என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகார தலங்களாக இந்த 2 கோவில்கள் உள்ளன
    காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும்.

    நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.

    ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.

    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.

    வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.

    திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார்.

    ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள் நம் அன்னை.

    திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.

    எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

    ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

    ஞானம் என்பது அறிவு.

    தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

    “சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது.

    இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…

    “மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”

    திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும்.

    ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும். ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும்
    சூரசம்ஹாரம் மற்றும் செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு உகந்த அருணகிரி நாதர் வழங்கிய இந்த ஸ்லோகத்தை சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

    - அருணகிரி நாதர்
    சூரசம்ஹாரம் நடைபெறும் இன்றும்(செவ்வாய்க்கிழமை), திருக்கல்யாணம் நடைபெறும் நாளையும் (புதன்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், சூரசம்ஹாரம் நடைபெறும் இன்றும்(செவ்வாய்க்கிழமை), திருக்கல்யாணம் நடைபெறும் நாளையும் (புதன்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை. ஆகவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம்.

    கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியூப் இணைய தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).
    அரசுப்பணியோ, தனியார் பணியோ, எந்த துறையாக இருந்தாலும் ஒருவர் அங்கு வகிக்கும் பதவி அல்லது பணி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அது சாதாரண பணியாளராக இருந்தாலும், நிர்வாகத்தில் உயர்வாக உள்ள பதவியாக இருந்தாலும் சரியே.

    பதவியுடன் இணைந்து இருக்க வேண்டியது அதை ஏற்று வாழும் மனிதனின் திறமைகளும், ஒழுக்கபலமும் தான். தகுதி உள்ளவர்கள் பதவியைப்பெற்றால் அதில் வெற்றிகளை குவிப்பார்கள், அதன்மூலம் மனித சமூகத்திற்கு பயன்களையும் பெற்றுத்தருவார்கள்.

    இஸ்லாம் பதவியை ஒரு அமானிதமாக கருதுகிறது. அதை உரியவர்களுக்கு ஒப்படைப்பது சமூக மக்களின் கடமையாக எடுத்துரைக்கிறது.

    ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).

    அதாவது தகுதியில்லாத, பலவீனமான, ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற மக்களிடம் பதவிகளை ஒப்படைக்காதீர்கள். ஆகவே இஸ்லாத்தில் பதவி என்பது கேட்டு பெறுவதல்ல. மாறாக ஒப்படைக்கப்படுகின்ற ஓர் விலைமதிக்க முடியாத அமானிதம் ஆகும். ஒவ்வொரு பொறுப்பும் மறுமை நாளில் படைத்த இறைவனின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.

    நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதை கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப்படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்குக் கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்யப்படும்”.

    பொறுப்பின் சுமையை அறியாதவரும், அதிகார மோகம் கொண்டவர்களும்தான் பதவிக்கு ஆசைப்படுவார்கள். இதற்கு மாற்றமாக பதவியை ஒரு பொறுப்பாக உணர்ந்து செயல்படுபவர்கள், அதன் மீது ஆசை கொள்ளாதவர்கள் மீது இறைவனின் உதவியும், வழிகாட்டலும் கிடைக்கும்.

    பதவி பெறுபவர்களைவிட பதவியில் அமர்த்தும் பொது மக்கள் மீதும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆளுமை, திறமை, நல்லொழுக்கம் உள்ளவர்களைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்த வேண்டும். நன்மக்கள் இருந்தால்தான் நல்ல தலைவர்களை இந்த சமூகம் பெறும். எனவே மக்கள் சுயநலம் இல்லாமல், பாரபட்சம் காட்டாமல் நல்லவர்களை, வல்லவர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.

    அவ்வாறு பதவியில் அமர்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும். தனது செயல்களை கண்காணித்துக் கொண்டும், மதிப்பீடு செய்து கொண்டும் இருக்க வேண்டும். ஆலோசனைகளின் அடிப்படையில் பாரபட்சம் இல்லாத நிலையில் முடிவுகள் எடுக்க வேண்டும். மக்களுக்கும் அதைவிட மேலாக படைத்த இறைவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்ற நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும். மக்கள்நலன் முதன்மையாக இருக்கும் பட்சத்தில் பதவியாளர்கள் சேவை உணர்வோடும், அன்போடும் நடந்து கொள்வார்கள்.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: “உங்களின் தலைவர்களில் சிறந்தவர்கள், அவர்களை நீங்கள் அன்பு கொள்வீர்கள், அவர்கள் உங்களை அன்பு கொள்வார்கள்”.

