என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15-ந் தேதி நடந்தது. அன்று அதிகாலை முதலே பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, அக்னி காவடி, பறவைக் காவடி, வேல் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    விழாவில் நேற்று முன்தினம் காலையில் திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் அருகே உள்ள குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விடையாற்றி உற்சவமும், மண்டல அபிஷேகமும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிதம்பரம், கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், கோவில் அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    ராம நாமத்தை தினமும் அல்லது அபயம் ஏற்படும போது சொல்வதால் என்ன கிடைக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    மன்னன் ஒருவர் தன்னுடைய மந்திரியுடன், வேட்டையாடுவதற்காக அடர்த்தியான காட்டுப் பகுதிக்குச் சென்றார். அந்தக் காடு அவர்களுக்கு புதியது என்பதால் இருவரும் வழி தவறி விட்டார்கள். அடர்ந்த காடு என்பதால் எப்படி வெளியேறுவது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதையைத் தேடி அலைந்து அலைந்தே, இவருக்கும் பசி மயக்கம் ஏற்பட்டு விட்டது. வழியை அறிய முடியாத இயலாமையும், பசியால் ஏற்பட்ட மயக்கமும், மன்னனை கோபத்திற்கு உள்ளாக்கியது.

    ஆனால் மந்திரியோ அடர்ந்த வனத்தின் அழகில் தன்னுடைய மனதை பறிகொடுத்து, இயற்கையை ரசித்தபடியே மன்னனோடு நடைபோட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இறைவனை தியானிக்க வேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. அதன்படியே அங்கு தென்பட்ட ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். தியானத்தின் ஊடே, ‘ராம ராம’ என்று ராம நாமத்தையும் ஜெபிக்கத் தொடங்கிவிட்டார்.

    இதைக் கண்ட மன்னன், “மந்திரியாரே.. பசியால் உயிர்போகிறது. ஏதாவது உணவை சேகரித்து வரலாம்தானே. சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும். பசியாறவும் ஏதாவது கிடைக்கும்” என்று சொன்னார்.

    அதற்கு மந்திரியோ, “மன்னா.. நீங்கள் சொல்வது சரிதான். இன்னும் சிறிது தூரம் சென்றால், ஏதாவது கிடைக்கும்தான். என்னுடைய வயிறும் உணவைத்தான் நாடுகிறது. ஆனால் என்னுடைய மனமோ, அமைதியையும், ராம நாமத்தையும், இறைவனையும் நாடுகிறது. நான் என்ன செய்ய முடியும். ஆகையால் நான் இப்போது உணவைத் தேடிச் செல்லும் நிலையில் இல்லை” என்றார்.

    சினம் கொண்ட மன்னன், தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட, அங்கு விரைந்து சென்றார். அந்த வீட்டினரிடம் தான் யார் என்பதைச் சொல்லி, ‘பசியாற ஏதாவது கிடைக்குமா?’ என்று கேட்டார். அவர் மன்னன் என்பதை அறிந்ததும், அவரை வரவேற்று உபசரித்த அந்த வீட்டினர், அவருக்கு தங்கள் வீட்டில் இருக்கும் உணவை அளித்தனர். அங்கிருந்து புறப்படும் முன்பாக, மனம் கேளாமல் தன்னுடைய மந்திரிக்கும் சிறிது உணவைப் பெற்றுக்கொண்டு திரும்பினார், மன்னன்.

    மந்திரி இருக்கும் இடத்தை அடைந்த மன்னன், மரத்தடியில் அமர்ந்து ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டித்த மந்திரியை நெருங்கி, “மந்திரியாரே.. இந்தாருங்கள் உணவு. இப்போதாவது தெரிந்ததா.. நான் எடுத்த சரியான முடிவால்தான் இன்று நமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் ராம நாமத்தால் எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறியபடி, மந்திரியை ஏளனத்தோடு பார்த்தார்.

