என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இங்கு மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசிக்கொடை விழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷபூஜை, சிறப்பு செண்டை மேளம் நடந்தது. காலை 7.45 மணியளவில் திருவிழா கொடியை கோவில் தந்திரி சங்கர நாராயணன் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.

    விழாவில் இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு ஸ்ரீசாய் சத்சரிதம், 10 மணிக்கு மகாபாரத விளக்கவுரை, இரவு 8 மணிக்கு இன்னிசை, நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை காலை 9.30 மணி, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், இரவு 9 மணிக்கு கதகளியும் நடக்கிறது. விழாநாட்களில் தினமும் காலை 6.30 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

    5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை பூஜை நடக்கிறது.

    விழாவின் கடைசிநாளான 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை, தீபாராதனை, தொடர்ந்து கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.
    திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர திருவிழாவை முன்னிட்டு மேளதாளம் முழங்கிட மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
    திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மருத்துவாசுரனை அகோர மூர்த்தி சம்ஹாரம் செய்யும் உற்சவம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.

    இதனையொட்டி அகோரமூர்த்தி கோவிலில் உள்ள கொன்றை மரத்தடியில் எழுந்தருளினார். அப்போது மரத்தடியில் மருத்துவாசுரனை சம்காரம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்தனர்.

    மேளதாளம் முழங்கிட மருத்துவாசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவில் கடந்த 22-ந்தேதி கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழாவும், 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந் தேதி மாசி மக உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்தனர்.

    இதைத்தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கோவில் தெப்பக்குளத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. விழாவில் இன்று(திங்கட்கிழமை) முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று மறுநாள் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி கூப்புச்சந்திரபேட்டை கிராமத்தில் இந்த உற்சவம் நடந்தது.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று மறுநாள் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூப்புச்சந்திரபேட்டை கிராமத்தில் இந்த உற்சவம் நடந்தது.

    முன்னதாக கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் உற்சவர்களான சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமசாமியை சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வைத்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கூப்புச்சந்திரபேட்டை கிராமத்துக்குக் கொண்டு சென்றனர். கிராமத்தை அடைந்ததும், அங்குள்ள மண்டபத்தில் கும்ப கலசம் ஏற்பாடு செய்து, உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூைஜகள், நைவேத்தியம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்து தர்ம பிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம் ஆகியவை சார்பில் திருப்பதியில் கோலாட்டம், பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
    கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
    கோவை மாவட்டம் காரமடையில் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசிமக தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர் விழாவையொட்டி தினந்தோறும் இரவு அன்ன, சிம்ம, அனுமந்த வாகன உற்சவங்கள், கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து கடந்த 25-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 26-ந் தேதி திருகல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

    நேற்று அரங்கநாத பெருமாளின் அடியார்களான தாசர்களின் தண்ணீர் சேவை நடைபெற்றது. இதில் ஒரு பகுதி தாசர்கள் தெப்பக்குளத்தில் இருந்து தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி கையில் பிரம்பு ஏந்தி ஓட்டமும், நடையுமாக தண்ணீரை கொண்டு சென்று கோவில் வளாகத்தில் அரங்க பெருமாளுக்கு சமர்பித்தனர்.

    மற்றொரு தாசர்கள் கையில் (பந்த சேவை) எனப்படும், தீபந்தங்களை எடுத்து தாரை தப்பட்டைகளுடன் தெப்பக்குளத்தில் இருந்து பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசல் மற்றும் 4 ரத வீதிகளில் பந்த சேவை கொண்டுவந்து கோவிலுக்கு சென்று வழிப்பட்டனர்.

    இரவு 10.30 மணிக்கு அரங்கநாத பெருமாள் மன்னர் அலங்காரத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் அமர்ந்து வந்து பரிவேட்டை மைதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து திருமலை மன்னன் வேடுபரி நிகழ்ச்சியையடுத்து அரங்கநாத பெருமாள் கோவிலை வந்தடைந்தார்.

    இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான வந்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
    அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் மற்றும் உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலிருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார். பின்னர் நேற்று காலை புறப்பட்டு 9 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. இரவு 9 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை அன்பில் சென்றடைகிறார்.

