என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    விநாயகரிடம், திருணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
    மூலவரின் பெயர் ‘கற்பக விநாயகர்.’ இவர் இரண்டு கரங்களுடன், 6 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளார். இவரது தும்பிக்கை வலம்புரியாக இருக்கிறது.

    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தியது என்ற கருத்து நிலவினாலும், இங்குள்ள கல்வெட்டுக்கள், அந்த மன்னனின் காலத்துக்கும் முற்பட்டது என்பதை பறைசாற்றுகின்றன.

    இது ஒரு குடவரைக் கோவிலாகும். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

    பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படும் இந்த ஊர், முன்காலத்தில் எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராசநாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருப்பதாக கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன.

    இங்கு திருவீசர், மருதீசர், செஞ்சதீஸ்வரர் என்ற சிவ சன்னிதிகளும், சிவகாமி அம்மன், வடமலர் மங்கை, சவுந்திரநாயகி ஆகிய அம்மன் சன்னிதிகளும் காணப்படுவது சிறப்பு.

    இந்தக் கோவிலில் காணப்படும் விநாயகர் உருவம், 4-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விநாயகரைப் போல, 14 சிலைகள் குடவரை சிற்பங்களாக இங்கே செதுக்கப்பட்டுள்ளன.

    விநாயகரிடம், திருணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

    விநாயகருக்கு நடைபெறும் 10 நாள் உற்சவத்தின், 9-வது நாளில் 80 கிலோ சந்தனம் கொண்டு விநாயகருக்கு ‘சந்தன காப்பு’ செய்யப்படும். இது ஆண்டுக்கு ஒரு முறையே என்பதால், இந்தக் காட்சியைக் காண பக்தர்கள் குவிவார்கள்.

    விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில ஆலயங்களில் பிள்ளையார்பட்டி முக்கியமானது. விநாயகர் தேரின் ஒரு பக்கத்தை பெண்களும், மற்றொரு பக்கத்தை ஆண்களும் பிடித்து இழுப்பார்கள்.

    முருகப்பெருமானைப் போலவே, விநாயகருக்கும் ஆறுபடைவீடுகள் உண்டு. விநாயகருக்கான ஆறு படைவீடுகளில் பிள்ளையார்பட்டி, 5-ம் படைவீடாகும்.

    விநாயகர் சதுர்த்தியின்போது, உச்சிகால பூஜையில் முக்குறுணி அரிசியைக் கொண்டு பெரிய அளவிலான கொழுக்கட்டை தயாரித்து நைவேத்தியமாக படைப்பார்கள்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே உள்ளது பிள்ளையார்பட்டி. காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டரில் இந்த ஊரை அடையலாம்.
    ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்து திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது, துளசிச் செடியை வழிபட்டு விடைபெற வேண்டும்.
    ஒவ்வொருவர் வீட்டிலும் துளசிச் செடி இருப்பது அவசியம். பல மருத்துவ குணங்கள் நிரம்பிய துளசிச் செடி, மகாவிஷ்ணுவிற்கு பிடித்தமான ஒன்றாகும்.

    துளசியில் இரண்டு வகை உண்டு. அதில் கொஞ்சம் கருப்பாக இருக்கும் துளசியை ‘கிருஷ்ண துளசி’ என்பார்கள். இதனை வீட்டில் இரட்டைச் செடியாக வளர்ப்பதே நல்லது. துளசியை வீட்டின் முன்பாகவோ, முற்றத்திலோதான் வளர்க்க வேண்டும்.

    துளசிச் செடிக்கு தினமும், கடவுளின் பெயரைச் சொல்லி நீர் தெளித்து, வேரில் அளவோடு நீர் ஊற்ற வேண்டும்.

    வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால், எந்த சகுன பாதிப்பும் ஏற்படாது. வீட்டிற்கு திரும்பியபின், கை, கால் கழுவியபின், துளசியை வணங்கும்போது, தீய சக்திகள் எதுவும் நெருங்காது.

    ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்து திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது, துளசிச் செடியை வழிபட்டு விடைபெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம், துளசிக்கு நீர் ஊற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை அகலும், திருமண வாழ்வு சுபிட்சமாக அமையும். சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
    நாம் பற்பல விஷயங்களுக்கு, தேவையில்லாமல் கோபம் கொண்டு பிரச்சினையை பெரிதாக்கிவிடுகிறோம். எதையும் சாதாரணமாக கடந்து சென்றால், பிரச்சினைகள் புழுபோன்று சிறியதாகவே தென்படும்.
    ஒரு முறை கிருஷ்ணர், அவரது சகோரர் பலராமர் மற்றும் அர்ச்சுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். காட்டைக் கடக்க இன்னும் அதிக தூரம் இருந்த நிலையில், இருள் அதிகரித்து விட்டது. எனவே அங்கேயே ஒரு மரத்தின் அடியில் மூவரும் தங்கியிருந்து, அதிகாலையில் அங்கிருந்து புறப்பட முடிவு செய்தனர்.

    வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால், மூவரும் ஒரு சேரத் தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல, அர்ச்சுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென அந்தப் பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது. அதில்இருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக படு பயங்கரமாக இருந்தது அந்த உருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக் கண்ட அர்ச்சுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

    அப்போது அவ்வுருவம், உறங்கும் இருவரையும் தான் கொல்லப் போவதாகவும், அதற்கு அர்ச்சுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்டு கோபம் கொண்ட அர்ச்சுனன் அவ்வுருவத்தைத் தாக்கினான். அவனது கோபம் அதிகமாக அதிகமாக, அந்த உருவத்தின் பலமும், வடிவமும் பெருகிக்கொண்டே போனது. அந்த உருவத்துடன் அர்ச்சுனன் ஆக்ரோஷத்தோடு போரிட அது பூதாகாரமாகிக் கொண்டே சென்றது. அர்ச்சுனனை பலமாகத் தாக்கி விட்டு அந்த உருவம் மறைந்து போய்விட்டது.

    இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பி விட்டு அர்ச்சுனன் தூங்கச் சென்றான்.

    பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ச்சுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கி விட்டு, அவ்வுருவம் மறைந்து விட்டது.

    மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பி விட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அந்தபொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார்.

    “ஏன் சிரிக்கிறாய்?” என்றது அந்த உருவம்.

    “உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான்” என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்.

    அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

    ஆனால் கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர், சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

    பொழுது விடிந்தது. பலராமரும், அர்ச்சுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும், அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர்.

    அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, “நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால், இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு, புன்னகையோடு வெளியேறி விலகி இருந்து விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி” என்றார்.

    கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல சூழல்களிலும் பொருந்தும். இப்படித் தான் நாம் பற்பல விஷயங்களுக்கு, தேவையில்லாமல் கோபம் கொண்டு பிரச்சினையை பெரிதாக்கிவிடுகிறோம். எதையும் சாதாரணமாக கடந்து சென்றால், பிரச்சினைகள் புழுபோன்று சிறியதாகவே தென்படும்.
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நாளான இன்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது.

    இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று காலை பெருமாள் சே‌ஷ வாகனத்தில் எழுந்தருளி பரமபதநாதன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நாளான இன்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி கோபுர வாசலில் தரிசனம் தந்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் காலை 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது. இன்று இரவு ஹம்சவாகன புறப்பாடு நடைபெற உள்ளது.

    சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது.
    பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும்.

    சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும்.

    வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.

    விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.
    இன்று பிற்பகல் கள்ளழகர் திருமஞ்சனமான பின்பு அனந்தராயர் பல்லக்கில் மதுரை தல்லா குளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வருகிறார்.
    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா எளிமையாக கோவில் வளாகத்திலேயே நடந்தது. இதனால் மதுரை நகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் சித்திரை திருவிழாவை வழக்கம்போல் விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 5ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வீதி உலா, பட்டாபிஷேகம், திக் விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என அடுத்தடுத்து நடந்த விழாக்களால் மதுரை நகரமே குலுங்கியது.

    சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 16-ந்தேதி நடந்தது. அதிகாலை 6.12 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்த நிகழ்வுக்குப் பின் புராணங்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி நேற்று வண்டியூரில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் காட்சி தந்து சாபவிமோசனம் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    நேற்றிரவு அழகர் வண்டியூரில் இருந்து புறப்பட்டு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். வழி நெடுக பக்தர்கள் விளக்கேற்றி அவரை வழிபட்டனர். நள்ளிரவு ஒரு மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் தொடங்கின.

    கள்ளழகர் வேடத்திலிருந்த அழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். விடிய விடிய நடந்த தசாவதார நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

    இன்று பிற்பகல் கள்ளழகர் திருமஞ்சனமான பின்பு அனந்தராயர் பல்லக்கில் மதுரை தல்லா குளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வருகிறார். நாளை(19-ந் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி கருப்பணசுவாமி கோவில் சன்னதிக்கு வருகிறார். அங்கு வையாளியானவுடன் அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். வழியில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்று மாவடி மறவர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

    20-ந் தேதி அதிகாலை அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக பகல் 12 மணிக்கு அழகர் மலை சென்றடைகிறார். 21-ந்தேதி கள்ளழகர் கோவிலில் நடக்கும் உற்சவ சாந்தியுடன் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இன்று (திங்கட்கிழமை) அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

    முன்னதாக தேரில் போடப்பட்டிருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு தேர் சுத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டு, முகூர்த்தகால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
    தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ‘மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்’ என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார். ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு :

    இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.

    முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.

    அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார்.

    ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.

    அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.

    அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.

    சரயுபுஷ்கரணி :

    தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

    பிரபையில் காளிங்கநர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் விளங்குகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும் பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன. மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர். இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார்.

    அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அமைவிடம் :

    வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.
    பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார்.
    உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராஜர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப்பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார்.

    தினந்தோறும் பாய்மரப் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள், மரைக்காயர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது திடீரென கடலில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் அவருடைய பாய்மரப்படகு நிலைகுலைந்து எங்கேயோ அடித்து சென்றது.

    அப்படியே வெகு தூரம் சென்றபிறகு, படகு ஒரு பாசிபடர்ந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. அதில் அந்த பாசி படர்ந்த பாறை அப்படியே சரிந்து மூன்று துண்டுகளாக அந்த படகில் விழுந்துவிட்டது. பாறை சரிவதற்காகவே காத்திருந்தது போல், அது வரையிலும் அடித்து துவைத்து வந்த பேய் மழையும் சட்டென்று நின்றது.

    மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மண்டபம் நோக்கி திரும்பி வருவதற்கு பார்த்தால், அவருக்கு எந்த திசையில் இருக்கிறோம் என்பது தெரியவில்லை. உடனே அவர் தினமும் வணங்கிவரும் மங்களநாத சுவாமியை மனதில் நினைத்துக்கொண்டு, பல நாட்கள் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தார்.

    கடலுக்கு சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை என்று காத்திருந்த மரைக்காயரின் உறவினர்கள், அவரை உயிரோடு பார்த்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். மரைக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக்கற்களை என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டுக்கு படிக்கல்லாக போட்டு வைத்தார்.

    வீட்டுக்குள் சென்று வருபவர்கள் அந்த பாறைக்கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னத் தொடங்கியது. பாறை மின்னுவதை பார்த்த மரைக்காயர், அந்த மங்களநாதசுவாமி தான் தன்னுடைய வறுமையை போக்க அளித்த பரிசு என்று நினைத்தார்.

    அந்த மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தால் வறுமை நீங்கும் என்ற நல்லெண்ணத்துடன் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறி, தன்னிடம் ஒரு பச்சைப்பாறை உள்ளது என்று தெரிவித்தார்.பாண்டிய மன்னரும், மரைக்காயர் சொன்னதைக் கேட்டு உடனடியாக ஆட்களை அனுப்பி அந்த பச்சை பாறைக்கற்களை எடுத்துவரச் சொன்னார்.

    கொண்டு வந்த அந்த பாறைக்கற்களை, அது பற்றிய விவரம் தெரிந்த ஆட்களை வைத்து சோதித்து பார்த்தார். பாறையை சோதித்து பார்த்த அவர்கள் மன்னரிடம், நிச்சயம் இது விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல். உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார்கள். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழியனுப்பி வைத்தார்.

    மரைக்காயரை வழியனுப்பி விட்டு வந்த பாண்டிய மன்னர், இவ்வளவு விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல்லில் ஒரு நடராஜர் சிலை வடித்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, நடராஜர் சிலை வடிக்க பல இடங்களிலும் தேடி கடைசியில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தரான ரத்தின சபாபதியைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை நடராஜர் சிலை வடிக்க அனுப்பி வைக்குமாறு இலங்கை மன்னருக்கு ஓலை அனுப்பினார்.

    சிலை வடிக்க சிற்பியும் வந்து சேர்ந்தார். சிலையை வடிக்க அந்த பாறையை பார்த்த உடனேயே மயங்கி சரிந்தார். மன்னரிடத்தில் தன்னால் மரகத நடராஜர் சிலையை செய்ய முடியாது என்று பின்வாங்கி சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாண்டிய மன்னர், அந்த மங்களநாதசுவாமி சன்னதி முன் நின்று பிரார்த்தனை செய்தார்.

    அப்போது நான் மரகத நடராஜர் சிலையை வடித்து தருகிறேன், மன்னா கவலை வேண்டாம் என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மன்னர், அங்கே ஒரு மனதை மயக்கும் வகையில் ஒரு சித்தர் நிற்பதைக் கண்டார். அவர் தான் சித்தர் சண்முக வடிவேலர். உடனே மன்னரின் கவலை நீங்கியது.

    மரகத நடராஜர் சிலையை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அதோடு அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். சித்தரும் அந்த பெரிய பாறையில் ஐந்தரை அடி உயர மரகத நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், மிகவும் நுணுக்கமாக, நடராஜரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும் படி வடித்தார்.