    உணவைப் பெற்றுக்கொண்ட மந்திரி, “மன்னா.. உணவிற்காக மாபெரும் சக்கரவர்த்தியான தாங்கள், இன்று ஒரு சாதாரண பிரஜையிடம் யாசகம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் என்னைப் பாருங்கள்... நான் உச்சரித்த ராம நாமத்தின் வலிமையால், ஒரு மாபெரும் சக்கரவர்த்தியான உங்களின் கையால் எனக்கு உணவு கிடைக்கும்படி இறைவன் செய்திருக்கிறான்” என்றார்.

    அதைக் கேட்டு வாயடைத்துப் போனார் மன்னன்.
    ஸ்ரீரங்கம் திருக்கோவில் உற்சவப் பெருமாள் பெயர் ‘அழகிய மணவாளன்.’ இவரை ‘நம்பெருமாள்’ என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன், ‘நம்பெருமாள்’ ஆனதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
    திருச்சி திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தல இறைவனின் மீது, 12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர, மற்ற 11 ஆழ்வார்களும் பாடல்களைப் பாடிஉள்ளனர். இத்தல மூலவர் சயன கோலத்தில் இருக்கும் திருவரங்கன் என்னும் ரங்கநாதர் ஆவார். உற்சவப் பெருமாள் பெயர் ‘அழகிய மணவாளன்.’ இவரை ‘நம்பெருமாள்’ என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன், ‘நம்பெருமாள்’ ஆனதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

    பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி சுல்தான் திருவரங்கம் ஆலயத்தை சூறையாடி, உற்சவர் பெருமாளை எடுத்துச் சென்றான். திருவரங்கத்தில் உள்ளவர்களின் கடுமையான முயற்சியால், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உற்சவர் சிலை மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

    உற்சவரை திருவரங்கத்திற்கு கொண்டுவந்த பிறகு, பலருக்கும் அந்த சந்தேகம் எழுந்தது. ‘நாம் மீட்டுக் கொண்டு வந்தது, திருவரங்கத்தில் இருந்த உற்சவர் பெருமாள் தானா? அல்லது அதே போன்றதொரு சிலையை கொடுத்தனுப்பி விட்டார்களா?’ என்பதே அந்த சந்தேகம்.

    சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அழகிய மணவாளனின் ஆடைகளை சுத்தம் செய்து தரும், சலவைத் தொழிலாளியை மிகவும் சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்தனர். பல ஆண்டுகள் கழிந்து விட்டநிலையில், அவர் கண் பார்வை குறைந்து, உடல் தளர்ந்து, தள்ளாடும் முதியவராக மாறியிருந்தார்.

    அவரை அழைத்து வந்த பின்னர், மீட்டுக் கொண்டுவந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் (நீராட்டு) செய்தனர். திருமஞ்சன ஆடையை சலவை செய்யும் முதியவரிடம் கொடுத்தனர். சிறிது திருமஞ்சன நீரை பருகியும், திருமஞ்சன ஆடையை முகந்து அதன் தெய்வீக மணத்தையும் கண்டறிந்த, அந்த முதியவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

    அவர் அந்த தள்ளாத நிலையிலும், “இது நம் பெருமாள்தான்” என்று உரத்தக் குரலில் கூவியபடி துள்ளிக்குதித்தார். அதுமுதல் தான், அழகிய மணவாளன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உற்சவர் பெருமாள், ‘நம்பெருமாள்’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படலானார்.
    நடவாவி கிணற்றில் உள்ள 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மேலேறி வந்த வரதராஜ பெருமாளை காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    108 வைணவ தலங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சித்ராபவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள அய்யங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருளி பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடவாவி கிணறு திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி கட்டுப்பாடுகள் தளர்வடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நடவாவி திருவிழா நடைபெற்றது. சித்ரா பவுர்ணமி நடவாவி கிணறு திருவிழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து வரதராஜபெருமாள் புறப்பட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி, கிராமங்கள் வழியாக அய்யங்கார் குளம் சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளினார்.

