என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஒவ்வொரு மாதம் வரும் மாத அமாவாசை அன்று பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் அரசு தடை விதித்திருந்தது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய 3 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏறத்தாழ ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இவர்கள் குடும்பத்தில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் உள்பட பல பூஜைகள் செய்வதற்கு ராமேசுவரத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவார்கள். பின்னர் தர்ப்பணம் கொடுப்பது மிகப்பெரிய ஐதீகமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

    இதனால் இந்த 3 அமாவாசை நாட்களில் மட்டும் ராமேசுவரத்தில் பெரிய திருவிழா கூட்டம் போல் பக்தர்களின் கூட்டம் காட்சியளிக்கும்.

    இந்த நிலையில் 2019-ம் ஆண்டு மார்ச் 24-ம்தேதி முதல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும், பல உலக நாடுகளில் வாட்டி வதைத்த கொரோனா தொற்றுநோய் காரணமாக ராமேசுவரம் உள்பட பல புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் கடலில் நீராடுவதுக்கும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருந்தது.

    இதனால் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் பூஜைகள் செய்வதில் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு நினைவாக திதி பூஜைகள் தர்ப்பண பூஜைகள் கொடுப்பதை தவிர்த்து வந்த பக்தர்கள் இந்த மகாளய அமாவாசையில் கொடுப்பது நல்லது என கருதப்படுகிறது.

    இதனால் இந்த 3 அமாவாசையில் மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்ட முன் வருவார்கள்.

    ஆனால் ஒவ்வொரு மாதம் வரும் மாத அமாவாசை அன்று பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் அரசு தடை விதித்திருந்தது.

    இதனால் வருகிற 6-ந்தேதி மகாளய அமாவாசை வர உள்ளது. இந்த அமாவாசை அன்று முன்னோர்களுக்கு ராமேசுவரத்தில் தர்ப்பணம் மற்றும் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அரசு அனுமதி அளிக்குமா? என பக்தர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது. தொடர்ந்து 10-ந் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது.
    செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று (வியாழக் கிழமை) நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு புகழ் மாலை, தொடர்ந்து திருக்கொடி பவனி, மாலை 6 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடைபெறுகிறது. பின்னர் கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் புதுப்பிக்கப்பட்ட புதிய ஆலயத்தை ஜெபித்து அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.

    பங்குத்தந்தை டேவிட் மைக்கிள் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து திருப்பலி நடக்கிறது. ஆலய திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது.

    8-ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரத்தினம் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். பங்குத்தந்தை மார்ட்டின் மறையுரை யாற்றுகிறார். 9-ம் நாள் விழா மாலை 6 மணிக்கு முள்ளூர்துறை பங்குத்தந்தை ஜக்ஸஸ் இளங்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    10-ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சகாய தாசு மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.

    அடுத்த மாதம் 10-ந் தேதி திருவிழா நிறைவு நாளில் காலை 8 மணிக்கு அருட்பணியாளர் மரிய அற்புதம் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் டேவிட்மைக்கேல் மறையுரையாற்றுகிறார். திருவிழா நிகழ்ச்சிகள் அரசின் வழிகாட்டுதல் படி நடைபெறும் என பங்கு தந்தை மற்றும் பங்குபேரவையினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டேவிட் மைக்கேல், பங்கு பேரவை துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ததேசாள், துணைச் செயலாளர் ஜஸ்டின் தாஸ், பொருளாளர் செல்வன் கபிரியல் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) திருவிருந்து பங்கு தந்தை பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது.
    காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆலய பங்கு தந்தை பெஞ்சமின், புதுக்கடை ஆலய பங்குதந்தை ஜீஸ் ரைமண்ட், வெள்ளையம்பலம் பங்கு தந்தை எட்வின் ஆகியோர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து புதுக்கடை பங்கு தந்தை ஜீஸ் ரைமண்ட் தலைமையில் முதல் நாள் திருப்பலி நடந்தது.

