என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
    ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்னம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி உடலையும் குறிக்கும், சந்திரனானது ஏதாவது ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும். அதுவே பிறந்த ஜென்ம நட்சத்திரமாகும்.ஒவ்வொரு ராசியில் உள்ள நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதிகள் உள்ளனர். அந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு யார் அதிபதியோ அவர் ஜாதகரின் உடலை இயக்குவார். கர்மவினைக்கு ஏற்றவாறு உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு காரணமாக திகழ்பவர்கள் ஜென்ம நட்சத்திர அதிபதிகள்.

    இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.

    எனவே ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் அந்த அதிதேவதையின் கோவிலுக்கு சென்று ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக விசேஷ அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை செய்தல் நன்று. வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோமம் செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். வாய்ப்பு இல்லாதவர்கள் குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனையாவது செய்ய வேண்டும்.

    ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. உள்ளுணர்வு சிறப்பாக இயங்கி தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

    பலர் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இது தவறு. அவர் பிறந்த மாதத்தின் அதே நட்சத்திரத்தில் கொண்டாடுவது தான் நல்லது. அப்போது தான் கிரகங்கள், நட்சத்திரங்கள் அவர் பிறப்பின் போது இருந்தது போலவே அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதிதெய்வம் அல்லது உபாசனை தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100 சதவீதம் வெற்றி நிச்சயம்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்குஉரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே? அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

    பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன. சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது. ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

    திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது

    சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.
    திருமங்கையாழ்வார் திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
    இந்த திவ்ய திருத்தலத்தை ஆழ்வார்கள் எவரும் மங்களாசாசனம் செய்யவில்லை என்று பலர் காலகாலமாகக் கருதி வந்திருந்த போதிலும் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ‘வெருவாதாள்’ என்று தொடங்கும் பத்து பாசுரங்களிலும், ‘ஏழைஏதலன்’ எனத் தொடங்கும் பத்து பாசுரங்களிலும், திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மேலும் வைணவ ஆச்சாரியார் ஸ்ரீவேதாந்த தேசிகரும் நிபாச திலகத்தில் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார் என்று நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ஆழ்வார்கள் திருக்கோவில்களில் இருந்தே பாடியதால் 108 திவ்ய தலங்களில் இத்திருத்தலம் இடம்பெறவில்லை.

    திருமங்கையாழ்வார் திருமொழி
    ஐந்தாம் திருமொழி வெருவாதாள்
    1.வெருவாதாள் வாய்வருவி வேங்கடமே!
    வேங்கடமே! யென்கின்றாளால்
    மருவாளால் வெண்குடங்கால் வாணெடுங்கண
    துயில் மறந்தாள் வண்டார் கொண்ட,
    உருவாளன் வானவர்தம் உயிரால் ஒலி திரை
    நீர் பௌவங் கொண்ட
    திருவாளன் என்மகளை செய்தனகள்
    எங்ஙனம் நான் சிந்திக்கேனே
    2.கலையாளா அகலல்குல் கனவளையும் கையாளா
    என்செய்கேன் நான்?
    விளையாளா அடியேனை வேண்டுதியோ?
    வேண்டாயோ? என்னும் மெய்ய
    மலையாளன் வானவர்தம் தலையாளன்
    மராமரம் ஏழுஎய்த என்றிச்
    சிலையாளன் என்மகளை செய்தனகல்
    எங்ஙனம் நான் சிந்திக்கேனே?
    3.மானாய மென்நோக்கி வானெடுங்கன்
    நீர்மல்கும் வளையும் சோறுடம்
    தேனாய நறுந்துளாய் அலங்கலின்
    திறம் பேசி உறங்கான் காண்மின்
    கானாயன் கடமலையில் தயிருண்டு
    நெய்பருக நந்தன் பெற்ற
    ஆனாயன் என்மகளை செய்தனகள்
    அம்மனைமீர்! அறிகிலேனே!
    4.தாய்வாயிற் சொற்கேளான் தன்னாய்த்
    தோடணையாள் தடமென்கொங்கை
    யே ஆரச் சாந்தணியாள் எம்பெருமான்
    திருவரங்கம் எங்கே என்னும்
    பேய்மாய முலையுண்டு இவ்வுலகுஉண்ட
    பெருவயிற்றின் பேசில் நங்காய்
    மாமாயன் என்மகளை செய்தனகள்
    மங்கையீர்! மதிக்கிலேனே!
    5.பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயற்கண்
    மைஎழுதாள் பூவை பேணாள்,
    ஏன் அறியாள் எத்தனையும் எம்பெருமான்
    திருவரங்கம் எங்கே? என்னும்
    நான் மலரால் நாயகனாய் நாமறிய
    வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
    ஆண்மகனாய் என் மகளை செய்தனள்
    அம்மனைமீர்! அறிகிலேனே.
    ‘‘திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்’
    திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
    எட்டாம் திருமொழி - ஏழையேதலன்.

