என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    சித்தூரை அடுத்த காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 14-வது நாளான நேற்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு சூரியபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் பங்கேற்ற பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நேற்று முன்தினம் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திர பிரபை வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பசுவை துன்புறுத்தி அதன் இறப்புக்கு காரணமாக இருந்தால் கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது. இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
    பசுவுக்கு உணவிடாமல் இருப்பது, அடிப்பது, பசுவின் இறப்புக்கு காரணமாக இருப்பது ஆகியவற்றால் ஒருவருக்கு கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    இதனால் பாவத்தை செய்தவர் மட்டுமல்லாமல் அவரது சந்ததியும் தொடர்ந்து பாதிக்கும். இதற்கு பிராயச்சித்தமாக மஹார்வணம் என்னும் நூலில் ஒரு பரிகாரம் கூறப்பட்டுள்ளது.

    பசு ஒன்றை வாங்கி ஒரு மாதம் வரை வீட்டில் வைத்து தினமும் பசுவுக்கு நன்கு உணவளித்து பராமரிக்க வேண்டும். அதை சுதந்திரமாக நடக்க விட வேண்டும். காலையிலும், மாலையிலும் அந்த பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கி கோ பூஜை செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்னர் பசுவை தானம் அளித்து விட வேண்டும். இதனால் பசு தோஷம் நீங்கும். துன்பங்களும் படிப்படியாக குறையும்.
    திருச்செந்தூர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. இந்த யில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதித்தனர்.

    சாமி தரிசனம் செய்வதற்கு 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே, ஏராளமான பக்தர்கள் நேற்றே குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு அவசியமான நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஒரு கோவில் தான் கமண்டல கணபதி கோவில்.
    கர்நாடக மாநிலத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சைவ மத பீடம் இருக்கும் புகழ்பெற்ற ஊர், சிருங்கேரி. இதன் அருகே `கேசவே' என்ற ஊர் உள்ளது. இங்கு கமண்டல கணபதி திருக்கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளை இருக்கும். அதன் வழியே தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படாத ரகசியமாகவே இருப்பதாக சொல்கிறார்கள்.

    மழைக் காலங்களில் அதிக அளவிலும், வெயில் காலங்களில் குறைவாகவும் இந்த துளையில் இருந்து நீரூற்று வந்துகொண்டே இருக்கும். ஒருபோதும் இதில் நீர் வராமல் இருந்ததில்லை என்கிறார்கள், ஆலயத்தினர். இந்த அதிசயம் 1000 வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள். விநாயகர் முன்பாக உள்ள இந்த துளையில் இருந்து வரும் நீரைதான், கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

    சில நேரங்களில் பொங்கியும் சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது.இங்கு வரும் பக்தர்கள் இதனை புனித நீராகக் கருதி, குடுவைகளில் தங்கள் இல்லங்களுக்குப் பிடித்துச் செல்கின்றனர். விநாயகரின் காலடியில் வெளிப்படும் இந்த நீரானது, இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, அங்குள்ள துங்கா நதியில் கலக்கிறது.

    வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் தவித்த போது, அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தன் ஆன கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.
    புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி ராமேசுவரத்தில் திதி மற்றும் தர்ப்பண பூஜை செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் உள்ளது. காசிக்கு நிகரானது எனவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதாக நம்பப்படுகின்றது. இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு பூஜை செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    இந்த நிலையில் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை போன்று புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கு புரட்டாசி மாத பவுர்ணமியிலிருந்து அமாவாசை வருவதற்கு இடைப்பட்ட இந்த நாட்களில் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்துவது மிகவும் உகந்த நாட்களாக கூறப்படுகிறது. புரட்டாசி பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும் இடைப்பட்ட நாட்களை பட்சம் என அழைக்கிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய பட்சம் கடந்த 21-ந் தேதியிலிருந்து தொடங்கியுள்ளது. வருகிற 6-ந் தேதி அமாவாசை வரையிலும் மகாளய பட்சம் நடைபெறுகிறது.