    சஞ்சீவிராயர் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, பச்சை, அரக்குகரை, வெண்பட்டு உடுத்தி திருவாபரணங்கள், பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிவித்து ஊர்வலமாக கொண்டு வந்து பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி மண்டபத்தில் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் நடவாவி கிணற்றில் உள்ள 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மேலேறி வந்த வரதராஜ பெருமாளை காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
    தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். இதனால் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்தில் தற்போது தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசன் ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் அமைத்து தினமும் 40 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த வாரம் திரளான பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்ததால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு சில பக்தர்கள் காயம் அடைந்தனர்.

    இதனால் தேவஸ்தான அதிகாரிகள் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுவதை நிறுத்திவிட்டு நேரடியாக இலவச தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்தனர்.

    பக்தர்கள் வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ்சில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.

    தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். இதனால் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் குமார் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்:-

    நேரம் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்க தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருகிறது. டோக்கன் வழங்கப்படுவதால் நீண்டநேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வர ஏதுவாக இருக்கும் என தர்மா ரெட்டி தெரிவித்தார்.

    இதையும் படிக்கலாம்....இன்று சித்திரை மாத சதுர்த்தி... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்
    சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியான இன்று விரதம் இருந்து எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    சித்திரை தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    சித்திரை மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. 20-ந் தேதி திருவிழா முடிவடைந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. 10-ந் தேதி கொடியேற்றம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு, படி சட்டத்தில் சாமி வீதி உலா காட்சியும் நடந்தது.

    அதேபோல் இடும்பன் வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் வீதி உலா வந்து நிலையை அடைந்தது. தேரில் வள்ளி-தேவசேனாவுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. 20-ந் தேதி திருவிழா முடிவடைந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    நாளை (20-ந்தேதி) அதி காலை அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக பிற்பகல் அழகர்மலை சென்றடைகிறார். மறுநாள் (21-ந் தேதி) கள்ளழகருக்கு உற்சவ சாந்தி நடக்கிறது.
    மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கும் வைபவத்துக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளர் திருக்கோலத்தில் மதுரைக்கு எழுந்தருளினார். தங்கப் பல்லக்கில் பவனி வந்த அவரை பக்தர்கள் எதிர் சேவை கொடுத்து வரவேற்றனர்.

    பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் 16-ந்தேதி அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து கொண்டு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

    தங்க குதிரையில் பவனி வந்த கள்ளழகரை சீர்பாத தூக்கிகள் உள்ளங்கை பாரமாக தூக்கி வைத்து ஆடியது குதிரையில் அழகர் துள்ளிக் குதித்து வருவதுபோல் இருந்தது.

    வைகையில் இறங்கிய அழகரை வண்டியூர் வீரராகவப்பெருமாள் எதிர் கொண்டு அழைத்து சென்றார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி, தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குதல் மற்றும் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறாத இந்த நிகழ்ச்சியை காண இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் தசாவதார கோலங்களில் எழுந்தருளிய கள்ளழகரை விளக்கேற்றி மனமுருக தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு திருமஞ்சனமான கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

    இன்று அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் கருப்பண்ணசாமி கோவிலுக்கு வந்ததும் அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பிறகு அவர் அழகர்மலை நோக்கி புறப்பட்டார்.

    வழியில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மண்டகப்படிகளிலும் கள்ளழகர் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். இரவில் மூன்றுமாவடி, மறவர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

    நாளை (20-ந்தேதி) அதி காலை அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக பிற்பகல் அழகர்மலை சென்றடைகிறார். மறுநாள் (21-ந் தேதி) கள்ளழகருக்கு உற்சவ சாந்தி நடக்கிறது.

    இதையும் படிக்கலாம்...இந்த வார விசேஷங்கள்: 19.04.22 முதல் 25.04.22 வரை
    குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது.
    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி குருபகவான் கடந்த 14-ந்தேதி கும்பராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருப்பெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது.