    1.ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி
    மற்றவர்க்கு இன்னருள் சுரந்து
    மாழை மான்மட நோக்கி உன்தோழி எம்பி
    உம்பி என்று ஒழிந்திலை உகந்து
    தோழன் நீயென கிங்கொழி என்ற சொற்கள்
    வந்தடியேன் மனத்து இருந்திட
    ஆழிவண்ண! நுன் அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    2.வாதமாமகன் மர்க்கடம் விலங்கு
    மற்றோர் சாதி என்று ஒழிந்தலை உகந்து
    காதலாதரம் கடலினும் பெருகச் செய்த
    கவினுக்கு இல்லை கைம்மாறு என்று
    கோதில் வாய்மையினாயடு உடனே உன்பனா
    என்ற ஒண்பொருள் எனக்கும்
    ஆதல் வேண்டும என்ற அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    3.கடிகொள் பூம்பொழிற் காமரு பொய்கை
    வைகு தாமரை வாங்கிய வேழம்
    முடியும் வண்ணமோர் முழுவலி முதலைபற்ற
    மற்றது நின்சரண் நினைப்பக்
    கொடிய வாய்விலங்கு இன்னுயிர் மலங்கக்கொண்ட
    சீற்றம் ஒன்று உண்டுள்ளது அறிந்து உன்
    அடியனேனும் வந்து அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    4.நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம்
    வெருவி வந்து நின்சரணெனச் சரணா
    நெஞ்சிற் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு
    அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
    வெஞ்சொலாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய
    செய்வனுள அதற்கு அடியேன்
    அஞ்சி வந்துநின் அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    5. மாக மாநிலம் முழுதும்வந்து இறைஞ்சும்
    மலரடி கண்ட மாமறையாளன்
    தோகை மாமயில் அன்னவரின்பம் துற்றிலாமை
    இலத்த இங் கொழிந்து
    போகம் நீயெய்திப் பின்னுநம் மிடைக்கே
    போதுவாய் என்ற பொன்னருள் எனக்கு
    மாக வேண்டுமென்ற அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கோனியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    கோவையில் பிரசித்திபெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. 22-ம் தேதி இரவு கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதையொட்டி கோனியம்மன் தங்க கவசத்தில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கோனியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோனியம்மனை தரிசித்து சென்றனர்.
    தேய்பிறை அஷ்டமியையொட்டி பட்டிவீரன்பட்டி சுயம்புநாகேஸ்வரியம்மன் சன்னதியில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின்போது சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி பக்தர்களால் வழங்கப்பட்ட சந்தனம், மஞ்சள் திருமஞ்சனபொடி, பால், தேன் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டு சென்றனர்.

    இதுபோல தேய்பிறை அஷ்டமியையொட்டி பட்டிவீரன்பட்டி சுயம்புநாகேஸ்வரியம்மன் சன்னதியில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் சாவடி பஜார் காளியம்மன் கோவில் சன்னதி வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    ராமேசுவரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை நிறுவ பூமிபூஜை நடந்துள்ளது. ரூ.100 கோடியில் அமையும் இந்த சிலைக்கான பணிகள் இன்னும் 2 வருடத்தில் முழுமையாக முடியும்..
    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்

    இந்த நிலையில் ராமேசுவரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.

    வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பளே, ஐ.ஏ.எஸ் அதிகாரி சவுபே ஆகியோர் செங்கல் எடுத்து வைத்து, பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஆடலரசன், பாரதிராஜா, தாசில்தார் அப்துல் ஜபார், என்ஜினீயர் முருகன், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமரின் பாதம் பட்ட ராமேசுவரம் கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாகும். இந்தியாவில் 4 எல்லைப் பகுதிகளிலும் பிரமாண்ட அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அசாம் மற்றும் இமாசல பிரதேசம் மாநிலங்களில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது ராமேசுவரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை நிறுவ பூமிபூஜை நடந்துள்ளது. ரூ.100 கோடியில் அமையும் இந்த சிலைக்கான பணிகள் இன்னும் 2 வருடத்தில் முழுமையாக முடியும்..

    அடுத்தகட்டமாக குஜராத் மாநிலத்திலும் இதே போன்று அனுமன் சிலை நிறுவப்படும். ராமேசுவரம் வரக்கூடிய அனைத்து பக்தர்களும் வந்து தரிசனம் செய்யும் வகையில் இந்த சிலை அமைக்கப்படும்..

    இவ்வாறு அவர் கூறினார்.

    அனுமன் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஹரிஸ் சந்தர் நந்தா கல்வி அறக்கட்டளை செய்துள்ளது.
    கேரளா மாநிலம் மகேஸ்வரம் சிவபார்வதி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள, 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம்தான் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது.
    கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, செங்கல் என்ற ஊர். இங்கு மகேஸ்வரம் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் இரண்டு பிரமாண்ட யானைகள் நம்மை வரவேற்கின்றன. அதன் நடுவே திருக்கோவிலை நோக்கியபடி பிரமாண்டமான நந்தி சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்திற்குள் 12 ஜோதிர்லிங்கங்களையும், விநாயகரின் 32 வடிவங்களையும் தரிசிக்க முடியும்.

    இங்கு அமைக்கப்பட்டுள்ள, 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம்தான் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது. இந்த சிவலிங்கத்தின் முன்பாக உள்ள பிரமாண்டமான இரண்டு திரிசூலங்களும், மிகப்பெரிய உடுக்கையால் இணைக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலேயே மிகவும் உயரமான இத்தல சிவலிங்கம், ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளது. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிவலிங்க கட்டுமானப் பணி முடிவடைவதற்கு 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த சிவலிங்கத்தின் உயரம் மட்டுமல்ல, அதன் கட்டமைப்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியது.

    இந்த சிவலிங்கத்தை அமைப்பதற்காக, காசி, கங்கோத்ரி, ரிஷிகேஷ், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பத்ரிநாத், கோமுக், கைலாஷ் ஆகிய பல புண்ணிய தலங்களில் இருந்து நீர், மண் போன்றவை கொண்டுவரப்பட்டு, கட்டுமானப் பொருட்களுடன் கலக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த சிவலிங்கமும், தெய்வீகத் தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

    சிவலிங்கத்தை நாம் உள்ளே சென்று தரிசிக்க முடியும். 8 தளங்களைக் கொண்டதாக இந்த சிவலிங்கத்தின் உட்பகுதி இருக்கிறது. உட்புறத் தோற்றம், ஒரு குகைக்குள் பயணிப்பது போன்ற பிரமிப்பை நிச்சயம் உருவாக்கும். சிவலிங்கத்தின் உள்ளே, சப்தரிஷிகளின் சிலைகள், 108 சிவலிங்கங்கள், மற்றும் உட்புறச் சுவர் முழுவதும் சிவபெருமானின் 64 வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் பக்தர்கள் தியானம் செய்யும் வகையிலான இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