    பின்னர் விழா நாட்களில் தினமும் மாலையில் மட்டும் திருப்பலி நடத்தப்பட்டு வந்த நிலையில் விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து பங்கு தந்தை பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு ஆலய வளாகத்தை சுற்றி தேர்பவனி நடக்கிறது. பிறகு திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா முடிவடைகிறது.
    கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.
    திருமாலின் பள்ளிகொண்ட திருக்கோலம் மிகவும் பிரசித்திப்பெற்றது. அப்படி அவர் பள்ளிகொண்டிருக்கும் ஆலயங்களில் திருவரங்கம் முக்கியமானது. அரங்கம் என்பது நதிநீரில் அமைந்த மேலான திட்டு என்று பொருள்படும். அந்த வகையில் திருவரங்கம்போலவே, மேலும் நான்கு கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்த்து ‘பஞ்சரங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை, கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.

    அப்பாலரங்கம்

    108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்ற பெயரோடும் அழைக்கப்படும் ஆலயம் இது. திருப்பேர்நகர் என்ற கோவிலடியில், இந்த அப்பால ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் இருக்கிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

    உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் பெருமாள் அருள்புரிந்த தலம் இதுவாகும்.

    ஆதிரங்கம்

    கர்நாடக மாநிலத்தில் உள்ளது, ஸ்ரீரங்கப்பட்டனம். இங்கு காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்குள்ள பெருமானை நோக்கி தவம் இயற்றியுள்ளார். அவருக்கு இத்தல பெருமாள், புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். கவுதம முனிவரின் வேண்டுகோள்படி, அவருக்கு காட்சியளித்த கோலத்திலேயே, இறைவன் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.

    சதுர்த்தரங்கம்

    சாரங்கபாணி ஆலயம்தான் ‘சதுர்த்தரங்கம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் இந்த ஆலயம் உள்ளது. இதுவும் திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றுதான். இங்குள்ள பெருமாள் சன்னிதி, தேரின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறங்களிலும் உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில் ஏந்தியவாறு, கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள்புரி கிறார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    மத்தியரங்கம்

    தமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடமாக திருச்சி அருகே உள்ள திருவரங்கம் உள்ளது. பஞ்சரங்க தலங்களில் இது ‘மத்தியரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். 108 திவ்ய தேச திருக்கோவில்களில், முதல் திவ்ய தேசமாக விளங்கும் திருவரங்கம் ஒரு சுயம்பு திருத்தலமாகும். இங்கு 21 கோபுரங்களும், 7 சுற்று பிரகாரங்களும் அமைந்துள்ளன. இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் இதுவாகும்.

    பஞ்சரங்கம்

    காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பெருமாளின் 108 திருப் பதிகளுள் ஒன்று. பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்கர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது.
    கணநேரம் கூட தவறாமல் என்னைப் பற்றி சிந்திப்பவர்களுக்கே இறைவனுடைய இதயத்தில் இடம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    மகாபாரதத்தில் கிருஷ்ணனின் உற்ற நண்பனாக இருந்தவன், அர்ச்சுனன். அவனது மகன் அபிமன்யு. கிருஷ்ணருக்கு அடுத்தபடியாக ஒரு போரில் சக்கரம் போல் தடுத்து நிற்கும் படைகளை, உடைத்துக் கொண்டு உள்ளே புகும் வித்தை தெரிந்தவன், அபிமன்யு மட்டுமே. அத்தகைய சிறப்புபெற்ற அபிமன்யுவின் மனைவி பெயர் உத்தரை.

    அது மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு சில நாட்கள் முந்தைய தினம். பாண்டவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு வந்த முனிவர் ஒருவர், உத்தரைக்கு மாயக் கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கிச் சென்றார்.

