என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
    தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானப்புகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மார்க்க பேரூரை நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீர்முகமது ஒலியுல்லா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கி, விடிய, விடிய நடந்தது. ஜமாத் மக்கள் ஒன்றிணைந்து ஞானப்புகழ்ச்சியில் உள்ள பாடல்களை இசை வடிவில் கூட்டாக பாடினர். இதில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரளாவில் இருந்து திரளானவர்கள் வந்து கலந்து கொண்டனர். நேற்று மாலை நேர்ச்சை வழங்கப்பட்டது. மார்ச் 3-ந்தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழாவின் இறுதி நாளன்று இந்திரன் தேர் ஆகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா நடந்தது. தாணுமாலய சாமிக்கும், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும் திருமண வைபவம் நடந்தது.

    திருக்கல்யாண விழாவின் இறுதி நாளன்று இந்திரன் தேர் ஆகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம் முழங்க நான்கு ரத வீதிகள் வழியே தேர் வலம் வந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கள்ளழகர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி, குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை வலம் வந்து பெருமாள் காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலானது, திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் பவுர்ணமி நாளன்று நடைபெறும் தெப்ப திருவிழா முக்கியமானது. இந்த ஆண்டுக்கான விழாவானது கடந்த 26-ந் தேதி கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா நடந்தது.

    இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி. வர்ணக்குடைகள் பரிவாரங்களுடன் கோவிலில் இருந்து புறப்பட்டார். வழிநெடுக பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைபட்டிக்கு வந்து சேர்ந்து, அங்குள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். இந்த ஆண்டு குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை பெருமாள் வலம் வந்து காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு தெப்பக்குளத்தின் கிழக்கில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள்-தேவியர்களுடன் எழுந்தருளினார். அப்போது, வேத மந்திரங்கள் முழங்க விஷேச பூஜைகளும், தீபாரதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மாலையில் கள்ளழகர் கோவிலுக்கு திரும்பி இருப்பிடம் சேர்ந்தார்.
    மதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெற்றது.
    முற்பிறப்பில் சிறந்த விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன் யானையாக பிறந்தார். அதே போன்று முனிவர் தேவலாவின் சாபத்தால் கந்தர்வன் ஒருவன் முதலையாக பிறந்தார். இருவருக்கும் சாப விமோசனம் அளிக்க பெருமாள் வந்தருளுவார் என்று முனிவர்கள் வரமளித்தனர்.அதன்படி இருவரும் திரிகூடமலையில் வசித்தனர். அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தாகம் தணிக்க யானை தனது கூட்டத்துடன் வந்தது. அப்போது அங்கிருந்த கந்தர்வனான முதலை மன்னன் கஜேந்திரனான யானையின் காலை கவ்விப் பிடித்தது. மற்ற யானைகள் எவ்வளவு முயன்றும் முதலையிடம் இருந்து யானையை காப்பற்ற முடியவில்லை. முதலையும், யானையின் காலை விடுவதாக தெரியவில்லை.

    எனவே தனது இறுதிகாலம் நெருங்குவதாக உணர்ந்த மன்னன் கஜேந்திரனான யானை துதிக்கையால் குளத்திலுள்ள தாமரையை பறித்து வானை நோக்கி ஆதிமூலமே என பெருமாளை வேண்டி பிளிரி சரணாகதி அடைந்தது. தனது பக்தனின்(யானை) துயர் துடைக்க வானில் கருட வாகனத்தில் தோன்றிய பெருமாள் தனது சக்கர ஆயுதத்தை ஏவி முதலையின் தலையை துண்டித்து யானையை காப்பாற்றி மோட்சம் அளித்தார். இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன.

    இந்த புராணத்தை நினைவுக்கூரும் விதமாக ஆண்டுதோறும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெறும். இதற்காக நரசிங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள குளக்கரையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய வழித்துணை பெருமாள் முன்பு யானையின் காலை கவ்வும் முதலை பொம்மைகளை வைத்து கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியை கோவில் பட்டர்கள் செய்து காட்டினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசி திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழா, பூக்குழி இறங்குதல், தேரோட்டம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன.

    ஒவ்வொரு ஆண்டும் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்து மாசித் திருவிழாவை தொடங்கி வைப்பதும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராடி திருவிழாவை நிறைவு செய்வதும் வழக்கம். அதன்படி மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனை சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

    அங்கு, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டது. இதையொட்டி அனைவரின் மீதும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு அம்மன் வீதிஉலா தொடங்கியது.

