
இந்த நிலையில் ராமேசுவரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.
வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பளே, ஐ.ஏ.எஸ் அதிகாரி சவுபே ஆகியோர் செங்கல் எடுத்து வைத்து, பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஆடலரசன், பாரதிராஜா, தாசில்தார் அப்துல் ஜபார், என்ஜினீயர் முருகன், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமரின் பாதம் பட்ட ராமேசுவரம் கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாகும். இந்தியாவில் 4 எல்லைப் பகுதிகளிலும் பிரமாண்ட அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அசாம் மற்றும் இமாசல பிரதேசம் மாநிலங்களில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ராமேசுவரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை நிறுவ பூமிபூஜை நடந்துள்ளது. ரூ.100 கோடியில் அமையும் இந்த சிலைக்கான பணிகள் இன்னும் 2 வருடத்தில் முழுமையாக முடியும்..
அடுத்தகட்டமாக குஜராத் மாநிலத்திலும் இதே போன்று அனுமன் சிலை நிறுவப்படும். ராமேசுவரம் வரக்கூடிய அனைத்து பக்தர்களும் வந்து தரிசனம் செய்யும் வகையில் இந்த சிலை அமைக்கப்படும்..
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமன் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஹரிஸ் சந்தர் நந்தா கல்வி அறக்கட்டளை செய்துள்ளது.