உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு சிகிச்சை- திருப்பூரில் கைதான பெண் டாக்டர் சிறையில் அடைப்பு

பிரியங்காவின் சான்றிதழ்களை பெற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு சிகிச்சை- திருப்பூரில் கைதான பெண் டாக்டர் சிறையில் அடைப்பு
Published on

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கிளீனிக் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மங்கலம் நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கிளீனிக்கில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்பு படித்திருந்தது தெரியவந்தது.

ஆனால் அதன்பிறகு அவர் இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வை எழுதாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

மேலும் கிளீனிக் நடத்தவும் உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அந்த தனியார் கிளீனிக்கிற்கு 'சீல்' வைத்தனர். இதைத்தொடர்ந்து பிரியங்காவின் சான்றிதழ்களை பெற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பதிவு செய்யாமல், உரிய அனுமதியின்றி சிகிச்சை அளித்த பிரியங்கா மீது இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com