search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாணிக்க நாச்சியார் அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை போலீசார் திறந்து விட்ட போது எடுத்த படம்.
    X
    மாணிக்க நாச்சியார் அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை போலீசார் திறந்து விட்ட போது எடுத்த படம்.

    மாணிக்க நாச்சியார் அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த வந்ததால் பரபரப்பு

    ஆலயத்திற்கு செல்லும் வழியை தொடர்ந்து திறந்து வைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் நாளை(வியாழக்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1967 -ம் ஆண்டு முதல் மாணிக்க நாச்சியார் அம்மன் கோவில் உள்ளது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் ஆலயம் அமைந்துள்ள சாலை எப்போதும் திறந்து இருந்தது. இங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதும் ஆலயத்தில் வழிபாடு செய்வதும் நடந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வழியை நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் அடைத்தனர். அப்போது அடைக்கப்பட்ட இரும்பு கதவு மீண்டும் திறக்கப்படாததால் பொதுமக்கள் ஆலயத்துக்கு சென்று தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர்.

    மருத்துவக்குடி கிராமவாசிகள் ஆலயத்திற்கு செல்லும் வழியை திறக்க நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த வழி திறக்கப்படாததால் 2 நாட்களுக்கு முன்பு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனரை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் கிராம மக்கள் திரண்டு அம்மனுக்கு சந்தன காப்பு வழிபாடு நடத்த முடிவு செய்து நேற்று புறப்பட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்னதாகவே ஆலயத்திற்கு செல்லும் வழியை திறந்து விட்டனர்.

    இதைத்தொடர்ந்து உள்ளே வந்த பொதுமக்கள் மாணிக்க நாச்சியார் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் தலைமையில் தஞ்சையிலிருந்து ஆயுதப்படை போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருந்தனர் . ஆலயத்திற்கு செல்லும் வழியை தொடர்ந்து திறந்து வைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் நாளை(வியாழக்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×