என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
உலக வரலாற்றில் முதல் முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். #blackhole
அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் நிறைவேறியிருக்கிறது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருந்துளையின் முதல் புகைப்படத்தை கருந்துளை பற்றி பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு சமர்ப்பணமாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் எட்டு தொலைநோக்கிகள் பயன்படுத்தி கருந்துளை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
விர்கோ கேலக்ஸி கிளஸ்டர் அருகில் மெசியர் 87இன் மத்தியில் மாபெரும் கருந்துளை கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியதாகும். 12 ஆண்டுகள் வரை காத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்சமயம் வெற்றிகரமாக கருந்துளையை புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.
கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்திருக்கிறோம். 200-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் மாபெரும் அறிவியல் சாதனையை படைத்திருக்கின்றனர் என திட்டத்தின் தலைவர் ஷெப்பர்டு எஸ். டோலிமேன் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஈவென்ட் ஹாரிசான் டெலஸ்கோப் (Event Horizon Telescope - EHT) என்பது உலகம் முழுக்க நிறுவப்பட்டிருக்கும் ரேடியோ டெலஸ்கோப்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரேமாதிரி இயங்கும். இது பூமியின் அளவு கொண்டிருக்கிறது. இதனாலேயே கருந்துளையின் நிழலை பதிவு செய்ய முடிந்தது.
புதிய அறிவியல் புரட்சி ஆறு கட்டுரைகள் வடிவில் வானியற்பியல் ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்கள் இனி இப்படி செய்ய முடியாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Twitter
ட்விட்டர் தளத்தில் சமீபகாலங்களில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரிசையில், ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.
ஸ்பேம் மற்றும் ரோபோட் பயன்பாடுகளை தடுக்கும் நோக்கில், ட்விட்டர் தளத்தில் பயனர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 400 பேரை மட்டுமே பின்தொடர முடியும். முன்னதாக நாள் ஒன்றுக்கு பயனர் 1000 பேரை பின்தொடரும் வசதி வழங்கப்பட்டிருந்தது. புதிய மாற்றத்தின் மூலம் வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 400 அக்கவுண்ட்களை பின்தொடரலாம்.

வெரிஃபைடு அக்கவுண்ட் வைத்திருப்போர் தினமும் 1000 பேரை பின்தொடரலாம். இதுதவிர பயனர் அதிகபட்சம் 5000 பேரை மட்டுமே பின்தொடர முடியும். 5000 பேரை பின்தொடர்ந்த பின் பயனர் குறிப்பிட்ட அளவு பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
Follow, unfollow, follow, unfollow. Who does that? Spammers. So we’re changing the number of accounts you can follow each day from 1,000 to 400. Don’t worry, you’ll be just fine.
— Twitter Safety (@TwitterSafety) April 8, 2019
இந்த எண்ணிக்கை ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் வேறுபடும். இது ஒவ்வொருத்தர் பின்தொடரும் அக்கவுண்ட்களுக்கு ஏற்ப வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்தொடர்வதற்கான எண்ணிக்கையை கடந்ததும் பயனருக்கு “You are unable to follow more people at this time.” தகவல் கிடைக்கும்.
இந்த தகவல் பயனர் குறிப்பிட்ட நாளில் பின்தொடரும் அளவை கடந்ததும் திரையில் தோன்றும். இதே தகவல் பயனர் மொத்த பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் போதும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தினமும் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்களை நீக்கி வருதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் இயங்கி வந்த சுமார் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்கள் தினசரி அடிப்படையில் நீக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக்கில் சந்தேகிக்கக்கூடிய நடவடிக்கைகள் நிறைந்த அக்கவுண்ட்கள் நீக்கம் மற்றும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.
இந்திய பொது தேர்தலில் நேர்மையை காக்க உள்ளூர் நிறுவனங்கள், அரசு குழுக்கள் மற்றும் வல்லுநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என ஃபேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் துணை தலைவர் அஜித் மோகன் தனது வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்திய தேர்தல் நேர்மையாகவும், இடையூறின்றி நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக பணியாற்றி வருகிறோம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் இந்தியா மட்டிமின்றி உலகம் முழுக்க பல்வேறு குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை பொதுப்படையாக்க புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம் அரசியல் விளம்பரங்களை பயனர்கள் மிக எளிதாக கண்டறிந்து விட முடியும். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் இருபுதிய வசதிகளை சேர்த்தது.
இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது வேட்பாளர்களை பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியும். இத்துடன் வாக்கு செலுத்தியதும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வாக்கு செலுத்தியதை பகிர்ந்து கொள்ளலாம். கடந்த வாரம் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் விதிகளை மீறியதாக கிட்டத்தட்ட 700 பக்கங்கள், குரூப்கள் மற்று்ம அக்கவுண்ட்களை நீக்கியதாக தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு தளத்தின் கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்படுகிறது. இது பயனர் இருக்குமிடத்தை சுற்றி போக்குவரத்து நிலவரங்களை பார்க்க வழி செய்கிறது. #GoogleMaps
கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய வசதி சேர்க்கப்படுகிறது. முன்னதாக கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சத்தை தொடர்ந்து புதிய வசதி சேர்க்கப்படுகிறது.
பயனர்கள் இனி கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பதிப்பின் விபத்து தெரிவிக்கும் ஆப்ஷனில் ஸ்லோடவுன் (Slowdown) வசதி மூலம் நெரிசல் இருக்கும் பகுதிகளை தெரிவிக்கலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் இந்த வசதி சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
கடந்த மாதம் கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்கும் வசதி சேர்க்கப்பட்டது. இதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிபோர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டது. இதனை க்ளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.

