search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆலங்குடி குரு பகவான்
    X
    ஆலங்குடி குரு பகவான்

    ஆலங்குடி குருபகவானுக்கு 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா

    குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது.
    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி குருபகவான் கடந்த 14-ந்தேதி கும்பராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருப்பெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது.

    குருப்பெயர்ச்சிக்கு பின்னர் நேற்று 2-வது கட்டமாக லட்சார்ச்சனை விழா தொடங்கியது. தொடர்ந்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர், கஜலட்சுமி, உற்சவர் குருதெட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 22-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. லட்சார்ச்சனையில்  மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்துகொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார்- அறநிலைய உதவி ஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர்-செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×