என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷம் நிவர்த்தியாக இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
    திருமணப் பொருத்தம் பார்க்கின்ற பொழுது ‘செவ்வாய் ஜாதகமா?’ என்று சிலர் பார்ப்பார்கள். பெண்ணிற்கு செவ்வாய் தோஷ ஜாதகம் என்றால் மாப்பிள்ளைக்கும் அதே போல் இருக்க வேண்டும்.

    சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி என்பர்.

    செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி. எனவே செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் விரதம் இருந்து முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் தோஷம் விலகி யோகம் சேரும்.

    இந்த மாதம் திருக்கார்த்திகை 19.11.2021 அன்று வருகின்றது. அன்றையதினம் விரதம் இருந்து வீட்டின் பூஜையறையில் முருகப்பெருமானை நினைத்து உள்ளம் உருகி வழிபடலாம்.

    திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. அந்த நிகழ்ச்சிகள் முடியும் வரை நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    கந்த சஷ்டி விழா முருகப்பெருமான் ேகாவில்களில் சிறப்பாக நடைபெறும். அதிலும் அறுபடை வீடுகளில் நடைபெறும் கந்தசஷ்டி மிகவும் சிறப்புக்குரியது.

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி, கடந்த 4-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கோவிலுக்குள் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. இதனையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து போர்படை தளபதி வீரபாகு தேவரும், முருகப்பெருமானின் பிரதிநிதியாக முதல் ஸ்தானிகரான சிவானந்த பட்டரும் அங்கு வந்தனர். இந்த நிலையில் இருமாப்பு கொண்ட சூரபதுமன் திருவாட்சி மண்டபத்தை சுற்றிவந்தான்.

    முருகப்பெருமான் தன் தயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற சக்திவேலான நவரத்தினவேல் கொண்டு சூரபதுமனை வதம் செய்தார். இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவானந்த பட்டர் தனது கையில் வேல் ஏந்தி சம்ஹாரம் சார்ந்த புராண கதை கூறினார். இதனை தொடர்ந்து முருகப்பெருமான் உற்சவர் சன்னதிக்கு சென்றார். அங்கு மேளதாளங்கள் முழங்கமுருகப்பெருமான், தெய்வானைக்கு மாலை மாற்றி மகா தீபாராதனை நடந்தது.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி இன்றி சூரசம்ஹாரம் நடந்தது. அதாவது, மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    சன்னதி தெருவில் பக்தர்கள் குவிந்து 3 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து, அதன் பின்பு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி சட்டத்தேரில் இன்று கிரிவலம் வருவது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இன்று மாலை 4 மணி அளவில் பாவாடை தரிசனம் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்காரமும், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்பெருமாள், கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாளுக்கு வெள்ளிக் கவச அலங்காரமும் செய்யப்படுகிறது

    மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலையில் நடந்தது.

    இதையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பாடாகி கோவிலின் கஜமுகாசூரனையும், அடுத்து சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்த பின்னர், ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் சூரபதுமனையும் சம்ஹாரம் செய்தார்..

    இதையடுத்து சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது.

    தொடர்ந்து இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்குமேல் சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் கோவில் உள் பிரகாரத்தில் பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    கொரோனா பரவல் தடுப்புக்காக இந்த ஆண்டும் சூரசம்ஹாரத்தை காண நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி இருப்பிடம் சென்ற பின்னரே, நீண்ட நேரத்துக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மேற்பார்வையில் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், உள் துறை அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சத்திரப்பட்டி, அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.
    ராமேசுவரம் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா பக்தி கோஷத்துடன் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 4-ந்தேதி அன்று கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதேபோல் ராமேசுவரம் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது.

    வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான் கோவிலில் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ராமலிங்க பிரதிஷ்டை மண்டபம் எதிரே உள்ள பிரகாரத்தில் வேலால் சூரனின் தலையை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து சூரனை வதம் செய்த வேலுக்கு பால் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதை .தொடர்ந்து முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியானது கோவிலின் மேற்கு வாசல் ரத வீதி பகுதியில் வைத்து நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் கோவிலுக்குள்ளேயே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் பழனி குமார், பேஸ் கார்கள் முனியசாமி, ராமநாதன், கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்

    இதேபோல் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலிலும், ராமநாதபுரம் ரணபலிமுருகன் கோவில், குண்டுக்கரை சாமிநாத சாமி கோவிலிலும் கோவிலின் உள்ளேயே வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதுபோல் இன்று(புதன்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மறைசாட்சி தேவசகாயத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
    குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் 23-4-1712-ம் ஆண்டு வாசுதேவன்- தேவகியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நீலகண்டபிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1745-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்றார். 1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார்.

    இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறை மாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அதன் முதல் படியாக மறைசாட்சி தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என கடந்த 2-12-2012-ம் அன்று அறிவிக்கப்பட்டது.

