search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பீஷ்மாஷ்டமி
    X
    பீஷ்மாஷ்டமி

    சுபபோக வாழ்வு தரும் பீஷ்மாஷ்டமி விரதம்

    பீஷ்மாஷ்டமி அன்று, விரதம் இருந்து நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
    20-2-2021 பீஷ்மாஷ்டமி

    மகாபாரதக் கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். இவர் செய்த தியாகத்தின் பயனாக, தன்னுடைய தந்தையிடம் இருந்து ‘விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம்’ என்ற அற்புதமான வரத்தைப் பெற்றிருந்தார்.

    18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில் 10-ம் நாளில், அம்புகள் துளைக்க போர்க்களத்தில், அம்பு படுக்கையில் கிடந்தார், பீஷ்மர். உத்திராயன புண்ணியாலம் தொடங்கும்போது மரணிக்க வேண்டும் என்று காத்திருந்தார். தை மாதம் தொடங்கியும் கூட அவருக்கு மரணம் நேரவில்லை. உடலில் வலியும், வேதனையும் அதிகரித்தது.

    அப்போது அங்கு வந்த வியாசரிடம், “நான் செய்த பாவம் என்ன?. நான் விரும்பியும் கூட இன்னும் என்னை மரணம் தழுவாமல் இருக்க என்ன காரணம்?” என்று கேட்டார்.

    அதற்கு வியாசர், “தன்னுடைய உடலாலும், மனதாலும் செய்வது மட்டுமே பாவம் அல்ல.. தன் எதிரில் நடைபெறும் குற்றத்தை, தனக்கு அதிகாரம் இருந் தும், ஆற்றல் இருந்தும் தடுக்காமல் இருப்பதும் பாவம்தான். அதற்கான தண்டனையைத்தான் உன்னுடைய உள்ளம் அடையும் வேதனையால் பெற்றுக்கொண்டிருக் கிறாய்” என்றார்.

    இப்போது பீஷ்மருக்கு புரிந்தது. துரியோதன சபையில், திரவுபதி அவமதிக்கப்பட்டபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் இதற்கு காரணம் என்று உணர்ந்து வருந்தினார். பின்னர் இதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரிடமே கேட்டார்.

    “ஒருவர் தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து வருந்தினாலே அவர்களது பாவம் அகன்றுவிடுவதாக வேதம் சொல்கிறது. நீயும் வருந்தியவுடன் உன்னுடைய பாவமும் நீங்கிவிட்டது. இருப்பினும் திரவுபதி, துரியோதன சபையில் தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் தட்டிக்கேட்காத உன்னுடைய வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்” என்று கூறிய வியாசர், அதில் இருந்து விடுபடுவதற்காக வழியைக் கூறினார்.

    “பீஷ்மா.. உன்னுடைய பாவங்களை பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கே உண்டு. சூரியனுக்கு உகந்தது எருக்கம் இலை. அதற்கு ‘அர்க்கபத்ரம்’ என்று பெயர். ‘அர்க்கம்’ என்பதற்கு ‘சூரியன்’ என்றும் பொருள் உண்டு. அந்த இலைகளைக் கொண்டு உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப்போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று கூறிய வியாசர், அதன்படியே செய்தார்.

    இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.

    பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார் என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அதுபற்றி வியாசரிடம் கேட்கவும் செய்தான். அதற்கு வியாசர், “தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும், அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார்.

    அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு, பீஷ்மரின் வாழ்த்தும் கிடைத்து, சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
    Next Story
    ×