search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீர்த்தவாரி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவியருடன் சமேத சவுமியநாராயணபெருமாள்.
    X
    தீர்த்தவாரி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவியருடன் சமேத சவுமியநாராயணபெருமாள்.

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் புகழ்பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி தினமும் ஒரு வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் காலையில் பகல் தெப்பமும், இரவில் தெப்பமும் நடைபெற்றன.

    அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுமிய நாராயண பெருமாள் திருவீதி உலா வந்தனர். தெப்ப உற்சவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தெப்பக்குளத்தை சுற்றி விளக்கேற்றி வழிபட்டனர்.

    இந்த ஆண்டு தெப்ப உற்சவத்தை பார்க்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்தனர்.அதோடு சுகாதார வசதி செய்யப்படாததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். போதிய பார்க்கிங் வசதி இல்லாததாலும், ஒருவழி பாதை இல்லாததாலும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அடுத்து வரும் ஆண்டுகளில் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுமியநாராயண பெருமாள், சக்கரத்தாழ்வாருடன் கோவிலில் இருந்து தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன்பிறகு இரவு திருவிழா நிறைவு யாகம் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுமியநாராயண பெருமாள், சக்கரத்தாழ்வாருடன் கோவிலுக்கு ஆஸ்தானம் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×