என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து 'மாமன்னன்' படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது, மாமன்னன் ஒரு அரசியல் படம். நான் இப்போது படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம். இந்தப் படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்துள்ளேன். தற்சமயம் அப்படிப்பட்ட கேரக்டர்கள் தான் எனக்கு வருகிறது.

அடுத்த படம் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் வருகிறது. ஒவ்வொரு படத்திலும் முழு அர்ப்பணிப்புடன் நடிக்கிறேன். பிரபல டைரக்டர்கள் ராஜமவுலி, சங்கர் ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை. உதயநிதி நல்ல ஜாலியான மனிதர். படப்பிடிப்பு தளத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கலகலவென்று சிரித்த முகமாகவே இருப்பார். படப்பிடிப்பே ஜாலி பயணமாகவே இருந்தது. நல்ல விஷயங்களை இந்த படத்தில் கூறியுள்ளோம். என்று பேசினார்.
- ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வீரன்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த 2-ம் தேதி வெளியான படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக வெளியான இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து குழந்தைகளுக்கு சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இதில், 300 குழந்தைகள் கலந்து கொண்டு படத்தை கண்டு ரசித்தனர்.

வீரன் போஸ்டர்
இந்நிலையில், 'வீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
- உதயநிதி ஸ்டாலின் 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, மாமன்னன் முழுக்க முழுக்க அரசியல் படம். அப்பா பையன் கதை. அப்பா கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளார். கதைப்படி வடிவேல் தான் ஹீரோ. நடிகர் வடிவேலை வைத்து படம் எடுக்க மாரி செல்வராஜ் மிகவும் பயந்தார். காரணம் அவர் வடிவேலுவின் தீவிர ரசிகர் ஆவார். நான்தான் சமாதானப்படுத்தி வடிவேலுவுடன் பேசி படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றேன்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். ஜாதி மறுப்பு உள்ள படம். தேவர் மகன் படத்தோடு இந்தப் படத்தை ஒப்பிட்டு பேசுவது தவறு. நல்ல விஷயங்கள் நிறைய இந்தப் படத்தில் கூறியுள்ளோம். கால சூழ்நிலைகள் மாறும். முதலில் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றேன். பின்பு நடித்தேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். அரசியலுக்கு வந்து அமைச்சராகிவிட்டேன். எனக்கான மக்கள் பணி காத்திருக்கிறது.
இது எனது கடைசி படம். இதற்குப் பிறகு படம் நடிப்பது பற்றி யோசிக்கக்கூட எனக்கு நேரமில்லை. மாமன்னன் படத்திற்கு பிறகு நடிகர் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சூட்டிங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. திடீரென முதல்-அமைச்சர் என்னை கூப்பிட்டு அமைச்சர் பதவியை ஏற்க சொன்னார்.
இந்த தகவலை உடனடியாக கமல் சாரிடம் பயந்து பயந்து சொன்னேன். உடனடியாக அவர் இதைவிட முக்கியம் உங்களுக்கு அமைச்சர் பதவிதான். உங்களுக்கான கதை என்றும் காத்திருக்கும். நீங்கள் அமைச்சராகுங்கள் என்று சொன்னார். கடைசி படமான மாமன்னனில் மன நிறைவுடன் நடித்துள்ளேன். நான் ஆசைப்பட்டு பண்ணிய படம் மாமன்னன்.
தாத்தா கலைஞரை பார்த்து நிறைய வியந்து உள்ளேன். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தினமும் அதிகாலை எழுந்து பேப்பர் படித்து, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அந்த செய்தி பற்றி கேட்பார். அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவார். மாவட்ட செயலாளர்களிடம் பேசுவார். உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். உடன் பிறப்பே என்று கடிதம் எழுதுவதுடன், அவரை பார்க்காத அரசியல் தலைவர்களே இல்லை. அவர் சாதித்ததில் ஒரு சதவீதமாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை பின்பற்றியது இல்லை.
அரசியல் வருகை குறித்து விஜய் இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதலில் அறிவிக்கட்டும். அரசியல் கொள்கைகளை தெரிவித்தால் விஜய்யை ஆதரிப்பதா? வேண்டாமா என்று முடிவு செய்வோம். எனது மகன் இன்பநிதிக்கு இப்போதுதான் 18 வயது ஆகிறது. 18 வயதில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவது வராதது அவரது விருப்பம். அவரது சுதந்திரத்தில் நானும் எனது மனைவியும் தலையிடுவதில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் அஜித் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பேர்லே மானே.
- இவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தொகுப்பாளர், நடிகை, யூ டியூபர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பேர்லே மானே பின்னர் 'நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி', 'தி லாஸ்ட் சப்பர்', 'டபிள் பேரல்', 'பிரீத்தம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பேர்லே மானே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வலிமை' திரைப்படத்தில் கிறிஸ்டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் அறியப்பட்டார்.

