search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் கைது"

    • ஷஹானா திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ் என்பவரின் மகள் ஷஹானா (வயது26). எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தான் தங்கியிருந்த குடியிருப்பில் கடந்த 4-ந்தேதி மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அவருடைய தற்கொலைக்கு அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் தான் காரணம் என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கேட்ட அதிக வரதட்சணையை தர முன்வராத காரணத்தால் திருமணம் செய்துகொள்ள ரூவைஸ் மறுத்திருக்கிறார். இதில் வேதனையடைந்த மாணவி ஷஹானா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ரூவைசை இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

    • ரூவைசின் குடும்பத்தினர் 150 பவுன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம், ஒரு ஆடம்பர கார் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.
    • தீவிர விசாரணைக்கு பிறகு டாக்டர் ரூவைசை வஞ்சியூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்த அப்துல் அசீஸ் என்பவரின் மகள் ஷஹானா(வயது26). எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர், திருகூனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்த அவர், கடந்த 4-ந்தேதி தனது அறையில் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உடன் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல தகவல்கள் வெளியாகின.

    மாணவி ஷஹானா, தன்னுடன் படித்து வரும் கொல்லம் கருணாகப்பள்ளி பகுதியை சேர்ந்த ரூவைஸ் (27) என்பவருடன் நண்பராக பழகி வந்திருக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்திருக்கிறது.

    ஆனால் ரூவைசின் குடும்பத்தினர் 150 பவுன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம், ஒரு ஆடம்பர கார் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு ஷஹானாவின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால், அவர்களது திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    அதில் மனவேதனையடைந்த ஷஹானா தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான டாக்டர் ரூவைஸ் மீது தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அதனடிப்படையில் ரூவைஸ் கைது செய்யப்பட்டார். மாணவியை திருமணம் செய்ய முடிவு செய்தது, மாணவி குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டது உள்ளிட்டவைகள் தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    தீவிர விசாரணைக்கு பிறகு டாக்டர் ரூவைசை வஞ்சியூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் ரூவைசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.

    • கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது.
    • பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் செயல்படுவதாக மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பூமிநாதன் தலைமையில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஆகியோர் அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினரிடம் அவர் தன்னை டாக்டர் என்றே அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின்பு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கலாவதி(45) என்பதும், பல வருடங்களாக கோபால்பட்டியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    இவர் பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஊசி மருந்து போட்டதுடன் காயங்களுக்கு கட்டு போட்டும், மருந்துகள் கொடுத்தும் வந்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற போலி டாக்டர்கள் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்துவதும், கிராமங்களுக்கு சென்றே சிகிச்சை அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கலாவதியை கைது செய்ததுடன் கிளினிக்கையும் பூட்டி சீல் வைத்தனர். அவர் மருத்துவம் பார்த்ததன் மூலம் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.
    • டாக்டர் ஷெர்ரி ஐசக் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    விபத்தில் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷெர்ரி ஐசக்கை பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர், அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க மறுத்தனர். இதனால் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் டாக்டர் ஷெர்ரி ஐசக் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் லஞ்சம் கேட்பது குறித்து திருச்சூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜிம்பாலிடம் பெண்ணின் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.

    ஒட்டுப்பாறையில் உள்ள டாக்டர் ஷெர்ரி ஐசக் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த டாக்டரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். அதனை டாக்டர் ஷெர்ரி ஐசக் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதையடுத்து முழங்குனத்துகாவில் உள்ள டாக்டரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த ரூ15.25 லஞ்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய லஞ்சம் வாங்கி சிக்கிய டாக்டர் ஷெர்ரி ஐசக் தனது துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரன் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருப்பது விசா ரணையில் தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் சந்திரசேகரனை கைது செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மருத்து வத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அரூர் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரகாஷ் மற்றும் குழுவினர் எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சந்திரசேகரன் (வயது42) என்பவர் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக டாக்டர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் எந்தவித உரிமமும் பெறாமலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு இல்லா மலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி டாக்டர் என்பதும் உறுதியானது.

    கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரன் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருப்பது விசா ரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவ அலுவலர் அருண் பிரகாஷ் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் சந்திரசேகரனை கைது செய்தனர். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி மருந்துகள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதான போலி டாக்டரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நர்சை, டாக்டர் முகமது ஷகாப் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் முகமது ஷகாப் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷகாப் (வயது 49). பல் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது பெற்றோர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களை வீட்டில் இருந்து கவனித்து கொள்ள டாக்டர் முகமது ஷகாப், ஹோம் நர்சு ஒருவரை நியமித்தார். 28 வயதான அந்த நர்சு, டாக்டரின் வீட்டில் தங்கி அவரின் பெற்றோரை கவனித்து கொண்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நர்சை, டாக்டர் முகமது ஷகாப் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி நர்சு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் முகமது ஷகாப் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்ததும் அவர் வெளிநாடு தப்பி சென்றார். நேற்று முன்தினம் அவர் ஊர் திரும்பினார். இதனை அறிந்த போலீசார் கொச்சி விமான நிலையத்திற்கு சென்று டாக்டர் முகமது ஷகாப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கொடுங்கலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அதே பகுதியில் மருத்துவம் படிக்காமல் கிளினீக் வைத்து மருத்துவ பார்த்தது தெரியவந்தது.
    • போலீசார் போலி டாக்டரான சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மருத்துவ துறை இணை இயக்குனர் சண்முகம் என்பவருக்கு முத்தள்ளியில் டாக்டருக்கு படிக்காமல் ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தார்.

