search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chakkarathalwar"

    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா தொடங்கியது. மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    நெல்லை பகுதியில் கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தக்கட்ட படித்துறை, மேலநத்தம் அழியாபதீசுவரர் கோவில் படித்துறை, ராஜவல்லிபுரம் செப்பறை கோவில் படித்துறை, பாலாமடை படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாமியார்கள் புனித நீராடி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர்.

    நெல்லை அருகன்குளத்தில் ஜடாயு துறையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 அடி நீளத்துக்கும், 16 அடி அகலத்துக்கும் கருங்கற்களால் புதிய படித்துறை கட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை அந்த படித்துறைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேனி ஓம்காரனந்தா சுவாமி சிறப்பு பூஜை நடத்தி புனிதநீர் ஊற்றினார்.

    எட்டெழுத்து பெருமாள் தருமபதி அறக்கட்டளை நிர்வாகி ராமலட்சுமி தேவி புதிய படித்துறையை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் அங்கு வரதராஜ பெருமாள் சுவாமி தலைமையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அங்கு வெற்றிலையில் கற்பூர ஜோதி ஏற்றி பெண்கள் ஆற்றில் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் இந்த படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆரத்தி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கிருந்து மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடிமரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தைப்பூச மண்டபத்தின் முன்பு சிறப்பு பூஜை நடத்தி கால் நாட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், லட்சுமணன் எம்.எல்.ஏ., அமைப்பாளர்கள் உஷா ராமன், நிர்மலா ராமரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    பலன் தரும் இந்த ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரத்தை தினமும் சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்து வந்தால் நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்.
    பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

    ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே  போற்றி
    ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே  போற்றி
    ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி
    ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி
    ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி
    ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி
    ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
    ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி
    ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி
    ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி

    ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி
    ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி
    ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி
    ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி
    ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி
    ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி
    ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி
    ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி
    ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி
    ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி

    ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி
    ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி
    ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி
    ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி
    ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி
    ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி
    ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி
    ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி
    ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி
    ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி

    ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி
    ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி
    ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி
    ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி
    ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி
    ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி
    ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி
    ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி
    ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி
    ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி

    ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி
    ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி
    ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி
    ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி
    ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி
    ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி
    ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி
    ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி
    ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி
    ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி

    ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி
    ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி
    ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி
    ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி
    ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி
    ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி
    ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி
    ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி
    ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி
    ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி

    ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி
    ஓம் முக்கண்களை உடையவரே போற்றி
    ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி
    ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி
    ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
    ஓம் ருத்ரப் பிரியரே போற்றி
    ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி
    ஓம் மஹா வீரரே போற்றி
    ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி

    ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி
    ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி
    ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி
    ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி
    ஓம் சிவப்ரியரே போற்றி
    ஓம் மஹா பலரே போற்றி
    ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி
    ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி
    ஓம் மஹா சூரரே போற்றி
    ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி

    ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி
    ஓம் தர்மராஜரே போற்றி
    ஓம் சமத்துவமுடையவரே போற்றி
    ஓம் தண்டதரரே போற்றி
    ஓம் தபஸ்வியே போற்றி
    ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி
    ஓம் சர்வக்ஞரே போற்றி
    ஓம் புண்ணிய மித்திரரே போற்றி
    ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி
    ஓம் மிக பயங்கர வாதியே போற்றி

    ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி
    ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி
    ஓம் பாவிகளின் எமனே போற்றி
    ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி
    ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி
    ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி
    ஓம் கோரமானவரே போற்றி
    ஓம் பயங்கரரே போற்றி
    ஓம் திருப்தியுற்றவரே போற்றி
    ஓம் ஸம்ஹாரியே போற்றி

    ஓம் குளிரச் செய்பவரே போற்றி
    ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி
    ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி
    ஓம் வேண்டிய வரம் தரும் சுதர்ஸனரே  போற்றி  போற்றி.
    ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
    கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் கோவில். தமிழில் வையம் காத்த பெருமாள் என அழைக்கின்றனர்.

