என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சுழியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்றும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 26-ந் தேதி மாசி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.
    பட்டப்படிப்பு படித்தவர்களை விட, சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். திறமைக்கு உரிய வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் என்னவென்று பார்க்கலாம்.
    ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில் தவிப்பார்கள். இதற்கு முருகப் பெருமானின் அவதாரமாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வணங்க நல்ல தீர்வு கிடைக்கும்.

    சுப்ரமணிய சுவாமி படத்தை வீட்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சுப்ரமணிய சுவாமி திருக்கோலத்தில் அமைந்திருக்கும் முருகன் படம் மிகவும் விசேஷமானது. இந்த கோலத்தில் முருகரை வணங்குபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும், சாதனை புரிய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் வீட்டில் சுப்ரமணிய சுவாமி படத்தை கட்டாயம் வாங்கி வையுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் இந்த படத்தில் மலர் சாற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வையுங்கள். அவர்களுடைய வெற்றிக்கு இந்த வழிபாடு சிறந்ததாக இருக்கும்.

    இந்த சுப்பிரமணிய சுவாமி ஸ்லோகத்தை அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பின்னர் சுப்ரமணிய சுவாமி படத்தின் முன்பு நின்று கொண்டே 108 முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது போல் தினமும் செய்து வர நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை நிச்சயமாக கிடைக்கும்.

    ராஜராஜஸகோத் பூதம்!
    ராஜீவாயத லோசனம்!
    ரதீசகோடி ஸௌந்தர்யம்!
    தேஹிமே விபுலாம் ச்ரியம்!!

    நம்பிக்கையுடன் முருகப்பெருமானை வணங்கி தொடர்ந்து 48 நாட்களுக்கு இது போல் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை அமையும். நமக்கு எவ்வளவு தான் திறமைகள் இருந்தாலும் தெய்வத்தின் அருள் இன்றி எதையுமே சாதிக்க இயலாது என்பதை மறந்து விடாதீர்கள். இந்த மந்திரத்தை உச்சரித்து முருகனின் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பின்னர் வெளியில் செல்லுங்கள். செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் திண்டுக்கல் பெரியகடைவீதி திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின் முறையை சேர்ந்த திண்டுக்கல் மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை கட்டிடத்தில் ஆண்டுதோறும் அம்மன் எழுந்தருளுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12 மணி அளவில் அந்த கட்டிடத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது மாவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடு, நெய்வேத்தியம் ஆகியவை நடந்தது. பின்னர் மாலை 6 மணி அளவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை உறவின்முறை தலைவர் ரமே‌‌ஷ்பாபு தொடங்கி வைத்தார்.

    அதையடுத்து உறவின்முறை கட்டிடத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் 4 ரதவீதிகள் வழியாக வந்து கோட்டை மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலில் தேரோட்டம், சாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் 50 திருமணத்திற்கு மட்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ரதசப்தமியை முன்னிட்டு தேவநாத சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி பூவராகசுவாமி பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத யக்ஞவராகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மாசிமக விழா கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இரவில் சிம்ம வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், ஹம்ச, சேஷ, அனுமந்த, யானை வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது. 21-ந்தேதி தங்க கருட சேவை நடக்கிறது. மேலும் 25-ந்தேதி தங்க தோளுக்கினியான் வாகனத்தில் கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி ஆட பெருமாள் புறப்பாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள், அர்ச்சகர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலு மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் 7 வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள் சுவாமி மாட வீதியின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலு மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து சூரியபிரபை வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், கருட வாகனம், முத்துப்பந்தல் வாகனம், சந்திரபிரபை வாகனம் என 7 வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள் சுவாமி காலை முதல் இரவு வரை மாட வீதியின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு தனூர் மாத பூஜை, 5.30 மணிக்கு விளாபூஜையில் முருகனுக்கு சந்நியாசி அலங்காரம், காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரம் நடைபெற்றது.

    அதன்பிறகு 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

    மாசி மாத கார்த்திகை விழாவையொட்டி, அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 70 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
    பச்சைமலை முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.
    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் இருந்து சுமார்1 கி.மீ. தொலைவில் உள்ளது பச்சைமலை. மலையுச்சியில் கோவில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

    சுமார் 2,000 வருட பழமை மிக்க கோவில் இது. துர்வாச முனிவர் இந்தப் பகுதியில் இருந்து தவமிருந்தபோது இங்கேயுள்ள மலையில் பாலகுமாரனாக ஸ்ரீசுப்பிரமணியரைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு என அருளிச் சென்றாராம் சிவபெருமான். அதன்படி அங்கே முருகன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து துர்வாசர் வழிபட்டார் என்கிறது தல புராணம்.