    தியானத்தின் மூலம் மனிதர்கள் இறைவனை அடையலாம் என்பதை வலியுறுத்தும் நோக்கில், இந்த சிவலிங்கத்தின் முதல் ஏழு தலங்களும் ஏழு சக்கரங்களைக் குறிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலத்திலும் அந்தந்த சக்கரங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இறுதியாக எட்டாவது தளத்தில், சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்த நிலையில் கயிலாய மலையில் இருந்து காட்சி தருவது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது பரவசத்தின் உச்சநிலையாகும்.
    14 ஆண்டுகள் வனவாசம் செல்ல ஒப்புக்கொண்ட ராமபிரான், தன்னுடைய சகோதரன் லட்சுமணன், மனைவி சீதாதேவி ஆகியோருடன் காட்டிற்குள் சென்றார்.
    14 ஆண்டுகள் வனவாசம் செல்ல ஒப்புக்கொண்ட ராமபிரான், தன்னுடைய சகோதரன் லட்சுமணன், மனைவி சீதாதேவி ஆகியோருடன் காட்டிற்குள் சென்றார். அங்கு ஒரு நதியைக் கடக்க அவர்களுக்கு உதவிபுரிய வந்தவர், மீனவரான படகோட்டும் பணியைச் செய்து வந்த குகன். நதியைக் கடந்து அக்கறைக்குச் சென்றதும் ராமபிரான், “குகா.. நீ எங்களுக்கு உதவி செய்திருக்கிறாய். இப்போது உனக்கான கூலியைக் கொடுக்க எங்களிடம் எந்த பொருளும் இல்லை” என்றார்.

    அதைக் கேட்ட குகன், “ராமா.. ஒரே தொழில் செய்பவர்கள், தங்களுக்குள் கூலி வாங்குவது முறையாகாது” என்றார்.

    வியப்பு மேலிட குகனைப் பார்த்த ராமர், “ஆனால்.. நான் படகோட்டி இல்லையே” என்றார்.

    அதற்கு பதிலளித்த குகன், “ராமரே.. இந்த ஆற்றை கடக்கும் படகுதான் என்னிடம் இருக்கிறது. ஆனால் நீங்களோ ‘பிறவி’ என்னும் பெருங்கடலையே கடக்க உதவுபவராக இருக்கிறீர்கள். அந்த வகையில் நீங்களும் படகோட்டிதானே” என்றார்.

    குகனை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டார், ராமபிரான்.

    நீங்களும் அறிவால் இல்லாமல் ஞானத்தால் சிந்தித்திருந்தால், நீங்களும் கூட ஒரே மாதிரியான மனநிலையை எட்டியிருக்கலாம்.
    ஆன்மிகப் பணியோடு, சமூக தொண்டுகளையும் இணைத்தே செய்தவர், விவேகானந்தர். இவரது ஆன்மிக குருவாக இருந்தவர், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர். இவரிடம் ஏராளமான இளைஞர்கள், ஆன்மிக பாதையில் செல்ல சீடர்களாக இணைந்திருந்தனர்.

    ஒரு நாள் அந்த சீடர்களில் மூன்று பேர், ராமகிருஷ்ணரை தனிமையில் சந்தித்து ஒரு விளக்கம் கேட்டனர். அதாவது, “குருவே.. எங்களுக்கு ஒரு சந்தேகம் வலுத்துள்ளது. ‘அறிவு’, ‘ஞானம்’ ஆகிய இரண்டும் வேறு வேறா? அல்லது இரண்டுமே ஒன்றுதானா? என்பதை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்” என்றனர்.

    அந்த மூன்று சீடர்களையும் அங்கேயே இருக்கும்படி சொன்ன ராமகிருஷ்ணர், அருகில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பூட்டினார். சிறிது நேரம் கழித்து அறைக்குள் இருந்து வெளிப்பட்ட அவர், தன்னுடைய சீடர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவராக அந்த அறைக்குள் செல்லுங்கள். அறைக்குள், மூன்று டம்ளர்களில் பால் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை மட்டும் நீங்கள் குடித்து விட்டு வெளியே வர வேண்டும்” என்றார்.