    இத்தகைய ஒழுக்கங்களோடு ஆட்சியாளர்கள், பொது மக்கள் செயல்படும் பொழுது சமூகத்தில் அமைதியும், வளர்ச்சியும் செழித்தோங்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இதற்கு முன்னுதாரணமாக நபிகள் நாயகத்திற்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.

    ஆகவேதான் அண்ணல் காந்தி அடிகளார் கலீபா உமர் அவர்களின் ஆட்சியை விரும்பினார்கள். ‘இந்திய நாடு உயர வேண்டும் என்றால், கலீபா உமரைப் போன்ற நேர்மையான ஆட்சியாளர் ஆள வேண்டும்’ என்று ஆசைப்பட்டார்கள்.

    நாட்டில் அமைதி, பொருளாதார செழிப்பு, பெண்களின் பாதுகாப்பது, தொழில் வளர்ச்சி, பன்முக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பதவியில் நல்லவர்கள் வருவதும், அத்தகைய தலைமுறையை உருவாக்குவதும் நம் அனைவரின் தலையாய கடமை ஆகும்.

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை
    திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன்கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பத்தடி மண்டப வளாகத்தில் உற்சவர் சன்னதி முன்பாக சர்வ அலங்காரத்தில் சத்தியகிரிஸ்வரரும், முருகப்பெருமானும் எழுந்தருளினர். மேளதாளங்கள் முழங்க கோவர்த்தனாம் பிகையிடம் இருந்துசக்திவேலான நவரத்தினவேல் பெற்று சகல பரிவாரங்களுடன் நந்தியை வலம் வந்து முருகப் பெருமானிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணியளவில் கோவிலுக்குள் நடக்கிறது. இந்த நிலையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை 3 மணிநேரம் பக்தர்களுக்கு அனுமதிஇல்லை என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை (10-ந்தேதி) மாலையில் கோவிலுக்குள் பாவாடை தரிசனம் நடக்கிறது.

    அழகர் மலை உச்சியில் உள்ள சோலை மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் இன்று பக்தர்கள் காலையில் இருந்து பகல் 12.30 மணிவரை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள். அதன் பின்னர் மாலையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.அதன் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும் நாளை நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் கலந்து கொள்ளவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்வு முடிந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப் படுவார்கள். அரசின் கொரோனா நோய் தடுப்பு நடைமுறை விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற ஒத்துளழப்பு தர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
    தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து முருகன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வார்கள். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெரு மானை தரிசனம் செய்து பக்தர்கள் விரதத்தை முடிப்பார்கள்.

    கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் பக்தர்களால் 7-வது படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் வேள்வி பூஜை நடைபெற்றது.

    சூரசம்ஹார விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள் ஜவ்வாது போன்ற 16 வகை யான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதைத்தொடர்ந்து சண்முகார்ச்சனை நடக்கிறது.

    மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, மதியம் 3 மணிக்கு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    நாளை (புதன்கிழமை) காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறு கிறது.

    இதிலும் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இது போல் கோவையில் உள்ள முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார விழா இன்று நடைபெற உள்ளது. காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் அசுரர்களின் உருவபொம்மைக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும்.
    முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

    வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூர சம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

    கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை முடித்து உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப்பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.

    விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.
    குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா 11-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்குகிறது. 13-ந் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்பு வாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குரு பெயர்ச்சியாவதை முன்னிட்டு இங்கு 3 நாட்கள் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 11-ந் தேதி வியாழக்கிழமை 10.45 அளவில் லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    13-ந் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். அன்று மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை தொடங்கி 6.10 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி குருபெயர்ச்சி விழாவின் போது 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் முழுவதும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், தக்கார் வெண்மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.
    நம்முடைய வாழ்க்கையில் போராட்டமான தருணங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், அதில் இருந்து வெளிவர நம்பிக்கையே நமக்கு உறுதுணையாக இருக்கிறது. அதுவும் கடவுள் மீது நம்முடைய நம்பிக்கையை வைத்து, அவரோடு இணைந்து அந்த போராட்டத்தை எதிர்கொள்ளும்போது, எளிதாக அதில் இருந்து விடுபடவும் முடிகிறது. ஆனால் பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.

    இயேசு கிறிஸ்துவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களில் சீமோன் என்று அழைக்கப்பட்ட பேதுருவும் ஒருவர். பாஸ்கா விருந்தின்போது இயேசு பேதுருவிடம் “சீமோனே.. இதோ கோதுமையைப் போல் உங்களைப் புடைக்க, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.

    இயேசு கூறியதை கேட்டதும் பேதுரு “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும், ஏன்.. சாவதற்கும் கூட நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்று உறுதிபட கூறினார்.

