search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன்
    X
    கோட்டை மாரியம்மன்

    கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை நடக்கிறது

    திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சமுதாய மக்கள் சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்து திருவிழாவை தொடங்கி வைப்பதும், மஞ்சள் நீராட்டு செய்து திருவிழாவை நிறைவு செய்வதும் வழக்கம். இப்பணியை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விஸ்வகர்ம சமுதாயத்தினர் செய்து வருகின்றனர். அதன்படி 110-வது ஆண்டாக இந்த மாதம் 12-ந்தேதி பொட்டு கட்டுதல் செய்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

    இதுகுறித்து திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் கந்தசாமி ஆச்சாரி கூறியதாவது:-

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை தொடங்கி வைப்பதும், நிறைவு செய்து வைப்பதும் எங்களது சமுதாயத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறோம். அதனை இன்று வரை சிறப்புடன் செய்து வருகிறோம். இந்த ஆண்டு திருவிழாவில் நாளை காலை 9 மணியளவில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் ரதவீதிகள் வழியே வலம் வந்து, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மஞ்சள் நீராட்டு, அம்மன் அழைப்பு ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து விஸ்வகர்ம மகாஜன சபா மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர், மகாஜன சபா சார்பில் மாலை விஸ்வ பிரம்ம மற்றும் கோட்டை மாரியம்மன் மின்னொளி தேர்கள் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலையில் கொடியிறக்கம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×