    தன் முன்பாக யார் நிற்கிறார்களோ, அவர்களுடைய மனதில் நினைப்பவர்களை அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும். அதுதான் அந்தக் கண்ணாடியின் சிறப்பு. திருமணமானது முதல், உத்தரை தனது கணவனையே மனதில் வரித்திருந்தாள். அதனை பரிசோதனை செய்ய இப்போது அவளுக்கு ஆவல் உண்டாது. முதல் ஆளாக அந்த மாயக் கண்ணாடி முன்பாகப் போய் நின்றாள். எதிர்பார்த்தது போலவே அவளது அன்புக் கணவன், அபிமன்யு அதில் தெரிந்தான்.

    அதே போல் அபிமன்யுவும் தனது மனைவி மீது தீராக் காதல் கொண்டிருந்தான். அவனைக் கண்ணாடி முன்பாக நிறுத்தியபோது, அதில் உத்தரை தெரிந்தாள்.

    அப்போது அங்கு மாயைகளின் மொத்த உருவமான கண்ணன் வந்து சேர்ந்தார். அவரை அந்தக் கண்ணாடி முன்பாக நிறுத்தினால் யார் தெரிவார்கள் என்பது பற்றி அங்கே ஒரு விவாதமே தொடங்கி விட்டது.

    ‘அவருக்கு உற்றத் தோழன் நான். அதனால் நான்தான் கண்ணாடியில் தெரிவேன்’ என்றான் அர்ச்சுனன்.

    ‘இந்த உலகத்திலேயே தர்மத்தை காத்து நிற்பவன் என்பதால் கிருஷ்ணன் மனதில் நான்தான் இருப்பேன்’ - இது தருமர்

    ‘கிருஷ்ணரின் பாசத்திற்கும், அன்புக்கும் உரியவள், தங்கையாகிய நான்தான். அதனால் நான்தான் அந்தக் கண்ணாடியில் வெளிப்படுவேன்’ என்றாள் திரவுபதி. இப்படி ஆளாளுக்கு நான், நீ என்று விவாதித்துக் கொண்டனர்.

    ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைப் பிடித்து, அந்தக் கண்ணாடியின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினார்கள். ஆவலோடு கண்ணாடியைப் பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. ஏனெனில் அதில் தெரிந்தது சகுனி. யார் இந்த நாட்டை விட்டு பாண்டவர்கள் வனத்திற்கு செல்ல காரணகர்த்தாவோ, யாரால் உலகமே அழியும் போர் ஒன்று நிகழப்போகிறதோ, எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ணனை கொன்றே தீருவது என்று யார் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறாரோ அந்த சகுனி, கிருஷ்ணனின் மனதில் இருப்பதைக் கண்டு அனைவரும் திகைத்துப் போயினர். இதுபற்றி அவர்கள் கிருஷ்ணனிடமே கேட்டனர்.

    அதற்கு கிருஷ்ணன், “சகுனி, எனக்கெதிராக திட்டங்களைத் தீட்டுபவன்தான். பாண்டவர்களான உங்கள் பக்கம் நிற்பதால், உங்களோடு சேர்த்து என்னையும் அழிக்கத் துடிப்பவன்தான். ஆனால் அதற்காக அவன் எப்போது என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஒருவர் என்னைப் பற்றி நல்லவிதமாக சிந்திக்கிறார்களா, அல்லது கெடுதலை ஏற்படுத்த சிந்திக்கிறார்களா என்பது பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதே முக்கியம். கணநேரம் கூட தவறாமல் என்னைப் பற்றி சிந்திப்பவர்களுக்கே என்னுடைய இதயத்தில் இடம் கிடைக்கும். அந்தவகையில்தான் சகுனி என் மனதில் இடம் பிடித்து விட்டான்” என்றார்.
    சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.
    ஒவ்வொரு ஸ்லோகம் முடிந்த பிறகும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    1. ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரசீத மம
    பாஸ்கரா|
    திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர
    நமோஸ்துதே|| (நமஸ்காரம்)

