search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி ஜெயந்திநாதருடன் போர் புரிய சூரபத்மன் நேருக்கு நேராக வந்தபோது எடுத்த படம்.
    X
    சுவாமி ஜெயந்திநாதருடன் போர் புரிய சூரபத்மன் நேருக்கு நேராக வந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகபெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

    தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவில் கடற்கரை முகப்பிற்கு வந்தான். மாலை 4.55 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரை முகப்பில் எழுந்தருளினார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகனான தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போர் புரிவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டியவாறு வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே நின்று போரிட தயாரானான். மாலை 5.13 மணிக்கு தாரகாசூரனை வேல் கொண்டு முருகபெருமான் வதம் செய்தார்.

    தொடர்ந்து கன்மமே உருவான சிங்கமுகாசூரனும் முருகபெருமானுடன் போரிடுவதற்காக உக்கிரத்துடன் வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை வலம் வந்து நேருக்கு நேர் போர் புரிய தயாரானான். மாலை 5.22 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

    சகோதரர்களின் இழப்பால் ஆத்திரம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மனும் தனது படைவீரர்களுடன் முருகபெருமானுடன் போரிட வேகமாக வந்தான். முருகபெருமானை 3 முறை சுற்றி போரிட வந்த சூரபத்மனையும் மாலை 5.30 மணிக்கு சுவாமி வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுற்றி வந்து வட்டமிட்டது.

    இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

    தாரகாசூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகியோர் போர் புரிய வந்ததையும் படத்தில் காணலாம்.

    பின்னர் சினம் தணிந்த முருக பெருமானுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளினார். அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு சாயாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் இந்து சமய அறநிலைய துறை ஆணையாளர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, தாசில்தார் சுவாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. மேலும் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    சூரசம்ஹாரம் நடைபெற்ற கடற்கரை நுழைவு பகுதியில் 3 பக்கமும் தகரத்தை கொண்டு அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வராத வகையில் நாழிக்கிணற்றில் இருந்து கடல் நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் போலீசார் கண்காணிப்பு கோபுரத்தில் நின்றபடி கண்காணித்தனர்.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சூரனை வதம் செய்த முருகபெருமானை பெரும்பாலான பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே தொலைக்காட்சிகளிலும், இணையதளம் மூலமாகவும் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு’ அரோகரா போன்ற பக்தி கோஷங்களை முழங்கியவாறு மனமுருக தரிசித்தனர்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மற்றும் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 56 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருவிழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்றும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×