    பின்பு பாண்டிய மன்னரை அழைத்து முதலில் நடராஜ மூர்த்தியை பிரதிஷ்டை செய்த, பின்பு கருவறை அமைக்கும்படி அறிவுறை கூறினார். மன்னரும் அப்படி செய்தார். இதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளையும் தாண்டி, இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார்.
    சுதர்சன பட்டாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க மங்கல வாத்தியம் இசைக்க சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் ராமா, ராமா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
    சேலம் கோட்டை அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் பெருமாள் கோவிலில் கடந்த 4-ந் தேதி ராமநவமி உற்சவம் தொடங்கியது. இதையொட்டி தினமும் ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வான சீதா திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. அதிகாலையில் வெங்கடேச பெருமாளுக்கும், லட்சுமி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    பின்னர் சீதா, ராமருக்கு கங்கண கயிறு கட்டப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பூர்ணாஹுதி முடிந்தவுடன் பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்ய தாரணம் வைபவம் நடைபெற்றது. சுதர்சன பட்டாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க மங்கல வாத்தியம் இசைக்க சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது, பக்தர்கள் ராமா, ராமா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ராமபிரானுக்கும், சீதாவுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    குழந்தைப்பேறில் தடை உள்ள பெண்கள், இந்த அம்மன் சன்னிதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை வாங்கி பருகினால், அம்மனின் அருளால், அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம்.
    * வேலூர் மாவட்டம் வன்னிவேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில், வீடு கட்டுவதில் ஏதாவது தடை இருந்தால், அங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு 17 பாகற்காய்களை மாலையாக கோர்த்து அணிவிக்கிறார்கள்.

    * தஞ்சாவூர் அருகே வல்லம் என்ற இடத்தில் ஏகவுரி அம்மன் கோவில் உள்ளது. இந்த அன்னை மாங்கல்யம் காப்பதில் சிறப்புமிக்கவள். தங்கள் கணவனுக்காக வேண்டிக்கொண்டு, அதில் பலன்பெற்ற பெண்கள், இந்த அம்மனுக்கு எருமை கன்றை தானமாக வழங்கும் வழக்கம் உள்ளதாம்.

    மேலும் குழந்தைப்பேறில் தடை உள்ள பெண்கள், இந்த அம்மன் சன்னிதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை வாங்கி பருகினால், அம்மனின் அருளால், அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம்.

    * காஞ்சிபுரம் அருகே கூரம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இது கூரத்தாழ்வார் என்னும் மகான் வாழ்ந்த புண்ணிய ஊர் ஆகும். இவர் தன்னுடைய குரு ராமானுஜரின் உயிரைக் காப்பதற்காக, தன்னுடைய கண்களை இழந்தவர்.

    * கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி. இங்குள்ள தலத்தில் தன்னுடைய கண்பார்வையை பெற்றார், சுக்ரன். அவருக்கு கண்ணொளி தந்த தீபம், இன்றளவும் ‘நேத்ர தீபம்’ என தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டிக்கொண்டால் கண் உபாதைகள் விலகுகின்றன.

    * சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருஞானசம்பந்தருக்கு இறைவனும், இறைவியும் காட்சியளித்த தலம். அம்பாள், சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து ஞானத்தை ஊட்டிய தலம். இந்த ஆலயத்தின் மூன்று மூலவர்கள் உள்ளனர். பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீஸ்வரர் -லிங்க வடிவம், ஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்த தோணியப்பர்- குரு வடிவம், சட்டநாதர்- சங்கம வடிவம்.
    மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக கடந்த 14-ந்தேதி மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.இதற்காக கடந்த 13-ந்தேதி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் தனது தாய் தந்தையான மீனாட்சி அம்மன்- சுந்தரரேசுவரர் திருமணத்தில் பங்கேற்பதற்காக முருகப்பெருமான் தெய்வானையுடன் புறப்பட்டு சென்றார்.இந்த நிலையில் 14, 15,16, ஆகிய 3 நாட்கள் மதுரையிலேயே தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முருகப்பெருமான் தெய்வானையுடனும், பவளக் கனிவாய்பெரும்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதற்கிடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடைபெற்றது.மேலும் மகா தீப தூப ஆராதனை நடந்தது.அவை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. இதனையடுத்து வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த பூப்பல்லக்கில் முருகப்பெருமான்தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதேபோல பல்லக்கில் பவளக்கனிவாய் அமர்ந்து அருள்பாலித்தார்.

    இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க திருப்பரங்குன்றம் நோக்கி சுவாமி புறப்பட்டன. வழி நெடுகிலுமாக திருக்கண்கள் அமைத்து சுவாமியை பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர். இரவில் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார்.
    ×