என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகத்தை முன்னிட்டு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கல்யாணோற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்தில் வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கல்யாணோற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.

    வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க 14 வகையான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.
    வரும் நவம்பர் 13-ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நன்னாளில் குருவித்துறை யோக குருவை தியானித்து அருள்பெறுவோம்.
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருந்து காட்சி தருகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடைபெறுவது வாடிக்கை. அதுபோன்ற காலத்தில் எல்லாம் இரு பக்கங்களிலும் பலர் உயிரிழப்பார்கள்.

    அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ என்ற மந்திரத்தை கற்றறிந்திருந்தார். இதனால் தன் பக்கம் உயிரிழந்த அசுரர்களை எல்லாம், அந்த மந்திரத்தை உச்சரித்து உயிர்ப்பித்து விடுவார் சுக்ராச்சாரியார். இதனால் அசுரர்களின் பலம் கூடிக்கொண்டே இருந்தது. தேவர்களின் படையோ குறைந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து சுக்ராச்சாரியாரிடம் இருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையில் இருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்பதற்காக அனுப்ப முடிவு செய்தனர். அப்படி கல்வி கற்கும்போது, ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் யோசனையாக இருந்தது. இதற்காக தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன் தேர்வு செய்யப்பட்டான்.

    சுக்ராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரிடம் கல்வி கற்றபடியே அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்க வந்த கசன், தேவ குலத்தைச் சேர்ந்தவன் என்பதை அசுரர்கள் அறிந்தனர். மேலும் கசன், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்கவே இங்கு வந்திருப்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். எனவே கசனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையான சுக்ராச்சாரியாரிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். இதற்கிடையில் மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இத்தலப் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். இதனாலும் இது குரு தலமாக கருதப்படுகிறது. இங்கு வழிபட்டாலும் குருவால் கிடைக்கும் நன்மைகள் பல நம்மை வந்தடையும்.

    வியாழன் என்று அழைக்கப்படும் குரு பகவான், நவகிரக வரிசையில் முக்கியமானவர். இவரை வணங்கினால் ஞானம், செல்வம் முதலானவற்றை அடையலாம். 'குரு' என்றால், 'இருளை நீக்குபவர்' என்று பொருள். அதாவது, நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்குபவர். பொதுவாக, சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குருபகவான் எழுந்தருளி இருப்பது, சற்று வித்தியாசமானதுதான்.

    மூன்று பிராகாரங்களைக் கொண்ட விரிவான இந்தக் கோயில், வைகைக் கரையில் அமைந்துள்ளது. பெருமாளை தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் வெளியே குரு பகவானின் திருச்சந்நிதி. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரை தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார் குரு. இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இங்கே குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 15-ந்தேதி மாலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 16-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவித்து இருந்தது. இப்போது வரை கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், பயணிக்கும் சாலை, அதற்கான வாகன வசதி பற்றிய தகவல்களையும் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

    அதன்படி சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் குளிர்சாதன வசதி கொண்ட 100 பஸ்களும், குளிர்சாதனவசதி இல்லாத 80 பஸ்களும் அடங்கும். இந்த சிறப்பு பஸ் போக்குவரத்து பம்பையில் இருந்து நாளை (12-ந்தேதி) முதல் இயக்கப்பட உள்ளது.

    இதுமட்டுமல்லாது ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் பஸ்களில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு குழுக்களாக வரும் பக்தர்கள் 40 பேர் வரை ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆவர்.
    ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் (ஸ்ரவண) திருவோண நட்சத்திரத்தன்று புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருமலை, திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாத்ச் ஸ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகத்திற்காக இன்று அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் செய்தனர். ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.

    நாளை (வியாழக்கிழமை)மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களால் புஷ்பயாகம் நடத்தப்படும்.

    வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சாமிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    திருப்பதியில் நேற்று 32816 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,459 முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    8-ம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு பட்டினப்பிரவேசம், 9 மற்றும் 10-ம் திருவிழாவான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஊஞ்சல் வைபவம் 12-ம் திருவிழாவான திங்கட்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் யாக சாலையில் தீபாராதனை, தொடர்ந்து சுவாமி தங்க சப்பரத்தில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், மாலையில் சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. 2-ம் ஆண்டாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இணை ஆணையர் குமரதுரை உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான இன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    8-ம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு பட்டினப்பிரவேசம், 9 மற்றும் 10-ம் திருவிழாவான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஊஞ்சல் வைபவம் 12-ம் திருவிழாவான திங்கட்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினசரி காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி விழா நேற்று மாலை நடைபெற்றது.

    கொரோனா அச்சறுத்தல் காரணமாக லட்சார்ச்சனை ரத்து செய்யப்பட்டது. பக்தர் கள் உட்கார்ந்து தரிசிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைர கிரீடம், பச்சைக் கல் மரகத மாலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருத்தணி மா.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் புஷ்பங்கள் அடங்கிய கூடைகளை மலைக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான பூக்களால் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடத்தி தீப ஆராதனை செய்யப்பட்டது.

