என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை கடந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது. தற்சமயம் ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40 கோடியை கடந்ததாக வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை கடந்துவிடும் என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் தெரிவித்தார்.

சமீபத்தில் சிஸ்கோ நடத்திய ஆய்வில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் சுாமர் 80 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்ட்டர்பாயிண்ட் ஆய்வின் படி இந்தியாவில் தற்சமயம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 45 கோடியாக இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டில் 70 கோடியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனக்கென சொந்தமாக பேமன்ட் சேவையை துவங்க இருக்கிறது. இதற்கான சோதனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசு அனுமதி கிடைத்ததும் சேவை விரிவாக துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்ற இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபார பிரிவின் பெரும்பான்மை பங்குகளை வாங்க இருப்பதை ஆப்பிள் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இதற்கென ஆப்பிள் நிறுவனம் 100 கோடி டாலர்களை இன்டெல் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது.
இருநிறுவனங்கள் இடையே இதுகுறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், இன்டெல் நிறுவனத்தின் 2200 ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து கொள்வர். இத்துடன் இன்டெல் காப்புரிமை, உபகரணங்கள் மற்றும் லீஸ்களும் ஆப்பிள் வசம் கைமாறிவிடும்.

ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நிலவி வந்த பிரச்சனைகளை நிறுத்திக் கொண்டு சுமூக உடன்படிக்கை எடுத்துக் கொள்வதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இன்டெல் நிறுவனம் தனது 5ஜி மோடெம் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
புதிய காப்புரிமைகளுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 17,000-க்கும் அதிக வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைகளை பெற்றிருக்கிறது. இன்டெல் நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அல்லாத சாதனங்களுக்கு மோடெம்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
இன்டெல் 5ஜி மோடெம் வியாபாரத்தை வாங்குவதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க முடியும்.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் ரூ. 399 விலை சலுகையை தேர்வு செய்வோருக்கு தற்சமயம் வழக்கத்தை விட கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் ஏற்கனவே தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஏர்டெல் டி.வி. பிரீமியம், விண்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 கேஷ்பேக், ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு திட்டத்திற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் இந்த சலுகையில் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.

எனினும். கூடுதல் பலன்கள் தேர்வு செய்யப்பட்டோருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ரூ. 399 சலுகையில் சிலருக்கு 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தினசரி வழங்கப்படும் 1 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் வாடிக்கையாளர் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
சில வாடிக்கையாளர்களுக்கு 400 எம்.பி. டேட்டா மட்டுமே கூடுதலாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ஏர்டெல் தேங்ஸ் திட்டத்தில் பயனர்களுக்கு பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின் மூலம் அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ5 போன்ற சேவைகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லேப்டாப் தவிர புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இத்துடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
சர்வதேச சந்தையில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ துவக்க விலை 3000 டாலர்கள் முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 16 இன்ச் மாடலில் 3072x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை அப்டேட் செய்து ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கியது.

இதைத் தொடர்ந்து அக்டோபரில் அறிமுகமாக இருக்கும் மேக்புக் ஏர் மாடலில் புதிய பிராசஸர்கள், மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
16 இன்ச் மாடலுடன் அறிமுகமாக இருக்கும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலில் ஏற்கனவே இரண்டு தண்டர்போல்ட் 3 போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அப்டேட்களில் 32 ஜி.பி. ரேம் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்டாக் செயலியின் விதிகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிக்டாக் செயலி அந்த நாட்டில் ஓராண்டுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் டிக்டாக் செயலி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிகம் பேரால் பதிவிறக்கப்பட்ட செயலியாக டிக்டாக் உருவெடுத்தது.
இந்தியாவிலும் டிக்டாக் செயலி அதிக பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் டிக்டாக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிக்டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள், டிக்டாக் செய்யும் போது உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்று பல்வேறு காரணங்களால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை நீங்கியது.


இந்த நிலையில் தமிழக சட்டசபையிலும் டிக்டாக் வீடியோ விவகாரம் எழுப்பப்பட்டது. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் மணிகண்டன் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன ஆகியோரும் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
டிக்டாக் செயலி தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கருத்து தெரிவித்துள்ளார். அதனை நீக்குவது நல்லதுதான் என்று அவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், டிக்டாக் வீடியோவை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்று மத்திய அரசு டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில் அளித்த டிக்டாக் அரசு விதிமுறைகளை ஏற்று சட்டவிசதிகளை பின்பற்றுவதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 60 லட்சம் வீடியோக்கள் டிக்டாக் செயலியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
புகைப்படம் நன்றி: Gaadiwaadi
இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய பிழையை கண்டறிந்த சென்னை இளைஞருக்கு அந்நிறுவனம் ரூ. 21 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக்குக்கு அடுத்த படியாக அதிக பயனாளர்களை கொண்ட முக்கிய வலைத்தளம் இன்ஸ்டாகிராம். திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை சென்னை சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து சுட்டிக்காட்டி உள்ளார். இதற்காக அந்த இளைஞருக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரூ. 21 லட்சத்தை பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த லட்சுமண் முத்தையா தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்படிதான் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை அவர் கண்டுபிடித்தார்.

இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பயனாளர்களின் கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய அனுமதித்த பிழையை லட்சுமண் கண்டுபிடித்தார். இன்ஸ்டாகிராம் பயனாளர் தனது பாஸ்வேர்டை (கடவு சொல்) மாற்றுவதற்கு தேவைப்படும் ரிக்கவரி கோடு மூலம் அவரது கணக்கை ஹேக் செய்ய முடியும் என்பதை லட்சுமண் முத்தையா செய்து காட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் இது குறித்து இன்ஸ்டாகிராமை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவுக்கு இந்த தகவலை அனுப்பினார். இதனை ஆராய்ந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பாதுகாப்பு குறைபாட்டை உடனடியாக சரி செய்தனர்.
மேலும், பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து தெரியப் படுத்திய லட்சுமண் முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு 30,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 லட்சம்) பரிசாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் வழங்கியது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் அனுப்பிய உத்தரவுகளுக்கு டிக்டாக் உடனடி பதில் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் மிகவேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக டிக்டாக் இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டு, பின் கடும் நிபந்தணைகளுடன் தடை நீக்கப்பட்டது. இதன்பின் டிக்டாக் பயனாளர் எண்ணிக்கை மேலும் அதிகமாகி வருகிறது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ பைட்டேன்ஸ் நிறுவனங்கள் பதில் அளிக்கக் கோரி 24 கேள்விகள் அடங்கிய அறிக்கையை அனுப்பியது. பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அளித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமைச்சகம் எடுத்தது.
இந்நிலையில், இந்திய அரசு சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எங்களது தொடர் வெற்றிக்கு, உள்ளூர் மக்களின் பங்களிப்பின்றி சாத்தியமாகாது. எங்களது பயனர்கள் மீது அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம் என டிக்டாக் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆர்.எஸ்.எஸ். அளித்த குற்றச்சாட்டுகளில் இரு செயலிகளில் தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தரவுகள் அதிகளவு பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இதுதவிர இந்தியர்களின் தகவல்கள் வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. டிக்டாக் செயலியை பயன்படுத்தும் சிறுவர்கள் பற்றியும் மத்திய அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜூலை 22 ஆம் தேதிக்குள் டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள் பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை உத்தரவிட்ட நிலையில், டிக்டாக் தனது பதிலை உடனடியாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை கேலி கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருக்கின்றன.
இதனை எதிர்கொள்ள பல்வேறு நிறுவனங்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ட்விட்டர் நிறுவனம் ஹைட் ரிப்ளைஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் கனடாவில் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.
We’re testing a feature to hide replies from conversations. This experience will be available for everyone around the world, but at this time, only people in Canada can hide replies to their Tweets.
— Twitter Support (@TwitterSupport) July 17, 2019
We want to know what you think. Please Tweet us your feedback and questions! https://t.co/H7iMtEhCUP
இந்த அம்சம் கொண்டு ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும். புதிய அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக ட்விட்டர் தெரிவித்தது.
மற்ற நாடுகளில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் சோதனையில் இருக்கும் இந்த அம்சம், சோதனையில் பெறும் விமர்சனங்களுக்கு ஏற்ப மற்ற பகுதிகளில் வெளியிடுவது பற்றிய முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் பேமன்ட் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் பேமன்ட் சேவைக்கான வெளியீடு இந்திய அரசு கட்டுப்பாடுகளால் தாமதமாகி வந்தது. குறிப்பாக இதுகுறித்த அனைத்து விவரங்களும் இந்திய சர்வெர்களில் சேமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தற்சமயம் இந்நிறுவனம் சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்த தகவல்களை வழங்க வாட்ஸ்அப் மறுத்துவிட்டது.