    அப்போது அங்கு அதேபகுதியைச் சேர்ந்த சிவராஜன் (வயது32) என்பவர் அதே பகுதியில் மருத்துவம் படிக்காமல் கிளினீக் வைத்து மருத்துவ பார்த்தது தெரியவந்தது.

    மேலும், அவர் வேப்பபன்பள்ளி சாலை, குந்தாரப்பள்ளி சந்திப்பு சாலை ஆகிய பகுதிகளிலும் கிளினீக் வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் போலி டாக்டரான சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி அழுதுகொண்டே இருந்தார்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி டாக்டர் அபுபக்கரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு டாக்டர் அபுபக்கர் சிகிச்சை அளித்தார்.

    சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி அழுதுகொண்டே இருந்தார். இதுபற்றி பெற்றோர் கேட்டபோது, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அழுதார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி டாக்டர் அபுபக்கரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரியங்காவின் சான்றிதழ்களை பெற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
    • மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கிளீனிக் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மங்கலம் நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கிளீனிக்கில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்பு படித்திருந்தது தெரியவந்தது.

    ஆனால் அதன்பிறகு அவர் இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வை எழுதாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

    மேலும் கிளீனிக் நடத்தவும் உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அந்த தனியார் கிளீனிக்கிற்கு 'சீல்' வைத்தனர். இதைத்தொடர்ந்து பிரியங்காவின் சான்றிதழ்களை பெற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பதிவு செய்யாமல், உரிய அனுமதியின்றி சிகிச்சை அளித்த பிரியங்கா மீது இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை சிறையில் அடைத்தனர்.

    • உடலை சூட்கேசில் அடைத்து முதலில் தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
    • தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கூறியிருக்கிறார்

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக். இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (வயது 28). இவர் ஆயுர்வேத மருத்துவர். இவர்கள் சீதாபூர் சாலையில் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தன் மனைவி வந்தனாவை காணவில்லை என டாக்டர் அபிஷேக், கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விலை உயர்ந்த சில பொருட்களை மனைவி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் கணவன் அபிஷேக் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர். பின்னர் அவரிடம் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை நவம்பர் 26ம் தேதி அடித்துக் கொலை செய்து உடலை சுமார் 400 கிமீ தொலைவில் கொண்டுபோய் எரித்தது தெரியவந்தது. இந்த கொலைக்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுபற்றி ஏஎஸ்பி அருண் குமார் சிங் கூறுகையில், "நவம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சண்டையின்போது வந்தனா அவாஸ்தியை கொலை செய்த அபிஷேக், காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்சை வரவழைத்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள கார்ஹ் முக்தேஷ்வரில் வைத்து உடலை எரித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரிடம், தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக கூறியிருக்கிறார்" என்றார்.

    • மாம்பலம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இளம்பெண் மூலம் சிறுக சிறுக இதுவரை ரூ.60 லட்சம் பணத்தை சுருட்டிய சார்லஸ் இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார்.

    போரூர்:

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு எம்.ஜி.ஆர் நகர் அடுத்த ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் மனோஜ் சார்லஸ் என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் "உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று ஆசைவார்த்தை கூறிய சார்லஸ் இளம்பெண்ணிடம் அடிக்கடி பணத்தை வாங்கி வந்துள்ளார்.

    இளம்பெண் மூலம் சிறுக சிறுக இதுவரை ரூ.60 லட்சம் பணத்தை சுருட்டிய சார்லஸ் இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார். இதுபற்றி கேட்டபோது கொலை செய்து விடுவேன் என்று கூறி இளம்பெண்ணுக்கு சார்லஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்வதாக மோசடியில் ஈடுபட்ட டாக்டர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    கடன் பிரச்சினையில் தவித்து வந்த சார்லஸ் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளம்பெண்ணிடம் பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோஜ் சார்லசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • பாலியல் தொல்லை குறித்து பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பட்டினங்காத்தான் சேதுபதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜபருல்லாகான் (வயது 71). இவர் ராமநாதபுரம் பாரதிநகர் மீன்மார்க்கெட் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    இவரது கிளினிக்கிற்கு பட்டினங்காத்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சை பெற வந்து செல்வர். அதேபோல் கடந்த 2-ந் தேதி உடல் நலம் பாதித்திருந்த புதுவலசை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஜபருல்லாகானின் கிளினிக்கிற்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.

    அப்போது அந்த பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் இளம்பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லா கான் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×