இந்நிலையில், நடிகை பேர்லே மானே வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதாவது , கேரளாவில் பிரபல யூ டியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நடிகை பேர்லே மானே வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. மாலைவரை தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு விழிப்புணர்வு அறிவுரை கூறினார்.
போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க காவல் துறை பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் கார்த்தி பேசியதாவது, இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர் என்பது வருத்தமாக இருக்கிறது.
நிறைய வீரம் இருக்கிறது, அந்த வீரத்தை எங்கு காண்பிப்பது இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா அதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று எல்லாரும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், இது கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போய் கொண்டிருக்கிறது. போதைபொருள் மூளையை மழுங்கடித்து விடுகிறது. சிந்தனை இல்லாமல் போய்விடுகிறது. நாம் பயன்படுத்தும் ஒயிட்னர் வரைக்கும் போதைபொருள் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் கடைகளில் கிடைக்கிறது. பள்ளி அருகே விற்கப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள்தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள்தான். ஆக, நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும்.மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்" என்று கூறினார்.
- இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரின் இறுதி ஊர்வலமும் நாளை அறந்தாங்கியில் நடைபெறுகிறது.
'ஈரநிலம்' படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். சின்னத்திரையில் பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி மாடம்' படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சாதி மற்றும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து போஸ் வெங்கட் மா.பொ.சி என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில், நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்துள்ளார்.
இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரணடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதனும் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இருவரின் இறுதி ஊர்வலமும் இன்று அறந்தாங்கியில் நடைபெறுகிறது.
- பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிரபலமானவர் சோபிதா துலிபாலா.
- இவர் தற்போது பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர் சோபிதா துலிபாலா. இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் அடிக்கடி காதல் வதந்திகளிலும் சிக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகை சோபிதா துலிபாலா தான் அழகாக இல்லை என்று விமர்சித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "படங்களில் நடிப்பதற்கு முன்பு நான் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது நான் வெள்ளையாக இல்லை. அழகாக இல்லை என்று எனக்கு முன்பே கூறினார்கள். அதற்காக நான் சோர்வடையவில்லை. எனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரங்களிலும் என்னுடைய முழு திறமையையும் காண்பித்தேன். அந்த சிறிய கதாபாத்திரங்கள் தான் நிறைய கற்றுக் கொடுத்தன" என்று கூறினார்.
- நடிகர் துல்கர் சல்மான் தற்போது 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- நடிகை குஷ்பு பல படங்களில் நடித்துள்ளார்.
- பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம்டைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு குஷ்பு அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாடலாசிரியர் சினேகன் பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
- இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். கடந்த 2000-ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு பாடல் எழுத தொடங்கிய இவர் கிட்டத்தட்ட 2500 பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான சினேகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நடிகை கன்னிகாவை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினேகன் பகிர்ந்த புகைப்படம்
இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சினேகன், "தனது அன்பான வாழ்த்துக்களால் எனது பிறந்த நாளை மிக சிறந்த நாளாக மாற்றி அமைத்த என் தலைவருக்கு கோடானக் கோடி நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.
- 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி .
- இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து ஆர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்த 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சித்தி இத்னானி அடிக்கடி முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் மனநலம் குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சித்தி இத்னானி, "நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம் உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் எனது மதியத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு 'என்ன மனசுப்பா' என்று ரசிகர்கள் வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.
- பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் சஞ்சய் தத்.
- இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். நட்சத்திர தம்பதிகளான சுனில் தத் மற்றும் நர்கீஸ் தத் என்பவரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 1981-ஆம் ஆண்டு வெளியான 'ராக்கி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டில் பல ஹீரோக்களுக்கு டப் கொடுப்பவராக உள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எப்' இரண்டாம் பாகத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரமான ஆதிரா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில், சஞ்சய் தத் வெறித்தனமாக மரக்கட்டை ஒன்றை வெட்டுகிறார். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அவர் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், மரத்தை வெட்டுவது சிறந்த உடற்பயிற்சி. உடலின் மேற்பகுதிக்கான உடற்பயிற்சி. இதை முயற்சி செய்து பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.