    ஆனால் இயேசு அவரிடம், “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்கு முன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

    இயேசுவை கைது செய்து தலைமை குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது அங்கிருந்த பணிபெண் ஒருவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.

    பேதுருவோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

    இயேசுவுக்கு மோசேவும், எலியாவும் காட்சி கொடுத்து பேசியபோது, தொழுகைக் கூடத் தலைவரின் மகளை உயிர்ப்பித்த நிகழ்வின் போது என பல முக்கியமான தருணங்களில் பேதுரு இயேசுவுடன் இருந்தார். இயேசு கடல் மீது நடந்தபோது, அவரிடம் தானும் அவ்வாறு கடல்மீது நடக்க ஆணையிடும் என்று கேட்டுகொண்டு பேதுருவும் கடல் மீது நடந்தார். அதுமட்டுமன்றி, விவிலியத்தில் பார்க்கும்போது பல இடங்களில் இயேசு பேதுருவிடம் கேள்விகளை கேட்டு பதிலை பெறுகிறார். அதேபோல் இயேசுவிடம் பேதுரு தன்னுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கமும் பெறுகிறார். இவ்வாறு பல தருணங்களில் இயேசுவின் வாழ்வில் முக்கியமான ஒருவராய் பேதுரு திகழ்ந்தார்.

    எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு பேதுருவிடம், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா’’ என்றார். இதன் மூலம் திருச்சபை வளர்ச்சியில் பேதுருவின் பங்களிப்பு முக்கியமானது என்பதை இயேசு முன்னறிவித்தார்.

    அப்படிபட்டவர் இயேசுவை மும்முறை மறுதலிக்க காரணம், இயேசு கூறிய எச்சரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு, பேதுரு தன் மீது வைத்திருந்த சுய நம்பிக்கையே காரணமாகும். இன்றும் நம்மில் பலர் இறைவன் கூறும் வார்த்தையையும், எச்சரிப்பையும் விடுத்து நம்மையே நாம் அதிகமாய் நம்பிக் கொண்டிருப்பதால்தான் வழி தவறி போகிறோம். தடுமாறி விழுகிறோம். ஆனால் பேதுருவை பார்க்கும் போது அவர் தவறினாலும், அதற்காக மனம் வருந்தினார். மனம் மாறினார்.

    “நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு பல இடங்களில் இறைவனுக்கு சாட்சியாய் நின்று, பலரும் கிறிஸ்துவை பின்பற்ற காரணமாய் விளங்கினார். அவரை போன்று நாமும் நம்முடைய தவறை உணர்ந்தவர்களாய், அதற்காய் மனம் வருந்தி இனிவரும் காலங்களில் இறைவனுக்கு சாட்சியான வாழ்க்கையை வாழ்வோம்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் மாலை ஹோமம், சஹஸ்ர நாமார்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. சுப்பிரமணியசாமி ஹோமம் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று காலை சிறப்புப்பூஜைகள், சுப்பிரமணியசாமி ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி ஆகியவை நடந்தது. மாலை ஹோமம், சஹஸ்ர நாமார்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. சுப்பிரமணியசாமி ஹோமம் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.

    ஹோம மகோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    7-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினமும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.
    திருச்செந்தூர் :

    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக்கொள்கிறார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே, வழக்கமாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடக்கிறது.

    தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    இதற்காக சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் 3 பக்கமும் தகரத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வரமுடியாதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் போலீசார் கண்காணிக்க வசதியாக, கண்காணிப்பு கோபுரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுதவிர போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினமும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    நவம்பர் மாதம் 9-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    9-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சூரசம்ஹாரம்
    * வளர்பிறை பஞ்சமி
    * சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

    10-ம் தேதி புதன் கிழமை :
     
    * சித்தயோகம்
    * சுபமுகூர்த்த நாள்
    * சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை
     
    11-ம் தேதி வியாழக்கிழமை :

    * சுபமுகூர்த்த நாள்
    * திருவோண விரதம்
    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்

    12-ம் தேதி வெள்ளிக்கிழமை  :


    * வளர்பிறை அஷ்டமி
    * கோஷ்டாஷ்டமி
    * சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

    13-ம் தேதி சனிக்கிழமை :

    * வளர்பிறை நவமி
    * சுவாமிமலை முருகப்பெருமான் பூத வாகனத்தில் வீதியுலா
    * சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

    14-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * அமிர்த யோகம்
    * மயாவரம் மாயூரநாதர் ஏகமஞ்சத்தில் பவனி வரும் காட்சி
    * சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

    15-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்த நாள்
    * சர்வ ஏகாதசி
    * சித்தயோகம்
    * மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம் -  மகம், பூரம்

    ×