search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஆரம்ப சுகாதார நிலையம்"

    • பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது.
    • இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 32).

    இவரது மனைவி சுபத்ரா தேவி (24). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2-வது பிரசவத்திற்கு சுபத்ரா தேவி திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இரவு பிரசவத்திற்கான வலி வந்ததால் திசையன்விளையில் உள்ள 33 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது கணவர் ராஜ் மற்றும் சித்தியுடன் பிரசவம் பார்க்க சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு இரவு நேரம் பணியில் உள்ள டாக்டர்களோ, நர்சுகளோ இல்லாததால் 1 மணி நேரமாக மருந்து, மாத்திரை, ஊசி என எந்த மருத்துவம் கொடுக்காமல் பிரசவ வலியில் சுபத்ரா ஜோதி அலறி துடித்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு பயிற்சி செவிலியரும், துப்புரவு பணியாளர் ஒருவரும் இருந்துள்ளனர்.

    அவர்களிடம் 108 ஆம்புலன்சை வர சொல்லுங்கள், நாங்கள் நெல்லை அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுகிறோம் என்று கூறியும் ஒன்றரை மணி நேரமாக எந்த ஆம்புலன்சும் வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் வெகுநேரம் கழித்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கர்ப்பிணி பெண்ணை தையல் போடுவதற்கான பிரசவ வார்டுக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 33 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயர்தான் உள்ளதே தவிர இன்னும் சரியான மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் தான் இயங்கி வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விபத்து போன்றவைகளில் சிக்கிய நோயாளிகள் கடும் அவதிக்கும், வேதனைக்கும் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பணியில் இல்லாத ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து சென்றார்.

    ஆனால் இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என விளம்பர பலகையில் வைக்கப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. இதற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். உடனடியாக அதற்கு தீர்வு காணப்பட்டு இந்த இடத்திலேயே மருத்துவம் பெறக்கூடிய வகையில் ஆரம்ப சுகாதார மையம் அமையவுள்ளது.

    அதனைத்தொடர்ந்து சிவன்மலை ஊராட்சியில் விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் மேல்நிலை தொட்டிகள், சாலை வசதிகள் போன்ற எண்ணற்ற பணிகள் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 11 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும் வழங்கினார். இதில் வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, காங்கயம் வட்டார மருத்துவ அலுவலர் முரளி, கீரனூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அய்யனார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
    • சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் தாய்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் கலந்துகொண்டு தாய்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்.

    இதில் மருத்துவ அலுவலர் அனுசியா, உதவி சித்தம ருத்துவ அலுவலர் அஞ்சுளா தேவி, பல்மருத்துவஅலுவலர் சர்மிளா மற்றும் செவிலி யர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரவசம் பார்த்ததால் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் மனைவி சுபாஷிணி (வயது 23) தனது 2-வது பிரசவத்திற்காக சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்சும், உதவியாளர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுபாசிணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே அங்கிருந்த நர்சு சுபாஷிணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் சுபாஷிணியை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

    தற்போது சுபாஷிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து குழந்தையின் தந்தை கோபிநாதன் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுபாஷிணியின் குடும்பத்தினர் குழந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். பிரவசத்தின் போது குழந்தை இறந்து பிறந்த சம்பவம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.
    • மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தட்டப்பாறை ரோட்டில் உள்ளது. இங்கு ஒரு பெண் மருத்துவர், ஒரு ஆண் மருத்துவர் என 2 டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    பிரசவம்

    இவர்கள் நோயாளிகளை பரிவுடன் கவனித்து வந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்து சென்றனர். பிரசவம் பார்க்கவும் ஏராளமான பெண்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்தனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் மேற்படிப்புக்கு சென்று விட்டனர். இதனால் ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.

    தற்போது ஒரு வாரமாக அவரும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர். இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்களை 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். 3 மாதமாக இந்த மருத்துவமனையில் எவ்வித பிரசவமும் பார்க்கப்பட வில்லை. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    எனவே உடனடியாக தினமும் பணிபுரியும் படியாக நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
    • தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

    அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சராசரி 200 முதல் 300 நோயாளிகள் தினசரி வந்து செல்கின்றனர்.
    • ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1960 ல் ஆரம்பிக்கப்பட்டதாகும். சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதி உள்ளது. சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி போன்ற மருத்துவ பிரிவுகள் உள்ளன. தாய் சேய் நல சிகிச்சை மையம், ஆய்வகம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை, காசநோய் பரிசோதனை, எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இ.சி.ஜி, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் வசதிகள் உள்ளன. இந்த சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் உதவி மருத்துவர்கள் என 6 டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆய்வக நிபுணர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என 30 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு சராசரி 200 முதல் 300 நோயாளிகள் தினசரி வந்து செல்கின்றனர். அப்படி வரும் நோயாளிகளுக்கு யாருக்காவது எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால் எக்ஸ்ரே வசதி இல்லை. எக்ஸ்ரே ஆபரேட்டர் இல்லை. அதனால் நோயாளிகள் காங்கேயம் அல்லது திருப்பூர் பகுதி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெள்ளகோவில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். இங்கு 200க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், ஆயில் மில்கள், விசைத்தறிக்கூடங்கள், அரிசி ஆலைகள் என உள்ளன. இந்த ஆலைகளில் வட மாநில பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். வெள்ளகோவில் பகுதி தொழிலாளர்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனர். ஆகையால் உடனே சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு எக்ஸ்ரே வசதி செய்து கொடுக்க வேண்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கருமத்தம்பட்டியில் பொதுமக்கள் கோரிக்கை
    • விபத்து அவசர சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்க வேண்டும்

    கருமத்தம்பட்டி,

    கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆடுவதைக் கூடத்தில் தற்காலிகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு தினந்தோறும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் வாரம் தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்ய செவ்வாய்க்கிழமை தோறும் வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கழிவறையில் தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு என தனி கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு அவினாசி மற்றும் கோவை செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் 24 மணி நேர விபத்து அவசர சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×