search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவில்
    X
    திருச்செந்தூர் கோவில்

    திருச்செந்தூர் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம்

    8-ம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு பட்டினப்பிரவேசம், 9 மற்றும் 10-ம் திருவிழாவான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஊஞ்சல் வைபவம் 12-ம் திருவிழாவான திங்கட்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் யாக சாலையில் தீபாராதனை, தொடர்ந்து சுவாமி தங்க சப்பரத்தில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், மாலையில் சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. 2-ம் ஆண்டாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இணை ஆணையர் குமரதுரை உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான இன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    8-ம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு பட்டினப்பிரவேசம், 9 மற்றும் 10-ம் திருவிழாவான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஊஞ்சல் வைபவம் 12-ம் திருவிழாவான திங்கட்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×