search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தாமதமாகும் 5ஜி ஐபோன் வெளியீடு
    X

    தாமதமாகும் 5ஜி ஐபோன் வெளியீடு

    ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் வெளியீடு ஏற்கனவே திட்டமிட்டதை விட தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஐபோனினை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. இதற்கென ஆப்பிள் இன்டெல் தயாரிக்கும் 5ஜி மோடெம்களை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்டெல் 5ஜி மோடெம்கள் திட்டமிட்டப்படி உருவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், 5ஜி போட்டியில் ஆப்பிள் பின்தங்கியிருக்கிறது. இந்த ஆண்டு 5ஜி ஐபோன் நிச்சயம் அறிமுகமாகாது என தகவல் வெளியாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு 5ஜி ஐபோன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.



    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 5ஜி ஐபோன் வெளியீடு மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. இன்டெல் நிறுவனத்தின் 5ஜி மோடெம்கள் உருவாக அதிக நேரம் ஆகும் என்பதால், ஆப்பிள் தனக்கென சொந்தமாக 5ஜி மோடெம்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் 5ஜி ஐபோனின் வெளியீட்டை 2021 ஆம் ஆண்டிற்கு தள்ளிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் ஐபோன் விற்பனையில் சரிவு ஏற்படும் என்றும், இதுபோன்ற சூழல்களில் ஆப்பிள் சேவைகள் பிரிவு மற்றும் அதிகளவு பயனர் எண்ணிக்கையை ஆப்பிள் தக்கவைத்துக் கொள்ளலாம் என கணிக்கப்பட்டுள்ளது.



    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவனத்துடன் பல்வேறு சட்டரீதியான பிரச்சனைகளை உலகம் முழுக்க எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம்களை சார்ந்து இருந்தது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் மற்றும் இன்டெல் நிறுவனங்களிடம் இருந்து மோடெம்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

    எனினும் சில ஆண்டுகளுக்கு முன் குவால்காம் சிப்களை பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக் கொண்டது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான பல்வேறு வழக்குகளை குவால்காம் நிறுவனம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் சில ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

    ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்சமயம் எஞ்சியிருப்பது மீடியாடெக் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் மட்டும் தான். இதிலும், மீடியாடெக் மோடெம்கள் ஆப்பிள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைய விரும்பவில்லை என கூறப்படுகிறது. 



    ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் டிஸ்ப்ளேக்கள், டிரேம் மற்றும் ஃபிளாஷ் மெமரி என பல்வேறு உபகரணங்களுக்கு சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வாங்கி வருகிறது. இதுதவிர சாம்சங் நிறுவனம் தனது மோடெம்களை ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கும் விலைக்கு வழங்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    ஃபாஸ்ட்கம்பெனி வெளியிட்டிருக்கும் தனி அறிக்கையில், ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம்களை பயன்படுத்துவதில் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இன்டெல் 5ஜி மோடெம்களை பயன்படுத்தும் திட்த்தை கைவிடும் முடிவினை ஆப்பிள் ஏற்கனவே இன்டெல் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    சொந்தமாக 5ஜி மோடெம்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் இன்டெல், குவால்காம் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியர்கள் அடங்கிய 1000 ஊழியர்களை பணியமர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த குழு 2021 ஆம் ஆண்டிற்குள் 5ஜி மோடெம்களை உருவாக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. 
    Next Story
    ×