search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றம் நடைபெற்றதையும், அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.
    X
    கொடியேற்றம் நடைபெற்றதையும், அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதிநிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியதால், கடந்த 10-ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, 7.45 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    அதைத்தொடர்ந்து 8 மணிக்கு மாரியம்மன் படம் வரையப்பட்ட கொடியை கோவில் குருக்கள் கொடிமரத்தில் ஏற்றினார். இதில் கோவில் இணைஆணையர் கல்யாணி, மேலாளர் லட்சுமணன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    ஆனால் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் இரவு 7 மணிவரை அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம்வந்து அபிஷேக மண்டபம் சென்றடைந்தார்.

    இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இரவு 7 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், குதிரைவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம்வந்து அபிஷேக மண்டபம் சென்றடைகிறார்.

    வருகிற 19-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றிவந்து அபிஷேகம் மண்டபத்தை சென்றடைகிறார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

    வருகிற 21-ந்தேதி அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 23-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. 27-ந்தேதி இரவு அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் திருவிழா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற உள்ளதால் அம்மனின் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×