    அன்றைய தினம் இதற்கான விழா நாகர்கோவில் கார்மல் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இந்தியாவின் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 21-2-2020 அன்று தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம், அதற்கு தடை ஏதும் இல்லை என்ற அறிவிப்பை போப் ஆண்டவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 3-5-2021 அன்று வாடிகனில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில்தான் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடிதத்தை நேற்று புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே, தேவசகாயம் புனிதர் பட்ட திருப்பணிக்குழு வேண்டுகையாளர் அருட்பணியாளர் டான் ஜோசப் ஜான் எல்பெஸ்டனுக்கு அனுப்பியுள்ளார்.

    அவர் அந்த உத்தரவு கடிதத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் புனிதர் பட்ட திருப்பணியின் துணை வேண்டுகையாளரும், கோட்டார் மறைமாவட்ட பொறுப்பாளருமான அருட்பணியாளர் ஜான் குழந்தைக்கும் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் குறித்து அவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான தேதி இன்று (அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடிதத்தை புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முக்திப்பேறுபெற்ற தேவசகாயம் என்னும் லாசருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வருகிற 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மேலும் 5 பேருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. புனிதர் பட்டங்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குவார். இந்த விழாவில் நமது நாட்டில் இருந்து ஏராளமானோர் வாடிகனுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தமிழகத்தின் முதல் புனிதர்தேவசகாயம்

    அடுத்த ஆண்டு ( 2022) முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் திருமணமான பொதுநிலையினரில் முதன்மையானவர் என்ற பெருமையை பெறுகிறார். குமரி மாவட்டத்தில் பிறந்து மறைந்த தேவசகாயம் தமிழகத்தின் முதல் புனிதராகவும், குமரி மாவட்டத்தின் முதல் புனிதராகவும் போற்றப்படுகிறார்.
    ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தீபத்திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது இந்தாண்டும் சேவா சங்கத்தினர் சார்பில் நேற்று கோவிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

    முன்னதாக மாட வீதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற்றது. ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகபெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

    தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவில் கடற்கரை முகப்பிற்கு வந்தான். மாலை 4.55 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரை முகப்பில் எழுந்தருளினார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகனான தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போர் புரிவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டியவாறு வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே நின்று போரிட தயாரானான். மாலை 5.13 மணிக்கு தாரகாசூரனை வேல் கொண்டு முருகபெருமான் வதம் செய்தார்.

    தொடர்ந்து கன்மமே உருவான சிங்கமுகாசூரனும் முருகபெருமானுடன் போரிடுவதற்காக உக்கிரத்துடன் வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை வலம் வந்து நேருக்கு நேர் போர் புரிய தயாரானான். மாலை 5.22 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

    சகோதரர்களின் இழப்பால் ஆத்திரம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மனும் தனது படைவீரர்களுடன் முருகபெருமானுடன் போரிட வேகமாக வந்தான். முருகபெருமானை 3 முறை சுற்றி போரிட வந்த சூரபத்மனையும் மாலை 5.30 மணிக்கு சுவாமி வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுற்றி வந்து வட்டமிட்டது.

    இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

    தாரகாசூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகியோர் போர் புரிய வந்ததையும் படத்தில் காணலாம்.

    பின்னர் சினம் தணிந்த முருக பெருமானுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளினார். அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு சாயாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் இந்து சமய அறநிலைய துறை ஆணையாளர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, தாசில்தார் சுவாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. மேலும் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    சூரசம்ஹாரம் நடைபெற்ற கடற்கரை நுழைவு பகுதியில் 3 பக்கமும் தகரத்தை கொண்டு அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வராத வகையில் நாழிக்கிணற்றில் இருந்து கடல் நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் போலீசார் கண்காணிப்பு கோபுரத்தில் நின்றபடி கண்காணித்தனர்.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சூரனை வதம் செய்த முருகபெருமானை பெரும்பாலான பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே தொலைக்காட்சிகளிலும், இணையதளம் மூலமாகவும் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு’ அரோகரா போன்ற பக்தி கோஷங்களை முழங்கியவாறு மனமுருக தரிசித்தனர்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மற்றும் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 56 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருவிழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்றும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    குருவைத் தவிர, மகாவிஷ்ணு, இந்திரன், பிரம்மன், சூரியன் மற்றும் சந்திரன், அனுமன், அக்னி பகவான், நட்சத்திர தேவதைகள் உள்ளிட்ட பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள்.
    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர் வழியில் இருக்கிறது, பாடி என்ற ஊர். இங்குள்ள லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 5 நிமிடம் நடந்தால், திருவலிதாயநாதர் திருக்கோவிலை அடையலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த இந்த அற்புதமான ஆலயத்தில் வலிதாயநாதர், வல்லீஸ்வரர் என்ற பெயர்களில் இறைவனும், தாயம்மை என்ற பெயரில் இறைவியும் அருள்பாலிக்கிறார்கள். இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கியிருந்து, சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வியாழ பகவான் எனப்படும் குரு, தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தார். அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவித்த வர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார்.

    இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார்.

    அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    குருவைத் தவிர, மகாவிஷ்ணு, இந்திரன், பிரம்மன், சூரியன் மற்றும் சந்திரன், அனுமன், அக்னி பகவான், நட்சத்திர தேவதைகள் உள்ளிட்ட பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள். இருப்பினும் இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு மட்டும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது.

    இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தத் திருத்தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம்.
    முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், “வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக” என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தப்பெருமான்.

    இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார், கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை எழுதுவார். பின்பு தினமும் இரவு, அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல்களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். இப்படி 1 லட்சம் பாடல்கள் அடங்கிய கந்தபுராணத்தை இயற்றி முடித்தார்.

    அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி ‘கந்த புராணம்’ குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து போக்கினார். ‘கந்த புராணம்’ அரங்கேறிய மண்டபம் ஆலயத்தில் இருக்கிறது. இன்றும் அதனை நாம் கண்டு தொழலாம்.

    படைப்புத் தொழிலை செய்கிறோம் என்ற ஆணவத்தில் இருந்தார், பிரம்மதேவர். அவரது செருக்கை அடக்க எண்ணிய முருகப்பெருமான், பிரம்மாவிடம், “படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான பிரணவ மந்திரமாம் ‘ஓம்’ என்பதன் பொருள் யாது?” என வினவினார். பொருள் அறியாமல் விழித்த பிரம்மதேவரை, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். மேலும் பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே மேற்கொள்ளத் தொடங்கினார். அவ்வாறு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம்.

    இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார். கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை தொடை மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் முருகப்பெருமான், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால், துன்பத்தில் இருப்பவர்கள் இத்தல முருகனை வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும்.

    உற்சவர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல பைரவரை அஷ்டமியிலும், முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் வழிபட்டு வந்தால் பகை, பிணி விலகி சகலத்திலும் நன்மையே உண்டாகும். இத்தல முருகனுக்கு தினமும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனைக் கண்குளிர கண்டு தரிசித்தாலே சகல நற்பேறுகளும் கிட்டும். குமரக்கோட்டம் குமரனுக்கு தீபாவளியில் மட்டும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்படும். கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருந்து, சூரசம்ஹாரம் அன்று குமரனை 108 முறை வலம் வந்தால், நம் மனதில் எண்ணியவை எளிதாக ஈடேறும்.

    மருமகனுடன் மாமன்

    குமரக்கோட்டத்தில் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு. ஒரு முறை பிரளயம் வந்து உலகமே அழிந்து போயிற்று. அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த மார்கண்டேயர் திருமாலிடம், ‘உலக உயிர்கள் அனைத்தும் என்னாயின?’ என வினவ, திருமாலோ ‘என் வயிற்றில் உள்ளன’ என உரைத்தார். இதை நம்பாத மார்கண்டேயர், காஞ்சிபுரம் வந்தார். அங்கு உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார். இதனைக் கண்ணுற்ற திருமாலும் காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார். பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகன் முருகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திரு நாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந் தருளினார்.
    முருகபெருமானது வரலாறுகளையும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.
    ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.

    சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில்களில் இன்று நடக்கிறது. சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே காண்போம்...!

    முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனுக்கு எதிரான போருக்கு முருகப்பெருமான் புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகு தேவர், வீரகேசரி, வீர மகேந்திரா, வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படை தளபதிகளாக விளங்கினர். சூரபத்மனையும், அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலை நாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

    வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன்பதக்கத்தை முருகன் பெற்றார்.

    முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டன. சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுக சூரன் சிங்கமென சீறிப்பாய்ந்து போர்க்களம் வந்தான்.

    ஆனால் முருகப்பெருமானின் வேல், சிங்கமுக சூரனை சம்ஹாரம் செய்து, அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபத்மன் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மனின் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப்போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி, மாறி மாயத்தால் தப்பினான். இறுதியில் முருகப்பெருமானின் வேல் படை சூரபத்மனை தேடி சென்று செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இருகூறாக பிரித்தது.

    சூரபத்மன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது. பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி, மீண்டும் முருகன் கைக்கு வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு ஆனது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும், மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.

    தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் தலத்துக்கு முருகப்பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த 6 முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவதச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர். தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்.

    திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்-பார்வதிதேவியை முருகன்-தெய்வானையுடன் மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருகப்பெருமான் நீலமயில் மீது ஏறி குன்றிலே தேவசேனாதேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார்.

    முருகபெருமானது வரலாறுகளையும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.
    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும்.
    ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா ஏழு நாட்கள் நடைபெறும்.

    திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி துவங்கியது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் காவடி மண்டபத்தில் எழுந் தருளினார்.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் சண்முகர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்படவில்லை.

    மேலும் இன்று அதிகாலை மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அரக்கோணம் சாலையில் உள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக உற்சவர் சண்முகப் பெருமாள் காவடி மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    அதனைத் தொடர்ந்து மாலையில் சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனை நடைபெறும். நாளை காலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் இணைத்தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். முருகப்பெருமான் சினம் தணிந்து வள்ளியை திருமணம் செய்ததால் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான 7-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    3-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்கவும், மேலும் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை, தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடியேற்றத்தை அடுத்து கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
    ×