என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஏர்டெல் நிறுவனம் தினசரி டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. எனினும், இந்த சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் தேர்வு செய்யும் போது, கூடுதல் டேட்டா கூப்பன்களும் வழங்கப்படுகிறது.
ரூ. 359 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிரீபெயிட் சலுகை தற்போது ரூ. 309-க்கு கிடைக்கிறது. இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 2 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ. 599 பிரீபெயிட் சலுகைக்கும் ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ரூ. 549 விலையில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே சில அம்சங்கள் பற்றிய விவரங்கள் முந்தைய பீட்டா வெர்ஷன்களில் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில், பயனர்கள் தங்களின் அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அம்சம் கொண்டு பயனர் அருகில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி அறிந்து கொள்ளலாம். இதற்கென புது இண்டர்பேஸ் உருவாக்கப்படுகிறது. புது அம்சம் பிசினசஸ் நியர்பை (Businesses Nearby) என அழைக்கப்படுகிறது. இதனை கிளிக் செய்ததும், எந்த பிரிவில் தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது.

பயனர் தேர்வு செய்யும் பிரிவுக்கு ஏற்றவகையில் பதில்கள் பட்டியலிடப்படுகின்றன. சோதனை அடிப்படையில் இந்த அம்சம் சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இதே அம்சத்தை ஐ.ஒ.எஸ். தளத்தில் வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இம்மாத துவக்கத்தில் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் வெளியீட்டை தொடர்ந்து மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடல் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ எட்ஜ்30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

அதன்படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ்30 ப்ரோ பெயரில் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுதவிர மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்பெஷல் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து மோட்டோரோலா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2022 செப்டம்பர் முதல் ஐபோன்களை சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரேசில் நாட்டு வலைதளம் ஒன்றில் இதுபற்றிய தகவல் வெளியானது. எனினும், இந்த நடவடிக்கை 2023 ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் தான் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டெலிகாம் நிறுவனங்களிடம் இசிம் கொண்ட சாதனங்களை மட்டும் அறிமுகம் செய்ய தயாராக ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2022 இரண்டாவது காலாண்டு முதல் சில ஐபோன் 13 சீரிஸ் மாடல்களிலேயே சிம் கார்டு ஸ்லாட் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

ஐபோன் எக்ஸ்.எஸ். சீரிஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.ஆர். சீரிஸ் மாடல்களில் டூயல் சிம் வசதி உள்ளது. எனினும், இவற்றில் ஒரு சிம் கார்டு ஸ்லாட் மற்றொன்று இசிம் வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் பட்சத்தில் தற்போது சில நாடுகளில் வழங்கப்பட்டு வரும் டூயல் சிம் வசதி என்ன செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதைய தகவல்களின்படி ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் சிம் கார்டு ஸ்லாட் நீக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் வலைதளத்தில் புதிய ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கேரோல் என்ற நபர் தனக்கு அதிகம் பிடித்த ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம் செலவிட்டு ஆன்லைனில் வாங்கினார். ஆன்லைன் ஷாப்பிங் முடித்து ஐபோனுக்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவருக்கான கிடைத்தது. மிகுந்த ஆசையுடன் பார்சலை திறந்து பார்த்த டேனியல் அதனுள் டெய்ரி மில்க் சாக்லெட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுமட்டுமின்றி சாக்லெட்களுடன் கைகளால் கசக்கப்பட்ட காகிதங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தால் அதிக ஷாக் ஆன டேனியல், மற்ற ஆன்லைன் ஷாப்பர்களை போன்றே தான் ஏமாற்றப்பட்டதையும் டுவிட்டரில் ஆதங்கத்துடன் பதிவிட்டார். இத்துடன் தனக்கு அனுப்பப்பட்ட பார்சல் புகைப்படங்களையும் அவர் இணைத்து இருக்கிறார்.

"எனக்கு வரவேண்டிய ஐபோன் பார்செல் தாமதமாகி கொண்டே இருந்தது. மேலும் இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என ஐபோன் வினியோகம் பற்றிய தகவல்கள் பலமுறை மாற்றப்பட்டன. இதனால் நானே டெலிவரி செய்யும் கிடங்கிற்கு நேரடியாக சென்று ஐபோனை பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன். இதுபற்றி டெலிவரி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து, பின் அங்கு சென்று எனது பார்செலை பெற்றுக் கொண்டேன்."
"பார்செலை திறந்து பார்த்ததும் அதில் சாக்லெட்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனேன். இதுபற்றி டெலிவரி செய்யும் நிறுவனத்திற்கு தகவல் அளித்தேன். எனது புகார் பற்றி விசாரணை செய்வதாக வாடிக்கையாளர் சேவை மைய மேலாளர் தெரிவித்தார்," என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டேனியல் தெரிவித்தார்.
இதுவரை டேனியலுக்கு ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் வினியோகம் செய்யப்படவில்லை. எனினும், டெலிவரி நிறுவனம் தொடர்ந்து டேனியலுடன் தொடர்பில் இருப்பதாகவும், சம்பவம் குறித்து விசாரணை செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலை அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த டேப்லெட் மாடலுக்கென பிரத்யேக வலைப்பக்கம் அமேசான் இந்தியா வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி டேப் ஏ8 சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி டேப் ஏ7 மாடலின் மேம்பட்ட மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 10.5 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. பேனல், யுனிசாக் டி618 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா, டால்பி அட்மோஸ் ஆடியோ, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இதில் 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
இந்தியாவில் சென்னை உள்பட மேலும் சில நகரங்களில் 5ஜி சேவை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தற்போது 4ஜி இணைய சேவை வழங்கப்படுகிறது. பல நாடுகளில் 5ஜி சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
5ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் 5ஜி சேவை மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை சென்னை உள்பட 13 நகரங்களில் முதலில் அறிமுகமாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