    முதலில் ஒரு சீடன் உள்ளே சென்றான். அங்கே தங்க டம்ளர், வெள்ளி டம்ளர், வெண்கல டம்ளர் என்று மூன்று டம்ளர்களின் பால் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட சீடன், தங்க டம்ளரில் இருந்த பாலை எடுத்து பருகினான். தங்க டம்ளரில் இருந்த பாலை அருந்தியதால் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.

    இரண்டாவது மாணவன் உள்ளே சென்றபோது, வெள்ளி மற்றும் வெண்கல டம்ளர்களில்தான் பால் இருந்தது. தங்க டம்ளர் காலியாக இருந்தது. தங்க டம்ளரில் இருந்த பால் தனக்கு கிடைக்கவில்லையே என்று கொஞ்சம் வருந்தினாலும், அதற்கு அடுத்த நிலையில் மதிப்பளிக்கப்படும் வெள்ளி டம்ளரில் இருந்த பாலை பருகி விட்டு திருப்தியோடு வெளியே வந்தான்.

    இப்போது மூன்றாவது சீடன் உள்ளே சென்றான். அவனுக்கு காலியாக இருந்த தங்கம் மற்றும் வெள்ளி டம்ளர்களையும், பால் இருந்த வெண்கல டம்ளரையும் பார்த்து அழுகையே வந்துவிட்டது. ‘எனக்கு மட்டும் வெண்கல டம்ளரில் உள்ள பால்தானா?. நான் அவ்வளவு மட்டமா? என் நிலை இப்படி தாழ்ந்து விட்டதே?’ என்று நினைத்தவன், வெண்கல டம்ளரில் இருந்த பாலை பருகி விட்டு சோகத்தோடு வெளியே வந்தான்.

    ராமகிருஷ்ணர் மூன்று சீடர்களையும் பார்த்து, “அனைவரும் பால் குடித்தீர்களா?” என்று கேட்டார். முதல் சீடன் மகிழ்ச்சியுடன், “ஆம் குருவே.. நான் மிகவும் கொடுத்து வைத்தவன், எனக்கு தங்க டம்ளரில் இருந்த பால் கிடைத்தது” என்றான். அடுத்த சீடன், “எனக்கும் மகிழ்ச்சிதான் குருவே.. தங்க டம்ளர் இல்லாவிட்டாலும், வெள்ளி டம்ளரில் உள்ள பாலை பருகிறேன்” என்று கூறினான். மூன்றாவது சீடனுக்கு அழுகை பீறிட்டது. “நான் மிகவும் துரதிஷ்டசாலி குருவே. எனக்கு வெண்கல டம்ளரில் இருந்த பால்தான் கிடைத்தது” என்று பதிலளித்தான்.

    இப்போது குரு அவர்களிடம் கூறினார். “உங்கள் மூவருக்குமே, குங்குமப்பூ, ஏலக்காய் கலந்த பால்தான் கொடுக்கப்பட்டது. அதன் சுவையும், குணமும் ஒரேபோல்தான் இருக்கும் என்பதை யோசிக்க உங்கள் மனம் ஒப்பவில்லை. மாறாக, தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று டம்ளர்களின் மதிப்பை பற்றியே யோசித்தீர்கள். நீங்கள் பாத்திரத்தில் இருக்கும் பண்டத்தை விட்டு விட்டு, பாத்திரத்தையே பார்த்திருக்கிறீர்கள்.

    பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சிகொள்வது அறிவு. அதனுள் இருக்கும் பண்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைவதுதான் ஞானம். ஞானிகள் பாத்திரங்களை விடுத்து, அதில் இருக்கும் பயன் கொடுக்கக்கூடிய பண்டத்தைப் பற்றியே சிந்திப்பார்கள். நீங்களும் அறிவால் இல்லாமல் ஞானத்தால் சிந்தித்திருந்தால், நீங்களும் கூட ஒரே மாதிரியான மனநிலையை எட்டியிருக்கலாம்” என்றார்.
    ஸ்ரீரெங்கநாதர் சுவாமி ஆதிசேஷன் என்று அழைக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது காட்சி தருகிறார்.
    ஸ்ரீரெங்கநாதர் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள மூலவரின் திருப்பாதத்திற்கு நேராக சன்னதிக்கு வெளிப்புறமாக இந்த திருவடி அமைந்துள்ளது. எனவே இந்த திருவடியை தொட்டு வணங்கினால் மூலவர் திருப்பாதத்தை வணங்கும் பலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஸ்ரீரங்க நாதப்பெருமாள்:

    ஸ்ரீரெங்கநாதர் சுவாமி சுதைரூபமான திருமேனி கொண்ட படுக்கை திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். ஆதிசேஷன் என்று அழைக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது காட்சி தருகிறார். அந்த நாகப்பாம்பு தன் படத்தால் குடைபிடிக்க பெருமாள் புன்னகை பூத்து கிழக்கு பார்த்தபடி ஸ்ரீதேவியின் மடியின் மீது படுத்துள்ளார்.

    பெருமாளின் இடது திருவடி பூமாதேவியின் மடியின் மீதும், வலது திருவடி பாம்பின் வால் சுழன்று உள்ள பகுதியின் மீது உள்ளது. வலது கையை சிரசின் பக்கம் வைத்து அபயமுத்திரையுடன் காட்சி அளிக்கிறார். வலது கையை கருடாழ்வார் உட்கார்ந்து தாங்கி கொள்கிறார்.

    இடது திருகையால் பெருமாள் தன் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்ம தேவனுக்கு நான்கு வேதங்களையும், ஞான முத்திரை கொண்டு உபதேசம் செய்கிறார். திருவரங்கநாதப் பெருமாளின் பெரிய திருமேனியை தரிசிக்கும் பக்தர்கள் இவரை ‘பெரிய பெருமாள்’ என்று கூறுவார்கள்.
    இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது.
    புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

    சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.

    தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக்கினார்.

    சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

    திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல்;

    இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

    பஞ்சபூத தலம்  - நீர்த்தலம்;

    திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில்அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரிவறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

    திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.

    அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்கிரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

    அம்பிகை வழிப்பட்ட லிங்கம்;

    இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களில் இருந்த நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

    குபேர லிங்கம்;

    மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிபட்டதால் தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சன்னதி ஆனது.

    பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

    ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமாகி நம்மை எல்லாம் ஆண்டு வரும் கோதை ஆண்டாள் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் இருந்து நமக்கு தரிசனம் அளிக்கிறாள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெருமாளுக்கு பூக்களையும் திருத்துழாயையும் பறித்து மாலை கட்டி சாத்தும்பணி செய்து வருபவர் விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்ட பெரியாழ்வார். அவர் ஒருநாள் பூக்களை பறித்துக் கொண்டு திருத்துழாய் செடிகளுக்கு மத்தியில் சவுந்தர்ய வடிவில் ஒரு பெண் குழந்தையை கண்டு எடுத்தார். அதைக் கொண்டு வந்து கோதை என்ற பெயர்சூட்டி வளர்த்து வந்தார். சிறு வயதில் இருந்தே கோதை பெருமாளை பாடி துதிக்க ஆரம்பித்தாள். பெருமாளுக்கு சாத்தும்பணி செய்வதற்காக தொடுத்து வைக்கப்பட்டிருந்த மாலையை கோதை சூடி அழகுபார்த்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அது முதல் தினசரி பெரியாழ்வாருக்கு தெரியாமல் மாலைகளை சூடி அழகு பார்த்தாள். ஒருநாள் பட்டாடை உடுத்தி எல்லா அணிகலன்களோடும் மாலையையும் அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தாள்.

    அப்போது வெளியே சென்றிருந்த பெரியாழ்வார் வந்துவிட்டார். கோதை திருக்கோலத்தையும் பெருமாளுக்கு சாத்துவதற்கு வைக்கப்பட்டு இருந்த மாலையை அவள் அணிந்திருப்பதையும் பார்த்து விட்டு, ‘‘என்ன காரியம் செய்துவிட்டாய் மகளே? பெருமாளுக்கு சாத்தும்பணி செய்வதற்கு வைத்திருந்த மாலையை அணிந்து வீணாக்கி பெரிய அபச்சாரம் செய்து தெய்வ குற்றத்திற்கு ஆளாகிவிட்டாயே’’ என்று வேதனைப்பட்டார்.

