என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணல் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதையொட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்தும், பூஜை மற்றும் வழிபாடுகள் குறித்தும் அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதை தொடர்ந்து குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள 490 கோவில்களுக்கும் இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவிலுக்குள் ஒரே நேரத்தில் 20 பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    பூஜை நேரத்தில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்படுவது, அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடத்த தடை விதித்ததுடன், கோவிலுக்கு உள்ளே பணியாளர்களை கொண்டு வாகன பவனி நடத்துவதும், கோவில் வெளிப்பிரகாரத்தில் வாகன பவனி நடத்த அனுமதி மறுப்பது, திருவிழாக்கள் நடத்த அனுமதி ரத்து என பல்வேறு தகவல்களை சுற்றறிக்கையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

    அந்த வகையில் குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் வருகிற 14-ந் தேதி சித்திரை விஷூ கனி காணல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சித்திரை விஷூ கனிகாணல் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    காலை 7 மணிக்கு பிற்பாடு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பது, சாமி தரிசனம் செய்ய வேண்டிய வசதியை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கும். மேலும் பக்தர்கள் கூட்டமாகச் செல்லாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து செல்ல கோவில் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போன்று மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வேளிமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்களில் சித்திரை விஷூ கனி காணல் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு கோவில் விழாக்களை நடத்த தடை விதித்தது. இதனால் சாரங்கபாணி கோவில் தேராட்டம் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவிலில் தை முதல் நாளில் தைத்தேரோட்டமும், சித்திரை மாதம் பவுர்ணமியில் சித்திரை தேரோட்டமும் நடத்தப்படும். இந்த தேரில் பிரம்மாண்டமான 4 குதிரைகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

    அந்த குதிரைகள் தேரோட்டத்தின்போது ஆடி, அசைந்தபடி தேரில் பவனி வரும். இவ்வாறு பல்வேறு சிறப்புடைய கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இதையொட்டி கடந்த மாதம் தேர் கட்டுமானப்பணிக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

    இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு கோவில் விழாக்களை நடத்த தடை விதித்தது. இதனால் சாரங்கபாணி கோவில் தேராட்டம் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தேரோட்டம் நடைபெற இருந்ததையையொட்டி தேர் கட்டுமான பணிகள் அணைத்தும் தீவிரமாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் தேர் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட தேர் கட்டமைப்பு வல்லுனர்கள் தேர் திருப்பணி பணிகளை கைவிட்டு வீடு திரும்பினர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படலாம் என தெரிகிறது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
    உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் கொரோனா தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிப்பதாக அரசு அறிவித்தது..

    இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை கலெக்டர் அன்பழகன் தலைமையில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்தாண்டு திருவிழா நடத்தியது போன்று கோவில் வளாகத்திலேயே உள் திருவிழா நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டது.

    சித்திரை திருவிழாவின்போது கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் தான் முகூர்த்தகால் நடப்பட்டு திருவிழா ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் பொற்றாமரைக்குளத்தில் பூஜை செய்து அம்மன் சன்னதி பகுதியில் முகூர்த்தக்கால் நேற்று காலை நடப்பட்டது. இதன் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படலாம் என தெரிகிறது.

    ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் என்று பக்தர்கள் காத்திருக்கிறார்கள்
    அமாவாசை சோமவாரம் அன்று விரதம் இருந்து வருவது பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இது தொடர்பான ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.
    12-4-2021 அமாவாசை சோமவாரம்

    அமாவாசை வழிபாடு என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. அமாவாசையும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையும் சேரும் தினம், முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது. அமாவாசை சோமவாரம் அன்று விரதம் இருந்து வருவது பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இது தொடர்பான ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.

    காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த தேவசுவாமி- தனவதி தம்பதியருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். மகனின் பெயர் விஷ்ணுதாசன், மகளின் பெயர் குணவதி. இதில் குணவதிக்கு திருமணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அனைத்து ஏற் பாடுகளையும் விமரிசையாக செய்து வந்தனர். திருமணத்திற்கு மூன்று நாட்களே இருந்தது.

    இந்த நிலையில் அந்த வீட்டிற்கு யாசகம் கேட்டு, சாது ஒருவர் வந்தார். அவர் யாரிடம் யாசகம் பெற்றாலும், அவர்களை ‘தீர்க்க சுமங்கலி பவ’, ‘சுப மங்கலம் நிலவட்டும்’ என்று கூறி ஆசீர்வதிப்பார். அன்று மணப்பெண்ணான குணவதிதான், சாதுவுக்கு யாசகம் வழங்கினாள். அப்போது அந்த சாது, “தர்மவதி பவ” என்று ஆசி வழங்கினார்.