    இதில் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் நீராடி ரதவீதிகள் வழியே வலம் வந்து அம்மனை சபா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு மஞ்சள் நீராடி அழைத்து வந்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

    அதனைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அம்மனின் மின்னொளி தேர் வீதி உலா தொடங்கியது. இதில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் தாரை, தப்பட்டை, கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர் மின்னொளி தேர் முன்செல்ல அடுத்ததாக விஸ்வ பிரம்ம மின்னொளி தேரும், அதற்கு அடுத்ததாக கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மின்னொளி தேரும் ரத வீதிகள் வழியே பவனி வந்து கோவிலை அடைந்தது.

    இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கொடியிறக்கம் செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஆரல்வாய்மொழியில் அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்ளது.
    கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.

    தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘ என்ற பெயர் வந்ததாம்.

    முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித்தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.

    எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர்களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது. மனைவியின் மேல் பிரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்ட செட்டியாரின் மகன், அவளது சொத்தை அபகரிக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான்.

    அன்றைய தினம்… முப்பந்தலில் மூவேந்தர்களுக்கும் மத்தியஸ்தம் நடந்தது. இதைக் காண்பதற்காக இசக்கியை அழைத்துச் சென்றான் செட்டியார் மகன். வழியில், பயணக் களைப்பும் தாகமும் சேர்ந்து அவளை வாட்டின. உடனே அந்த இடத்தில் மணலை குவித்து, இசக்கியை அதில் படுக்கச் சொன்ன செட்டியார் மகன், தண்ணீர் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றான். அப்படியே உறங்கிப் போனாள் இசக்கி. திரும்பி வந்த செட்டியார் மகன், இதுதான் தக்க தருணம் என்று கருதி பாறாங்கல்லைத் தூக்கி இசக்கியின் தலையில்போட்டான். துடிதுடித்து இறந்தாள் இசக்கி.

    பிறகு, தனக்கும் தாகம் எடுக்கவே தண்ணீரைத் தேடி ஓடினான். சிறிது தூரத்தில் பாழடைந்த கிணறு ஒன்றைக் கண்டவன், அதிலிருந்து தண்ணீர் சேகரிக்க முயன்றான். அப்போது, கருநாகம் தீண்டி அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான்.

    இந்த நிலையில், தெய்வப் பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் சென்று தன் கணவனே தன்னைக் கொன்ற விவரத்தைக் கூறி நியாயம் கேட்டாள். அவளிடம், “அவன் செய்த பாவத்துக்கு அவனும் பலியாகி விட்டான்” என்றார் சிவன். ஆனாலும் இசக்கி சமாதானம் அடையவில்லை.

    “என்னை நம்ப வைத்து சாகடித்தவனை, நானே பழி தீர்க்க வேண்டும். எனவே, என்னையும் அவனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று வேண்டினாள். ‘அப்படியே ஆகட்டும்‘ என அருளினார் சிவன். அதன்படி, கிணற்றடியில் இறந்து கிடந்த செட்டியார் மகன் தடாலென எழுந்து வீட்டுக்குச் சென்றான். இசக்கியோ, பிறந்த வீட்டுக்கும் செல்லாமல், புகுந்த வீட்டுக்கும் போகாமல் கணவனை அழிப்பதற்காக சுற்றித் திரிந்தாள்.

    மாதங்கள் கடந்தன. ஒரு நாள், பழவூர் நோக்கி ஆவேசத்துடன் கிளம்பினாள் இசக்கி. வழியில், கள்ளிச்செடியை ஒடித்துத் தனது கக்கத்தில் வைத்துக் கொண்டாள். அந்தச் செடி, குழந்தையாக மாறியது.

    குழந்தையுடன் பழவூர் மந்தைக்கு வந்தவள், ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினாள். “உங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவன், என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, இங்கு வந்து விட்டான். என்னையும் அவனையும் சேர்த்து வையுங்கள்” என்று முறையிட்டாள்.

    பஞ்சாயத்தார், “உன் கணவன் யாரென்று சொல்” என்றனர். உடனே குழந்தையைத் தரையில் இறக்கி விட்டவள், “இந்தக் குழந்தை தன் தகப்பனை அடையாளம் காட்டும்” என்றாள். அதன்படி, கூட்டத்தில் இருந்த செட்டியார் மகனை, ‘அப்பா‘ என்று அழைத்தபடி அவனிடம் சென்றது குழந்தை. உடனே, இருவரையும் சேர்த்து வைப்பது எனப் பஞ்சாயத்தார் முடிவு செய்தனர். “கொலை செய்யப்பட்டவள் உயிருடன் எப்படி வந்தாள்?” என்று குழம்பித் தவித்தான் செட்டியார் மகன். பஞ்சாயத்தாரும் ஊர்மக்களும் சேர்ந்து, இருவரையும் ஒரு வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டினர். தவிர, வீட்டுக்கு வெளியே காவலுக்கும் நின்றனர்.