    2. ஸப்த ஸ்வரத மாரூடம் ப்ரசண்டம்
    கஸ்ய பாத்மஜம்|
    ஸ்வேத பத்ம தரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

    3. லோகிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
    மஹாபாப ஹரம் தேவம் தம்
    ஸூர்யம் ப்ரணமாம்யஹம்(நமஸ்காரம்)

    4. ப்ரும்ஹிதம் தேஜஸாம் புஞ்ச
    வாயுர் ஆகாச மேவச|
    ப்ரபுஸ்த்வம் ஸர்வ லோகானாம்
    தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்|| (நமஸ்)

    5. த்ரைகுண்யஞ்ச மஹாஸூரம் ப்ரஹ்ம
    விஷ்ணு மஹேஸ்வரம்|
    மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

    6. பந்தூக புஷ்ப ஸங்காஸம் ஹார
    குண்டல பூஷிதம்|
    ஏக சக்ர தரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

    7. விஸ்வேஸம் விஸ்வ கர்த்தாரம்
    மஹா தேஜ ப்ரதீபனம்|
    மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம்|| ( நமஸ்காரம்)

    8. ஸ்ரீவிஷ்ணும் ஜகதாம் நாதம் ஞான
    விக்ஞான மோக்ஷதம்|
    மஹா பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

    9. ஸூர்யாஷ்டகம் படே:நித்யம் க்ரஹ
    பீடாம் ப்ரணாசனம்|
    அபுத்ரோ லபதே புத்ரம் தரித்ராே
    தனவான் பவேத் || (நமஸ்காரம்)

    10.ஆமிஷம் மது பானயஞ்சயக கரோதி
    கரவோதினே|
    ஸப்த ஜன்ம பவேத் ரோகி ஜன்ம
    ஜன்ம தரித்ரஹ|| (நமஸ்காரம்)

    11. ஸ்த்ரீ தைல மது மாம்ஸானி நஸத்ய
    நோதுர வோதிேனே|
    நவ்யாதி ஸ்லோக தாரித்ரயம் ஸூர்ய
    லோகாஞ்ச கச்சதி|| (நமஸ்காரம்)

    ஓம் சாயா ஸமிக்ஞா சமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நமஹ:
    வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், இந்த கோவிலில் பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது.
    மூலவர்     –     வனபத்ர காளியம்மன்
    தல விருட்சம்     – தொரத்திமரம்
    தீர்த்தம்     –     பவானி தீர்த்தம்
    பழமை     –     500-1000 வருடங்களுக்கு முன்பு

    காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில்.

    சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூசை செய்து சூரனை அழித்ததாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

    மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு, பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு, பாண்டவர்கள், அப்பெண்களை அடக்க, தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.

    அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் சென்று, ஆரவல்லியின் பெண்கள் சாம்ராச்சியத்தைத் தவிடுபொடியாக்க, அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து, அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர்.

    இதையறிந்த அபிமன்யு, வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விசயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து, வெகுண்டெழுந்து, ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு, அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராச்சியத்தை அழித்தான். இவை வரலாறாகப் பேசப்படுகிறது.

    பூப்போடுதல் :

    புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, ஏதவது ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு.

    15 ஆயிரம் கிடா வெட்டு :

    வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வரத்திற்குள் சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.

    அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.

    திருவிழா:

    ஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா. அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று, ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி, 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து, 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும்.

    36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்படும். இதில் தீக்கங்குகள் உருவாக்கி பக்தர்கள் இறங்கி நடப்பார்கள். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சி. இவை தவிர வாரத்தின் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இது தவிர அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார்கள்.

    வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. இது தவிர கிடா வெட்டுதல்தான் இங்கு தனிச் சிறப்பு. வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்,
    தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் - 641301,
    கோயம்புத்தூர் மாவட்டம்.
    பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வருபவர் என்பதால், நரசிம்மரை வழிபடுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட நரசிம்மரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
    பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டவர், நரசிம்ம மூர்த்தி. பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வருபவர் என்பதால், நரசிம்மரை வழிபடுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட நரசிம்மரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    நரசிம்மம் என்பதற்கு ‘ஒளிப்பிளம்பு’ என்று பொருள். திருமால் எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் உக்கிரமானதாக, இந்த அவதாரம் இருக்கிறது. ஆனாலும் பக்தர்கள் பலரும் விரும்பி வழிபடக் கூடிய தெய்வமாகவும் நரசிம்மரே இருக்கிறார்.

    வீட்டின் பூஜை அறையில் வைத்து நரசிம்மரை வழிபடும்போது, அவரது உருவ படத்தை வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுங்கள்.

    நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள், பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    சிவப்பு அரளிப் பூ மற்றும் செம்பருத்தி பூ, நரசிம்மருக்கு பிடித்தமானவை. எனவே பூஜையில் அந்த பூக்களை வைத்து வழிபடலாம்.

    நரசிம்மரை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால், எந்தவிதமான திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

    நரசிம்மரின் அருளைப் பெற நினைப்பவர், ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் பிரகலாத சரித்திரத்தை பாராயணம் செய்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

    எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பாக விநாயகரை வழிபடுவது போல, நரசிம்மரையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அந்தக் காரியம் வெற்றியாகும். எதிரி களின் தொல்லை நீங்கும்.

    நரசிம்மரை வழிபடுபவர்கள், பக்த பிரகலாதன் கொண்டிருந்த பக்தியைப் போல, நரசிம்மர் மீது பக்தி கொண்டிருக்க வேண்டும். அப்போது நரசிம்மர் விரைந்து வந்து நன்மைகளை வாரி வழங்குவார்.

    இந்தியா முழுவதும் நரசிம்ம மூர்த்தி வழிபாடு இருந்தாலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களில், நரசிம்மருக்கு சிறப்பும் பெருமையும் மிக்க தனிக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.

    நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். இரணியகசிபுவை வதம் செய்யும் கோலத்தில் ‘வீர நரசிம்மர்’ என்ற பெயரிலும், மகாலட்சுமியை மடியில் வைத்திருக்கும்போது, ‘லட்சுமி நரசிம்மர்’ என்ற திருநாமத்துடனும், இரு கால்களையும் மடக்கி, யோக முத்திரையோடு அமர்ந்திருக்கும்போது, ‘யோக நரசிம்மர்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

    நரசிம்மர் திருக்கோவில்கள் பெரும்பாலும், மலை உச்சியிலும், குகைப் பகுதி களிலுமே அமைந்திருக்கின்றன.

    திருக்கடிகை என்று அழைக்கப்படும் சோளிங்கர், நாமக்கல், கும்பகோணம் - மன்னார்குடி மார்க்கத்தில் உள்ள வலங்கைமான் வரதராஜ பெருமாள் ஆலயம் ஆகியவற்றில் யோக நரசிம்மர் காட்சி தருகிறார்.
    செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாகும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்ய வேண்டும்.
    செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்யவேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் கிரகம் முருகப்பெருமானுக்கு கட்டுப்படும்.
    சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் கட்டுப்படும்.

    முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.

    இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப்பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.

    இந்த ஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களை வணங்கி தொடங்கினால் தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும்.

    விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள், செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானையும், சனிக்கு அதிபதியான ஸ்ரீமன்நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது.

    நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனி சிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிபடுங்கள். அவர்கள் நம் அன்புக்கும் வழிபாட்டுக்கும் கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளிதருவார்கள்.
    ஆலயத்திற்கு செல்லும் வழியை தொடர்ந்து திறந்து வைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் நாளை(வியாழக்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1967 -ம் ஆண்டு முதல் மாணிக்க நாச்சியார் அம்மன் கோவில் உள்ளது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் ஆலயம் அமைந்துள்ள சாலை எப்போதும் திறந்து இருந்தது. இங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதும் ஆலயத்தில் வழிபாடு செய்வதும் நடந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வழியை நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் அடைத்தனர். அப்போது அடைக்கப்பட்ட இரும்பு கதவு மீண்டும் திறக்கப்படாததால் பொதுமக்கள் ஆலயத்துக்கு சென்று தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர்.