    இதன்காரணமாக ராமேசுவரத்தில் புனித நீராடி திதி தர்ப்பண பூஜை செய்ய தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் கடந்த 2 நாட்களாகவே ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை செய்யும் புரோகிதர் சுந்தரேசன் கூறியதாவது:-

    புரட்டாசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியிலிருந்து அமாவாசை வரை இந்த 15 நாட்கள் மிக விசேஷமான நாட்கள் ஆகும். இந்த நாட்கள் முன்னோர்கள் நேரடியாக பூமியில் சஞ்சரிப்பதாக நம்பப்படுகின்றது. அதனால் புரட்டாசி மாதத்தில் பவுர்ணமி வந்த நாளிலிருந்து அமாவாசை முடிவடைவதற்குள் எந்த நாட்களில் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்தினாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இந்த மகாளய பட்சம் நடைபெறும் நாட்களில் கடலில் புனித நீராடி திதி தர்ப்பணம் பூஜை செய்யும் பட்சத்தில் குடும்பத்தில் தவறிய அனைவருக்கும் சேர்த்து பூஜை செய்வதற்கு ஈடான பலனாகும்.

    அதனால்தான் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை போன்று புரட்டாசி மாதத்தில் பவுர்ணமி முதல் அமாவாசை வரையிலான இந்த இடைப்பட்ட நாட்களில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வந்து புனித நீராடி முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்துவிட்டு செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புரோகிதர் ரமணி கூறுகையில், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களுக்கு உணவு அளிப்பதற்காக பச்சரிசி மாவால் பிண்டம் செய்து பூஜை செய்து வழிபாடு நடத்தி அதன் பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது. முன்னோர்களின் வருட நாள் அல்லது இறந்துபோன நபர்களின் தேதி நாள் தெரியாவிட்டாலும் இந்த புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் இந்த 15 நாளில் எந்த நாளில் பூஜை செய்தாலும் மிகவும் உகந்த நாளாகும். திதி பூஜை என்பது பிண்டம் செய்து கடலில் கரைத்து முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடு செய்வது. தர்ப்பணம் என்பது கடற்கரையில் அமர்ந்து எள் வைத்து பூஜை செய்த பின்னர் அந்த எள்ளை கடலில் கரைத்து வழிபாடு நடத்துவது ஆகும். ஒவ்வொரு பிண்டம் ஒவ்வொரு தலைமுறையினரை குறிப்பது. ராமேசுவரத்தை பொறுத்தவரையில் 4 அல்லது 5 பிண்டம் வைத்து பூஜை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    முசிறி அருகே தலைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை உற்சவம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். ஆனால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கிலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த 3 நாட்கள் தடை அக்டோபர் மாதம் 31 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே, புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் செயல் அலுவலர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    இந்த நாலாயிரம் பாடல்களும், முதலாயிரம் - 947 பாடல்கள், பெரிய திருமொழி - 1134 பாடல்கள், திருவாய்மொழி - 1102 பாடல்கள், இயற்பா - 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
    திருமாலைப் பற்றி பாடப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பாக இருப்பது, ‘நாலாயிரம் திவ்ய பிரபந்தம்’. இது வைணவ வழிபாட்டாளர்களின் தமிழ்மறையாக இருக்கிறது. இதில் உள்ள பாடல்கள் அனைத்தும், திருமாலையும், அவரது அவதாரங்களையும் பற்றி எடுத்துரைக்கின்றன. இவற்றில் பெரும்பாலான பாடல்கள் ‘திவ்யதேசங்கள்’ எனப்படும் 108 வைணவத் திருத்தலங்களில் பாடப்பட்டுள்ளன.

    கி.பி. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாகக் கருதப்படும், 12 ஆழ்வார்களால் இந்தப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. அந்த பாசுரங்களின் எண்ணிக்கை 3,892 ஆகும். அதோடு திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ‘ராமானுஜர் நூற்றந்தாதி’யில் உள்ள 108 பாடல்களையும் சேர்த்து நாலாயிரம் என்ற எண்ணிக்கையில் சொல்லப்படுகிறது.