இதேபோன்று மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துக்களையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கிறது. இதனால் அதே வழியில் வருவோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் ஸ்லோடவுன் ஆப்ஷன்களின் மூலம் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் குறைவான போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா அல்லது கூட்ட நெரிசல் மட்டும் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு (வெர்ஷன் 10.12.1) பதிப்பில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்த ஒருவர் நேவிகேஷன் மோட் சென்று ஏரோ அப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி திரையில் திறக்கும் மெனுவில் ஆட் எ ரிப்போர்ட் ஆப்ஷனிலேயே ஸ்லோடவுன் பட்டன் இடம்பெற்றிருக்கும். எனினும், இந்த வசதி சாதனத்தின் செட்டிங்கிற்கு ஏற்ப மொழி அடிப்படையில் வித்தியாசமாக தோன்றலாம்.
புகைப்படம் நன்றி: xda-developers
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயலிகள் விண்டோஸ் போன் தளத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் இயங்காது. #WindowsPhone
ஃபேஸ்புக் நிறுவனம் தனது குழும செயலிகளை விண்டோஸ் போன் தளத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகள் விண்டோஸ் தளத்தில் இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக் குழுமத்தை சார்ந்தது தான் என்ற வகையில், விண்டோஸ் தளத்தில் இருந்து வாட்ஸ்அப் நீக்கப்படுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. விண்டோஸ் போன் தளம் அதிகாரப்பூர்வமாக செயலற்ற நிலையில் இருப்பதால் செயலிகள் நீக்கப்படுவது பயனருக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.