    மருத்துவக்குடி கிராமவாசிகள் ஆலயத்திற்கு செல்லும் வழியை திறக்க நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த வழி திறக்கப்படாததால் 2 நாட்களுக்கு முன்பு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனரை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் கிராம மக்கள் திரண்டு அம்மனுக்கு சந்தன காப்பு வழிபாடு நடத்த முடிவு செய்து நேற்று புறப்பட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்னதாகவே ஆலயத்திற்கு செல்லும் வழியை திறந்து விட்டனர்.

    இதைத்தொடர்ந்து உள்ளே வந்த பொதுமக்கள் மாணிக்க நாச்சியார் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் தலைமையில் தஞ்சையிலிருந்து ஆயுதப்படை போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருந்தனர் . ஆலயத்திற்கு செல்லும் வழியை தொடர்ந்து திறந்து வைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் நாளை(வியாழக்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட குரு ரோலிங்டன், வடக்கலூர் பங்குதந்தை ஜேம்ஸ் அமிர்தராஜ், தாளமுத்துநகர் துணை பங்குதந்தை பிபின் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். நிகழ்ச்சியில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருவிழா அன்று விடிவெள்ளி குடிநோய் மருத்துவ ஆலோசனையகம் இயக்குனா் ரெக்ஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. மறைமாவட்ட நூற்றாண்டு விழா பொறுப்பாளா் ஜேம்ஸ் விக்டா் மறையுரையாற்றுகிறார். 11-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி மறைமாவட்ட முதன்மைக்குரு பன்னீா்செல்வம் தலைமையில் நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளா் சகாயம் மறையுரையாற்றுகிறார். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை நெல்சன், துணைப்பங்கு தந்தை பிபின் மற்றும் திரு இருதய சகோதரிகள், ஊா் நிர்வாகிகள், அன்பியங்கள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
    திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது. 6-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது.
    திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு சூசை அறநிலையம் இயக்குனர் அருட்தந்தை பிரமில்டன் தலைமை தாங்கினார். நிதி நிர்வாகி அருட்தந்தை பிரதீப் மறையுரையாற்றினார். முன்னதாக சூசை அறநிலைய ஆன்மிக இயக்குனர் அருட்தந்தை செட்ரிக் பிரிஸ் தலைமையில் ஜெபமாலை பவனி நவநாள் திருப்பலி நடந்தது.

    விழாவின் 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) ஆலந்தலை துணை பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 3-ம் நாள் முதல் 8-ம் நாள் வரையில் அருட்தந்தைகள் ஜான்சன், வளன் அரசு, மைக்கேல் ராயப்பன், பீட்டர் பாஸ்டின், அருமைநாதன், பபிஸ்டன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    9-வது நாளான 6-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் காலை தூத்துக்குடி பேராயர் ஸ்டீபன் தலைமையில் ஜெபமாலை, உறுதி பூசுதல் நிகழ்வும், மாலை திருவிழா, மாலை ஆராதனையும் நடக்கிறது. இதில் அருட்தந்தைகள் சேவியர் அருள்ராஜ், ராயப்பன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 10-ம் திருநாளான 7-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்தந்தை கிளாட்வின் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை அருட்தந்தை ரவீந்திரன் தலைமையில் நற்கருனை பவனியும் நடக்கிறது.

    8-ந் தேதி காலை 11 மணிக்கு சூசை அறநிலைய துணை இயக்குனர் அருட்தந்தை ஷீபாகர் தலைமையில் நன்றி திருப்பலி நடக்கிறது. பின்னர் அசன விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

    ×