
ஸ்ரீரங்க நாதப்பெருமாள்:
ஸ்ரீரெங்கநாதர் சுவாமி சுதைரூபமான திருமேனி கொண்ட படுக்கை திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். ஆதிசேஷன் என்று அழைக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது காட்சி தருகிறார். அந்த நாகப்பாம்பு தன் படத்தால் குடைபிடிக்க பெருமாள் புன்னகை பூத்து கிழக்கு பார்த்தபடி ஸ்ரீதேவியின் மடியின் மீது படுத்துள்ளார்.
பெருமாளின் இடது திருவடி பூமாதேவியின் மடியின் மீதும், வலது திருவடி பாம்பின் வால் சுழன்று உள்ள பகுதியின் மீது உள்ளது. வலது கையை சிரசின் பக்கம் வைத்து அபயமுத்திரையுடன் காட்சி அளிக்கிறார். வலது கையை கருடாழ்வார் உட்கார்ந்து தாங்கி கொள்கிறார்.
இடது திருகையால் பெருமாள் தன் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்ம தேவனுக்கு நான்கு வேதங்களையும், ஞான முத்திரை கொண்டு உபதேசம் செய்கிறார். திருவரங்கநாதப் பெருமாளின் பெரிய திருமேனியை தரிசிக்கும் பக்தர்கள் இவரை ‘பெரிய பெருமாள்’ என்று கூறுவார்கள்.