    இதுபோல் மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் புகழ்பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி தினமும் ஒரு வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் காலையில் பகல் தெப்பமும், இரவில் தெப்பமும் நடைபெற்றன.

    அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுமிய நாராயண பெருமாள் திருவீதி உலா வந்தனர். தெப்ப உற்சவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தெப்பக்குளத்தை சுற்றி விளக்கேற்றி வழிபட்டனர்.

    இந்த ஆண்டு தெப்ப உற்சவத்தை பார்க்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்தனர்.அதோடு சுகாதார வசதி செய்யப்படாததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். போதிய பார்க்கிங் வசதி இல்லாததாலும், ஒருவழி பாதை இல்லாததாலும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அடுத்து வரும் ஆண்டுகளில் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுமியநாராயண பெருமாள், சக்கரத்தாழ்வாருடன் கோவிலில் இருந்து தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன்பிறகு இரவு திருவிழா நிறைவு யாகம் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுமியநாராயண பெருமாள், சக்கரத்தாழ்வாருடன் கோவிலுக்கு ஆஸ்தானம் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.
    ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்ட் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன.

    தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் ஜெபமாலை, மாலை ஆராதனை, திருப்பலி, மறையுரை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலையில் திருப்பயணிகள் திருப்பலி, இரவு வாணவேடிக்கை போன்றவை நடந்தன.

    விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி, தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடந்தன. அலங்கரிக்கப்பட்ட வியாகுல அன்னை தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வீதி வீதியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும், பின்னர் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடைபெற்றது.திருவிழா ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 17-ந் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு நேற்று மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், காப்பு கட்டிய சந்தோஷ் குமார் பட்டருக்கு மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் அவரை யானை மேல் அமரவைத்து சிவாச்சாரியார் சபைக்கு அழைத்து வரப்பட்டார். நிகழ்ச்சியில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, கோவில் மணியம் காவடி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வர்ச்சுவல் (காணொலி காட்சி மூலம்) முறையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம்.

    கல்யாண உற்சவ டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் (2 பேருக்கு) 90 நாட்களுக்குள் தேவஸ்தானம் இலவச விரைவு தரிசனத்தை அளித்து வருகிறது. பக்தர்கள் அந்தத் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் முன்பு செய்து கொள்ளலாம்.

    அதன் விவரம் வருமாறு:-

    9-ந்தேதி சர்வ ஏகாதசி, 24-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம், 24-ந்தேதி ஸ்மார்த ஏகாதசி, 25-ந்தேதி வைஷ்ணவ மாத்வ ஏகாதசி, 28-ந்தேதி லட்சுமி ஜெயந்தி, தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
    தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.இந்த ஆலயமானது வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் அழைத்து வருகின்றனர்.

    இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் இறைச்சி உண்ணாமல் இருந்து 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி தவக்காலம் தொடங்கியது. இந்த தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இருந்து 35 பேர் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்தனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமி அன்று சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் (தீர்த்தவாரி) நடப்பது வழக்கம். அதன்படி மாசி மாத பவுர்ணமி அன்று ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடந்தது. இதற்கு ‘சத்வோமுக்தி உற்சவம்’ என்றும் கூறுவர்.

    முன்னதாக பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சோமசுந்தரமூர்த்தி, ஞானப்பிரசுனாம்பிைக தாயார், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து பல்லக்கில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

    அங்கு, வேதப்பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பிரதான அர்ச்சகர்கள் சங்கல்ப பூஜை செய்தனர். கலசத்தை ஏற்பாடு செய்து, அதில் திரிசூலத்தை அமர்த்தி உமாதேவி சமேத சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். சத்வோமுக்தி உற்சவ சிறப்பை வேதப் பண்டிதர்கள் பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர்.

    இதையடுத்து உமாதேவி சமேத சந்திரசேகரரையும், திரிசூலத்தையும் அர்ச்சகர்கள் ஆற்றுக்குள் எடுத்துச் சென்றனர். உற்சவர்கள் முன்னிலையில் திரிசூலத்தை சொர்ணமுகி ஆற்றின் புனிதநீரில் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கொரோனா பரவலால் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    ×