    தாயாரின் பெயர் - ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார். பிரிந்த தம்பதியர், நிம்மதியின்றித் தவிக்கும் தம்பதியர் ஆகியோர் தொடர்ந்து 16 நாட்கள் அல்லது 16 சனிக்கிழமைகள் இங்கு வந்து வெள்ளை மலர் சார்த்தி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, 16 முறை பிரகார வலம் வந்தால், பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்.

    இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மிகுந்த விசேஷமானவர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். வடக்கு திசை நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை, செவ்வாய்க்கிழமைகளில் 16 நெய் தீபமேற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். நஷ்டத்தில் இருந்த தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

    நல்ல வேலை, பதவி உயர்வு ஆகியவை வேண்டுவோர் பால் பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து, வெள்ளை வஸ்திரம் மற்றும் முல்லை முதலான வெண்மை நிற மலர்கள் சார்த்தி வழிபட்டால்... விரைவில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்.
    கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை ‘சக்கரத்தாழ்வார்’ என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை ‘அவசரத் திருக்கோலம்’ என்பர்.

    ‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு. இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.

    எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை தரும் சக்கரத்தாழ்வாரை, அவரது ஜெயந்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டு பலமும் வளமும் பெறுவோமாக!
    மகாவிஷ்ணு தன்னுடைய நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். இந்த ஆயுதங்கள் அவர் இட்ட பணியை செய்யக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவை.

    பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் சக்கரத்தின் அம்சமாகவும், பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாகவும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகவும், பேயாழ்வார் வாளின் அம்சமாகவும், திருமங்கையாழ்வார் வில்லின் அம்சமாகவும் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    ஆனால் பெரும்பாலான கோவில்கள் மற்றும் திவ்யதேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில் தான் பெருமாள் காட்சியளிப்பார். ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையில் இடம் பெற்று இருப்பதே ஸ்ரீசக்கரம். ஆனால் சில ஆலயங்களில் மாறுபட்டு அமைந்திருப்பதும் உண்டு. திருக்கோவிலூர் மூலவர் மற்றும் பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்திலும் இடக்கையில் ஸ்ரீசக்கரம் காட்சி அளிக்கிறது.

    சிவாலயங்களில் சிவனை பார்த்தவாறு நந்தியம்பெருமான் இடம் பெற்றிருப்பது போல, வைணவ ஆலயங்களில் பெருமாளுக்கு நேராக பெருமாளைப் பார்த்தவாறு சக்கரத்தாழ்வார் அருள் பாலிப்பதைக் காணலாம். இவர் வேறு யாருமல்ல, பெருமாளின் கரங்களில் இருக்கும் ஸ்ரீசக்கரமே ‘சக்கரத்தாழ்வார்’ என்னும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார். இது தவிர பெருமாளின் கருவறை திருச்சுற்றிலும் இவர் தனி சன்னிதியில் இடம் பெற்றிருப்பார்.

    திருமாலை எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை ‘அனந்தாழ்வான்’ என்றும், வாகனமான கருடனை ‘கருடாழ்வார்’ என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை ‘திருப்புளியாழ்வான்’ என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை ‘திருவாழிஆழ்வான்’ என்னும் ‘சக்கரத்தாழ்வான்’ என்றும் வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கின்றன.

    சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் எட்டு (ஸ்ரீசுதர்சனர்), பதினாறு (ஸ்ரீசுதர்சன மூர்த்தி) மற்றும் முப்பத்திரண்டு (ஸ்ரீமகாசுதர்சன மூர்த்தி) கரங்களைக் கொண்டவராகவும் காட்சி தருகிறார்.

