
அப்போது வெளியே சென்றிருந்த பெரியாழ்வார் வந்துவிட்டார். கோதை திருக்கோலத்தையும் பெருமாளுக்கு சாத்துவதற்கு வைக்கப்பட்டு இருந்த மாலையை அவள் அணிந்திருப்பதையும் பார்த்து விட்டு, ‘‘என்ன காரியம் செய்துவிட்டாய் மகளே? பெருமாளுக்கு சாத்தும்பணி செய்வதற்கு வைத்திருந்த மாலையை அணிந்து வீணாக்கி பெரிய அபச்சாரம் செய்து தெய்வ குற்றத்திற்கு ஆளாகிவிட்டாயே’’ என்று வேதனைப்பட்டார்.
கோதை வருந்தி, ‘‘அப்பா நான் சிறு வயது முதல் பெருமாளையே நினைத்து துதித்து வருகிறேன். அவர் மீதுள்ள பாசத்தால் இப்படி செய்து விட்டேன். இனி அப்படி செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்று வேண்டினாள். மாலைகள் வீணாகி விட்டதால் அந்த நினைவிலேயே இருந்துவிட்டார் பெரியாழ்வார். அன்று முழுவதும் கோவிலுக்கு செல்லாமல் இருந்துவிட்டார்.
இரவு பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி ஏன் இன்று எனக்கு மாலை கட்டிக் கொண்டு வந்து சாத்தும்பணி செய்யவில்லை? என்று கேட்டார். பெரியாழ்வார் நடந்ததை கூறினார். பெருமாளோ கோதை சூடிக் கொடுத்த மாலையையே கொண்டு வந்து எனக்கு சாத்தும்பணி செய்யுங்கள். அதுவே எனக்கு மிகவும் விருப்பமானது என்று கூறினார். கனவு களைந்து எழுந்த பெரியாழ்வார் கோதையை கட்டித்தழுவி கண்கள் அருவியாக கண்ணீர் சிந்தினார். இனி நீ சூடி கொடுத்த மாலைகளையே பெருமாளுக்கு சாத்தும்பணி செய்வேன் என்றார். அது முதல் அப்படியே செய்து வந்தார். கோதையும் பெருமாள் மீது நிறையப் பாசுரங்கள் பாடினாள்.
சில காலங்கள் சென்றபின் பருவமடைந்த கோதையின் திருமணத்திற்காக வரனை தேடினார். அதுகண்ட கோதை அப்பா நான் பெருமாளையே மனதில் நினைத்து வாழ்கிறேன். அவரை தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறி விட்டாள். இதை கேட்ட பெரியாழ்வார் செய்வது அறியாமல் தவித்தார். பெருமாளிடம் சென்று முறையிட்டு அழுதார். பெருமாள் அவர் முன் தோன்றி திருவரங்கம் என்று அழைக்கப்படும் உத்தரங்கம் கோவிலுக்கு கோதையை அலங்கரித்து அழைத்து வரும்படி கூறினார்.
இந்த விஷயத்தை திருவரங்க ஷேத்திர கைங்கர்யர்களிடம் கூறி அலங்காரங்களுடன் வரும் கோதையை பூரண கும்ப மரியாதையுடன் எதிர் கொண்டு அழைத்து வரும்படி கூறினார். பெரியாழ்வார் அலங்காரங்களுடன் கோதையை அழைத்து வர திருவரங்கம் கோவில் கைங்கர்யக்காரர்களும் எதிர்கொண்டு பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து சென்று ஸ்ரீரங்கநாதர் சன்னதியில் சேர்த்தார்கள். கோதை தனது பாதமலரை சன்னதியில் பதித்ததுமே ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமானாள்.
எல்லோரும் இந்த காட்சியை தரிசித்து மகிழ்ந்தார்கள். பெரியாழ்வார் சில காலம் அங்கு தங்கி ஸ்ரீரங்கநாதரை பூஜித்து வந்தார். பிறகு ஸ்ரீரங்கநாதர் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று தொண்டு செய்யும்படி கூறினார்.
பெரியாழ்வாரும் அவ்வாறே சென்று வந்தார். ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமாகி நம்மை எல்லாம் ஆண்டு வரும் கோதை ஆண்டாள் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் இருந்து நமக்கு தரிசனம் அளிக்கிறாள். இந்த சன்னதி இரண்டாவது வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் உள்ளது மிகவும் சிறப்பானது. இது போல் வேறு எந்த கோவில்களிலும் கிடையாது. அந்த அளவிற்கு ஆண்டாளுக்கு இந்த கோவிலின் பங்கு தரப்பட்டு வருகிறது.