    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.
    மதுரை மாவட்டம், அழகர் மலையில் உள்ள 6-வது படைவீடான பழமுதிர்ச்சோலை சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசுரனையும், அக்கினி திக்கில் சிங்க முகாசுரனையும் சம்ஹாரம் செய்தார்.

    ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மா சூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி இருப்பிடம் சென்ற பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.

    திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு... அலுவலகம்...கல்லாப்பெட்டிஞ்பணப்பை... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
    * நமக்கு வரும் வருமானத்தை எப்போதும் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    * அடுத்தவர் பொருளாதாரத்தோடும், வருமானத்தோடும் நம் நிலையை ஒப்பிடக்கூடாது.

    * நமக்கு வரும் வருமானத்திலோ, லாபத்திலோ குறைந்த அளவு, ஏழைகளுக்கோ,ஆன்மிக பணிகளுக்கோ செலவிட வேண்டும்.

    * பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கவேண்டும்.

    * ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது.

    * தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு... அலுவலகம்...கல்லாப்பெட்டிஞ்பணப்பை... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.

    * வணிகத்தை... தொழிலை... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே மகாலட்சுமி வருவாள்.

    * மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன்ஆகிவிடுவீர்கள்.

    &ஜோதிடர் சுப்பிரமணியன்
    4-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான 7-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    3-ம் நாளான 8-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    4-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    ஆன்லைன் மூலம் பதிவு செய்த வெளியூர் பக்தர்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கியமானது.

    ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் விழாவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த கார்த்திகை தீபத்தின்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை ஏற்றினர்.

    இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியை காண கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெளியில் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள்.

    மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த வெளியூர் பக்தர்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    முதல் திருவிழா நாளிலேயே வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    முன்னதாக நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இரவு விநாயகர் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது.

    கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இன்று இரவு சாமி வீதிஉலா கோவில் பிரகாரத்திலே நடக்கிறது.

    தீபவிழாவின் உச்ச நிகழ்வாக 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும்.
    ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
    ஓம் அரங்கமா நகருளானே போற்றி
    ஓம் அற்புத லீலா போற்றி
    ஓம் அச்சுதனே போற்றி
    ஓம் அமரேறே போற்றி
    ஓம் அரவிந்த லோசனா போற்றி
    ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
    ஓம் ஆபத்சகாயனே போற்றி
    ஓம் ஆலிலை பாலகா போற்றி
    ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
    ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
    ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
    ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
    ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
    ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
    ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
    ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
    ஓம் ஊழி முதல்வனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
    ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
    ஓம் எண் குணத்தானே போற்றி
    ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
    ஓம் எழில் மிகுதேவா போற்றி
    ஓம் ஏழைப் பங்காளா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
    ஓம் கலியுக தெய்வமே போற்றி
    ஓம் கண்கண்ட தேவா போற்றி
    ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கமலக் கண்ணனே போற்றி
    ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
    ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
    ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
    ஓம் கிரிதர கோபாலனே போற்றி
    ஓம் கீதையின் நாயகனே போற்றி
    ஓம் குசேலர் நண்பனே போற்றி
    ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
    ஓம் கோபியர் தலைவனே போற்றி
    ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
    ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோகுல பாலகனே போற்றி
    ஓம் கோவிந்த ராஜனே போற்றி
    ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
    ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
    ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
    ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
    ஓம் சாந்த குணசீலனே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
    ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
    ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
    ஓம் திருமகள் மணாளனே போற்றி
    ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
    ஓம் துவாரகை மன்னனே போற்றி
    ஓம் தேவகி செல்வனே போற்றி
    ஓம் நந்த கோபாலனே போற்றி
    ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
    ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
    ஓம் நவநீத சோரனே போற்றி
    ஓம் நான்மறை பிரியனே போற்றி
    ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
    ஓம் பரந்தாமனே போற்றி
    ஓம் பக்த வத்சலனே போற்றி
    ஓம் பலராமர் சோதரனே போற்றி
    ஓம் பவள வாயனே போற்றி
    ஓம் பத்ம நாபனே போற்றி
    ஓம் பார்த்த சாரதியே போற்றி
    ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
    ஓம் பாண்டவர் துாதனே போற்றி
    ஓம் பாண்டு ரங்கனே போற்றி
    ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
    ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
    ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
    ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
    ஓம் புருஷோத்தமனே போற்றி
    ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
    ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
    ஓம் மதுசூதனனே போற்றி
    ஓம் மண்ணை உண்டவனே போற்றி
    ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
    ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
    ஓம் மாயா வினோதனே போற்றி
    ஓம் மீராவின் வாழ்வே போற்றி
    ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
    ஓம் முழுமதி வதனா போற்றி
    ஓம் யமுனைத் துறைவனே போற்றி
    ஓம் யசோதை செய்தவமே போற்றி
    ஓம் யதுகுலத் திலகமே போற்றி
    ஓம் ராதையின் நாயகனே போற்றி
    ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
    ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
    ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
    ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேணு கோபாலனே போற்றி
    ஓம் வைகுண்ட வாசனே போற்றி
    ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. 14-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் திகழும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்றது.

    விழாவையொட்டி 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 13-ந்தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    20-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 21-ந்தேதி தீர்த்தவாரியும், 23-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று காலை 04.45 மணி முதல் இரவு 10.00 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.
    ×