    இங்கு பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரப் பெருவிழா இந்த நாளில் முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.

    ஆறாம் நாள்-திருக்கல்யாண வைபவம். இதில் கலந்து கொண்டு வேண்டினால் நினைத்தபடி திருமணம் இனிதே நடந்தேறும். 7-ஆம் நாள் திருத்தேரோட்டமும் 8-ஆம் நாள் முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் கோலாகலமாக நடைபெறுகின்றன. ஸ்ரீசண்முகக் கடவுளுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சார்த்தி, சிறப்பு அர்ச்சனை செய்தால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம்.

    நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலை காந்தி நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலை காந்தி நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு கிருத்திகையையொட்டி பால், இளநீர், சந்தனம் உள்பட 13 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் சுந்தரர் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    மூலவர்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்,)
    தாயார்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி
    தல விருட்சம்: பாதிரிமரம்
    தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்

    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் சுந்தரர் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவதலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவில் சுமார் 2000 வருடங்கள் பழமையான கோவில்.

    அம்பாளின் கோயில் அவினாசியப்பருக்கு வலது புறம் உள்ளது பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காகப் பெயர் பெற்றது.

    தல வரலாறு

    நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் அவிநாசிக்கு வந்த போது ஒரே தெருவின் எதிர் எதிர் வீடுகளில் ஒன்றில் பூணூல் கல்யாணமும், மற்றொன்றில் மகனை முதலை சென்றமைக்காக வருத்தமுடனும் இருந்தார்கள். அவனுக்கும் தற்போது பூணூல் கல்யாணம் நடக்கும் சிறுவனுக்கும் ஒத்த வயதே ஆகிறது. அதனை அறிந்த சுந்தரர். இச்சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை பிரார்த்தனை செய்தார்.

    அதனால் மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய சிறுவன் வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்குக் கிடைத்தான். இந்த தொன்மம் இத்தலத்தில் நடந்தமையால் சிறப்புப் பெற்று இருக்கிறது. இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் மூன்றாவது நாளன்று இக்கோயிலில் நடைபெறுகிறது.

    இத்தலத்தில் உள்ள இறைவனைப் பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர்.

    கோவில் அமைப்பு:

    இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. 100 அடி ராஜ கோபுரம் கொங்கு சோழ மன்னனால் கட்டப்பட்டு(காலம்: 1200), பின்பு மைசூர் மகாராஜாவால் புனரமைக்கப்பட்டது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கணபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

    மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன.

    மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.

    இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக்கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகங்கள் உண்டு. இறைவி கருணாம்பிகை சந்நிதி, மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள்.

    அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்.
    திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி 27-ந் தேதி நடக்கிறது.
    பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று அம்மனுக்கு காப்பு கட்டு சடங்குடன் தொடங்கியது. காலை 9.45 மணிக்கு மேல் சாந்தி பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் நம்பூதிரி காப்பு கட்டி விழாவை தொடங்கி வைத்தார்.

    மாலை 6 மணிக்கு அம்பா கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை நடிகர் நெடுமுடி வேணு தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு 2021-ம் ஆண்டுக்கான ஆற்றுக்கால் அம்பா விருது கோவில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த விழா 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம் காலை 6 மணிக்கு தீபாராதனை, 6.40 மணிக்கு உஷ பூஜை, 7.15 மணிக்கு களபாபிஷேகம், 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 11.30 மணிக்கு உச்ச பூஜை, மதியம் 1 மணிக்கு நடை அடைப்பு, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.45 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு அத்தாள பூஜை, இரவு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    விழாவின் சிகரமான பொங்கல் வழிபாடு 27-ந் தேதி காலை 10.50 மணிக்கு நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கல் படைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொது இடங்கள், வழிகளில் பொங்கல் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு பணிகளுக்கு 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடை உத்தரவுகளை பக்தர்கள் முறையாக கடைபிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
    அய்யம்பேட்டையில் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவிலில் ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், சந்திர பிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
    அய்யம்பேட்டையில் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ரதசப்தமி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொடடி் ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், சந்திர பிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து திருமஞ்சனம், வேத பாராயணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    ×