    இறைவழிபாட்டில் கடவுளர்கள் கைக்கொண்டிருந்த ஆயுதங்களையும் வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது. குடிதெய்வ வழிபாட்டு முறையில்இருந்து தோன்றி படிப்படியாக சிவனது சூலம், முருகனின் வில், மகாவிஷ்ணுவின் சக்கரம் என்று வளர்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். கடவுள்கள் கொண்டிருந்த ஆயுதங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதே வழிபாட்டிற்கு அடித்தளம் அமைத்ததாக அறிஞர்கள் விவரிக்கின்றனர். இப்படி வழிபடப்படும் இறைவனின் ஆயுதங்களில் தனித்துவம் பெற்றது, மகாவிஷ்ணுவின் ஸ்ரீசக்கரம்.

    திருமாலின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்ரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி போன்ற அசுரர்களை தண்டிக்க கருட வாகனத்தில் இலங்கை சென்ற திருமால், சுதர்சன சக்கரத்தை ஏவியே அவர்களை அழித்தார்.

    காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, ‘நானே உண்மையான வாசுதேவன்' என்று பவுண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன் மேல் ஏறிச்சென்ற கண்ணன் சக்கரத்தால் அவனைக் கொன்றார்.

    சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை கண்ணன் நூறு முறை மன்னித்தார். தொடர்ந்து அவன் தவறு செய்ய அது கண்டு கொதித்த சுதர்சன சக்கரம், சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.

    மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது.

    இப்படி பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம், அது பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.

    பெருமாளின் பஞ்சாயுதங்களில் ஸ்ரீசக்கரம் எப்போதும், தீயவற்றை அழிக்க, பெருமாளோடு கூடவே தயாராக இருப்பதாக ஐதீகம். பகவான் நினைக்கும் பணியை உடனே முடிப்பவர் அவர். அதனால் சக்கரத்தாழ்வாரை விஷ்ணுவின் அம்சம் என விவரிக்கிறது சில்பசாஸ்திரம் என்னும் நூல். வேதாந்த தேசிகரும் ‘சக்கரத்தாழ்வாராக விளங்கும் ஸ்ரீசக்கரம் திருமாலுக்கு இணையானது’ என்கிறார்.

    பிரம்மதேவரின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தபாவத்தை நிவர்த்தி செய்ய திருமாலிடம் வழி கேட்டார். திருமாலோ, பத்திரிகாச்ரமத்தில் நடைபெறும் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார். அப்படியே, சிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட, பிரம்ம தேவரின் சிரசைக் கொய்த பாவம் நிவர்த்தியானது. அதன்பின்னர் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு அவரது திருவருளைப் பெற்றனர்.

    சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசிக்க ஏதுவாக, கருவறைச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதியில் கண்ணாடி பொருத்தப்பட்டிப்பதை காணலாம்.

    அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவை தான். அவற்றை அழித்து மனஅமைதியை தருபவர் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்தபிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது.

    பகவானுக்கு பஞ்சாயுதங்கள். ஆனால் சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். இதில் வலது கைகளில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவைகளையும், இடது கைகளில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவைகளையும் கொண்டுள்ளார்.

    எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை தரும் சக்கரத்தாழ்வாரை, அவரது ஜெயந்தி நாளில் வழிபட்டு பலமும் வளமும் பெறுவோமாக! 
    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு வழிபாடு செய்வது உகந்தது.
    சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.

    நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.

    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 
    108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக போற்றப்படும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர், சோழவந்தானில் சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக போற்றப்படும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவில். இந்த கோவிலில் மூலவர் காளமேகப் பெருமாளுக்கு அடுத்தபடியாக, சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுவது சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னிதி.

    நேற்று இங்கு சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தியையொட்டி, காலை முதல் மதியம் வரை சக்கரத்தாழ்வாருக்கும், நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக சுதர்சன யாகம் நடந்தது.விழா ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் ஜெயதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாதசாமி விசாக நட்சத்திர ஆலயத்தில் நேற்று சுதர்சன ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, கோவில் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் சன்னதி அருகே அமைந்துள்ள சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

    கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு விசாக நட்சத்திரத்தையொட்டி, இங்குள்ள சனீஸ்வரலிங்கம், பிரளயநாதசாமி (ராகு) ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளது. 
    ×