    வீட்டுக்குள் விசுவ ரூபமெடுத்து தன்னை வெளிக் காட்டினாள் இசக்கி. அரண்டு போன செட்டியார் மகன் அவளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆனால் மனம் இரங்காத இசக்கி, விடிவதற்குள் அவன் கதையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். ஆனாலும் அவளது கோபம் தணியவில்லை. பழவூர் கிராமத்தையே தீக்கிரையாக்கினாள். எரிந்து சாம்பலாகும் ஊரைப் பரவசத்துடன் பார்த்தவள், நீலி கோலத்துடன் மேற்கு நோக்கி நடந்தாள்.

    அன்று முப்பந்தல் கிராமத்தில் மூவேந்தர்களும் ஒளவையும் கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே நீலிக் கோலத்தில் செல்லும் இசக்கியைப் பார்த்த ஒளவை பிராட்டியார், அவளை அழைத்து சாந்தப்படுத்தி, “இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்” என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். ஊரைக் காக்கும்தெய்வமானாள். முப்பந்தலில் குடியேறியதால், “முப்பந்தல் இசக்கியம்மன்” என்று பெயர் கொண்டாள்.

    இதன் பிறகு இசக்கியின் அண்ணன்களான சுடலைமாடன், பட்டவராயன் இருவரும் அவளுக்குத் துணையாக அவளது வாசலிலேயே குடியேறினர். துவக்கத்தில் இசக்கியம்மனுக்கு ஒரேயொரு கோயில் மட்டுமே இருந்தது. பின்னர், பூர்வீக கோயிலுக்கு அருகிலேயே புதிய கோயில் ஒன்றையும் எழுப்பினர்.

    பொதுவாக இசக்கி அம்மனின் வடிவம் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும், மறுகை ஒரு குழந்தையை இடுப்பில் இடுக்கியபடியும் இருக்கும். வாய் அகலத் திறந்திருக்கும், கழுத்தில் அழகிய ஆபரணங்கள் வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு இந்த உருவம் கொடூரமாகக் காணப்படும். இதற்கு நேர்மாறான சாந்த வடிவமும் சில இடங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான இசக்கி வடிவங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவையே. கல்வடிவ இசக்கியம்மன் கோயில்கள் காலத்தால் பிற்பட்டவையாகும்.

    பூர்வீக கோயிலின் முக்கிய கருவறையில் இசக்கியம்மன் இருக்கிறாள். இந்த சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில், குழந்தை வரம் வேண்டி பக்தர்களால் கட்டப்பட்ட பிரார்த்தனைத் தொட்டில்கள் உள்ளன. இந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தால், முகப்பு மண்டபம். இங்கு கிழக்கு நோக்கி நிற்கிறார் சுடலைமாடன். பூர்வீகக் கோயில், வீடு போன்ற அமைப்பில் உள்ளது.

    புதிய கோயில் கோபுரத்துடன் காட்சி தருகிறது. கருவறையில் மூலவ மூர்த்தமாக காட்சி தருகிறாள் இசக்கி அம்மன். இவளுக்கு வலப் புறம் பிராமணத்தி அம்மன். கருவறையின் வெளிச் சுற்றில் விஷ்ணு துர்கை மற்றும் வைணவிதேவியை காணலாம். மேற்கு பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், ஒளவையாரம்மன், பாலமுருகன் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். கோயில் முகப்பில் கிழக்கு நோக்கி சுடலைமாடன்; எதிரே பட்டவராயர்.