    இதனைப் பார்த்துக் கொண்டிருந்த குணவதியின் தாயார் தனவதி, “சுவாமி, ‘தர்மவதி பவ’ என்று சொல்லி என் மகளுக்கு ஆசி வழங்கினீர்கள். அதற்கான அர்த்தம் என்ன?” என்று கேட்டார்.

    “தாயே.. உன் மகளின் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டு, மணமக்கள் இருவரும் அக்னியை வலம் வருவார்கள். அந்தச் சடங்கு நடக்கும் வேளையில், மணமேடையிலேயே உன் மகள் கழுத்தில் தாலி கட்டிய மணமகன் உயிர் விடும் நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் அனைவரையும் வாழ்த்தும் ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று என்னால் உன் மகளை வாழ்த்த முடியவில்லை. எனவேதான், அவள் எனக்கு அளித்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தர்மவதி பவ’ என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தார்.

    திருமண நாள் நெருங்கி விட்ட நிலையில், சாது இப்படி சொன்னதைக் கேட்டு தனவதி யும் அவரது குடும்பமும் தளர்ந்து போனது. அதைக் கண்ட சாது, “தாயே.. நீ கவலைப் படாதே. இந்த பிரச்சினையில் இருந்து வெளியில்வர ஒரே ஒரு வழி இருக்கிறது. கிழக்கு கடல் பகுதியில் ஒரு தீவு இருக்கிறது. அதில் சோமா என்ற வயது முதிர்ந்த சுமங்கலி வசித்து வருகிறார். தெய்வீக சக்தியும், புண்ணியங்களும் நிரம்பப் பெற்றவர். அவர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றால், எல்லாம் நல்லபடியாக முடியும். உன் மகள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    சாது கூறியதை கேட்டுக் கொண்டிருந்த குணவதியின் சகோதரன் விஷ்ணுதாசன், தன் தங்கையின் மணவாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக சாது சொன்ன அந்த தீவுக்குச் சென்றான். சோமாவின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றிருந்தார். விஷ்ணுதாசன் அவசரம் காரணமாக கோவிலுக்கேச் சென்று விட்டான். அங்கு ஒரு வயதான பெண்மணி, அரச மரத்தை சுற்றி வந்துகொண்டிருந்தார். அவர்தான் சோமா என்பதை அறிந்த விஷ்ணுதாசன், அவரது காலில் விழுந்து, நடந்ததைக் கூறி, தன்னுடன் வந்து தங்கையின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தான். சோமாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    திருமண நாள் அன்று, சோமா மற்றும் அவரது கணவர் முன்னிலையில் குணவதிக்கு திருமணம் நடந்தது. மணமக்கள் அக்னியை வலம் வந்தபோது, மணமகன் மயங்கி விழுந்து மரணித்தான். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சோமா தம்பதியரும் கவலையுற்றனர். சோமா, இறைவனை நினைத்து வேண்டினார். அப்போது அங்கே ஒலித்த அசரீரி, “சோமா.. நீ பல வருடங்களாக சோம வார அமாவாசையில் கடைப்பிடித்து வரும் விரதப்பலனை, மணமகனுக்கு அளித்தால், அவன் உயிர் பெறுவான். அதோடு அந்த தம்பதியரும் நீண்ட காலம் இணைந்து வாழ்வார்கள்” என்றது.

    அதன்படியே அமாவாசை சோமவாரத்தில் தான் இருந்த விரதத்தின் பலன்களை, மணமகனுக்கு அளித்தார், சோமா. உடனே மணமகன் உயிருடன் எழுந்தான்.

    விரதம் இருப்பது எப்படி?

    அமாவாசை தோறும் அரச மரத்தை வலம் வருவது நல்லது. அரச மரத்தை காலை வேளையில்தான் வலம் வர வேண்டும். திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று சூரிய உதய நேரத்தில் அரச மரத்தை 108 முறை வலம் வந்து பூஜிக்க வேண்டும். பெண்கள் அரச மரத்தை ஒருமித்த மனதுடனும், பக்தியுடனும் வலம் வரும்போது, அவர்களுக்கு அபரிமிதமான சக்தி கிடைக்கும். அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள். அரச மரத்தை வலம் வரும் வேளையில் ‘மூலதோ ப்ரும்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத் சிவ ரூமாய வருக்ஷ ராகாயதே நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

    திங்கட்கிழமையில் வரும் அமாவாசை சோமவாரம் அன்று, சூரியன் முழுமையாக உதிக்கும் முன்பு அரச மரத்தை ஸ்ரீமத் நாராயணனாக பாவித்து வழிபட்டு, 108 முறை வலம் வரும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
    திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறாது. பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறாது.

    கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தன்று பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அனைத்து கோவில்களிலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களையும் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதிப்பதில் கோவில் நிர்வாகிகள் திணறுகின்றனர்.

    சென்னை, ஏப்.12-

    கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப் பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் கோவில்களில் இரவு 8 மணிக்கு பிறகு தரிசனத் துக்கு அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட் டுள்ளது.

    அதன்படி அனைத்து கோவில்களும் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படு கிறது. பழனி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருத்தணி, திருச் செந்தூர், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், சமயபுரம், சென் னையில் பார்த்தசாரதி, வட பழனி, மாங்காடு, திருவேற் காடு, கபாலீசுவரர் கோவில் போன்ற பக்தர்கள் அதிக மாக வரும் அனைத்து கோவில்களிலும் கோவி லுக்கு வரும் அனைத்து பக்தர்களையும் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதிப்பதில் கோவில் நிர்வாகிகள் திணறுகின்றனர்.

    பலர் இலவச தரிசனங் களை தவிர்த்து கட்டண தரிசன பாதையில் செல்வ தால் அங்கும் கூட்டம் அலை மோதுகிறது. இதை பயன் படுத்தி சில இடங்களில் கையூட்டு பெற்றுக்கொண்டு நேரடியாக அனுமதித்து பாரபட்சமாக நடப்பதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது அர்த்த நாரீசுவரர் திருக்கோவில். இது திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற கொங்கு பகுதியில் அமைந்துள்ள ஆலயமாகும்.
    கோவில் விபரம் :
    மூலவர் - அர்த்தநாரீசுவரர்
    தாயார் - பாகம்பிரியாள்
    விருட்சம் - வன்னி, இலுப்பை
    தீர்த்தம் - தேவதீர்த்தம்

    இந்த ஆலயம் ஒரு மலை மீது அமைந்திருக்கிறது. அந்த மலை ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆண் போன்று தோற்றமளிக்கிறது. மறுபுறம் பெண் போல தோற்றம் தருகிறது.

    கோவில் வரலாறு

    கோவில் அமைந்திருக்கும் மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. இந்த மலைக்கு நாகமலை, உரசகிரி, தெய்வத்திருமலை போன்ற மற்ற பெயர்களும் உள்ளன.

    இந்த மலையேற உள்ள படிகளில் 60வது படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இருந்ததாம்.

    முதலிவுக்கு முன் செல்ல வேண்டிய கோவில் :

    இந்த ஆலயத்தில் சிவன் தனது உடலின் சரிபாதியை உமையவளுக்கு தந்து, அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருளக்கூடிய தலம் தான் திருச்செங்கோடு.
    அர்த்தநாரீஸ்வரர் மூலவராக அமைந்த கோவிலை வேறெங்கும் காண முடியாது. இந்தன் மூலம் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய கணவன் - மனைவி இருவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்பதை இந்த சிவ பார்வையின் சேர்க்கை உணர்த்துகிறது.

    ஒருவரின் திருமண வாழ்க்கை எனும் இல்லற வாழ்வின் அடிப்படையே முதலிரவிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் தான் திருமணமான தம்பதிகள் தங்களின் முதலிரவைத் தொடங்குவதற்கு முன்னர் இல்லற வாழ்வின் சமத்துவத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு மதொரு பாகனைத் தம்பதியர் வழிபட்டு இறையருள் பெறுவதால், இல்லறத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான சமத்துவத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

    இப்பகுதியில் உள்ள மக்கள் திருமணமானவுடன், முதலிரவுக்கு முன்பு மணமக்களை அழைத்துச் சென்று மாதொரு பாகனை தரிசித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
    அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை கண்டறியபட்டு, கிருமி நாசினி மருந்துகள் கைகளில் பயன்படுத்தியும், முகக் கவசம் அணிந்த நிலையில் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று பங்குனி மாத பரிபூர்ண சர்வ அமாவாசையையொட்டி நூபுர கங்கையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக சென்று புனித தீர்த்தமாடினர். பின்னர் அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் 6-வது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்கேற்றினர்.

    அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை கண்டறியபட்டு, கிருமி நாசினி மருந்துகள் கைகளில் பயன்படுத்தியும், முகக் கவசம் அணிந்த நிலையில் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்திருந்தனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதிநிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியதால், கடந்த 10-ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, 7.45 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    அதைத்தொடர்ந்து 8 மணிக்கு மாரியம்மன் படம் வரையப்பட்ட கொடியை கோவில் குருக்கள் கொடிமரத்தில் ஏற்றினார். இதில் கோவில் இணைஆணையர் கல்யாணி, மேலாளர் லட்சுமணன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    ஆனால் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் இரவு 7 மணிவரை அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம்வந்து அபிஷேக மண்டபம் சென்றடைந்தார்.

    இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இரவு 7 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், குதிரைவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம்வந்து அபிஷேக மண்டபம் சென்றடைகிறார்.

    வருகிற 19-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றிவந்து அபிஷேகம் மண்டபத்தை சென்றடைகிறார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

    வருகிற 21-ந்தேதி அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 23-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. 27-ந்தேதி இரவு அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் திருவிழா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற உள்ளதால் அம்மனின் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
    வருகிற 14ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. அதனையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் நேற்று கொரோனா அச்சத்தால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது.

    கோடை வெயிலை பொருட்படுத்தாமல் நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று அமாவாசை தினம் என்பதால் சித்தர் சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    வழி எங்கும் கோடைகாலம் என்பதால் சோடா மற்றும் குளிர் பானங்கள் விற்பனை களை கட்டியது. தர்பூசணி, முலாம்பழம், இளநீர்,மோர் உள்ளிட்டவைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி தாகம் தணித்தனர்.

    கிரிவலம்

    குழந்தைகள், சிறுவர்கள் நடக்க சிரமப்பட்டதால் அவர்களை பெரியவர்கள் தூக்கிக்கொண்டு கிரிவலம் சென்றனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் சென்றனர்.

    இந்த நிலையில் வருகிற 14ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. அதனையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதையொட்டி தேவையான முன்னேற்பாடு பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் பக்தர்கள் பல சன்னதிகளை காணவும் அனுமதிக்கப்பட்டனர். 10-ந்தேதி முதல் குறைந்த சன்னதிகளை காணவே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் தரிசனம் முடித்து சிறிது நேரம் கோவில் வளாகத்தில் இளைப்பாறி சென்று வந்தனர். அதற்கும் தற்போது அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுகப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விளங்குகிறது.
    குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில். பெரும்பாலான கோவிலில் அம்மன் நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார்.

    குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்களும், குடும்ப பிரச்னை தீர வேண்டும் என வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளிக்கக்கூடிய அம்மனாக திகழ்கிறாள்.
    கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டி அவர்களது பெற்றோரோ, கணவரோ, உறவினர் என இங்கு வந்து வேண்டி செல்கின்றனர்.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்த கோவிலில் கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.

    இந்த அம்மனின் திருவடியில் எலுமிச்சையை வைக்கும் பெண்கள் அருகில் அவர்களின் முந்தானையை விரித்தபடி பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வைக்கும் எலுமிச்சை உருண்டோடி அவர்களின் முந்தானையில் விழுந்தால் பிள்ளை பாக்கியம், திருமண பாக்கியம் என தாங்கள் வேண்டும் வரத்தை அம்மன் அருள்வார் என்பது ஐதீகம்.

    மேலும் குடும்பத்தில் எப்போதும் பிரச்சினைகள் என்று சிக்கித்தவிப்பவர்கள், நிம்மதியில்லாமல் கலங்குபவர்கள் விரைவில் குடும்பத்தில் குதூகலத்தை அடைவார்கள். நிம்மதியும் சந்தோஷமுமாக இருப்பார்கள் என்கிறார்கள் பெண்கள்.

    அதே போல் பிள்ளை வரம் வேண்டுபவர்கள் கோவிலில் வெளியே இருக்கும் புற்றுக்கு அருகே இருக்கும் வேப்ப மரத்தில் சேலையின் முந்தானையை சிறிது கிழித்து கட்டி விடுகிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனை தரிசித்து பூஜை செய்து செல்கின்றனர்.
    திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் திருவாச்சி மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று இரவு 7 மணியளவில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தங்க மயில்

    வாகனத்தில் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க நகர உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

    ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுப்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி சித்திரை மாத கார்த்திகை தினமாகும்.

    இந்த நாளில் நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேசமயம் கோவிலுக்குள் திருவாச்சி மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில்

    நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ×