என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜாவான் படம் எடுத்தார்.
    • கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார் அட்லீ.

    ராஜா ராணி, தெறி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அட்லீ. அதனைத்தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து அடுத்தடுத்து படங்கள் எடுத்து பட்டித் தொட்டி எங்கும் புகழ்பெற்றார். தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜாவான் படம் எடுத்தார். பான் இந்தியா படமான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

    இந்நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக இயக்குநர் அட்லீ அறிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார் அட்லீ. இந்த தம்பதிக்கு முன்னரே வீர் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தங்களது இரண்டாவது கர்ப்பம் குறித்து அறிவித்துள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  


    • குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும் ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது.
    • அறிமுக தமிழ் இயக்குநரின் திரைப்படம் பெர்லினேல் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

    76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஃபோரம் பிரிவில் 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' என்ற தமிழ் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கௌதம் இயக்கியுள்ளார், தமிழரசன் காளிதாஸ் தயாரித்துள்ளார். கூழாங்கல் படத்தில் நடித்த கருத்தடையான், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அறிமுக தமிழ் இயக்குநரின் திரைப்படம் பெர்லினேல் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. மணிரத்னத்தின் அலைபாயுதே (2001), அமீரின் பருத்திவீரன் (2008) மற்றும் பி.எஸ். வினோத்ராஜின் கொட்டுக்காளி (2024) ஆகியவற்றைத் தொடர்ந்து, மதிப்புமிக்க பிரிவில் திரையிடப்படும் நான்காவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    பெர்லினேல் தேர்வுக்குழு படம் குறித்து கூறியதாவது;

    "ஒரு இளைஞன் மரணமடைகிறான். ஈமச்சடங்குகள் நடக்கின்றன; ஆனால் துக்கம் அந்தளவுக்கு இல்லை. அந்த மரணம் பல விஷயங்களை உலுக்கி மாற்றுகிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும் ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது. என்ன ஒரு அற்புதமான அறிமுகத் திரைப்படம்!" எனக் குறிப்பிட்டுள்ளது. 



    பெர்லின் திரைப்பட விழாவில் படம் தேர்வானது குறித்து பேசியுள்ள இயக்குநர் ஆர்.கௌதம், 

    "2025-இல் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குப் பெருமிதம் அளிக்கிறது. என்னைப்போன்ற ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது, தற்போது தமிழ்நாட்டில் செழித்து வரும் துடிப்பான கலைச் சூழலைப் பிரதிபலிக்கிறது. அலைபாயுதே, பருத்திவீரன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களின் வரிசையில் எனது படமும் இடம்பெற்றிருப்பது, தெற்காசியாவிலிருந்து உலக மேடைக்கான தமிழ் சினிமாவின் பயணம் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறி வருவதைக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார். 

    76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறுகிறது. 

    • தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜன நாயகன் படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
    • இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது

    ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.

    இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வு காலை 11.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது. 

    • ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகிறது
    • மங்காத்தா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

    2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    இந்நிலையில், ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துது. இதனையடுத்து மங்காத்தா' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது.

    மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி அப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் வெங்கட்பிரகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் உருவானது.

    பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.

    தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் அடுத்து உருவான "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்தது.

    இந்த நிலையில், தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 23ந் தேதி வெளியாக உள்ளது.

    இதற்கிடையே இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹை பட்ஜெட் ஆக்சன் - ரொமான்ஸ் படமாக இப்படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.   

    யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார்.

    6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‛பராசக்தி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    11-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும்.

    11-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் ஆண்டுதோறும் பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்மபாணி விருது தமிழின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள எம்ஜிஎம் வளாகத்தில் உள்ள ருக்மிணி அரங்கில் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.

    விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவையும் வழங்கப்படும். 

    ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

    காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.

    இதே பாணியில் சுந்தர் சி விஷால் கூட்டணியில்  எடுக்கப்பட்ட மதகஜராஜா படமும் வரவேற்பை பெற்றது. ஆனால் 'ஆக்சன்' படம் சற்று சொதப்பியது.

    இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் விஷால் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்திற்கு ஆம்பள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.

    சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி மீண்டும் இணையும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ மூலம் அறிவித்துள்ளது.

    'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் சுந்தர் சி அதனை முடித்துவிட்டு விஷால் படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.   

    விஜய் ஆண்டனியின் அக்கா மகன் நடிக்கிறார்.

    விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.

    2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது.

    இப்படத்தின் புரோமோவை விஜய் ஆண்டனி இன்று வெளியிட்டுள்ளார்.

    காதலர்களான அஜய் திஷன் மற்றும் தனுஷா காதலைக் கைவிட எடுப்பதற்கான முயற்சியில் இருக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

    'பூக்கி' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார்.

    இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

    'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.  

    படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

    சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. தற்போது ஆஸ்கார் தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

    இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

    கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'எச காத்தா' ராசாதி ராசா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    இந்நிலையில் மை லார்டு படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது.  

    • 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

    பாம் படத்தை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.

    நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மங்களூரு, சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இதுவரை சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். படத்திற்கு கான்சிட்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாடல்கள், டிரெய்லர், ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


    ×