    இங்கு எழுந்தருளிக்கும் இசக்கியம்மனைப் பங்காளிகள் சொத்தினைப் போல் பங்கிட்டு இரு கோயில்களாக்கி வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு சற்று தள்ளித் திறந்தவெளியில் சுமார் 133 அடி உயர இசக்கி யம்மனின் பிரமாண்ட சிலையை தரிசிக்கலாம். இங்கு, திருவிழா, கொண்டாட்டம் ஆகியவை இசக்கிக்கு இல்லையெனினும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையில் ‘ஊட்டு படைப்பு‘ வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில், பகல் முழுவதும் இசக்கியம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும் விசேட பூசைகள் நடை பெறும். அப்போது ஒளவையாரம்மனுக்கு கொழுக் கட்டைப் படையல் வைத்து, பூசைகள் செய்வர். அன்று இரவு 12:00 மணிக்குப் பச்சரிசி சாதம் வடித்து பல வகை காய்கறிகளுடன் கூட்டு சமைத்து படையலிடுகின்றனர். அப்போது இசக்கியம்மனுக்கு அருகில் உள்ள பிராமணத்தி அம்மனை பிராமணர்கள் வழிபடுவர். இந்த வைபவத்தின்போது, இசக்கியம்மனின் அருளால் வேண்டுதல் பலித்த பக்தர்கள், மனித உருவ பொம்மைகளைச் செய்து எடுத்து வந்து அம்மன் வாசலில் வைக்கின்றனர்.

    பிளவுக்கல் என்ற இடத்தில் இருக்கும் இசக்கி அம்மன் இருதாரத்து மக்களின் சொத்து பாகப்பிரிவினைக்காக உயரமான பாறையைச் சமமாக பிளந்து வெளிப்பட்டாள் என்ற கதையும் காணப்படுகிறது. குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அருளும் இசக்கியம்மனின் மகிமையை அறிந்த கேரள மக்களும் இங்கு வந்து குழுமுகிறார்கள்.

    மகிமை நிறைந்த திருஷ்டிக் கயிறு!

    இசக்கியம்மன் கோயிலில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களில் திருஷ்டிக் கயிறு வழங்குகின்றனர். 41 நாட்கள், அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூசித்துத் தரப்படும் இந்தக் கயிறைக் கட்டிக் கொண்டால், திருஷ்டி கழியும்; காத்து, கருப்பு அண்டாது என்பது நம்பிக்கை. இங்கு, திருநீறுக்கு பதிலாக மஞ்சனையை (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) வாழை இலையில் மடித்துக் கொடுக்கின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் இசக்கியம்மன் கோயில் கொண்டிருப்பதால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மறக்காமல் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், தங்களுடன் வழித்துணையாக வருவாள் இசக்கியம்மன் என்பது அவர்களது நம்பிக்கை.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவில் மாசிக் கொடைவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்தமாதம் (மார்ச்) 9-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை கணபதி ஹோமம், அபிஷேகம், பஜனை, உஷ பூஜை, திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

    பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 6.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை, 8-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைக்கப்படுகிறது.

    5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், 12.30 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 5 மணிக்கு நடை திறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
    மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லாததால் கைகளால் பூக்களை 3 முறை எடுத்து குண்டத்தில் மீண்டும் போட்டனர்.
    கோவை மாவட்டம், ஆனை மலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக அளவில் வந்து செல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அமாவாசை உள்ளிட்ட விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் விழா தொடங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு கடந்த 11-ந் தேதி தை அமாவாசையில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ந் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. 25-ந் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெற்றது.

    26-ந் தேதி காலை குண்டம் கட்டுதல் நடைபெற்றது. முறைதாரர்கள் குண்டம் கட்டும் பணியில் ஈடுபட்டு குண்டத்தை தயார் செய்து அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து மலர்தூவி மாலை அணிவித்தனர். மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தலும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) காலை அம்மன் அருளாளிகள் ஆழியாற்றில் நீராடிவிட்டு ஆழியாற்றங்கரையில் அருள் வந்து ஆடினர். அங்கு சென்ற பக்தர்கள் ஆற்றில் நீராடிவிட்டு அம்மன் அருளாளிகளிடம் குண்டம் இறங்குவதற்காக உத்தரவை பெற்றனர். சிலருக்கு அருளாளிகள் உத்தரவு தரவில்லை. அம்மன் அருளாளிகள் உத்தரவு கிடைக்காதவர்கள் குண்டம் இறங்க மாட்டார்கள்.

    அருளாளிகளிடம் உத்தரவு பெற்ற பக்தர்கள் அங்கிருந்து குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்து வரிசையில் காத்துநின்றனர். ஆற்றங்கரையில் இருந்து அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்து குண்டம் முன்பு தேரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மனை வழிபாடுசெய்தனர்.

    அதற்கு பிறகு குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது வானில் கருடன் 3 முறை வட்டமிட்டது. அதற்கு பிறகு முறைதாரர்கள் எலுமிச்சை கனி, பூ மாலையால் செய்யப்பட்ட பந்து ஆகியவற்றை குண்டத்தில் உருட்டிவிட்டனர்.