    இந்த நாலாயிரம் பாடல்களும், முதலாயிரம் - 947 பாடல்கள், பெரிய திருமொழி - 1134 பாடல்கள், திருவாய்மொழி - 1102 பாடல்கள், இயற்பா - 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நம்மாழ்வார் மட்டும் 1102 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

    நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல்கள் அனைத்தையும், கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனி என்பவர் தொகுத்துள்ளார்.
    இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியையும், பாரதிதேவி- மக்களுக்கு கல்வி ஞானத்தையும், சரஸ்வதி தேவி- வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் அருள்பவர் என்கிறார்கள்.
    படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாக, சரஸ்வதி வணங்கப்படுகிறார்.பிரம்மா மட்டுமின்றி அனைத்து உயிர்களின் நாவிலும் சரஸ்வதி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதனாலேயே அவளை ‘வாக்கு’க்கு அதிபதி என்கிறார்கள்.கலைகளின் அதிபதிசரஸ்வதியின் நான்கு கரங்களில் ஒன்றில் ஜெப மாலையும், மற்றொன்றில் ஏட்டுச் சுவடியும் இருக்கும், முன் இரண்டு கரங்களும் வீணையை மடியில் வைத்து மீட்டிய நிலையில் காணப்படும்.

    ரிக் வேதத்தில், சரஸ்வதியை நதியாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இவர் கல்விக்கும், கலைகளுக்கும் அதிபதியாக விளங்குகிறார்.சரஸ்வதியை ‘கலைமகள்’ என்றும் அழைப்பார்கள். அவர் கையில் வைத்திருக்கும் ஜெபமாலைக்கு, ‘அட்சமாலை’ என்றும் பெயர்.

    தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்துவதற்காக இந்த மாலையை அவர் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.அழகிய தோற்றம் கொண்டவள், நான்கு கரங்களுடன் வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளை தாமரையில் வீற்றிருப்பவள், சரஸ்வதி.சரஸ்வதி தனது கையில் ஏந்தியிருக்கும் வீணையானது, சிவபெருமானால் வழங்கப்பட்டது. அந்த வீணைக்கு, ‘கச்சபி’ என்று பெயர். இந்த வீணையானது, கலைகளின் திறமைகளை அருள்பவர் கலைவாணி என்பதை உணர்த்துவதாக உள்ளது.

    சரஸ்வதியின் முதன்மையான வாகனமாக அன்னப் பறவை உள்ளது. இது நற்பண்புகளை உணர்த்துவதாக கருதப்படுகிறது. பாலுடன் கலந்திருக்கும் தண்ணீரை தனியாக பிரித்து விட்டு பாலை மட்டும் அருந்தும் என்று அன்னப்பறவை பற்றி சொல்வார்கள். அதுபோல கல்வியாளர்கள் தீயவற்றை அகற்றி, நல்லவற்றை ஏற்க வேண்டும் என்பதையே அன்னப் பறவை குறிக்கிறதாம்.

    சரஸ்வதிக்கு மயிலும், ஆடும் கூட வாகனங்களாக வடமாநிலங்களில் இருக்கின்றன.சரஸ்வதியின் மற்றொரு கரத்தில் இருக்கும் ஓலைச் சுவடியானது, அவர் கல்விக்கு அதிபதி என்பதை எடுத்துரைப்பதாக இருக்கிறது.சரஸ்வதியை, துதிகளின் வடிவமாக இருப்பதால் ‘இடா’ என்றும், அறிவின் விளக்கமாக இருப்பதால் ‘பாரதி’ என்றும், ஞானத்தின் வடிவாக திகழ்வதால் ‘சரஸ்வதி’ என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன. இடாதேவி-

    இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியையும், பாரதிதேவி- மக்களுக்கு கல்வி ஞானத்தையும், சரஸ்வதி தேவி- வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் அருள்பவர் என்கிறார்கள்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலதீர்த்தம் கபிலேஸ்வரசாமி ஆகியவற்றில் நேற்று முதல் கோபூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களில் நடத்தப்படும் கோபூஜையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி உத்தரவிட்டார்.

    அதன்படி தேவஸ்தான கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலதீர்த்தம் கபிலேஸ்வரசாமி ஆகியவற்றில் நேற்று முதல் கோபூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக துணை அதிகாரி ரமணபிரசாத், கோ சாலை அதிகாரிகள் அந்தந்த கோவில்களுக்கு உரிய பசு, கன்றுகளை கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், சீனிவாசமங்காபுரம் கோவிலில் துணை அதிகாரி சாந்தி, கோவிந்தராஜசாமி கோவிலில் துணை அதிகாரி ராஜேந்திரடு, கபிலதீர்த்தம் கோவிலில் துணை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் கோபூஜை நடந்தது. அதில் கொரோனா விதிமுறையை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடைபெறும். சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் வாகன உற்சவங்கள் நடைபெற உள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி நேற்று அன்னமய்யா பவனில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆண்டு கொரோனா 3-வது அலை பரவும் என்ற அச்சம் உள்ளதால் பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.