விண்டோஸ் போன் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் 30 முதல் இன்ஸ்டாகிராம் செயலியை விண்டோஸ் போன் தளத்தில் பயன்படுத்த முடியாது என அதன் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று மெசஞ்சர் செயலியும் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன் தளத்தில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டு முதல் விண்டோஸ் போன் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்தது. மேலும் டிசம்பர் 2018 முதல் மென்பொருள் அப்டேட்களும் நிறுத்தப்பட்டன. தற்சமயம் விண்டோஸ் போன் 8.1 மற்றும் விண்டோஸ் போன் 10 தளங்களில் மட்டும் வாட்ஸ்அப் இயங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் வெளியீடு ஏற்கனவே திட்டமிட்டதை விட தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhone
ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஐபோனினை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. இதற்கென ஆப்பிள் இன்டெல் தயாரிக்கும் 5ஜி மோடெம்களை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்டெல் 5ஜி மோடெம்கள் திட்டமிட்டப்படி உருவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், 5ஜி போட்டியில் ஆப்பிள் பின்தங்கியிருக்கிறது. இந்த ஆண்டு 5ஜி ஐபோன் நிச்சயம் அறிமுகமாகாது என தகவல் வெளியாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு 5ஜி ஐபோன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 5ஜி ஐபோன் வெளியீடு மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. இன்டெல் நிறுவனத்தின் 5ஜி மோடெம்கள் உருவாக அதிக நேரம் ஆகும் என்பதால், ஆப்பிள் தனக்கென சொந்தமாக 5ஜி மோடெம்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் 5ஜி ஐபோனின் வெளியீட்டை 2021 ஆம் ஆண்டிற்கு தள்ளிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் ஐபோன் விற்பனையில் சரிவு ஏற்படும் என்றும், இதுபோன்ற சூழல்களில் ஆப்பிள் சேவைகள் பிரிவு மற்றும் அதிகளவு பயனர் எண்ணிக்கையை ஆப்பிள் தக்கவைத்துக் கொள்ளலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவனத்துடன் பல்வேறு சட்டரீதியான பிரச்சனைகளை உலகம் முழுக்க எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம்களை சார்ந்து இருந்தது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் மற்றும் இன்டெல் நிறுவனங்களிடம் இருந்து மோடெம்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் சில ஆண்டுகளுக்கு முன் குவால்காம் சிப்களை பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக் கொண்டது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான பல்வேறு வழக்குகளை குவால்காம் நிறுவனம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் சில ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்சமயம் எஞ்சியிருப்பது மீடியாடெக் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் மட்டும் தான். இதிலும், மீடியாடெக் மோடெம்கள் ஆப்பிள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைய விரும்பவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் டிஸ்ப்ளேக்கள், டிரேம் மற்றும் ஃபிளாஷ் மெமரி என பல்வேறு உபகரணங்களுக்கு சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வாங்கி வருகிறது. இதுதவிர சாம்சங் நிறுவனம் தனது மோடெம்களை ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கும் விலைக்கு வழங்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபாஸ்ட்கம்பெனி வெளியிட்டிருக்கும் தனி அறிக்கையில், ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம்களை பயன்படுத்துவதில் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இன்டெல் 5ஜி மோடெம்களை பயன்படுத்தும் திட்த்தை கைவிடும் முடிவினை ஆப்பிள் ஏற்கனவே இன்டெல் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
சொந்தமாக 5ஜி மோடெம்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் இன்டெல், குவால்காம் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியர்கள் அடங்கிய 1000 ஊழியர்களை பணியமர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த குழு 2021 ஆம் ஆண்டிற்குள் 5ஜி மோடெம்களை உருவாக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
கூகுளின் இன்பாக்ஸ் பை ஜிமெயில் செயலி நீக்கப்பட்டதும் ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்பார்க் இமெயில் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Spark
கூகுள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு இன்பாக்ஸ் பை ஜிமெயில் எனும் மின்னஞ்சல் செயலியை அறிமுகம் செய்து சமீபத்தி்ல் இது நீக்கப்பட்டது. இந்த செயலியின் முக்கிய அம்சங்களாக மெசேஜ் குரூப்பிங் மற்றும் ரிமைண்டர்கள் இருந்தன.
இன்பாக்ஸ் பை ஜிமெயில் நீக்கப்பட்டு விட்டதால், ஐ.ஓ.எஸ். தளத்தில் பிரபலமாக இருக்கும் ஸ்பார்க் செயலி ஆண்ட்ராய்டு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கஸ்டமைசேஷன் வசதிகளுடன் ஐ.ஓ.எஸ். தளத்தில் பிரபல மின்னஞ்சல் செயலியாக ஸ்பார்க் இருக்கிறது.

இந்த செயலியில் ஜெஸ்ட்யூர் சார்ந்த யு.ஐ., ஸ்மார்ட் இன்பாக்ஸ் வசதி மற்றும் சைடுபாரை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் இன்பாக்ஸ் அம்சத்தை பொருத்தவரை இது அனைத்து மின்னஞ்சல்களையும் தனித்தனியாக பிரித்து ஒழுங்காக காட்சிப்படுத்தும்.
அந்த வகையில் வாசிக்கப்படாத மின்னஞ்சல்கள் மேலேயும், மிகமுக்கிய மின்னஞ்சல்கள் மற்றும் இறுதியில் வாசிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் சீராக வரிசைப்படுத்தப்படும். ஜிமெயில் போன்றே ஸ்பார்க் செயலியிலும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஜிமெயில் மற்றும் இன்பாக்ஸ் பை ஜிமெயில் செயலிகளை போன்று ஸ்பார்க் செயலியிலும் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்பட்டுள்ளதால், வலது அல்லது இடதுபுறம் ஸ்வைப் செய்து மின்னஞ்சல்களில் பல்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்பார்க் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.
இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் செக்பாயிண்ட் டிப்லைன் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. #WhatsApp
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, புதிய வசதிகளை சேர்க்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் தற்சமயம் செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline) எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் போலி செய்திகளை முடக்கும் வகையில் இயங்குகிறது. இந்திய தேர்தல் காலத்தில் வாட்ஸ்அப் செயலியில் பரவும் போலி செய்திகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இணையம் முழுக்க போலி செய்திகள் பரவி, அவை பொது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
வாட்ஸ்அப் துணையுடன் இயங்கும் இந்தியா சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ரோடோ (PROTO) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