    அவைகள் வாடாமல் அப்படியே இருந்தது. தொடர்ந்து முறைதாரர்கள், அருளாளிகள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லாததால் கைகளால் பூக்களை 3 முறை எடுத்து குண்டத்தில் மீண்டும் போட்டனர்.

    குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை பார்க்க பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் 250-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவர் குழு, தீயணைப்பு துறையினர் போன்றவர்கள் தயார் நிலையில் இருந்தனர். குடிநீர், கழிப்பிட வசதி போன்றவையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. குண்டம் திருவிழாவையொட்டி ஆனைமலை களைகட்டியிருந்தது.
    திருவனந்தபுரத்தில் இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கலிடும் விழா இன்று தொடங்கியது. கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர்.
    திருவனந்தபுரம்

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கலிடும் விழா இன்று காலை தொடங்கியது.

    இதற்காக கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் கோவில் தந்திரி காலை 10.50 மணிக்கு தீ மூட்டினார். தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் இம்முறை கோவிலில் பக்தர்கள் பொங்கலிட அனுமதி வழங்கப்படவில்லை. பொங்கல் நாளான இன்று அவர்கள் வீடுகளிலேயே பொங்கலிட்டு அம்மனை வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    அதன்படி இன்று காலை கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர். பொங்கல் நைவேத்திய நிகழ்ச்சி இன்று மாலை 3.40 மணிக்கு நடக்கிறது.

    பொங்கல் நைவேத்திய சடங்குகளில் கோவில் பூஜாரி கள் பங்கேற்க மாட்டார்கள். திருவிழாவின் 10-ம் நாளான நாளை(28-ந்தேதி) இரவு குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவடை கிறது.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசிமக திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து தினந்தோறும் இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு கருட வாகன சேவை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று திருக்கல்யாண உற்சவம் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி பெட்டதம்மன் மலை குகையில் இருந்து அம்மன் அரங்கநாயகி தாயார் அழைத்துவரப்பட்டார். கோவிலில் அரங்கநாயகி தாயார் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்க பெருமாள் வீற்றிருந்தார். தொடர்ந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.முன்னதாக மஞ்சள் இடித்தல், கங்கணம் கட்டுதல், பூணூல் அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவம் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு அரங்கநாதபெருமாள் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், வருகிற 1-ந் தேதி தெப்ப உற்சவமும், 2-ந் தேதி சாற்றுமுறை உற்சவ மூர்த்தியும், 3-ந் தேதி வசந்த விழாவும் நடைபெறுகின்றன.
    திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சமுதாய மக்கள் சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்து திருவிழாவை தொடங்கி வைப்பதும், மஞ்சள் நீராட்டு செய்து திருவிழாவை நிறைவு செய்வதும் வழக்கம். இப்பணியை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விஸ்வகர்ம சமுதாயத்தினர் செய்து வருகின்றனர். அதன்படி 110-வது ஆண்டாக இந்த மாதம் 12-ந்தேதி பொட்டு கட்டுதல் செய்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

    இதுகுறித்து திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் கந்தசாமி ஆச்சாரி கூறியதாவது:-

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை தொடங்கி வைப்பதும், நிறைவு செய்து வைப்பதும் எங்களது சமுதாயத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறோம். அதனை இன்று வரை சிறப்புடன் செய்து வருகிறோம். இந்த ஆண்டு திருவிழாவில் நாளை காலை 9 மணியளவில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் ரதவீதிகள் வழியே வலம் வந்து, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மஞ்சள் நீராட்டு, அம்மன் அழைப்பு ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து விஸ்வகர்ம மகாஜன சபா மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர், மகாஜன சபா சார்பில் மாலை விஸ்வ பிரம்ம மற்றும் கோட்டை மாரியம்மன் மின்னொளி தேர்கள் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலையில் கொடியிறக்கம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவில் நேற்று பூக்குழி இறங்குதல் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. அதன்படி நேற்று காலை 6 மணி அளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூக்குழி இறங்குதல் தொடங்கியது. இதனை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் தொடங்கி வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்திய படியும், ஆண் பக்தர்கள் கைகளில், தோள்களில் குழந்தைகளை சுமந்தபடியும் பூக்குழி இறங்கினர். சுமார் 3 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கியதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தகர்கள் மண்டகப்படி சார்பில் மாலை 6 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. தேர் ரதவீதிகள் வழியே வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    ×