    மாடவீதிகளில் சாமி ஊர்வலம் கிடையாது. கோவில் ரங்கநாயகர் மண்டபத்தில் வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருள்வார்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி 5-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 6-ந்தேதி அங்குரார்ப்பணம், 7-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக தொடங்குகிறது.

    11-ந்தேதி தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். 12-ந்தேதி தங்க ரதத்திற்கு பதிலாக சர்வ பூபால வாகனமும், 14-ந்தேதி ரத உற்சவத்திற்கு பதிலாக சர்வ பூபால வாகனமும் 15-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று மாலை கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் மருத்துவ வசதிகள் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை பக்தர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்.

    மேலும் பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பிரமோற்சவ விழாவிற்கு முன்னதாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி முடித்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அம்பிகைக்கு உரிய இந்த ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகாவை நாமும் அவ்வப்போது வாசித்து அவள் பெருமைகளை மனதார சொல்லி வாயார வாழ்த்தி நலம் பெறுவோம்..
    பிரம்மோற்சவம் நிறைவடைந்து தினசரி விடையாற்றி உற்சவத்திற்கு அம்பாள் எழுந்தருளி ஊஞ்சல் கண்டு தனது ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும் போதும், பிரம்மோற்சவத்தின் 6 ஆம் திருநாள் அன்று காலை நடைபெறும் கந்தப்பொடி இடிக்கும் நிகழ்விலும் மட்டுமே சொல்ல படுகிறது.. இதோ அந்த சுலோகம் ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா

    ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காமகிரீந்திர நிலயே!
    ஜய ஜய ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே!
    ஜய ஜய ஸ்ரீ த்ரிஸத் வாரிம் சத்கோண ஸ்ரீ சக்ராந்தரால பிந்து பீடோ பாரிலஸத் பஞ்ச ப்ரஹ்மமய மஞ்சமத்யஸ்த ஸ்ரீ சிவகாமேச வாமாங்க நிலயே!
    ஜய ஜய ஸ்ரீ விதி ஹரிஹர ஸுரகண வந்தித சரணார விந்தயுக லே!
    ஜய ஜய ஸ்ரீமத் ரமாவாணிந்த்ராணி ப்ரமுக ரமணீ கரகமல ஸமர்பித சரண கமலே!
    ஜய ஜய ஸ்ரீ நிகில நிகமாகம ஸகல சம்வேத்யமான விவித வஸ்திராலங்கிருத ஹேம நிர்மித அனர்கபூஷண பூஷித திவ்ய மூர்த்தே!
    ஜய ஜய ஸ்ரீ அனவ்ரதாபிஷேக தூபதீப நைவேத்யாதி நானாவிதோபாசாரை: பரிஷோபிதே!
    ஜய ஜய ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி நகர் யாம் தவாத்ரிம்சத் தர்மப்ரதிபாதனார்தம் ஸ்தாபித ஹேமத்வஜாலங்கருதே!
    9.ஜய ஜய ஸ்ரீ ஸகல மந்த்ர தந்த்ர யந்த்ரமய பராபிலாகாச ஸ்வரூபே!
    ஜய ஜய ஸ்ரீ காஞ்சி நகர் யாம் காமாக்ஷி இதி ப்ரக்யாத நாமாங்கிதே !
    ஜய ஜய ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரீ பஹு பராக்!
    சுபம் !

    அம்பிகைக்கு உரிய இந்த ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகாவை நாமும் அவ்வப்போது வாசித்து அவள் பெருமைகளை மனதார சொல்லி வாயார வாழ்த்தி நலம் பெறுவோம்.. ஜெய ஜெய காமாக்ஷி

    நடராஜரின் நடனங்கள், 108 தாண்டவங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு தாண்டவம்தான், இந்த ‘கங்காவதாரண தாண்டவம்.’
    சிவபெருமான் ஆடல்களுக்கு பெயர் பெற்றவர். அதனால்தான் அவரை நடனத்திற்கு அரசன் என்று குறிப்பிடும் வகையில், ‘நடராஜர்’ என்று அழைக்கிறோம். அவரது நடனங்கள், 108 தாண்டவங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு தாண்டவம்தான், இந்த ‘கங்காவதாரண தாண்டவம்.’

    கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.

    ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து,கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது.
    ×