செக்பாயிண்ட் டிப்லைன் எவ்வாறு இயங்கும்?
பொது மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் எண்ணில் (+91-9643000888) சமர்பிக்கலாம். இந்த டிப்லைனில் பயனர் ஒரு குறுந்தகவலை பகிர்ந்து கொள்ளும் போது, ப்ரோடோவின் ஆய்வு மையம் சம்மந்தப்பட்ட குறுந்தகவல் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்பதை தெரிவிக்கும்.
பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு ப்ரோடோ மூலம் அனுப்பப்படும் பதிலில் சம்மந்தப்பட்ட குறுந்தகவல் உண்மை, பொய், தவறானது, பிரச்சினைக்குரியது போன்றவை இடம்பெற்றிருக்கும். செக்பாயிண்ட் டிப்லைனில் ஆங்கிலம் தவிர இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளை சப்போர்ட் செய்கிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பரீட்டா செயலியில் பல்வேறு புதிய அம்சங்Kள் சோதனை செய்யப்படுகின்றன. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட், மேம்பட்ட சர்ச் மற்றும் கைரேகை வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட இருக்கின்றன. சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ மற்றும் ஃபிரீக்வென்ட் ஃபார்வேர்டிங் என இரு அம்சங்களை சோதனை செய்வதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.86 பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்ய முடியும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உருவாக்கப்படும் இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.100 பதிப்பில் காணப்பட்டது. கூடுதலாக புதிய பீட்டா அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி. மோட்) மேம்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பி.ஐ.பி. மோட் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டு பின் டிசம்பர் மாதம் ஆண்ட்ராய்டில் வழங்கப்பட்டது.

இதுவரை ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பி.ஐ.பி. மோட் சாட்களிடையே நேவிகேட் செய்து கொண்டே வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கிய நிலையில், ஆண்ட்ராய்டு தளத்தில் ஒரு சாட் ஸ்கிரீனில் இருந்தபடி வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஐ.ஓ.எஸ். தளத்தில் இருப்பது போன்று ஆண்ட்ராய்டிலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
மேம்பட்ட பி.ஐ.பி. மோட் கொண்டு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் சிறிய வீடியோவினை சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறினாலும் தொடர்ந்து பார்க்க முடியும். எனினும் சமீபத்திய பீட்டா பதிப்பில் இந்த வசதி செயலிழக்க செய்யப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
கூகுளின் ஜிமெயில் ஐ.ஓ.எஸ். தளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. #Gmail
கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின் மொபைல் தளங்களில் சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் படி ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியில் ஆர்சிவ் (Archive), டிராஷ் (Trash), மார்க் ஆஸ் ரீட்/அன்ரீட் (Mark as read/unread), ஸ்னூஸ் (Snooze) மற்றும் மூவ் டு (Move to) என பல்வேறு அம்சங்களை ஸ்வைப் மூலம் இயக்கலாம். இந்த அம்சம் கொண்டு பல்வேறு அம்சங்களை மிக எளிமையாக ஸ்வைப் செய்தே இயக்க முடியும்.

பயனர்கள் ஸ்வைப் அம்சத்தை இயக்க ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மேலும் இதே அம்சங்களை கொண்டு நோட்டிஃபிகேஷன்களையும் இயக்கலாம். உதாரணத்திற்கு மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய ஜிமெயில் ஐ.ஓ.எஸ். நோட்டிஃபிகேஷனை அழுத்திப் பிடித்து ஸ்னூஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது எதுவரை மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய வேண்டும் என்பதை தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் புதிய அம்சங்களுடன் அட்டாச்மென்ட் க்விக் வியூ, அக்கவுண்ட்களிடையே ஸ்விட்ச் செய்தல் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படலாம். #WhatsApp
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் 2.19.82 வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கிறது. செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் ஒருவழியாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய பீட்டா பதிப்புகளில் வெளியான விவரங்களில் மேலும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட இருப்பதை வெளிப்படுத்தின.
வாட்ஸ்அப் செயலியில் அனைவருக்கும் டார்க் மோட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.82 பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதியின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய மோட் நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ், டேட்டா, ஸ்டோரேஜ் செட்டிங்ஸ், சாட் செட்டிங்ஸ் மற்றும் அக்கவுண்ட் செட்டிங் உள்ளிட்டவற்றில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டார்க் மோட் வசதி OLED பேனல்களுக்கு ஏற்றதாக இருக்காது என்றும் இது டார்க் கிரே நிறம் சார்ந்து உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் தற்சமயம் தானாக எனேபிள் செய்யப்படவில்லை. இதனால் செயலியை புதிய 2.19.82 வெர்ஷனுக்கு அப்டேட் செய்திருந்தாலும் இந்த அம்சத்தினை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.80 பதிப்பில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என இரு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புகைப்படம் நன்றி: WABetaInfo
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. #WhatsApp
வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது.
முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வழிமுறைகள் எவ்வித சிரமமும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். பயனர்கள் போலி தகவல்களை எதிர்கொள்ளும் போது அவற்றை எவ்வாறு கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும் என வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும் நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப். மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன. இந்த வீடியோக்களில் போலி விவரங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த சில மாதங்களில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. இத்துடன் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.






