என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'.
    • இப்படத்தில் நடிகர் கமல் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், இதில் அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் 'புராஜெக்ட் கே' படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்து நடிகர் அமிதாப் பச்சன், வெல்கம் கமல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் இணைந்தது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப்பெரிதாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம்.



    நம் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த இயக்குனர் இதில் தலைமை வகிக்கிறார். என்னுடைய சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய இந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதற்கு முன் அமித் ஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல் முறை போலவே உணர்கிறேன்.



    இப்போதும் அமித் ஜி ஒவ்வொரு படத்திலும், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரது பாதையை தான் நானும் பின்பற்றுகிறேன். 'புராஜெக்ட் கே' படத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். திரையுலகில் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்து பார்த்தாலும், என்னுடைய முதன்மையான தன்மை, நான் ஒரு திரைப்பட ஆர்வலன் என்பதே. அனைத்து புது முயற்சிகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக அங்கீகரிப்பார்கள். 'புராஜெக்ட் கே' படத்திற்கு இது என்னுடைய முதல் கைதட்டலாக இருக்கட்டும். எங்கள் இயக்குனர் நாக் அஸ்வினின் இயக்கத்தில், ரசிகர்கள் மத்தியிலும் சினிமா உலகிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.




    • சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணா நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் விஜய் ஆண்டனி, ரம்யா பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்திருந்தார். கடந்த மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணா நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, ரம்யா பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, "இளைஞர்கள் போதை பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து, கடைசியில் சுயநினைவை இழக்கும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர். எனவே இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் " என்றார்.

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் பட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
    • இப்படத்தை தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார்.

    ரஜினிகாந்த் ஏற்கனவே நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்கான தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் ஆகஸ்டு மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இன்னும் சில தினங்களில் ரஜினி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது.



    இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து தனது 170-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. போலி என்கவுன்ட்டர் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராக இருப்பதாகவும், இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தனுஷ் பதிவிட்டுள்ளார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது. அதன்படி, கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் என்று தனுஷ் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 



    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'.
    • இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.



    இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத், லியோ படம் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், லியோ படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக அற்புதமானது. லோகேஷ் கனகராஜ் என்னுடைய மகன் மாதிரி. தளபதி விஜய்யுடனும் படக்குழுவினருடனும் நல்ல உறவை பகிர்ந்துக் கொண்டேன் என்று பகிர்ந்துள்ளார்.

    • நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு பிறகு சிம்பு படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இப்படத்திற்கு பிறகு சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு பிறகு சிம்புவின் 50வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்துக்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
    • இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார்.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 




    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    லியோ

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படம் இருவரின் திரைப்பயணத்திலும் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என்றும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜப்பான்' திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகளை நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ளதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனுராமசாமி.
    • இவர் இயக்கிய ’மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'.


    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தது.

    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் வெளியான நாளில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர். இப்படம் பல எதிர்ப்புகளை சந்தித்திருந்தாலும் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 410 கோடியை வசூல் செய்துள்ளது.

    இந்த நிலையில் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மும்பை காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் "கடந்த ஜூன் 16-ந்தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஆதிபுருஷ்' திரைப்படம் பகவான் ராமர், தேவி சீதா மற்றும் ராம பக்தரான அனுமான் ஆகியோரை வணங்கும் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் 

    மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முயல்வது ராமாயணத்தின் மீதான எங்கள் நம்பிக்கை குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ், எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் ராமாயணத்தை கேலி செய்யும் வகையில் கதைக்களத்தையும், வசனங்களையும், உடை அலங்காரங்களையும் மாற்றி அமைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

    இந்து மதம் மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் படத்தின் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு பரீட்சையமான ராமாயண கதையை 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் தங்கள் ரசனைக்கு ஏற்ப முற்றிலுமாக திரித்துள்ளனர். எனவே ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர் டி-சீரிஸ் பூஷன் குமார், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர் சுக்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.




    ×