யு.பி.ஐ. சார்ந்து இயங்கும் பணபரிமாற்ற சேவையை வழங்க வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ்அப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது.
இந்தியா முழுக்க சுமார் 30 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேமன்ட் சேவைக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேவையின் பயனர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் விரைவில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
கணினிகளுக்கான ட்விட்டர் வலைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனி பயனர்கள் ஏழு இந்திய மொழிகளில் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய அம்சங்களுக்கான அப்டேட் வரும் வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் பெரிய அப்டேட்டாக இது பார்க்கப்படுகிறது. இதில் பயனர் அனுபவத்தை மொபைல் தளங்களில் இருப்பதை போன்று மாற்றப்படுகிறது. இனி டேட்டா வேகம் குறையும் போதும், தளத்தை சீராக இயக்க முடியும்.
இந்தியாவில் ட்விட்டர் தளத்தினை தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, உருது, பெங்காலி மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கும். இத்துடன் புதிய தளத்தில் டிரான்ஸ்லேஷன் எனப்படும் மொழிமாற்றம் செய்யும் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தளத்தில் பல்வேறு மொழிகளில் இயக்க முடியும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வலைத்தள அமைப்பிற்கான பணிகள் நடைபெற்று வந்தது. புதிய அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ள தளத்தின் இடதுபுறத்தில் நேவிகேஷன் பேனல் வழங்கப்படுகிறது. இதில் புதிதாக எக்ஸ்ப்ளோர், லிஸ்ட்ஸ் மற்றும் புக்மார்க்ஸ் போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன.
ட்விட்டர் மொபைல் செயலியில் ஏற்கனவே எக்ஸ்ப்ளோர் டேப் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் இந்த அம்சம் கணினிகளுக்கான டெஸ்க்டாப் பதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் பயனர்கள் அவ்வாறு செய்ய வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுக்கிறது. இத்துடன் மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என அழைக்கப்படுகிறது.

உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் அதிக பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் அதில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறான புதிய அம்சமாக க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என்ற பெயரில் உருவாகிறது.
புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது என்றும், விரைவில் இது வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகியுள்ளன. இதில் வாட்ஸ்அப் செயலியினுள் புகைப்படம் திறக்கப்பட்டதும் எடிட் பட்டன் காணப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி காணப்படுகிறது.
புதிய அம்சத்தின் மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படம் பயனர்களின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுவதில்லை. இதனால் ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது. ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டெலிகிராம் போன்ற தளங்களில் கிடைக்கிறது.
புகைப்படம் நன்றி: WABetaInfo
கூகுள் நிறுவனம் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்களை தனது மேப்ஸ் செயலியில் வழங்கி வருகிறது.
கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கான மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. கடந்த மாதம் பேருந்து, நேரலை ரெயில் மற்றும் பல்வேறு இதர போக்குவரத்து வழிமுறைகள் பற்றிய விவரங்களை மேப்ஸ் செயலியில் கூகுள் வழங்கியது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட இந்தியாவுக்கென பிரத்யேக எக்ஸ்ப்ளோர் டேப், புதிய ஃபார் யு எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டைனிங் போன்ற அம்சங்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் எக்ஸ்ப்லோர் டேப் அம்சத்தில்: ரெஸ்டாரன்ட், பெட்ரோல் பம்ப், ஏ.டி.எம்., ஆஃபர்ஸ், ஷாப்பிங், ஓட்டல் மற்றும் மருந்தகங்களை தேட முடியும். மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் மூலம் முக்கிய நகரங்களில் முன்னணி பிரிவுகளில் உள்ள வியாபார மையங்களை கூகுள் மேப்ஸ் கண்டறிந்து கொள்ளும். இந்த அம்சம் ஒவ்வொரு நகரங்களிலும் தனித்தனியாக பரிந்துரைகளை வழங்கும்.
ஃபார் யு அம்சம் புதிய ரெஸ்டாரன்ட்கள், டிரெண்டிங் இடங்கள் மற்றும் ஒவ்வொருத்தர் விருப்பத்திற்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்கும். இது யுவர் மேட்ஸ் ஸ்கோர் பயன்படுத்தி மெஷின் லெர்னிங் மூலம் கூகுள் அறிந்திருக்கும் தகவல்களில் வைத்துக் கொண்டு நீங்கள் ஏற்கனவே சென்று வந்த இடங்களுக்கு வழங்கிய விருப்பங்கள் மற்றும் மதிப்பீடுகளை கொண்டு பரிந்துரைகளை வழங்கும்.

முதல் முறையாக இந்த அம்சத்தை பயன்படுத்தும் போது, நீங்கள் விரும்பும் பகுதிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப பரிந்துரைகளை கூகுள் வழங்கத்துவங்கும். இந்த அம்சம் கொண்டு வியாபாரங்கள் சார்ந்த அப்டேட்கள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்கள் வழங்கும் சலுகைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
எக்ஸ்ப்ளோர் டேபில் உள்ள புதிய ஆஃபர்ஸ் பகுதியில் சென்னை, கொல்கத்தா, கோவா, ஆமதாபாத், ஜெய்பூர், சண்டிகர், ஐதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் சலுகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்த சேவையை வழங்குவதற்கென கூகுள் நிறுவனம் ஈசிடின்னர் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. முதற்கட்டமாக இதற்கென 4000 ரெஸ்டாரன்ட்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஆஃபர்ஸ் அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு செலியில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.