    கோதை வருந்தி, ‘‘அப்பா நான் சிறு வயது முதல் பெருமாளையே நினைத்து துதித்து வருகிறேன். அவர் மீதுள்ள பாசத்தால் இப்படி செய்து விட்டேன். இனி அப்படி செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்று வேண்டினாள். மாலைகள் வீணாகி விட்டதால் அந்த நினைவிலேயே இருந்துவிட்டார் பெரியாழ்வார். அன்று முழுவதும் கோவிலுக்கு செல்லாமல் இருந்துவிட்டார்.

    இரவு பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி ஏன் இன்று எனக்கு மாலை கட்டிக் கொண்டு வந்து சாத்தும்பணி செய்யவில்லை? என்று கேட்டார். பெரியாழ்வார் நடந்ததை கூறினார். பெருமாளோ கோதை சூடிக் கொடுத்த மாலையையே கொண்டு வந்து எனக்கு சாத்தும்பணி செய்யுங்கள். அதுவே எனக்கு மிகவும் விருப்பமானது என்று கூறினார். கனவு களைந்து எழுந்த பெரியாழ்வார் கோதையை கட்டித்தழுவி கண்கள் அருவியாக கண்ணீர் சிந்தினார். இனி நீ சூடி கொடுத்த மாலைகளையே பெருமாளுக்கு சாத்தும்பணி செய்வேன் என்றார். அது முதல் அப்படியே செய்து வந்தார். கோதையும் பெருமாள் மீது நிறையப் பாசுரங்கள் பாடினாள்.

    சில காலங்கள் சென்றபின் பருவமடைந்த கோதையின் திருமணத்திற்காக வரனை தேடினார். அதுகண்ட கோதை அப்பா நான் பெருமாளையே மனதில் நினைத்து வாழ்கிறேன். அவரை தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறி விட்டாள். இதை கேட்ட பெரியாழ்வார் செய்வது அறியாமல் தவித்தார். பெருமாளிடம் சென்று முறையிட்டு அழுதார். பெருமாள் அவர் முன் தோன்றி திருவரங்கம் என்று அழைக்கப்படும் உத்தரங்கம் கோவிலுக்கு கோதையை அலங்கரித்து அழைத்து வரும்படி கூறினார்.

    இந்த விஷயத்தை திருவரங்க ஷேத்திர கைங்கர்யர்களிடம் கூறி அலங்காரங்களுடன் வரும் கோதையை பூரண கும்ப மரியாதையுடன் எதிர் கொண்டு அழைத்து வரும்படி கூறினார். பெரியாழ்வார் அலங்காரங்களுடன் கோதையை அழைத்து வர திருவரங்கம் கோவில் கைங்கர்யக்காரர்களும் எதிர்கொண்டு பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து சென்று ஸ்ரீரங்கநாதர் சன்னதியில் சேர்த்தார்கள். கோதை தனது பாதமலரை சன்னதியில் பதித்ததுமே ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமானாள்.

    எல்லோரும் இந்த காட்சியை தரிசித்து மகிழ்ந்தார்கள். பெரியாழ்வார் சில காலம் அங்கு தங்கி ஸ்ரீரங்கநாதரை பூஜித்து வந்தார். பிறகு ஸ்ரீரங்கநாதர் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று தொண்டு செய்யும்படி கூறினார்.

    பெரியாழ்வாரும் அவ்வாறே சென்று வந்தார். ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமாகி நம்மை எல்லாம் ஆண்டு வரும் கோதை ஆண்டாள் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் இருந்து நமக்கு தரிசனம் அளிக்கிறாள். இந்த சன்னதி இரண்டாவது வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் உள்ளது மிகவும் சிறப்பானது. இது போல் வேறு எந்த கோவில்களிலும் கிடையாது. அந்த அளவிற்கு ஆண்டாளுக்கு இந்த கோவிலின் பங்கு தரப்பட்டு வருகிறது.
    ×