search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    பதவிக்காக ஆசைப்படாதீர்கள்...

    ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).
    அரசுப்பணியோ, தனியார் பணியோ, எந்த துறையாக இருந்தாலும் ஒருவர் அங்கு வகிக்கும் பதவி அல்லது பணி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அது சாதாரண பணியாளராக இருந்தாலும், நிர்வாகத்தில் உயர்வாக உள்ள பதவியாக இருந்தாலும் சரியே.

    பதவியுடன் இணைந்து இருக்க வேண்டியது அதை ஏற்று வாழும் மனிதனின் திறமைகளும், ஒழுக்கபலமும் தான். தகுதி உள்ளவர்கள் பதவியைப்பெற்றால் அதில் வெற்றிகளை குவிப்பார்கள், அதன்மூலம் மனித சமூகத்திற்கு பயன்களையும் பெற்றுத்தருவார்கள்.

    இஸ்லாம் பதவியை ஒரு அமானிதமாக கருதுகிறது. அதை உரியவர்களுக்கு ஒப்படைப்பது சமூக மக்களின் கடமையாக எடுத்துரைக்கிறது.

    ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).

    அதாவது தகுதியில்லாத, பலவீனமான, ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற மக்களிடம் பதவிகளை ஒப்படைக்காதீர்கள். ஆகவே இஸ்லாத்தில் பதவி என்பது கேட்டு பெறுவதல்ல. மாறாக ஒப்படைக்கப்படுகின்ற ஓர் விலைமதிக்க முடியாத அமானிதம் ஆகும். ஒவ்வொரு பொறுப்பும் மறுமை நாளில் படைத்த இறைவனின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.

    நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதை கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப்படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்குக் கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்யப்படும்”.

    பொறுப்பின் சுமையை அறியாதவரும், அதிகார மோகம் கொண்டவர்களும்தான் பதவிக்கு ஆசைப்படுவார்கள். இதற்கு மாற்றமாக பதவியை ஒரு பொறுப்பாக உணர்ந்து செயல்படுபவர்கள், அதன் மீது ஆசை கொள்ளாதவர்கள் மீது இறைவனின் உதவியும், வழிகாட்டலும் கிடைக்கும்.

    பதவி பெறுபவர்களைவிட பதவியில் அமர்த்தும் பொது மக்கள் மீதும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆளுமை, திறமை, நல்லொழுக்கம் உள்ளவர்களைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்த வேண்டும். நன்மக்கள் இருந்தால்தான் நல்ல தலைவர்களை இந்த சமூகம் பெறும். எனவே மக்கள் சுயநலம் இல்லாமல், பாரபட்சம் காட்டாமல் நல்லவர்களை, வல்லவர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.

    அவ்வாறு பதவியில் அமர்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும். தனது செயல்களை கண்காணித்துக் கொண்டும், மதிப்பீடு செய்து கொண்டும் இருக்க வேண்டும். ஆலோசனைகளின் அடிப்படையில் பாரபட்சம் இல்லாத நிலையில் முடிவுகள் எடுக்க வேண்டும். மக்களுக்கும் அதைவிட மேலாக படைத்த இறைவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்ற நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும். மக்கள்நலன் முதன்மையாக இருக்கும் பட்சத்தில் பதவியாளர்கள் சேவை உணர்வோடும், அன்போடும் நடந்து கொள்வார்கள்.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: “உங்களின் தலைவர்களில் சிறந்தவர்கள், அவர்களை நீங்கள் அன்பு கொள்வீர்கள், அவர்கள் உங்களை அன்பு கொள்வார்கள்”.

    இத்தகைய ஒழுக்கங்களோடு ஆட்சியாளர்கள், பொது மக்கள் செயல்படும் பொழுது சமூகத்தில் அமைதியும், வளர்ச்சியும் செழித்தோங்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இதற்கு முன்னுதாரணமாக நபிகள் நாயகத்திற்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.

    ஆகவேதான் அண்ணல் காந்தி அடிகளார் கலீபா உமர் அவர்களின் ஆட்சியை விரும்பினார்கள். ‘இந்திய நாடு உயர வேண்டும் என்றால், கலீபா உமரைப் போன்ற நேர்மையான ஆட்சியாளர் ஆள வேண்டும்’ என்று ஆசைப்பட்டார்கள்.

    நாட்டில் அமைதி, பொருளாதார செழிப்பு, பெண்களின் பாதுகாப்பது, தொழில் வளர்ச்சி, பன்முக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பதவியில் நல்லவர்கள் வருவதும், அத்தகைய தலைமுறையை உருவாக்குவதும் நம் அனைவரின் தலையாய கடமை ஆகும்.

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை
    Next Story
    ×