"அடுத்த ஆண்டு 5ஜி சேவை, சென்னை, அகமதாபாத், டெல்லி, பெங்களூர், சண்டிகர், காந்திநகர், குர்கிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, புனே, மும்பை ஆகிய 13 நகரங்களில் முதலில் வழங்கப்பட இருக்கிறது."
"இந்தியாவில் 5ஜி சேவையை வணிக ரீதியாக எந்த தொலைத் தொடர்பு நிறுவனம் முதலில் வழங்க போகிறது என்பதை மத்திய தொலைத் தொடர்பு துறை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை. தொலைத் தொடர்பு துறை 5ஜி சேவைக்கான சோதனையை நடத்த எட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த சோதனை 2018-ம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைய இருக்கிறது," என மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவை துவங்கியது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு சீனாவில் துவங்கி இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் எல்.டி.பி.ஒ. 2.0 டிஸ்ப்ளே பயன்படுத்துகிறது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் சாம்சங் டிஸ்ப்ளேவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் வளைந்த எல்.டி.பி.ஒ. அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 32 எம்.பி. செல்பி கேமரா, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்.பி. லென்ஸ், 3 எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 வழங்கப்படும் என தெரிகிறது.
கூகுளின் பிளே ஸ்டோர் ரசீது கொள்கையில் இருந்து இடைக்கால நிவாரணம் கோரி, டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளை கூட்டணி (ஏடிஐஎஃப்), கடந்த அக்டோபர் மாதம் இந்திய போட்டி ஆணையத்தில் மனு தாக்கல் செய்தது.
பெங்களூரு:
பிளே ஸ்டோர் மூலம் செயலிகள் மற்றும் சேவைகளை விற்பதற்கு, செயலி வடிவமைப்பாளர்கள் கூகுள் நிறுனத்தின் உள்ளமைந்த கட்டண முறைகளை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் புதிய ரசீது கொள்கையை இந்த ஆண்டு அறிவித்தது.
இதற்கு பேடிஎம், ரேசார் பே, மேட்ரிமோனி டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புதிய ரசீது கொள்கையை அமல்படுத்துவதற்கான தேதியை அடுத்த ஆண்டு மார்ச் மாதமாக நீட்டித்தது.
இதையடுத்து கூகுளின் பிளே ஸ்டோர் ரசீது கொள்கையில் இருந்து இடைக்கால நிவாரணம் கோரி, 422 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொழிற்முறை கூட்டமைப்பான டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளை கூட்டமைப்பு (ஏடிஐஎஃப்), கடந்த அக்டோபர் மாதம் இந்திய போட்டி ஆணையத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த இந்திய போட்டி ஆணையம், கூகுள் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு கூகுள் இதுவரை தனது பதிலைத் தாக்கல் செய்யாத நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனம் கூறியிருப்பதாவது:-
இந்திய போட்டி ஆணைய விவகாரத்தில் கால அவகாசம் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த விசாரணை செயல்முறையை நாங்கள் மதிக்கிறோம். நியாயமான விசாரணைக்கான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம்.
வழக்கை விசாரிக்கும் இந்திய போட்டி ஆணையத்தின் குழுவில் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும். மேலும் புகார்தாரர்களின் அடையாளத்தையும் வெளிப்படுத்த வேண்டும். புகார்தாரர்களின் அடையாளத்தை அறிந்துகொள்வது அவர்களின் குறைகளைப் புரிந்துகொள்ளவும், தீர்க்கவும் எங்களுக்கு உதவும் .
இவ்வாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2545 விலை பிரீபெயிட் சலுகை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2545 பிரீபெயிட் சலுகை வேலிடிட்டி மாற்றப்பட்டது. புத்தாண்டு சலுகையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜியோ ரூ. 2545 சலுகை 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டி 29 நாட்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரூ. 2545 சலுகை தற்போது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த சலுகையை ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோர் மற்றும் புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜியோ வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 2545 சலுகை வேலிடிட்டி நீட்டிப்பு ஜனவரி 2, 2022 வரை வழங்கப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீடு பற்றி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதன் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் பலமுறை இணையத்தில் வெளியாகிவிட்டன.
சாம்சங்கின் புதிய எப்.இ. ஸ்மார்ட்போன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன்பே இந்த ஸ்மார்ட்போன் வால்மார்ட் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. இதன் 128 ஜி.பி. கிராபைட் நிற வேரியண்ட் விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,450 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் புகைப்படம் இடம்பெறவில்லை. அந்த வகையில், இந்த பதிவு தவறுதலாக இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. இதன் 128 ஜி.பி. விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 256 ஜி.பி. விலை 749 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம்.
வால்மார்ட் பதிவுகளின் படி இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் அறிமுகமானதும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் இரண்டு சலுகைகளை திடீரென நீக்கி இருக்கிறது.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை சத்தமின்றி நீக்கின. தற்போது வி நிறுவனமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை நீக்கி இருக்கிறது.
வி நிறுவனத்தின் ரூ. 601 மற்றும் ரூ. 701 பிரீபெயிட் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் ரூ. 601 சலுகையில் 75 ஜி.பி. டேட்டா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 701 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இரு சலுகைகள் நீக்கப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதே பலன்களை வழங்கும் ரூ. 501, ரூ. 901 மற்றும் ரூ. 3099 விலை பிரீபெயிட் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ரூ. 3099 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.






