், ஆண்டுதோறும் இந்த அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் அனுமனை தரிசிக்க இங்கு வருவர். அதை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அம்மனின் நாகல்நகர் புறப்பாடு நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அம்மனின் நாகல்நகர் புறப்பாடு நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி நாகல்நகர் பகுதிகளில் திருக்கண் மண்டகப்படியில் கலந்துகொண்டு இரவு தங்கல் நடைபெறுவது வழக்கம். சுமார் 2 நாட்கள் நடைபெறும் இந்த புறப்பாடு இந்த ஆண்டு ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் சகடை வாகனத்தில் புறப்பாடாகி நாகல்நகர் சந்தைப்பேட்டை காளியம்மன் கோவிலை வந்தடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று மாலையில் புறப்பாடாகி கோவிலை வந்தடையும் என்றனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி மண்டல உற்சவ விழா சுற்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி 10 நாட்கள் சித்திரை வீதிகளில் சாமி வலம் வருவார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். கடந்த ஜனவரி மாதம் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அன்றைய தினத்தில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர் சாமிகள் தினமும் சாமி சன்னதி 2-ம் பிரகாத்தில் வலம் வந்தனர்.

    இந்த நிலையில் பெரிய சாமி வீதி உலா நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் 8 இடங்களில் சுற்று கொடியேற்றம் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடந்தது. இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் எழுந்தருளினார்கள். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    விழாவில் 24-ந் தேதி சட்டத்தேரில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சாமி கீழச்சித்திரை வீதி, மீனாட்சி கோவில் தெரு வழியாக தெற்காவணி மூலவீதி வழியாக தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதி வழியாக கோவிலை வந்தடைவர்.

    26-ந் தேதி இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வருவர்.

    27-ந்தேதி மாசி மகம் தினத்தன்று மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் கோவிலில் இருந்து கிளம்பி சித்திரை வீதி வழியாக, கீழமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளிவீதி வழியாக சிம்மக்கல் வைகை ஆற்றின் தென்கரை திருமலைராயர் படித்துறை பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தளுவார்கள். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    நாகை அகஸ்தீஸ்வரர் கோவில் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை வெளிப்பாளையத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அகஸ்தீஸ்வரர்-ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி கொடி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து கொடிமரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர்கள் சண்முகராஜ், பூமிநாதன், சிவக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 32-வது ஆண்டாக சமயபுரத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
    வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி 32-வது ஆண்டாக நேற்று சமயபுரத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். முன்னதாக காலை 8 மணி அளவில் அய்யலூரில் உள்ள சக்திவிநாயகர், மகாகாளியம்மன், முத்துமாரியம்மன் கோவில்களில் நடந்த அபிஷேக ஆராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யலூர் களர்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒன்றிணைந்தனர். இதைத்தொடர்ந்து மாரியம்மன் அலங்கார ரதத்தை இழுத்தவாறு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    ×