    குருப்பெயர்ச்சிக்கு பின்னர் நேற்று 2-வது கட்டமாக லட்சார்ச்சனை விழா தொடங்கியது. தொடர்ந்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர், கஜலட்சுமி, உற்சவர் குருதெட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 22-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. லட்சார்ச்சனையில்  மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்துகொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார்- அறநிலைய உதவி ஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர்-செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 25-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    19-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சங்கடஹர சதுர்த்தி
    * கரிநாள்
    * திருமாலிருஞ்கோலை கள்ளழகர் மலைக்கு புறப்பாடு
    * சமயபுரம் மாரியம்மன் ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம்: அசுபதி

    20-ம் தேதி புதன் கிழமை :

    * வராஹ ஜெயந்தி
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோலம்
    * சந்திராஷ்டமம்: பரணி

    21-ம் தேதி வியாழக்கிழமை:

    * சுபமுகூர்த்தநாள்
    * தேய்பிறை பஞ்சமி
    * சுவாமிமலை முருகன் தங்க கவசம் வைரவேல் தரிசனம்
    * சந்திராஷ்டமம்: கார்த்திகை

    22-ம் தேதி வெள்ளிக்கிழமை:

    * தேய்பிறை சஷ்டி
    * திருத்தணி முருக பெருமான் கிளி வாகன சேவை
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு
    * சந்திராஷ்டமம்:  கார்த்திகை, ரோகிணி

    23-ம் தேதி சனிக்கிழமை:

    * வாஸ்து நாள் (காலை 8.54 மணியில் இருந்து 9.30 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று)
    * திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை
    * இன்று கருட தரிசனம் நன்று
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

    24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:

    * தேய்பிறை அஷ்டமி
    * நடராஜர் அபிஷேகம்
    * திருவோண விரதம்
    * ஒப்பிலியப்பன் கோவில் பெருமாள் புறப்பாடு
    * ஸ்ரீரங்கம் பெருமாள் கருட வாகன உலா
    * சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை

    25-ம் தேதி திங்கட்கிழமை:

    * சித்தயோகம்
    * சுபமுகூர்த்தநாள்
    * சென்னகேசவ பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி நான்கு கருட சேவை
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
    * சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
    தண்டுமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடக்கிறது.
    கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான  திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக இன்று காலை மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு கிராமசாந்தி நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு மேல் 7.40 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு பூச்சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 22-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
     
    23-ந் தேதி இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 24-ந் தேதி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 25-ந் தேதி மாலை 6 மணிக்கு  திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    26&ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8.30 மணிக்கு   மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 27-ந் தேதி காலை 7 மணிக்கு கோனியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம், அக்னிச்சட்டி புறப்பாடு நடக்கிறது.

    28-ந் தேதி காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு மஞ்சள் நீர், மாலை 6 மணிக்கு மேல் 7.33 மணிக்குள் துலா லக்னத்தில் கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு  கம்பம் கலைத்தல் நிகழ்ச்சி நடக்கின்றன.
     
    29-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை  தமிழில் லட்சார்ச்சனை நடக்கிறது. 1-ந் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், மாலை 7 மணிக்கு வசந்த உற்சவம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருவிழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடக்கிறது.

    மேலும் காலை, மாலை இருவேளைகளிலும் யாக சாலை பூஜைகள் நடக்கின்றன.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழாகடந்த10-ந்தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    நேற்று அம்மன் வெள்ளிகுதிரைவாகனத்தில்எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில்எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல்நிகழ்ச்சிநடைபெறுகிறது.தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலங்கார விளக்குகளும்,மின்விளக்குகளும்பொருத்தப்பட்டுள்ளதால்சமயபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றுஇரவுமுதலேசமயபுரம்வந்துகுவியதொடங்கினர்.ஏராளமான பக்தர்கள்  தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்  பாதுகாப்புபலப்படுத்தப்பட்டு உள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டுசெல்லும்வகையில்அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறுஅமைப்புகளின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    ×